……………………………………..

……………………………………..
சங்கரர் அளிக்கும் விடுதலை –
அத்வைதத்தின் விடுதலைக்கொள்கை
சங்கர தரிசனம் முன்வைக்கும் விடுதலை (முக்தி) என்பது என்ன?. டி.எம்.பி.மகாதேவன் அவர்கள் சென்னை பல்கலையில் தலைவராக இருந்த காலத்தில் ஆங்கிலத்தில் தத்துவம் பற்றி அருமையான நூல்கள் வந்துள்ளன. அதில் ஒன்று கிருஷ்ண வாரியர் எழுதிய THE CONCEPT OF MUKTI IN ADVAITA VEDANTA என்ற நூல். அதிலுள்ள சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன்.
முக்தி என்றால் விடுதலை என்று பொருள். வீடுபேறு என்று தமிழில் சொல்கிறோம். இந்த முக்தி என்பதற்கு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வரையறையை கொண்டுள்ளன. ஒரு நூலை படித்தால் அதிலிருந்து என்ன கிடைக்கிறது என்பது முக்கியமானது. ஒரு தத்துவத்தை படித்தால் என்ன கிடைக்கிறது என்பதை அந்த தத்துவ ஆசிரியரே சொல்வார். அதுவே ஃபலச்சுருதி என நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. அத்வைதத்தின் ஃபலச்சுருதி என்ன..?
முக்தி பற்றிய கொள்கை எல்லா மதங்களுக்கும் உண்டு. உதாரணமாக, சாங்கியம் முக்தியை பற்றி ஒரு விதமாக சொல்கிறது. ‘இங்கு இருக்கும் அனைத்துமே பிரகிருதி என்னும் ஒரே பருப்பொருளின் விரிவான வடிவங்கள் என்று தெரியாத காரணத்தால் மனிதன் துயருறுகிறான். அந்த ஒருமையை உணர்த்தி அவன் அடையும் அந்த துயரத்தை களைவதுதான் முக்தி. அதைத்தான் நாங்கள் அளிக்கிறோம்’ என்கிறது. அதுபோல ஒவ்வொரு தரிசனத்திலும் பல்வேறு வகைகளில் முக்தி சொல்லப்படுகிறது.
பொதுவாக முக்தி என்பதை பற்றி இன்றைய இந்து மதத்தில், இறைவன் அடிசேர்தல், இகவுலக வாழ்க்கையில் இருந்து விடுபடல், விண்ணுலகுக்குச் செல்லுதல், ஈட்டிவைத்த பாவபுண்ணியங்களுக்கான பலனை அனுபவித்தல் என்பதாக பலவாறாக விளக்கமளிக்கப்படுகிறது.
ஆனால் அத்வைதத்தில் இத்தகைய விளக்கம் கிடையாது என்பதை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். அத்வைதத்தை பொறுத்தவரை பேதபுத்தி என்பது அறியாமை. அதிலிருந்து விடுபடுவது மட்டும்தான் முக்தி.
நான் வேறு, பிரம்மம் வேறு என்கிற பேதபுத்தியே அறியாமை, அனைத்துத் துயரும் அந்த அறியாமையின் விளைவே. அந்த பிளவுநோக்கை கைவிட்டுவிட்டு ‘இதுவும் அதுவும் ஒன்றே’ என உணர்வதே முக்தி. சங்கரர் ”பிரம்மம் சத்யம், ஜகத் மித்யை” என்று சொல்கிறார்.
பிரம்மம் என்பது உண்மையானது, இந்த பிரபஞ்சம் என்பது ஒரு மாயத்தோற்றம் என்று எப்போது உணர்கிறோமோ அது விடுதலை. ”ஜீவோ பிரம்ம ஏவ ந பர” – ஜீவன் என்பது பிரம்மம், வேறொன்றும் அல்ல. இதை உணரும் நிலையே முக்தி.
ஆனால் இதில் இன்னுமொரு சிறப்பு உண்டு. சங்கரர் தனது விவேக சூடாமணியில் ‘யோகத்தாலோ, கர்மங்களாலோ, பூஜை வேள்விகளாலோ, ஞானத்தாலோகூட இதை அறிந்துவிட முடியாது’ என்கிறார். ஆகையால் அறிந்துகொள்ளுதல் அல்ல அத்வைதம் காட்டும் வழிமுறை. அறிந்துவிட்டால் மட்டும் விடுதலை அமையாது. இதைச் சொல்லும்போதே கேட்பவருக்கு புரிந்துவிடும். அது அல்ல விடுதலை. அதுவாதல் (Realisation) என்று சொல்கிறோம்.
