………………………………….

……………………………………..

………………………………….

………………………………..
எழுத்தாளர் அராத்து அவர்கள் – AI டெக்னாலஜி பற்றிய
ஒரு விவரமான, அறிவார்ந்த அலசலை மேற்கொண்டு
ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்…
வாசக நண்பர்களுக்காக, அதனை கீழே தந்திருக்கிறேன்.
இந்த பயங்கர டெக்னாலஜியை வைத்து விபரீதங்கள்
நிகழும் முன்னரே, மத்திய அரசு –
இந்த டெக்னாலஜியால் இந்தியாவில் ஏற்படக்கூடிய
நெகடிவ் நிகழ்வுகளை கட்டுப்படுத்தவும்,
பாதுகாப்பாக செயல்படும் முறைகளை உருவாக்கவும்,
- சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்ட
ஒரு குழுவினை அமைத்து, விரைவாக ஆலோசனைகளைப்
பெற்று – அவசரமாக செயலில் இறங்க வேண்டும்…
………………….
அராத்துவின் கட்டுரை கீழே –
Computer Vs AI Vs Governments
பலரும் கணினியையும் ஏஐ யும் ஒப்பிடுகிறார்கள். கணினி வந்தபோதும் இப்படித்தான் பயந்தார்கள். ஆனால் அந்த சவாலை மனித குலம் தாண்டி வந்தது. அதே போல ஏஐ யும் பார்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள்.
கம்பியூட்டர் வந்தபோது மனிதர்கள் தங்கள் வேலை போய்விடும் என பயந்தது உண்மைதான். போராட்டம் எல்லாம் நடத்தினார்கள். ஆனால் கம்பியூட்டர் விஷயத்தில் நடந்தது வேறு. அது வேலை இழப்புக்கு பதிலாக பல்வேறு புதிய வேலைகளை உருவாக்கியது.
கம்பியுட்டர் புது வேலைவாய்ப்புகளை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் உலகப் பொருளாதாரத்தையே பெரிதாக்கியது. அனைவரின் சம்பளத்தை ஏற்றியதில் கம்பியூட்டரின் பங்கு இருக்கிறது.
அது அனைத்து சந்தைகளையும் விரிவாக்கியது. சுற்றுலா , ஹாஸ்பிடாலிட்டி , வங்கி, இன்ஷூரன்ஸ் , ரீட்டெயில் என எல்லா சந்தைகளையும் விரிவாக்கி பல்வேறு புதிய வாய்ப்புகளை உருவாக்கியது.
ஒருசில தொழில்களை மட்டும் உருக்குலைத்தது. உதாரணமாக செய்தித்தாள்கள், வார இதழ்கள் , டைப் ரைட்டிங் போன்றவற்றை சொல்லலாம். ஆனால் அதிலும் மாற்றத்துக்கு மாறாதவர்கள் மட்டுமே மாட்டிக்கொண்டார்கள். டைப் ரைட்டிங் செண்டர் வைத்திருந்தவர்கள் டிடிபி செண்டர் ஆரம்பித்து வளர்ந்தார்கள். ஆன்லைன் மேகசினுக்கு மாறியவர்கள் தப்பித்துக்கொண்டார்கள்.
உலகில் இருப்பவர்கள் எல்லோரும் புத்திசாலி இல்லை . அப்படி இருக்கவும் தேவையில்லை. எல்லோரையும் புத்திசாலியாக மாறுங்கள் எனச் சொல்வதும் அடாவடிதான். ஒரு புது தொழில்நுட்பம் வருகையில், அது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். கம்பியூட்டரை எடுத்துக்கொண்டால், கம்பியூட்டர் துடைப்பவர், டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர், கம்பியூட்டர் உதிரி பாகங்கள் விற்பவர், ஹார்ட்வேர் எஞ்சினியர், நெட்வொர்க் இஞ்சினியர் , டிசைனர் , என பலதரப்பட்ட மக்களுக்கும் வேலை வாய்ப்பை அளித்தது. அதாவது சாஃப்ட்வேர் ப்ரொக்ராமர் என்பதைத்தாண்டி பலருக்கும் கம்பியூட்டர் துறையில் கணிசமான பங்கு இருந்தது.
