(பகுதி-3)அரசியல்வாதிகள் அறியாத ஒரு இந்துமத பின்னணி …!!!

…………………………………….

…………………………………….

நாராயணகுரு தனது உரை ஒன்றில் ஐந்து விரல்களை ஓர் உவமையாக சொல்கிறார். ஐந்து விரல்களில் கட்டை விரலை வேதாந்தமாக வைத்துக்கொள்ளலாம். ஏனெனில் மற்ற எல்லா விரல்களுடனும் இணைந்து வேலைசெய்யும் தன்மை கட்டை விரலுக்கு உண்டு. அதேசமயம் அது தனித்தும் செயல்படும். வேதாந்தத்திற்கு அத்தகைய தன்மை உண்டு. சங்கரருடைய வரலாற்று பங்களிப்பை அவருடைய காலகட்டத்தின் சூழலில் இருந்து புரிந்துகொள்ள வேண்டும்.

1 இந்துமதத்தின் புத்துயிர்ப்பு

சங்கரரின் காலத்தில் பௌத்தமும் சமணமும் அழிய ஆரம்பித்தன. இங்கு நமது இடதுசாரி, போலி வரலாற்று ஆசிரியர்கள் இந்துமதம் பௌத்தத்தை அழித்தது என்பார்கள். ஆனால் அது தவறு. எந்தவொரு மதத்தையும் இன்னொரு மதம் அழிக்கவோ ஆக்கவோ முடியாது. அவ்வாறு நிகழ்வதற்கான வரலாற்று பின்புலமும் காரணமும் இருக்கும்.

இந்த நாட்டில் பௌத்தம் படிப்படியாக அழிந்ததற்கு முதன்மை காரணம் அதனுடைய கடவுள் வரிசை (Pantheon) சிறியது என்பதால்தான்.

தொடக்க காலகட்டத்தில் வணிகர்களின் அனைத்து வழிபாட்டு முறைகளையும் ஒருங்கிணைக்கவும், அதன்வழியாக வணிகர்களையும் பின்னர் சிரமணர் என்னும் உழைப்பாளி மக்களையும் ஒரே நம்பிக்கையின்கீழ் ஒன்றுதிரட்டுவதற்கும் பௌத்தத்தால் முடிந்தது. ஆகவே மன்னர்கள் அதற்கு நிதியளித்தார்கள்.

ஒருகட்டத்தில் பௌத்தத்தால் உண்டாக்கப்பட்ட பாதையில் பல்வேறு விதமான மக்கள் உள்ளே வரத்தொடங்கினர். அந்த மக்கள் உள்ளே வரும்போது அவர்களுடைய தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் உள்ளே வந்தன. அந்த தெய்வங்களையெல்லாம் உள்ளே வைப்பதற்கு பௌத்தத்தின் தத்துவத்திற்குள் இடமில்லை. பௌத்தத்தின் மைய தெய்வம் புத்தர்.

அதில் பிற தெய்வங்கள் உள்ளே வரமுடியாது. ஒரு கட்டத்தில் பௌத்தம் உறையநேர்ந்தது. கூடவே பௌத்தம் தாந்த்ரீக மரபை ஏற்றுக்கொண்டு ரகசியவழிபாட்டு முறைகளுக்குள் சென்று வஜ்ராயன பௌத்தமாக மாறியது. பௌத்த மடங்கள் அதிகார மையங்களாக, பெரும் நிதிகொண்டவையாக ஆயின. விளைவாக மக்களிடமிருந்து  பௌத்தம் விலகியது. இன்றும் இந்நிலையை ஸ்ரீலங்கா முதலிய நாடுகளில் காணலாம்.

அந்த சமயத்தில்தான் இந்துமதம் மறுபிறப்பு எடுக்கிறது. இந்துமதத்தின் கடவுள்நிரை முடிவற்றது. நாம் இன்று பார்க்கக்கூடிய ஏராளமான தெய்வங்கள் அனைத்தும் வெவ்வேறு அடித்தள மக்களின் தெய்வங்களாக இருந்து பத்தாவது பன்னிரண்டாவது நூற்றாண்டின் காலகட்டத்தில் உள்ளே வந்தவைதான்.