அறிதல் வேறு, ஆதல் வேறு. பிரம்மமும் ஆத்மாவும் ஒன்றுதான் என்று நாம் அத்வைதக் கல்வியின் தொடக்கத்திலேயே அறிந்துவிடுவோம். அதன்பிறகு ஒரு நீண்ட பயணத்திற்கு பின்புதான் அதுவும் இதுவும் ஒன்று என்று ஒருவன் உணர்ந்து, அதுவே ஆகி, அதுவென அனைத்தையும் அனுபவிக்கிறான். அந்த அதுவாதலையே ஆத்ம சாக்ஷாத்காரம் என்பர். அதுதான் சங்கரர் முன்வைக்ககும் முக்தி.
சங்கரரின் நூல்கள்
இதன் அடிப்படையில் சங்கரரின் முக்கியமான தத்துவ நூல்கள் என்பவை,
- பத்து மைய உபநிடதங்களுக்கும் அவர் எழுதிய விளக்க உரைகள்
- கீதைக்கு எழுதிய விளக்க உரை
- பிரம்மசூத்திரத்திற்கு எழுதிய விளக்க உரை
- விவேக சூடாமணி எனும் தத்துவநூல்
அதன்பிறகு பல நூல்கள் எழுதப்பட்டு அவை சங்கரரின் பெயரால் குறிப்பிடப்படுகின்றன. அவ்வாறு சொன்னால் சிலர் சீண்டப்படக்கூடும். சௌந்தர்ய லஹரி, மனீஷா பஞ்சகம், பஜகோவிந்தம் போன்ற பல நூல்கள் சங்கரரின் பெயரால் குறிப்பிடப்படக்கூடிய நூல்களே தவிர அவரால் எழுதப்பட்ட நூல்கள் அல்ல. அவ்வாறு சொல்வதற்கு முக்கியமான காரணங்கள் உள்ளன.
(1) சங்கரரின் உரைகள் எதிலுமே ஒரு புராணத்தில் இருந்துகூட அவர் மேற்கோள் காட்டவில்லை. இராமன் என்ற சொல்லே அவர் பாஷ்யத்தில் எங்கும் இல்லை. கீதை உரையில் கிருஷ்ணன் சொல்லப்படுகிறான். அப்போதுகூட கோர ஆங்கிரீசரின் மாணவராகிய கிருஷ்ணன் என்றுதான் சொல்கிறாரே தவிர பரம்பொருள் கிருஷ்ணன் என்று சொல்லவில்லை. ஏனெனில் அவருடையது சுத்த அறிவின் குரல். ‘சுத்த அறிவே சிவம் எனச்சொல்லும் சுருதிகள் கேளீரோ’ என்று ஒரு கவிஞன் பாடினானல்லவா. அத்தகைய தூயஅறிவின் குரல் சங்கரர். அந்த ‘கேவல ஞான’த்தை, அதாவது கலப்பற்ற மெய்யறிவை, முன்வைக்க்கும் நூல்கள்தான் அவருடையவை.
ஆனால் பிற்காலத்தில் அவருடைய ஆளுமையையே மாற்றியமைக்கவேண்டிய, அவருடைய நூல்களுக்கெல்லாம் மறுவிளக்கம் அளிக்கவேண்டிய கட்டாயம் சங்கர மரபினருக்கு ஏற்பட்டது.
அவர் உருவாக்கிய ஆறுமத இணைப்பை அதாவது ‘ஷன்மத சங்கிரக’த்தை பிற்காலத்தில் ஓர் இயக்கமாக முன்னெடுத்து செல்லும் வரலாற்றுரீதியான அவசியம் ஏற்பட்டபோது அவரை ஆறுமதங்களுக்கும் பொதுவானவராக கட்டமைக்க வேண்டியிருந்தது. ஆகவே அவர் வைணவ பாடலை பாடினார் (உதா:பஜகோவிந்தம்), சக்தியைப்பற்றிய பாடல்களைப் பாடினார் (சௌந்தர்ய லஹரி) என்பதாக அனைத்து மதத்தினரும் அவரை உரிமை கொண்டாடவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அது ஒரு தவறான விஷயம் என்று நான் சொல்லமாட்டேன். அது அவரை வேறொருவகையில் விரிவாக்கி, அவருடைய அமைப்புசார்ந்த நோக்கத்தை முன்னெடுத்துச் செயல்பாடுதான். ஆனால் அவருடைய வேதாந்தத்தைப் புரிந்துகொள்வதற்கு அது சரியான வழியாக அமையாது. தடையாகவும் ஆகும். இன்றைய சங்கர மடங்களின் செயல்பாடுகள், கொள்கைகள் வழியாக அத்வைதத்தை நோக்கிச் செல்லவே முடியாமலாவது இதனால்தான்.