இப்போது இதை அப்படியே ஏ ஐ க்கு பொறுத்திப் பாருங்கள்.
முதலில் சாஃப்ட்வேர் இஞ்சினியர் 80 % பேர் வேலை இழப்பார்கள் என்கின்றனர். கம்பியூட்டர் அறிமுகமானபோது இப்படி யாரும் பயமுறுத்த வில்லை. நிறுவனங்கள் கம்பியூட்டரை கற்றுக்கொள்ளச் சொன்னது . அதற்கு பயிற்சியும் அளித்தது. வங்கி ஊழியர்கள் சிலர் மட்டும் அதைக் கற்றுக்கொள்ள மாட்டோம் என போராட்டம் நடத்தினார்கள். மற்றபடி வேலை இழப்பு ஏற்படவில்லை.
இந்த ஏஐ தொழில்நுட்பத்தினால் பலதுறைகளிலும் வேலை இழப்பு ஏற்படும் என மதிப்பிடுகிறார்கள். கண்டெண்ட் ரைட்டிங், விளம்பர ஏஜன்ஸிகள் , டிசைனர் , டிராவல் ஏஜண்ட் , முதற்கொண்டு , சாஃப்ட்வேர் இஞ்சினியர் , டெஸ்டிங் எஞ்சினியர் வரை வேட்டு வைக்கக் காத்திருக்கிறது ஏ ஐ.
இப்போதைக்கு ஏஐ அடிப்படையாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. இன்னும் specialized AI agents பெரிய அளவில் மார்கெட்டில் வரவில்லை. அவைகள் வர ஆரம்பித்தால்தான் உண்மை நிலவரம் உறைக்கும்.
ஏ ஐ துறையிலேயே கடும் போட்டியும் ப்ரஷரும் நிலவுகிறது.
கூகிள் co founder sergey brin, “step up or step out ” என gemini AI இல் வேலை செய்பவர்களுக்கு ஒரு மெசேஜ் தட்டி விட்டிருக்கிறார். வாரத்தில் 60 மணி நேரம் வேலை செய்யுங்கள் என மிரட்டியிருக்கிறார்.
மனிதர்கள் செய்யும் வேலையை மட்டும் மனிதர்கள் செய்யட்டும், அடிப்படையான வேலைகள், திரும்பத் திரும்ப செய்யப்படும் வேலைகள், யோசிக்கத் தேவையில்லாத வேலைகளை ஏஐ செய்யட்டும் என்கிறார்கள். இதில் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால், அதி புத்திசாலியான மனிதர்கள் மட்டும், கிரியேட்டிவான மனிதர்கள் மட்டும் வேலை செய்யட்டும். மக்கு பிளாஸ்திரி மனிதர்கள் , புத்திக்கூர்மையற்ற மனிதர்கள், கிரியேட்டிவிட்டி இல்லாத மனிதர்களுக்கு இனி கணிப்பொறி, மென்பொருள் , ஏ ஐ போன்ற துறைகளில் வேலை இல்லை என்பதைத்தான்.
இந்த மனநிலை அல்லது அணுகுமுறை ஒரு நவீன தீண்டாமை மற்றும் மனிதகுல விரோதமானது. குப்பை அள்ளுவது, மலம் அள்ளுவது , சுரங்கம் தோண்டுவது , தீயணைப்பது, வெள்ள மீட்புப் பணி போன்ற கேவலமான பணிகள் மற்றும் ஆபத்தான பணிகளுக்கு இவர்கள் குறிப்பிடும் மூளையற்ற , புத்திசாலித்தனமற்ற மனிதர்களைத்தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்ள். ஒன்று ரோபோவால் இவர்களால் குறிப்பிடப்படும் மக்கு மனிதர்களைப் போல செயல்பட முடியாது அல்லது இவர்களுக்குக் கொடுக்கப்படும் கூலியை விட ரோபோ காஸ்ட்லியாக இருக்கும்.
இது எல்லாம் தாண்டி இந்த ஏஐ யாருக்கு வேலை செய்யப்போகிறது? யாரிடமிருந்து பொருளீட்டப்போகிறது என்பதும் தெரியவில்லை. பொருளாதாரம் என்பது ஒரு சுழற்சியில் அனைத்து மக்களின் பங்களிப்பாலும் உயர்வது.