எந்தவொரு தெய்வத்தையும் இங்கு இந்து மையமரபுக்குள் கொண்டுவந்து வைத்துவிடலாம். தொன்மங்களை உருவாக்கலாம், வழிபாட்டுமுறையை நீட்டிக்கலாம். நீத்தார் மூத்தார் வழிபாடாக இருந்த பல நம்பிக்கைகள் இந்து மதத்திற்குள் நுழைந்தபோது மனிதர்களே தெய்வமென அமைந்தார்கள்.

இன்று நாம் பார்க்கும் பல மனிதர்கள் இன்னும் இருநூறாண்டுகள் கழித்து ஆலயங்களில் தெய்வங்களாக உட்காரலாம். ஏரலில் சேர்மன் அருணாசல சுவாமி அண்மைக்காலத்தில் வாழ்ந்தவர்தான். இன்று பல ஆலயங்களின் கோபுரத்தில் கிருபானந்தவாரியார் அமர்ந்திருக்கிறார். அதற்கான ஒரு இடம் இந்துமதத்தில் இருப்பதனால் பல்வேறு சமூகங்கள் இந்துமத பொதுநம்பிக்கைக்குள் வந்தன.

மக்கள்குழுக்கள் பொதுவணிகம் மற்றும் பொது நிர்வாகத்திற்குள் நுழைந்து அரசுகள் விரிவடைந்தபோது மக்களை உள்ளடக்கும்பொருட்டு அரசகர்ளும் பௌத்தத்தை உதறிவிட்டு இந்து மதத்திற்குள் வந்தனர். மரக்கன்றுகளை சுற்றி பாதுகாப்புக்காக இரும்பு வலைகள் அமைத்திருப்பர். அம்மரம் வளர்ந்து பெரிதாகும்போது அந்த வலையை அது உடைந்துவிடும். ஆனால் இந்துமதம் நெகிழக்கூடியது, அதை உடைக்கமுடியாது. ஆறாவது ஏழாவது நூற்றாண்டு காலகட்டத்தில் சாதவாகன பேரரசின் உடைசல்களாக வந்த சிறுசிறு ராஜ்ஜியங்கள் எல்லாம் பௌத்தத்தை கைவிட்டு இந்து மதத்திற்கு வந்த காலகட்டம் அது.

2 பக்தி இயக்கம்

புதிய நிலங்களில் குடியேறி பண்பாடுகளை உண்டாக்கிய பல்வேறு உழைக்கும் சாதிகள் தங்களது கடவுள் வழிபாடுகளுடன் இந்து மதத்திற்குள் வரத்தொடங்கிய காலம் இது என வரையறை செய்யலாம். இந்த காலம்தான் பக்தி இயக்கத்தின் காலம்.

பக்தி இயக்கம் என்பது இந்து மதத்தை முழுமையாக மறுவரையறை செய்தது. ஒன்று இந்து மதத்தில் சைவமும் வைணவமும் பெருமதங்களாக வளர்ந்தன. அவை பெரிய ஆலயங்களையும், திருவிழாக்களையும் உருவாக்கிக்கொண்டன. அந்த ஆலயங்களில் எல்லா தெய்வங்களும் இடம்பெற்றன. பழங்குடிகள் முதல் பல்வேறு வகை மக்கள் கொண்டிருந்த எல்லா வழிபாட்டு முறைகளும் ஆலயங்களுக்குள் வந்தன.

பக்தி இயக்கம் வேதவேள்விகள், ஆசாரங்கள், துறவு போன்றவற்றுக்கு பதிலாக தூய பக்தி ஒன்றே விடுதலைக்கான வழி என்று கூறியது.

இசைகள் வழியாக, கலைகள் வழியாக, இலக்கியம் வழியாக அந்த பக்தியை முன்வைத்தது. அது எல்லாவகை மக்களையும் உள்ளிழுத்தது.

அன்று மையமதங்களுக்கு வெளியே குடித்தெய்வவழிபாடு, சிறுதெய்வ வழிபாடு என சிதறிக்கிடந்த ஏராளமான சூத்திர ஜாதிகளை உள்ளிழுப்பதாக அது அமைந்தது. இதை நீங்கள் தொன்மங்களிலேயே பார்க்கலாம்.