(2) மொழியியல் ஆய்வுகளின்படி அவருடைய நூல்களுக்கும் இந்த தெய்தத்தோத்திர நூல்களுக்கும் இடையே மொழி மற்றும் வெளிப்பாட்டு முறையில் பெரும் வேறுபாடு உள்ளது. அதாவது திருமூலருடைய சூத்திரங்களில் பாரதியாருடைய பாடல்களை சேர்த்தால் என்ன வித்தியாசம் இருக்குமோ அந்த வித்தியாசம் உள்ளது.
மூலநூல்களுக்கான உரைநூல்கள் வழியாகவும் விவேக சூடாமணி வழியாகவும் நம்மிடம் வரும் சங்கரரையே நான் இங்கு முன்வைத்திருக்கிறேன்.
அத்வைதம் இன்று
சங்கர தரிசனம் என்பது இன்று தோள்வளைகள், கவசங்கள் அணிந்து நின்றுள்ளது. அதுதான் அறுநூறு ஆண்டுகள் களத்தில் நின்று நம்மை காத்தது.
எந்திரன் படத்தில் வரும் சிட்டி போல அத்தனை ஆயுதங்களையும் தரித்து நின்றது. சடங்குகளையே மறுக்கக்கூடிய ஒரு தரிசனம் அத்தனை சடங்குகளையும் நமக்கு பேணி அளித்தது. கோபுரங்களாகவும், தூண்களாகவும் ,சிற்பங்களாகவும், கலைகளாகவும் அது மாறியது.
ஒருவகையில் நாம் சங்கரரை பின்பற்றும் ஸ்மார்த்த மரபுக்கு கடன் பட்டிருக்கிறோம். அதனால் ஐயர்கள் சற்று துள்ளினாலும் அதை மன்னிக்கலாம் என்று நான் நண்பர்களிடம் வேடிக்கையாகச் சொல்வதுண்டு. அவர்களில் பலருக்கு அது எப்படி உருவாகி வந்தது என்பது தெரியாது. ஆனால் அந்த மரபு பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் மாபெரும் நிலைச் சக்தியாக (Static force), ஒரு மரபை நிலைநிறுத்தும் ஆற்றலாக இங்கு திகழ்ந்திருக்கிறது.
இன்றுகூட நாம் இதை கவனிக்கலாம். மிகச்சிறிய, பக்தர் என ஒருவருமே வராத ஒரு சிறு கோவிலிலும் கூட ஒரு ஸ்மார்த்த அர்ச்சகர் தன்னந்தனியாக பூசை செய்துகொண்டிருப்பார். அவருக்கு வருவாய் என அனேகமாக ஏதும் இருக்காது. இந்த பிடிவாதம் கடந்த அறுநூறு ஆண்டுகளாக நமது மரபை நமக்கு காத்துக்கொடுத்தது. அதற்குப் பின்னால் ஒரு பெரும் சக்தியாக சங்கரர் இருந்தார்.
ஆனால் அவர் கறாரான தத்துவ நோக்கில் ஆலயவழிபாட்டுக்கு எதிரான தூய தத்துவவாதி. ஆனால் இந்த வகையான முரண்பாடுகள் வழியாகவே எப்போதும் வரலாறு முன்னகர்கிறது.
எந்த மரபிலும் இரண்டு வித சக்திகள் இருக்கும். ஒன்று நிலைச் சக்தி (Static Force), மற்றொன்று மாற்றத்திற்கான சக்தி (Dynamic Force). இரண்டில் ஒன்று இல்லாவிட்டாலும் அந்த சமூகம் அழிந்துவிடும்.
நிலைச் சக்தி இல்லாமல்போனால் அந்த சமூகத்தின் மரபார்ந்த விஷயங்கள் அத்தனையும் அழிந்து வெறும் புதுமைகள் ட்டுமே எஞ்சும். அதேபோல மாற்றத்திற்கான சக்தி இல்லாமல் போனால் அந்த சமூகம் தேங்கிப்போய்விடும். அவற்றின் முரணியக்கமே ஓர் உயிருள்ள அமைப்பின் இயல்பாகும்.