உதாரணமாக ஐ டி துறை வளர்ந்தபோது அது நிறைய வேலை வாய்ப்புக்களை உருவாக்கியது. அதில் வேலை பார்த்தவர்கள் வளர்ந்தார்கள். அவர்கள் செலவிடும் பணம் மூலமாக அனைத்துத் துறைகளும் வளர்ந்தன. மற்ற துறைகளில் வேலை பார்ப்பவர்கள் சம்பளமும் உயர்ந்தன. உதாரணமாக ஒரு கார் கம்பனி வளர வேண்டும் என்றால், நிறைய பேர் கார் வாங்க வேண்டும். வாங்கும் அளவுக்கு சம்பளம் இருக்க வேண்டும். ஐடி துறை வளர்ந்தபோது இந்த சுழற்சி இருந்தது. இப்போது ஏ ஐ பெரும்பாலான மக்களை வெளித்தள்ளி விட்டு , யாருக்காக உழைத்து எதை அல்லது யாரை முன்னேற்றப்போகிறது என்ற தெளிவில்லை.
எந்த அறிவியல் கண்டுபிடிப்பையும் தடுக்க முடியாது. தடுக்கவும் தேவையில்லை. ஆனால் ஆளும் அரசுகளுக்கு ஒரு கடமை இருக்கிறது. ஒவ்வொரு புது விஷயம் அறிமுகம் ஆகும்போதும், அதன் தாக்கம் என்ன? அதனால் மக்களுக்கு விளையப்போகும் நன்மை தீமைகள் என்ன என விவாதித்து அடிப்படையான சில கொள்கைகளையாவது வகுக்கலாம்.
கணினி மற்றும் இணையம் அதிவேகமாக முன்னேறிக்கொண்டு இருந்தபோது அரசாங்கள் தூங்கிக்கொண்டு இருந்தன. அவை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்து முடித்த பின்தான் சைபர் க்ரைம் போன்ற சட்டங்களை பொறுமையாகக் கொண்டு வந்தனர். கூகிள் un ethical ஆக நடந்துகொண்டு, பல்வேறு வியாபாரங்களை உண்டு செறித்த ஏப்பம் விட்டபின் தான் ஒரு சில வழக்குகள் பதியப்பட்டு லேசான நஷ்ட ஈடு விதிக்கப்பட்டது. இப்போதும் கூகிள் செய்துகொண்டிருப்பது அநியாயம் மற்றும் அராஜகம். ஆனால் எந்த அரசாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை.
அதுபோல தொம்மையாக இருக்காமல், அரசாங்கங்கள் இப்போதே விழித்துக்கொண்டு, ஏ ஐ பயன்பாட்டுக்கு சில நெறிமுறைகள் அல்லது சட்டங்கள் வகுக்கலாம். மக்கள் குடிக்கும் மதுவுக்கே ஒவ்வொரு நாட்டிலும் பல சட்டங்கள் இருக்கையில் , அனைத்து மனிதர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் ஏ ஐ விஷயத்தில் நிச்சயம் அராசாங்களின் தலையீடு அவசியம்.
மற்றபடி, நம் நாட்டில் சாதாரண ஐடி கோடிங் ஏரியாவிலேயே சமீப கால பொறியியல் பட்டதாரிகள் டிங்கி அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். தரம் சுத்தமாக இல்லை. இதை விட இன்னும் தரமான மாணவர்கள் மட்டுமே இனி ஐ டி & ஏஐ துறையில் வேலைக்குச் செல்ல முடியும் என்ற நிலை இருக்கையில் பொறியியல் கல்லூரிகளின் தரத்தை கடுமையாக உயர்த்த வேண்டியிருப்பது மிக மிக முக்கியமான விஷயம். ஆனால் நடக்காது. தானாகவே படித்து சிறக்கும் வெகுசில மாணவர்கள் மட்டுமே இனி இந்தத்துறைகளில் நுழைய முடியும். மற்ற பொறியியல் கல்வி கற்ற மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வியின் பயனாக கூகிள் மேப் பார்த்து ஸ்விக்கி டெலிவரி அல்லது ரேபிடோ ஓட்டிக்கொண்டிருப்பார்கள்.