பக்தி இயக்கம் முன்வைக்கும் ஆழ்வார்கள், நாயன்மார்களில் பக்தர்கள் பெரும்பாலானவர்கள் பிராமணர் அல்லாதவர்கள். பக்தி இயக்கம் ஒரு பெரிய சமூக முன்னகர்வு.

மீமாம்சையின் வளர்ச்சி

சங்கரரின் காலத்தில் மீமாம்சம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்திருந்தது.குப்தப்பேரரசின் காலம் முதல் மீமாம்சத்திற்கு அரச ஆதரவு நிறையவே இருந்தது. பௌத்த, சமண மதங்களின் காலகட்டத்திலும் அரசர்கள், பிரபுக்களின் ஆதரவால் மீமாம்சம் வலுவாகவே நிலைகொண்டது.வைதீகச் சடங்குகளை வலியுறுத்தக்கூடிய தரிசனம் பூர்வ மீமாம்சம்.  குமரிலர் என்ற அறிஞர் மீமாம்சத்துக்கு புத்துயிர் அளித்தார். பொதுவாக பூர்வமீமாம்சம் மேலெழும்போது வேதாந்தம் சற்று கீழிறங்கும். கர்மகாண்டம் மேலெழும்போது ஞானகாண்டம் கீழிறங்கும்.

சம்ஸ்கிருதத்தின் செல்வாக்கு

சங்கரரின் காலகட்டம் சம்ஸ்கிருதம் மிகுந்த செல்வாக்குடன் இருந்த ஒன்று. சம்ஸ்கிருதத்தின் கடைசி மறுமலர்ச்சி எட்டாம் நூற்றாண்டில் நடந்தது. அதில் காஞ்சி முதன்மை இடம் வகித்தது.

அக்காலகட்டப் பல்லவர்கள் கூட சம்ஸ்கிருத பல்லவர்கள் என்று சொல்லப்பட்டனர். காஞ்சியில் ஆசார்ய தண்டி என்ற கவிஞரால் காவ்யாதர்சம் நூல் எழுதப்பட்டது. சம்ஸ்கிருத இலக்கண வரலாற்றில் கடைசி பேரலை என்பது அதுதான்.

ஆகவே சங்கரரின் வரலாற்றுச் செயல்பாட்டை இப்படி வரையறை செய்யலாம்

  • மீமாம்ஸைக்கு எதிர்வினையாக செயல்பட்டது
  • பௌத்தத்திற்கு எதிர்வினையாக செயல்பட்டது
  • உருவாகி வந்த புதிய சாதிகளை உள்ளிழுக்கக்கூடிய மத சீர்திருத்தத்திற்கு ஆதரவாக செயல்பட்டது.
  • சம்ஸ்கிருதத்தின் வளர்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது.

இது சங்கர அத்வைதத்தின் வரலாற்று பங்களிப்பு. இந்து மெய்யியலின் ஆறு தரிசனங்களை ஐந்து விரல்களாகக் கொண்டால் அவற்றில் கட்டைவிரலாக ஆனதுதான் அத்வைதத்தின் வெற்றி. அவ்வாறு ஆகக்கூடிய தகுதி அத்வைதத்திற்கு மட்டும்தான் உள்ளது என்பதால்தான் வித்யாரண்யர் தனது காலகட்டத்தில் அத்வைதத்தை முன்னிறுத்தி இந்துமதத்தை ஒருங்கிணைத்தார்.

இந்து மதத்தை ஓர் ஆலயமாக உருவகித்தால் அதன் உச்சியில் இருக்ககும் கலசம் என்பது எப்போதுமே அத்வைதம்தான். இதை சொன்னதும் வைணவர்கள் விசிஷ்டாத்வைதத்தை பற்றி கேட்பீர்கள். விசிஷ்டாத்வைதம் அத்வைதத்தின் ஒரு திருத்தம் தான் (விசிஷ்ட-அத்வைதம்). துவைதமும் அவ்வாறுதான். அவை அத்வைதத்தின் ஒரு நீட்சியே. ஒருவகையில் சைவசித்தாந்தம்கூட அத்வைதத்திற்கான தத்துவார்த்தமான எதிர்வினை மட்டும்தான்.

ஆகவே கலசம் என்பது அத்வைதமாகவே உள்ளது.

