……………………………………

……………………………………
சங்கரர் என்னும் கவிஞர் –
சங்கரர் ஒரு தத்துவ அறிஞர், யோகி, மெய்ஞானி. ஆனால் அத்வைத வேதாந்தத்தை புரிந்துகொள்ள அந்த உருவகங்கள் மட்டும் போதாது. அத்வைதவேதாந்தம் முழுக்க முழுக்க கவித்துவமானது. சங்கரரை ஒரு மாபெரும் கவிஞர் என்று கொண்டால் மட்டுமே உண்மையில் அத்வைதத்தை அணுக முடியும். வேதரிஷிகள் எவரும் தங்களை ஞானி என்றோ யோகி என்றோ சொல்லிக்கொள்ளவில்லை, கவிஞர் என்றே சொல்கின்றனர், பாடகர் என்றே முன்வைக்கின்றனர். சங்கரர் அவர்களில் ஒருவர்
சங்கரர் மாபெரும் கவிஞர். ஒரு கவிஞராகவே அவர் தத்துவத்தை முன்வைக்கிறார். அவரிடமிருந்த அந்த கவித்துவத்தையே பின்னர் வந்த சங்கரர்கள் விரிவாக்கி மகத்தான கவிதைகளான சௌந்தரிய லகரி போன்றவற்றை சங்கரரின் படைப்புகளாக முன்வைத்தனர். ஒரு கவிஞராக அவரே அவற்றை இயற்றியிருக்கவும்கூடும்.
சங்கரரின் கவித்துவம் அவருடைய மகத்தான உவமைகள் வழியாகவே இன்றும் நிலைகொள்கிறது. சங்கரரின் ஐந்து உவமைகளை முக்கியமாக சொல்லலாம்.
(1) கயிற்றரவு
இது ஒரு புகழ்பெற்ற உவமை. ஒரு மாலையில், மங்கிய வெளிச்சத்தில் நீங்கள் பார்க்கும்போது சாலையில் வளைவாக ஏதோவொன்று கிடக்கிறது. அதை பார்க்கும் ஒரு கணத்தில் அதை பாம்பு என்று நினைத்து அஞ்சி மெய்சிலிர்த்துவிடுகிறீர்கள். அந்த குறிப்பிட்ட கணத்தில் அது பாம்புதான். மறு கணத்தில் தெளிவுபெற்று அதை கயிறாக அறிந்துகொள்கிறீர்கள். கயிறு பாம்பெனத் தோன்றுவது மாயை. தெளிவடைந்து அது கயிறு என உணர்தல் மெய்ஞானம்.
அவ்வாறு தெளிந்த பின்பு மீண்டும் அக்கயிற்றை பாம்பாக உங்களால் பார்க்க முடியாது. ஒரு கணத்தில் அது தன்னை பாம்பாகக் காட்டி மீண்டும் கயிறாக காட்டிவிடுகிறது. கயிறு வந்த பிறகு அதை மீண்டும் பாம்பாக பார்க்கவேண்டிய அவசியமில்லை.பிரம்மம் என்பது தனது அளவற்ற லீலையால் தன்னை இப்பிரபஞ்சமாக காட்டிக்கொண்டிருக்கிறது. மிக விரிவாக இதுபற்றி பேசப்பட்டுள்ளது. நான்கூட கயிற்றரவு என்றொரு கதை எழுதியிருக்கிறேன்.
அதுசார்ந்த மற்றொரு கேள்வி, நீங்கள் ஏன் அதை பாம்பாக பார்க்கிறீர்கள் என்பது. ஏனெனில் அவ்வாறு வளைந்து கிடைக்கும் ஒன்றை பாம்பாக பார்க்கக்கூடிய ஒரு போக்கு (tendency) உங்களிடம் உள்ளது. அது உங்கள் பிறப்பியல்பு. உங்கள் உள்ளுணர்வு. வெகுகாலத்திற்கு முன் நீங்கள் குரங்காக இருந்தீர்கள். குரங்குக்கு முதன்மையான எதிரி பாம்புதான். பாம்பு பற்றிய அச்சம் நம்முள் நீண்டகாலமாகவே இருந்து வந்துள்ளது. அத்தகைய அச்சம் அந்த கயிறை ஒருகணம் பாம்பாக காட்டுகிறது. அதேபோலத்தான் மாயையை உருவாக்கும் அடிப்படைப்போக்கு நமக்குள் உள்ளது.
(2) குடாகாசம், மடாகாசம்
ஒரு குடத்திற்குள் வானம் (space) உள்ளது. அந்த வானம் வட்டவடிவமாக உள்ளது. அக்குடத்தை உடைத்தபின்பு அந்த வானம் எங்கு சென்றது? அது எங்கும் செல்லவில்லை, அங்குதான் உள்ளது. வானம் என்பது ஒன்றுதான், அது எங்கும் உள்ளது. ஆனால் அதை வட்டவடிவ வானமாக மாற்றுவது அந்த குடம்தான். அதுபோல பிரம்மம் ஆத்மாவாக மாறவில்லை. நீங்கள் அதைச்சுற்றி அகங்காரம் எனும் குடத்தை உருவாக்கி கொண்டதால் உங்களுக்குள் இருப்பது ஒரு தனி ஆத்மா என்பதாக (வட்டமான ஆகாயம் என்பதுபோல) நினைத்துக்கொள்கிறீர்கள்.