எந்த ஒரு தொழில்நுட்பமும் , அறிவியல் கண்டுபிடிப்புகளும் தீயது அல்ல. அது யார் கையில் இருக்கிறது, எவர் அதை எப்படி செயல்படுத்தப்போகிறார்கள் என்பதில்தான் ஆபத்து இருக்கிறது.
அந்த வகையில் பார்த்தால் இப்போது ஏ ஐ லீடர் ஆக இருக்கும் நிறுவனங்கள் , சீ ஈ ஓ க்கள், அதில் விற்பன்னர்களாக இருக்கும் பலரின் மனநிலையும், அணுகுமுறையும், அவர்களின் பேச்சுக்களும் அருவருப்பாகவும், மனித குல விரோதமாகவும், ஆபத்தாகவும் இருக்கிறது.
அரசாங்கங்கள் விழித்துக்கொள்ளாது. பிரதமர் அல்லது அதிபர் வேலையை அவர்களை விட ஏஐ சிறப்பாகச் செய்யும் என்னும் நிலை வரும்போதுதான் அவர்களுக்கு உறைக்கும். ஆனால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அது உண்மையும் கூட. முதலில் ஏ ஐ யை பிரதமர், அமைச்சர் , முதல்வர் போன்ற அதிக மூளையும், புத்திசாலித்தனமும் , மக்கள் நலன் பற்றி யோசிக்கத் தேவைப்படாத வேலைகளில் பயன்படுத்திப் பார்க்கலாம். இதில் இன்னொரு நன்மையும் உண்டு. ஏஐ சுயநலமாக சிந்திக்காது !
………………………………………………………………………………………………………………………………………………………………….



நானும் இந்த கணிணித் துறையில் இருந்தவன். அராத்து எழுதியிருப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏதோ கணிணித்துறை நாட்டில் வளர்ச்சியும் பல்வேறு வேலைவாய்ப்புகளையும் கொண்டுவந்துவிட்ட து போலவும் இப்போது ஏஐ டெக்னாலஜி அவற்றையெல்லாம் அழித்துவிடப்போவது போலவும் எழுதியிருக்கிறார். அவரது புரிதலின்மையையும், கணிணியினால் அழிந்த பல்வேறு தொழில்களைப் பற்றி அவரின் அறியாமையையும், அதே சமயம் கணிணியினால் நாம் அடைந்த பயன் மற்றும் வாய்ப்புகளையும் அவர் சரியாக எடைபோடாததையும் நான் காண்கிறேன். “மாற்றம் என்பது மானிடத் தத்துவம். அதை அணை போட்டுத் தடுக்க முடியாது”
கணிணித் துறையால் என்ன என்ன நன்மைகள் என்று அவர் எழுதியிருக்கிறாரோ அவையெல்லாம் ஒரு காலத்தில் மிகுந்த நெகடிவ் தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தின. இவற்றையெல்லாம் இப்போதுள்ள தலைமுறை மறந்திருக்கலாம். என்னிடம் (இது 2000களில் என்று நினைவு) ஒரு எஞ்சினீயர் சொன்னார், சார், நான் வயிறெரிந்து சொல்றேன், நான் ஒரு ரேங்க் மாணவன், எஞ்சினீயரிங் படித்து வேலை பார்த்து இத்தனை வருடங்கள் அனுபவத்திற்குப் பிறகு 8500 ரூ கையில் வருகிறது (10,000 சம்பாதித்திருப்பாராயிருக்கும்). ஆனால் இப்போ சின்னச் சின்ன பசங்களெல்லாம் டிப்ளமா படித்துவிட்டு 18,000, 25,000னுலாம் சம்பளம் சொல்றாங்க. இதுனால அளவுக்கு அதிகமான ஆடம்பரம், உயரும் வீட்டுவாடகை, Pub, Club என்று பலவும் அதிகமாகிவிட்டது என்றெல்லாம் நிறையச் சொன்னார். அவர்களுடைய அளவுக்கு அதிகமான சம்பளம், சமூகத்தில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தி, பல துறைகளிலும் சம்பளம் அதிகமாகி, பொருட்கள் விலை