அத்வைத மரபினரான சாயனர் வேதங்களுக்கு சடங்கு சார்ந்து ஒரு மாபெரும் உரையை எழுதினார். (அவர் வித்யாரண்யரின் தம்பி எனப்படுகிறது.) அதற்கு அக்காலகட்டத்தில் ஒரு தேவை இருந்தது. அது இந்த சமூகத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்த காலம். ஆனால் வெள்ளையர் ஆதிக்கம் வந்து இந்தியா நவீனக்கல்வி நோக்கி சென்று புதிய தலைமுறைகள் உருவாகி இந்தியவியல் (Indology) என்ற துறை உருவாகி வெள்ளை அறிஞர்கள் இங்கிருக்கும் நூல்களை ஆங்கிலத்திலும் ஜெர்மனியிலும் மொழிபெயர்த்து நமக்கு கிடைக்கும்படி செய்தபிறகு ஒரு தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. வேதங்களைச் சடங்குகளை மறுக்கும் தூய தத்துவக் கோணத்தில் அணுகுமும் பார்வைகளும் அத்வைத மரபிலிருந்தே உருவாயின.
இந்தியாவில் மாற்றத்திற்கான சக்திகள் தொடங்கியது பதினேழாம் நூற்றாண்டின் இறுதிகட்டத்தில். அதன் முதற்குரலாக அமைந்தவர் ஆரிய சமாஜத்தின் தயானந்த சரஸ்வதி.
தயானந்தர் தனது வேத உரைகளில் சாயனரை முழுமையாக நிராகரிப்பதை காணலாம். அவரது உரையை சாயன கண்டனம் என்றுகூட சொல்லலாம். அதுவும் நமது வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஒரு பகுதி. டிராய் (Troy) சினிமாவில் ஹெக்டர் தனது மனைவியிடம் பேசும்போது ஒவ்வொரு கவசமாக கழற்றிக்கொண்டே பேசுவார். கடைசியில் சாதாரண ஆடையுடன் நிற்பார்.
ஆரிய சமாஜத்தின் காலத்தில் சங்கர அத்வைதத்தின் மீதிருந்த கவசங்களை கழற்றவேண்டிய தேவை வந்தது. வழிபாடுகள், கோயில்கள், ஆகமங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் என அனைத்தையும் கழற்றி சுத்த அத்வைதத்தை திருப்பி எடுத்தனர். அப்படி திருப்பி எடுத்தவர்களில் முக்கியமானவர் தயானந்த சரஸ்வதி. அவர் சங்கரரை நேரடியாக ஏற்றவரல்ல. ஆனால் அவருடைய நோக்கு தூய பிரம்மவாதமே, அது அத்வைதமே.
அதன்பிறகு பிரம்ம சமாஜத்தை நிறுவிய ராஜாராம் மோகன்ராய், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், நாராயணகுரு, ரமணர் என்ற பெரிய வரிசை தூய அறிவையே பிரம்மம் என முன்வைக்கும் பார்வையை விரிவாக்கம் செய்தது.
இவர்கள் ஆலய வழிபாடுகள் செய்தவர்கள் அல்லர். அவர்களில் சிலர் ஆலயத்தை அமைத்திருக்கலாம். ஆனால் அத்வைதத்தின் கவசங்களை கழற்றி அதை தூய வடிவில் எடுக்கவே அவர்கள் முயன்றனர். இந்தியாவெங்கும் அப்படியொரு அத்வைத அலை உருவாகி வந்திருக்கிறது.
குறைந்தது இருபது வெவ்வேறு அத்வைத அமைப்புகள் இன்று உள்ளன. அதன் ஆசிரியமாணவ வரிசையில் வந்த பல அத்வைதிகள் உள்ளனர். நமது காலகட்டத்தின் முக்கியமான தத்துவச் சிந்தனையாளர்கள் பலர் அத்வைதிகள்.
