……………………………………………….

……………………………………………..
“என்னை விமர்சனம் செய்ததற்கு விருது!”
(சோ’வின் ஒசாமஅசா தொடரிலிருந்து ஒரு பகுதி கீழே : தொகுப்பும், எழுத்தும்: மணா )
எமர்ஜென்சி முடிந்து ஜனதா கட்சி உதயமான நேரம்….
அதற்காக டெல்லியில் நான் பல கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினேன். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நான் கலந்து கொண்ட போது மக்களின் எழுச்சியைப் பார்த்தபோதே ஜனதா மகத்தான வெற்றி பெறும் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
வட இந்தியாவில் நடந்த கூட்டங்களில் நான் பேசியது ஆங்கிலத்தில். அங்குள்ள சாதாரண மக்களுக்கு அது புரிந்திருக்காது. ஆனாலும் நான் பேசிய பேச்சை வரவேற்று கோஷம் எழுப்பினார்கள். கைதட்டினார்கள்.
கூட்டத்திற்கு நடுவே தார் டிரம் இருக்கும். அதில், வந்திருக்கும் மக்கள் தங்கள் கையிலிருந்த பணத்தை நிதியாகப் போடுவார்கள்.
அப்படித் திரண்ட கூட்டம் ஒன்றில் நான் பேசிக் கொண்டிருந்த போது, யாரோ வருகிற சலசலப்பு. கூட்டத்தில் கைதட்டல் அதிகரித்தது. வாஜ்பாய் மேடைக்கு வந்து கொண்டிருந்தார். கோஷங்கள் ஓயவில்லை. வாஜ்பாயோ என்னை தொடர்ந்து பேசச் சொன்னார்.
ஆனால் கூட்டத்தின் சத்தம் நிற்கவில்லை. பொறுத்துப் பார்த்த நான் ஒன்றைச் செய்தேன்.
“இங்கு வந்திருப்பது அடல் பிகாரி வாஜ்பாயே அல்ல” என்று ஆங்கிலத்தில் உரக்கச் சொன்னேன்.
கூட்டத்தில் உடனே சலசலப்பு.
“இவர் ஏ.பி.வாஜ்பாய் அதாவது அகில பாரத வாஜ்பாய்” என்று சொன்னேன்.
பலத்த கரகோஷத்தை எழுப்பிய அக்கூட்டம் பின்னர் அமைதியாகி என்னுடைய பேச்சைத் தொடர்ந்து கேட்க ஆரம்பித்துவிட்டது.
“ரொம்ப கிளவரா கூட்டத்தை சமாளிச்ச” என்று என்னிடம் பிறகு சொன்னார் வாஜ்பாய்.
அப்போது வாஜ்பாயுடன் ஆரம்பித்தது பழக்கம். அப்போதும் சரி, ஜனதா ஆட்சியில் மத்திய அமைச்சராக அவர் இருந்தபோதும் சரி, பிரதமராக இருந்த போதும் சரி, எப்போதும் ஒரே மாதிரிதான் பழகினார் வாஜ்பாய்.
பதவியில் இருக்கும்போது ஒரு மாதிரியும், பதவியில் இல்லாத போது வேறு மாதிரியும் பழக மாட்டார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ‘பாஞ்ச சன்யா’ என்கிற விருதை வழங்க ஆரம்பித்தபோது முதலாவதாக எனக்குக் கொடுத்தார்கள். அதை எனக்குக் கொடுத்தவர் பிரதமராக இருந்த வாஜ்பாய்.
“சோ என்னைப் பாராட்டவும் செய்வார். விமர்சனமும் செய்வார். அவர் என்னை விமர்சனம் பண்ணியதற்காக இந்த விருதை அவருக்கு வழங்குகிறேன்” என்று அந்தக் கூட்டத்தில் அவர் பேசினார்.
ஹிந்தி மொழியில் கேட்பவர்களை ஈர்க்கும் அழகான மொழி நடையில் அவருடைய பேச்சு இருக்கும் என்று சொல்வார்கள். மெல்லிய நகைச்சுவை, மென்மையான கவித்துவம், விஷய ஞானம் தன்னுடைய தரப்பை எடுத்து வைக்கும் விதம், எல்லாம் சேர்ந்து அவருடைய பேச்சைப் பண்பட்டதாக ஆக்கியிருந்தது. அதற்கு அவருடைய பண்பும் ஒரு காரணம்.
( இது மட்டும் என் குறிப்பு – நான் ஏற்கெனவே சிலமுறை இந்த விமரிசனம் தளத்தில்
சொல்லி இருக்கிறேன்… வாஜ்பாய் பேசுவதை கேட்டுக்கொண்டே
இருக்கலாம் போலிருக்கும்….அவ்வளவு இனிமையாக, சுவாரஸ்யமாக,
நகைச்சுவை உணர்வு நிரம்பியதாக ….நான் பலமுறை, நேரிலேயே –
ரசித்துக் கேட்டிருக்கிறேன்….)
இனி மீண்டும் சோ –
எனக்கு ஹிந்தி மொழி தெரியாததால் அதை உணர முடியவில்லை. அவர் ஹிந்தி மொழிக் கவிஞரும் கூட.
13 நாட்கள் அவருடைய ஆட்சி நீடித்த போது, மற்ற கட்சி கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்ட நேரம். வாஜ்பாய், அத்வானி, நான் மூவரும் இந்த நெருக்கடி தொடர்பாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது தமிழகத்தில் மூப்பனார் தனிக்கட்சியாக இயங்கிக் கொண்டிருந்தார்.