அதிகமாகி…. இந்த கணிணித் துறைக்கும் ஆரம்பகாலத்தில் தொழிற்சாலைகளில் எதிர்ப்பு இருந்தது. ஆனால் மெது மெதுவாக அதன் நன்மைகளைப் பலர் அனுபவத்தில் புரிந்துகொண்டார்கள் (ஆனால் வேலைக் குறைப்பு இருந்தது. ஏதோ கணிணித் துறையால் பலர் வேலைவாய்ப்பு பெற்றனர் சமூகத்தில் பல தொழில்கள் வந்தன என்றெல்லாம் அராத்து எழுதியிருப்பது எனக்கு சிரிப்பை உண்டாக்குகிறது. திறமை பெற்றவர்கள், வேலைகளை மாற்றிக்கொண்டு புதிய சந்தைக்கேற்ப தங்களைப் புதுப்பித்துக்கொண்டவர்கள், புதுவித தொழில் முனைவோர் என்று பலரும் தங்கள் முயற்சியால் வெற்றிபெற்றனர். கணிணியினால் சம்பளம் அதிகமானவர்கள், தங்களுக்கென்று கடனில் வீடு, கார் போன்ற பலவற்றை வாங்க ஆரம்பித்தனர். இதனால் அடுக்குமாடிக்குடியிருப்புகள், கார் போன்ற தொழில்கள், மிக வளர்ச்சி பெற்றன.
2000களில், incoming, outgoing calls என்று பணம் சம்பாதித்தவர்கள், இண்டெர்னெட், தொடுதிரை கைபேசி, பலவிதமாக ஒருவரைத் தொடர்பு கொள்ளும் முறைகள் வந்த பிறகு தொழில் சுணக்கம் பெற்றதும், ஆனால் வேறு தொழில்கள் நிறைய உருவானது நமக்குத் தெரியும் (இவை பற்றி எழுத ஆரம்பித்தால் இழுத்துக்கொண்டே போகும். நம் கண் முன்னால் நாம் கண்ட மிகப் பெரிய மாற்றம் இது.). 85களில் சில பல M.C.A (Master of Computer Application) என்ற கோர்ஸ் சில கல்லூரிகளில் இருந்த து. பிறகு புற்றீசல் போல எஞ்சினீயரிங், எம்.டெக், பிஜி டிப்ளமா என்று பல்வேறு படிப்புகள், இதற்காகவே பல்வேறு கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. அடிப்படைத் திறமை இல்லாது, வெறும் எஞ்சினீயரிங் மாத்திரம் படித்துவிட்டு, பிறகு ஹோட்டல், சூப்பர்மார்கெட்டில் சாதரண வேலை பார்த்தவர்களையும் நான் அறிவேன். இந்தத் தொழிலையும் (Software developing, Project Implementation) நேர்மையாக அணுகாமல் பலர் அதனைச் சம்பாதிக்கும் (அளவுக்கு அதிகமாக) தொழிலாக அணுகிய, நடத்திய பல நிறுவங்களையும் நான் அறிவேன். சாஃப்ட்வேர் தயாரிப்பு இல்லாமல், call centerகளாக பிற நாடுகளின் தேவைக்காக பல நிறுவங்கள் வந்தன. (அதனால் அந்த நாடுகளில் ஏற்பட்ட தாக்கம் என்ன என்பதைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. அந்த வேலையை பிற நாடுகளுக்கு ‘குறைந்த செலவு’ என்ற அடிப்படையில் அளித்த வெளிநாட்டு நிறுவனத் தலைவர்களும் கவலைப்படவில்லை)
சட்டத் தீர்ப்புகளும், குறைந்த செலவில் பயனாளர்களுக்கு ஆலோசனை சொல்லும் automatic system நீதித்துறையில் வரவேண்டியிருக்கிறது, மருத்துவத் துறையிலும் இன்னும் authentic solutions வரவேண்டியிருக்கிறது. அதனை இன்னும் வராமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