சின்மயானந்தர் முதல் சித்பவானந்தர் வரை ஒரு நீண்ட பட்டியலையே போடலாம். பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரைக்குமான காலகட்டம் அத்வைதம் ஒரு புது வடிவமெடுத்த காலகட்டம். நூறாண்டுகளுக்கு முன்பு சென்னையில் மட்டுமே இருபதுக்கும் மேற்பட்ட புதிய அத்வைத சங்கங்கள் இருந்தன.நான் வாழும் குமரிமாவட்டத்திலேயே அத்வைத அமைப்புகள் இருபதுக்கும் மேல் சென்ற நூற்றாண்டில் உருவாயின. அந்த அலையையே நாம் நவவேதாந்தம் என்கிறோம்.
இதில் நாம் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று, இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து வந்த ஞானிகளுக்கு அவர்களுக்குரிய போராட்ட வடிவமாகவும் தத்துவ சிந்தனையாகவும் இருந்தது அத்வைதம்தான்.
ஏனெனில், ‘பிரம்மமும் நானும் ஒன்று என்றால் பிராமணனுக்கும் மற்றவனுக்கும் என்ன வித்தியாசம், எனக்கும் ஒரு பூச்சிக்கும் வித்தியாசம் இல்லையெனில் எனக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் என்ற நோக்கில் விரிவான ஒரு சமத்துவக் கொள்கையைப் பேசுவதற்கான அடிப்படையாக அவர்கள் அத்வைதத்தை கைக்கொண்டனர்.
ஆகவேதான் அது நாராயணகுரு கையில் ஒரு போராட்ட ஆயுதமாக மாறியது. தலித் சமுதாயத்தில் இருந்து வந்த அய்யன்காளியின் தரப்பாயிற்று. அய்யன்காளிக்கு போராட்டவுணர்வை அளித்தவர் ஓர் அத்வைதத் துறவிதான். 1800 களில் சென்னையில் இருந்த தலித் மாற்றத்திற்காக போராடிய பல்வேறு அமைப்புகள் அத்வைத சபைகளே.
சங்கரரை பற்றிய ஒரு பிரபலமான கதை உண்டு. மனீஷா பஞ்சகத்தை அவர் எழுதியதற்கான காரணமாக அக்கதையை சொல்வர். ஆதிசங்கரர் சர்வக்ஞபீடம் ஏறியபிறகு ஒருநாள் ஆற்றில் குளித்துவிட்டு மேலே வருகிறார். அப்போது ஒரு சண்டாளன் எதிரே வருகிறான். சங்கரர் அவனைக்கண்டு விலகிப்போ என்று சொன்னதாகவும், ‘யாரை விலகச்சொல்கிறாய், பிரம்மத்தையா, இந்த ஆத்மாவையா அல்லது இந்த உடலையா’ என்று அந்தச் சண்டாளன் கேட்டதாகவும், அதைக்கேட்டதுமே சங்கரர் தனது மாயை விலக்கப்பட்டவராகவும் ஆனார் என்று சொல்லப்படுகிறது.
சங்கரருக்கு ஞானத்தை உபதேசிக்க பரமசிவனே சண்டாளனாக வந்ததாகவும், அதன்விளைவாக அவர் மனீஷா பஞ்சகத்தை எழுதியதாகவும் சொல்வர். இக்கதை உண்மையா என்பதைவிட இது எழுதப்பட்டதற்கான காரணம் அல்லது அக்கருத்தின் விதை அத்வைதத்தில் உள்ளது என்பதே முக்கியமானது. அது மனித சமத்துவத்தை வலியுறுத்தக்கூடியது.
மனிதருக்குள் அனைத்தும் ஆத்மாவே, அனைத்தும் பிரம்மமே என்கிறபோது மானுடருக்குள் ஏற்றத்தாழ்வு இல்லை என்னும் கருத்து அது. ‘கேளடா மானுடா நம்முள் கீழோர் மேலோர் இல்லை’ என்கிற அறைகூவல் அத்வைதத்திற்குள் இருக்கிறது.
அந்தக் காரணத்தினால்தான் இந்தியாவில் இலக்கிய மறுமலர்ச்சி உருவானபோது எழுந்துவந்த ஏறத்தாழ அத்தனைக் கவிஞர்களும் அத்வைதிகளாகவே இருந்தனர். முக்கியமாக தாகூரின் சாதனா நூலை சொல்லலாம். அத்வைதத்தை பற்றி கவித்துவமாகவும் அழுத்தமாகவும் சொல்லும் நூல்களில் ஒன்று அது.