(3) வயலில் பாயும் தண்ணீர்
ஒரு மடை வழியே வயலில் தண்ணீரை பாய்ச்சுகிறோம். அங்கு சென்று நிரம்பியவுடன் அது சதுரவடிவ தண்ணீராக மாறிவிடுகிறது. ஆனால் அந்த சதுரவடிவம் தண்ணீரின் இயல்பு அல்ல. இருக்கும் இடத்திற்கேற்ற வடிவத்தை அடையும் இயல்பு தண்ணீருக்கு உண்டு. ஒளி கொண்ட தண்ணீர், ஓசை கொண்டய தண்ணீர் போன்றவற்றையும் உணர்கிறோம். தண்ணீரின் தோற்றங்கள் அவை. தண்ணீராக நாம் அவற்றை அறிகிறோம். அவையும் தண்ணீரே, ஆனால் அவையே தண்ணீர் அல்ல.
(4) தாமரை இலை தண்ணீர்
இந்த வாழ்க்கையையே தாமரை இலைத் தண்ணீர் போன்று நிலையற்றறது என்கிறார் சங்கரர். அது நிலையற்றது என்பதால் மட்டுமல்ல, அழகானது என்பதாலும்தான். தாமரை இலையின் மீது இருக்கும் தண்ணீர் அதில் ஒட்டாததால் நீர்மணியாக ஒளிவிடக்கூடிய முத்தாக இருக்கிறது. அது நிலையற்று இருப்பதால்தான் அழகாகவும் உள்ளது. அப்படி விரித்துக்கொண்டே செல்லலாம். நளினீ தலகத ஜலம் அதி தரளம் என்கிறார் சங்கரர்.
(4) கனவு
கனவில் நீங்கள் எவ்வளவு உண்டாலும் உங்களுடைய பசி ஆறாது. இங்கு நீங்கள் வாழும் வாழ்க்கை எனும் கனவில் எதை அறிந்தாலும் ஞானம் எனும் பசி ஆறாது.
இத்தகைய வலுவான உவமைகள் வழியாகத்தான் சங்கரர் தனது தரிசனங்களை முன்வைக்கிறார். அக்காலகட்டத்தில் விவாதத்திற்கான அடிப்படையாக உவமைகள் இருந்துள்ளன. உபமானப் பிரமானம் என்று அவற்றுக்குப் பெயர். உவமை வழியாகவே ஒன்றை நிறுவலாம், மறுக்கவும் செய்யலாம். இன்றும் இந்த உவமைகள் அத்வைதத்தை புரிந்துகொள்ளவும் விவாதிக்கவும் உதவுகின்றன.
சங்கரரை கவிஞராகப் பார்க்கையில் நமக்கு ஒரு விடுதலை அமைகிறது. அவர் சொன்ன தரிசனங்களை நாம் நம் வாழ்க்கையாக விரித்த்துக்கொள்ள முடிகிறது. அவர் சொன்ன உவமைகளை நமக்கான படிமங்களாக நாம் வளர்த்துக் கொள்ள முடிகிறது. உதாரணமாக, கயிற்றரவு என்பது எனக்கு வெறுமே மாயை நிகழும் முறையை விளக்கும் உருவகம் மட்டும் அல்ல. கயிற்றில் ஒரு பாம்பு உள்ளது அல்லவா? கயிற்றிலுள்ள அந்த பாம்புத்தன்மையைத்தானே நாம் பாம்பென அறிகிறோம்? அதேபோல பாம்பில் கயிறியல்பு உண்டு அல்லவா? பாம்பு ஒரு வகையான கயிறுதானே? என் நோக்கில் அது மாயையின் மகத்துவத்தை, மாயை ஒருவகை பிரம்மத்தோற்றமே என்பதைச் சொல்லும் அழகிய உவமையும்கூட.
அதேபோல ஒவ்வொரு உவமையையும் நாம் வளர்த்துக்கொள்ள முடியும். அவையெல்லாம் நம் தியானத்திற்குரிய உருவகங்கள். நான் தாமரையிலையில் துவளும் நீர்த்துளியைப் பார்க்கையிலெல்லாம் தரளம் என்னும் தமிழ்ச்சொல்லே என் அகத்தே எழுகிறது. தரளம் என்றால் சம்ஸ்கிருதத்தில் நிலையற்றது என்று பொருள். தமிழில் முத்து என்று பொருள். தாமரையிலையில் சுடரும் நீர் ஒளிமிக்க முத்து அல்லவா? தனிப்பட்ட முறையில் கவிஞராகிய சங்கரரே எனக்கு அணுக்கமானவர், இப்புடவியைப் படைத்த பிரம்மனும் கவிஞனே என்பதனால்.
(பகுதி-6-ல் தொடர்கிறது …)
……………………………………………………………………………………………………………………………………………..




நிஜமான சாமியாரா இல்லை ….