எந்த ஒரு புது மாற்றத்திலும் பல நல்லதுகளும் சில பல கெடுதல்களும் நடக்கத்தான் செய்யும். இதில் கெடுதல்களை மாத்திரம் அரசு இயந்திரம் கண்காணித்து சட்டம் இயற்றித் தடுக்கப் பார்க்கவேண்டும் (ஒருவர் பேசாததை பேசியதுபோல காணொளி, ஆவணங்களை மாற்றுவது போன்றவைகள்)
அராத்து இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும்போதே, AI வைத்து புது மார்க்கெட் உருவாகிவிட்டது. இறந்தவர்களின் மினியேச்சர், சிறு சிலைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆரம்பித்து இப்போது திருமணத்திலேயே இறந்தவர் பங்கேற்பதுபோல வரும் வீடியோ. பல புதிய தொழில்கள் வருவதற்குக் காத்திருக்கின்றன. சமூகத்தில் எப்போதுமே survival of the fittest, மாற்றத்தை ஏற்றுக்கொண்டு அதன் போக்கில் புதிய தொழில்கள், தொழில் முனைவோர் என்பதுதான் நடக்கும். சீனாவின் பங்கு, உலகத்தின் தொழிற்புரட்சியில் மிக முக்கியமானது. என்னுடைய துறை சார்ந்தது என்பதால் எழுத எழுத நீண்டுகொண்டே போகிறது
எனக்கு முந்தைய தலைமுறையில், திரைப்பட விளம்பரங்களுக்கு டிசைன், ஓவியங்கள் வரைந்து வாழ்வைப்பெற்ற பல கலைஞர்கள், கணிணி மூலம் இதனைச் செய்ய முடிந்தபோது, ஒரே ஒரு படத்தை வைத்துக்கொண்டு வித விதமாக விளம்பரங்கள், ஃப்ளெக்ஸ் வைத்தபோது எங்கே போனார்கள்? ஆனால் அதே சமயம் இந்த புதிய டெக்னாலஜிக்கு consumers மிக அதிகமானார்கள். (10 வயதைக் கடக்கும் நண்பனுக்கு வாழ்த்து என்று பெரிய ஃப்ளெக்ஸ் வைத்து தங்கள் படங்களையும் போட்டுக்கொள்வது ஒரு உதாரணம்தான்). கடை வாடகை, கடைக்கு ஆட்கள் வரத்து குறைவு என்பதை அறிந்து புதிய டெக்னாலஜியான வீட்டுக்கு டெலிவரி என்பது வந்தபோது அதையொட்டி பல தொழில் நிறுவனங்கள் வந்தன. இது மாதிரி பலவற்றையும் நாம் கண்டிருப்போம், உபயோகித்திருப்போம். என்ன என்ன டெக்னாலஜி, எந்த மாதிரியான விளைவை, பயனை உண்டாக்கியிருக்கிறது என்று எழுத ஆரம்பித்தால் பதில் எங்கோ போய்விடும்.
எந்தத் தொழிலையும் ஆரம்பிப்பவர்கள்/நடத்துபவர்கள், எப்படி அதிக லாபம் சம்பாதிப்பது என்பதைத்தான் பார்ப்பார்களே தவிர, மனித குலம், நம் சமூகம் என்றெல்லாம் பெரும்பாலும் பார்க்கமாட்டார்கள். அது secondary. லாபம் சம்பாதிக்க தொழிலுக்கான cost குறைவாக இருக்கவேண்டும் என்பது அடிப்படை விதி. அப்படி நட க்கும்போது சமூகமே தனக்கான புதிய தளங்களுக்குச் செல்லும். இதைத்தான் நான் பார்த்திருக்கிறேன், இப்படித்தான் நடக்கும்.
செயற்கை நுண்ணறிவை வைத்துக்கொண்டு, தவறான, ஒருவர் பேசாத ஆனால் பேசுவதுபோன்று வரும் வீடியோக்களைக் காண்கிறேன். இதுபோல சைபர் குற்றங்கள் பலவும் வர ஆரம்பித்திருக்கின்றன. இவைகளை அரசு கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும். இதுமட்டுமே புதிய டெக்னாலஜியின் பிரச்சனையாகப் பார்க்கிறேன் (இது ஏதோ செயற்கை நுண்ணறிவினால் ஏற்பட்ட பிரச்சனை என்று நினைக்காதீர்கள். கணிணி வந்தபோதும் இதுபோன்ற பிரச்சனைகள் வந்தன, குற்றங்கள் வந்தன, அவை தொடர்ந்தன)