கன்னடத்தின் தேசிய கீதத்தை எழுதிய குவெம்பு ஒரு முக்கியமான அத்வைதக் கவிஞர். மலையாளத்தின் முதன்மைப் பெருங்கவிஞராகிய குமாரன் ஆசான் நாராயணகுருவின் மாணவராகிய ஒரு அத்வைதி.
நமது தேசியக் கவிஞனும் நவீன இலக்கியத்தின் முதற்பெரும் குரலுமாகிய பாரதி தன்னை ஒரு அத்வைதி என்று அறிவித்துக்கொண்டவன். ‘ஒன்று பிரம்மம், உள்ளது உண்மை, அது உன் உணர்வு எனும் வேதமெல்லாம்’ என்கிறார். அவருக்கு ஆசிரியராக இருந்த கோவிந்தசாமி என்ற குள்ளச்சாமி அவரிடம் சொன்னது, ‘சாமி நீ, சாமி நீ, சாமி நீயே, தத்வமஸி, நீயே அது’. அவருடைய மிக முக்கியமான நூலாகிய குயில்பாட்டு வேதாந்தமாக விரித்துரைக்க முடியும் என்று அவரே குறிப்பிட்டுக்காட்டிய நூல்.
அத்வைதம் என்னும் இச்சிந்தனையின் தொடக்கம் எங்கிருக்கிறது என்று பாருங்கள். எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன், ஏதோ ஒரு வரலாற்றுச் சந்தியில் தனக்கான ஓரு வடிவில். இன்றைக்கு நம் முன்னால் இப்படி வந்து அது நிற்கிறது. நாம் கங்கையில் நிற்கும்போது வரும் ஒரு சிலிர்ப்பு உண்டு. இராமன் அதில் நீராடியிருக்கிறான். நானும் அதில் நீராட முடியும்.
அங்கிருந்து இங்குவரை ஒரே நதி பெருகி வந்துகொண்டிருக்கிறது. வெறுமனே இமயத்தில் இருந்து வங்காளம் வரைக்கும் செல்லும் ஒரு நதி அல்ல அது. எனது நினைவுக்கெட்டாத கடந்த காலத்தில் இருந்து எனது வம்சத்தில் பிறக்கவிருக்கும் குழந்தைகளின் எதிர்காலம் வரைக்கும் இந்த நதி ஓடும். அத்தகைய உணர்வு அத்வைதத்தைப் படிக்கும்போது ஏற்படும். சங்கரரில் இருந்து பாரதி வரைக்கும் நீண்டு வரும் பெரிய மரபு அது. நான் வணங்கும் மெய்ஞானிகளின் பெரும் வரிசையாகவே என்னால் அதைப் பார்க்கவியலும்.
இதற்கும் அப்பால் ஒன்றுண்டு.
அவ்வெண்ணம் ஜெயகாந்தனிடம் நான் பேசும்போது எனக்குக் கிடைத்தது. நவீன மேலைச் சிந்தனைகள் பற்றி நான் அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். சங்கர அத்வைதத்தை முக்தி, மதம், மடங்கள், சாமிகள், பூதங்கள் என அனைத்தில் இருந்தும் பிரித்து ஒரு தூய தத்துவமாகவே உலகிற்கு முன்னெடுத்து செல்லமுடியும். இம்மானுவேல் காண்ட்டின் தூய மெய்த்தர்க்கம் (Pure Reason – Immanuel Kant) அளவுக்கு ஒரு தத்துவ சிந்தனையாக அதை முன்வைக்க முடியும்.
உலகில் தோன்றிய மகத்தான தத்துவ சிந்தனை என்ற அளவில், அறிதல் என்னும் நிகழ்வைப் பற்றிய மிக முக்கியமான மானுடதரிசனம் என்ற வகையில், அனைத்து உலகச் சிந்தனைத் தரப்புகளுடனும் உரையாடும் ஒரு தன்மை அத்வைதத்திற்கு உண்டு.
இன்று நமது இளைஞர்கள் நம்மால் சோற்றை ஈட்டும் பொருட்டு மட்டுமே பயிற்சியளிக்கப்பட்டு வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள். அவர்களுக்கு நாம் எந்தவொரு தத்துவத்தையும் சொல்லி புரியவைக்க முடியவில்லை.
நாமும் ‘நல்ல வேலை கிடைப்பதற்காக சாமியை கும்பிடு’ என்கிற அளவுக்குத்தான் அவர்களுக்கு ஆன்மீகத்தை அறிமுகப்படுத்துகிறோம்.