பழைய இடிந்த ஆலயங்களை பார்த்தால் முதலில் அதன் கலசம்தான் விழுந்திருக்கும். கலசம் விழுந்தவுடன் அதை தாங்கி நின்றிருந்த கல்லில் விரிசல் ஏற்படும். அவ்வாறாக அடித்தளம் வரைக்கும் அந்த விரிசல் பரவும். அத்வைதம் அத்தகைய கலசமாக இருந்ததற்கு காரணம் அது பிற அனைத்து தரிசனங்களையும் ஒருங்கிணைக்கக்கூடிய பண்போடு இருந்தது என்பதுதான். இப்போது மட்டுமல்ல. ரிக்வேத காலத்தில் இருந்தே அது அவ்வாறுதான் இருந்துள்ளது.

வேதத்தின் மொத்த அமைப்பையும் கர்மகாண்டம் என்றும் ஞானகாண்டம் என்றும் இரண்டாக பிரிப்பர். வேதவேள்விகளையும் அதன் பயன்களையும் பற்றி பேசக்கூடியது கர்மகாண்டம். ஞானத்தையும் அதன் வழியாக அடையக்கூடிய மீட்பையும் பேசுவது ஞானகாண்டம்.

வேதத்தின் கருப்பொருளாக திரண்டு வந்தது பிரம்மம் எனும் கருதுகோள். பிரம்மம் என்ற உருவகத்திற்கு தெய்வம், இறைவன் போன்ற சொற்களை இடக்கூடாது என்பதால்தான் கருதுகோள் (Concept) என்ற சொல்லை பயன்படுத்துகிறேன். அது தத்துவார்த்தமான, உள்ளுணர்வு சார்ந்த ஒரு அறிதல்.

இருப்பதாக உணர்ந்தும் ஆனால் இன்னதென்று சொற்களால் விவரிக்க முடியாததாயும் உள்ள ஒன்றே பிரம்மம். அந்த பிரம்மத்தை நோக்கி மொத்த ரிக்வேதமும் சென்றுசேர்வதை பார்க்கலாம். ரிக்வேதத்தின் சிருஷ்டிகீதம் ஓர் உச்சம்.

இத்தகைய உச்சம் வந்தவுடனேயே இந்தியாவில் இருக்கக்கூடிய சிறுசிறு மத சம்பிரதாயங்களை இணைக்கக்கூடிய ஒரு பொற்பட்டு நூலாக அது மாறியது. இந்தியாவின் அனைத்து தரிசனங்களையும் ஒரு மாலையாக அது கோர்க்கத்தொடங்கியது. ஒவ்வொரு குலமும் வழிபடக்கூடிய அத்தனை தெய்வங்களும் பிரம்ம சொரூபமே. எந்தவொரு தெய்வத்தையும் பிரம்மமாக ஆக்கமுடியும் எனும்போது இந்துமதம் ஒன்றுதிரள தொடங்கியது.

இந்தியாவின் தரிசனங்களையும் இந்து மதத்தையும் புரிந்துகொள்வதற்கு நாம் கைக்கொள்ள வேண்டிய முக்கியமான சொற்கள், தொகுப்புத்தன்மை, சமரசத்தன்மை, ஒன்றாக்கும் தன்மை. அதற்கு சம்ஸ்கிருதத்தில் சரியான சொல் சமன்வயம். சமன்வயம் என்றால் எதன் முக்கியத்துவத்தையும் சிறிதும் குறைக்காமல் அனைத்தையும் ஒருங்கிணைப்பது. இந்த அம்சம் இந்து, பௌத்தம், சமணம் என அனைத்துக்கும் உண்டு என்றபோதிலும், இந்து மதத்திற்கு இருந்த அளவுக்கு பிறவற்றுக்கு இருந்ததில்லை.

வேறு எந்த மதத்திற்கு நீங்கள் சென்றாலும் உங்களுடைய நம்பிக்கை, மரபு, தெய்வம் என அனைத்தையும் கழற்றிப்போட்டுவிட்டு வெறும் ஆத்மாவோடுதான் செல்லமுடியும்.

கடந்த நாற்பது ஆண்டுகளாக பல்வேறு நாட்டுப்புற தெய்வங்கள் இந்து மதத்திற்குள் வந்திருப்பதை காணலாம். எனது சிறுவயதில் சுடலைமாட சாமியாக இருந்தது இன்று அருள்மிகு சிவசுடலைமாட சாமியாக மாறியிருக்கிறது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பழங்குடி தெய்வங்கள் இந்து மதத்திற்குள் வந்துள்ளன.