“மூப்பனாரிடம் உதவி கேட்கலாமா?” என்று என்னிடம் கேட்டார் வாஜ்பாய்.
“மூப்பனார் காங்கிரஸ் கலாச்சாரத்தில் ஊறியவர். அதனால் எந்த அளவுக்கு உதவுவதற்கு முன் வருவார் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. இருந்தாலும் கேட்டுப் பார்க்கலாம். சரி. வெறுமனே ஆதரவு என்பதைவிட நாம் பதிலுக்கு என்ன செய்வோம் என்பதை தெளிவு படுத்தினால் நல்லது” என்று சொன்னேன்.
“நீ தான் சொல்லேன். அவருக்கு என்ன கொடுக்கலாம் என்று…”
“அவரது ஆதரவு கொடுத்தால் டெபுடி பிரைம் மினிஸ்டர் போஸ்ட் கொடுப்பீங்களா?”
ஒரு நிமிஷம் அத்வானி யோசித்துக் கொண்டிருந்தார்.
வாஜ்பாய் அதற்குள் சட்டென்று முடிவெடுத்துச் சொன்னார்.
“பண்ணிடலாம். மூப்பனார் கிட்ட இதை நீயே சொல்லிடு.”
நான் சென்னைக்குத் திரும்பி வந்து மூப்பனாரிடம் பேசினேன். பிஜேபி உதவியை எதிர்பார்ப்பதைப் பற்றியும், டெபுடி பிரைம் மினிஸ்டர் பதவி தர தயாராக இருப்பதைப் பற்றியும் சொன்னேன்.
“என்னங்க சோ… இப்படிப் பேசுறீங்க. உதவி பிரதம மந்திரி ஆவதற்காக காங்கிரஸில் நான் இத்தனை வருஷமாக் கத்துக்கிட்டது எல்லாத்தையும் விட்றனணுமா?.
வாஜ்பாய், அத்வானி மீது எனக்கு மிகப் பெரும் மதிப்பு உண்டு. ஆனால் பிஜேபியை எந்த விதத்திலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
அவங்க கொடுக்கிற ஆஃபரையும் என்னால ஏத்துக்க முடியாது. இதை நான் ரொம்பவும் மன்னிப்புக் கேட்டுட்டுச் சொன்னதா நீங்க வாஜ்பாய்கிட்டே சொல்லணும். வெறுமனே அவர் மறுத்துட்டார்ன்னு என்று சொல்லிவிடக் கூடாது.
நீங்க அந்த மாதிரி தான் பேசுவீங்க. எனக்குத் தெரியும். எனக்காக மன்னிப்புக் கேட்டுட்டு, இதை நீங்க சொல்லணும்..”
அதோடு அந்த ஆட்சி 13 நாட்களில் கவிழ்ந்து போனாலும், அந்த நெருக்கடியிலும் சட்டென்று எந்தத் தயக்கமும் இல்லாமல் அந்தச் சமயத்தில் முடிவெடுக்கக் கூடியவராக இருந்தார் வாஜ்பாய்.
மூப்பனார் மட்டுமல்ல, எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் பலரும் கட்சி வேறுபாட்டை மீறி மதிப்பு வைத்திருந்த தலைவராக இருந்தார் வாஜ்பாய்.
இதை அப்போது மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறனும் சொல்லி இருக்கிறார். அந்த அளவுக்கு பிஜேபிக்கு பலமாக இருந்தது வாஜ்பாயின் ஆளுமைத்திறன்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தான் அணுகுண்டு பரிசோதனை நடந்தது. அந்தத் தகவலை தன்னுடைய கேபினட்டில் இருந்த சகாக்களிடம் கூட அவர் சொல்லவில்லை.
அந்த அளவுக்கு ரகசியமாகவே அதை வைத்திருந்தார். அந்த விஷயத்தை அமெரிக்காவால் கூட முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியவில்லை. நிர்வாகத்தில் திறமையும், பக்குவமும் உள்ள ஒருவரால் மட்டுமே இப்படி இயங்க முடியும்.
ஒரு தடவை பாராளுமன்ற வளாகத்தில் நான் நடந்து போய்க் கொண்டிருந்தபோது எதிரே இன்னொரு நாட்டுப் பிரதமருடன் வந்து கொண்டிருந்தார் வாஜ்பாய்.
வழக்கமாக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் முறையான அனுமதியில்லாமல் சட்டென்று நடுவழியில் யாரையும் சந்தித்து விட மாட்டார்கள். ஆனால் வாஜ்பாய் வேறுபட்டவராக இருந்தார்.
“சோ… ஹவ் ஆர் யூ?” என்று வழக்கம் போல சத்தமாக என்னைக் கூப்பிட்டார். அருகில் போனதும் அயல்நாட்டுப் பிரதமரிடம் என்னை அறிமுகப்படுத்தி இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தார்.
நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கிறோம் என்கிற அதிகார மனோபாவம் ஒருபோதும் அவரிடம் வெளிப்படவில்லை.
யாருடன் இருந்தபோதும், தன்னுடன் பழகியவர்களை விட்டுக்கொடுக்காத பண்பு அவரிடம் மேலோங்கி இருந்ததையே இது காட்டுகிறது.
வாஜ்பாயின் கனிந்த முகத்திற்குப் பின்னால் பிரமிக்க வைக்கிறபடி எத்தனையோ குணங்கள்!
…………………………………………………………………………………………………………………………………………………………………



[…] […]