நமது இளைஞர்களை போல இவ்வளவு காலியான மூளைகொண்ட இளைஞர்கள் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. இவர்கள் உண்மையிலேயே தகுதியானவர்களாக இருந்திருந்தால் நாம் உலகநாடுகளில் கொண்டுசென்று வைக்கும் தத்துவச் சிந்தனைகளில் ஒன்றாக அத்வைதம் இருந்திருக்கும்.
இன்று நம் இளைஞர்கள் உலகம் முழுக்க செல்கிறார்கள். கணினி நிரல் எழுதுகிறார்கள். ஆனால் உலகம் மதிக்கும் விதத்தில் அத்வைதம் பற்றி ஒரு கட்டுரை எழுதும் தகுதிகொண்ட இளைஞர்கள் நம்மிடம் இல்லை.
(ஆனால் மதம் சார்ந்த சழக்குகளில் ஏராளமான இளைஞர்கள் ஈடுபடவும் செய்கிறார்கள்) இந்த நிலையில் அத்வைதம் நம் வீட்டில் இருக்கும் தொன்மையான பூசைப்பொருளாக சுருங்கி இருக்கிறது.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கர்நாடகத்தில் ஒரு சாதாரண வங்கி எழுத்தரின் வீட்டின் பூசையறையில் ஒரு சாளக்கிராமம் கீழே விழுந்து உடைந்தது. அதற்குள் இருந்த ஒரு கல்லை அவர் வெளியே எடுத்துப் பார்த்தார். ஐயம் வந்தமையால் ஒரு நகை வணிகரிடம் அதைக் காட்டினார். அதன்பின் அவர்கள் குடும்பத்தோடு காணாமல்போய் எட்டு ஆண்டுகள் கழித்து லண்டனில் தோன்றினர். அந்தக்கல் அப்போதைய மதிப்புக்கு பதினைந்து கோடிக்கு ஏலத்தில் சென்றது. கிட்டதட்ட பந்து பதினைந்து தலைமுறைகளாக அதை வைத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
நாமும் அவ்வாறு அத்வைதத்தை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறோம். பூசையறையில் வைத்து சாளக்கிராமமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
இதை நான் ஜெயகாந்தனிடம் சொன்னபோது அவர் சொன்னார், ‘அத்வைதத்தை இந்தியாவின் படித்த இளைஞர்களிடையே கொண்டுசெல்வது மிகக்கடினம். ஏனெனில் அவன் ஒரு குறிப்பிட்ட வகையான துவைதத்திற்கு பழகியிருக்கிறான்’ என்றார். மேலைக்கல்வி அவனுக்கு கொடுக்கும் இரட்டை எதிரீடு (Dichotomy / Binary opposition) அப்படிப்பட்டது. எதை பார்த்தாலும் ‘இது x அது’ என்பதாக பிரிக்கக்கூடியது அப்பார்வை. நோய் x மருந்து, பாக்டீரியா x வேக்ஸின் என்பதில் தொடங்கி அனைத்தையும் இரட்டைகளாக பிரிக்கக்கூடிய துவைதத்திற்கு அவன் பழகியிருக்கிறான். அவனுடைய அத்தகைய குறுகிய தரிசனத்துக்குள் அனைத்தும் ஒன்றே என்ற இரண்டற்ற தரிசனம் சென்று சேராது.
ஆனால் இந்தியாவின் ஒரு சாதாரண விவசாயிக்குக் கூட ஏதோவொரு வகையில் அத்வைதம் புரியும் என்றார் ஜெயகாந்தன். அவர்களின் பேச்சிலேயே அனைத்தும் ஒன்றே என்னும் கோணம் எவ்வகையிலோ வெளிப்பட்டபடியே இருக்கும்.
மண்ணையும் மலையையும் வானையும் உயிர்களையும் ஒன்றெனக் காண அவனால் முடியும். அது எனக்கு முக்கியமான தரிசனமாக இருந்தது. ஏன் இத்தனை காலம் இங்கு அத்வைதம் உள்ளதென்றால் ஏதோ ஒரு வகையில் அனைவருக்குள்ளும் அது உள்ளது என்பதாலேயே. ஏதோவொரு தருணத்தில் அத்வைத உணர்வை அடையாத ஒரு சாதாரண மனிதர்கூட இந்தியாவில் இருக்கமுடியாது.
எனது இளமைப்பருவ நிகழ்வு ஒன்று நினைவுக்கு வருகிறது. எனது அப்பாவிடம் வேலைபார்த்த ராமன் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு பணியாளர் முந்தைய நாள் வயலை உழுது தண்ணீர் பாய்ச்சியிருந்தார். மறுநாள் மொத்த தண்ணீரும் ஊறி ஆழத்துக்குள் இறங்கி சேற்றுப்படிவ மண்ணில் சிறுசிறு குழிகள் விழுந்து ஒரு மென்மையான தோல்பரப்பு போல் அது ஆகியிருக்கும். அப்போதுதான் அதற்குள் காற்றோட்டம் நிகழும்.
அதன்பின்னர்தான் நாற்று நடுவர். காலையில் நானும் அவருமாக வயலுக்கு சென்றோம். அவர் வயல்வரப்பில் தலையில் கைவைத்து அமர்ந்திருந்தார். நான் அவர் அருகில் நின்றுகொண்டிருக்கிறேன். ஒரு காகம் பறந்துவந்து அந்த சேற்றில் உட்கார்ந்தபோது, அவர் உடலில் ஒரு சிலிர்ப்பை காணமுடிந்ததாம்.அவர் உடலில் ஏதோவொன்று அமர்ந்ததுபோல. அந்த உணர்வால் தளர்ந்து பரவசம் அடைந்து அமர்ந்திருந்தார்.
இன்று யோசித்துப்பார்த்தால் மயிர்கூச்செறியும் அனுபவம் அது. நான் அவரிடம் அதுபற்றி கேட்டேன். அவருக்குச் சொல்லத்தெரியவில்லை. அதன்பிறகு அவர் சொன்னார் ‘மாடு இறங்கினால் அது நம்மீது இறங்கியது போல. அதனால் நான் அந்தப்பக்கம் பார்க்கச் சொல்லியிருக்கிறேன்’. வயலும் அவரும் ஒன்றாகக்கூடிய ஒரு கணம் அது. அங்கு அவர் இல்லை, வயல் மட்டும்தான் உள்ளது. அத்தகைய அத்வைதம் நம்முள் இருக்கிறது.
நான் அதற்குப்பின் பல ஆண்டுகள் கழித்து கிட்டத்தட்ட அரைத்துறவியாகி கைலாசத்தை காண்பதற்கு சென்றேன். செல்லும் வழியில் கைலாசம் முன்கூட்டியே தெரியாது. ஒரு குறிப்பிட்ட கோணத்தில் தெரியத்தொடங்கும். பட்டை தீட்டப்படாத ஒரு வைரக்கல் போன்று இருக்கும். காலை நேரத்தில் பார்க்கும்போது முந்தைய நாள் பனி படிந்து காலைநேர பொன் வெளிச்சத்தில் பொன் வேய்ந்ததுபோல ஒரு பளபளப்பு இருக்கும். நான் வேறு ஒருவரிடம் பேசிக்கொண்டு சட்டென்று திரும்பிப்பார்த்தேன். அதை பார்த்த கணம் எனக்கு தெரிந்திருந்தது. அதற்கு பின் பல நிமிடங்கள் நான் அங்கு இல்லை. அது மட்டும்தான் இருந்தது. முழுமையான ஒரு அத்வைத நிலை. எப்போதும் அங்கு அதுமட்டும்தான் இருக்கும் என்று உணர்ந்தேன்.
அத்தகைய அத்வைத நிலையை உணர்ந்த சாதாரண மனிதர்கள், அன்னையர்கள் நம் நாட்டில் உள்ளனர். பல்லாயிரக்கணக்கில் உள்ளனர், நம் விழிகள் திறந்திருந்தால் நம்மால் அவர்களை ஒவ்வொரு நாளும் காணவும் முடியும்.
சங்கரர் அவர்களில் இருந்து ஒருவராக எழுந்துவந்து அதைத் தத்துவப்படுத்தி நமக்கு திருப்பி சொல்லிவிட்டு சென்ற ஒரு குரு.
(இத்துடன் இந்த தொடர் முற்றுப்பெறுகிறது….
மிக மிக ஆழமான ஆன்மிக கருத்துகளை உள்வாங்கி
அவற்றை – மிகத்தெளிவாக, நாம் எளிதில் புரிந்துகோள்ளக்கூடிய
வகையில் வடித்துத் தந்திருக்கும் ஆசிரியர் ஜெயமோகன்
அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள் ………)
…………………………………………………………………………………………………………………………………………




[…] […]