இத்தகைய தொகுப்புத்தன்மையை உண்டாக்கும் ஒரு பொற்பட்டு நூலாக அமையும் தகுதி பிரம்மம் என்ற கருதுகோளை முன்வைக்கும் வேதாந்தத்திற்கு உண்டு. அதனால்தான் வேத காலகட்டத்திற்குப் பிந்தைய இந்து மெய்யியலின் வளர்ச்சிக் காலத்தில் உபநிடதங்கள் பிரம்மம் என்ற கருதுகோளை வளர்த்து வளர்த்து உச்சம் நோக்கி கொண்டுசென்றதை பார்க்கிறோம்.

பல உவமைகள் பிரசித்தமானவை. ‘அனைத்து நதிகளும் சென்று சேர்வது கடலில்தான்’, ‘ஒரு மரத்தின் வேர் முதல் கனிவரை இருக்கக்கூடிய ரசம் என்பது ஒன்றுதான்’ (சாந்தோக்கியம்). இவ்வாறாக எல்லாவற்றையும் ஒன்றாக தொகுக்கக்கூடிய பார்வையை உபநிடதங்கள் வளர்த்து அதை பிரம்ம சூத்திரம் வரை கொண்டுசெல்கின்றன. அனைத்தையும் இணைக்கும் ஒருமைநோக்கே கீதையின் மையத்தத்துவம்.

அதன்பிறகுதான் இந்தியாவில் சமணமும் பௌத்தமும் வளர்ந்து வருகின்றன. அதற்கும் பிறகு அத்வைதம் வழியாக வேதாந்தம் மீண்டும் வரும்போது அந்த ஒருங்கிணைக்கக்கூடிய பார்வையை, தொகுத்து ஒன்றிணைக்கக்கூடிய சமன்வயத்தை முன்வைக்கிறது.

அது விழுங்கக்கூடிய பார்வை அல்ல, கைகோர்க்கக்கூடிய பார்வை. அந்த வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த பார்வையை முன்வைத்ததால்தான் அடுத்த காலகட்டத்தின் பெருங்குரலாக சங்கரர் எழுந்துவந்தார். இதற்கு உவமையாக கங்கையை சொல்லலாம்.

சூர்தாஸின் ஒரு வரி உண்டு. ‘நகரின் அனைத்து தண்ணீரையும் கங்கை ஈர்ப்பதற்கான மர்மம் என்ன?’. எல்லாமே கடைசியில் கங்கையில் சென்றுதான் சேர்க்கின்றன. அதுபோலவே அத்வைதமும் பிரம்ம தரிசனமும் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மாபெரும் கங்கை போல இங்குள்ள அத்தனை சிந்தனைகளையும் இணைத்து தொகுத்து கடலை நோக்கி இழுத்து சென்றுகொண்டிருக்கின்றன. கடல் மாறாமல் எப்போதும் அங்குதான் உள்ளது.

(பகுதி-4-ல் தொடர்கிறது …)

…………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to (பகுதி-3)அரசியல்வாதிகள் அறியாத ஒரு இந்துமத பின்னணி …!!!

  1. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    வாசக நண்பர்கள் அனைவருக்கும் –
    வணக்கம் …

    வொர்ட்ப்ரஸ் சாஃப்ட்வேர் அமைப்பு, புதிய
    கட்டமைப்பில், ஏஐ தொழில் நுட்பத்தை உள்ளடக்கி –
    தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறது…

    அதன் விளைவாக நானும் விமரிசனம் தளத்தை
    மாற்றியமைக்க வேண்டியதாகி விட்டது….
    தொழில் நுட்பம் சுத்தமாகத் தெரியாத நான்
    புதிய டெக்னாலஜியில் விமரிசனம் தளத்தை இயக்குவதில்,
    பெரும் சங்கடங்களை எதிர்கொள்கிறேன்.

    எனக்குத் தெரிந்த வரையில் ட்ரையல் அண்ட் எர்ரர்
    முறையில் தளத்தை உருவகப்படுத்திக் கொண்டு
    இயங்க முயற்சிக்கிறேன்… கொஞ்ச நாட்களில்
    ஓரளவு பழகி விடுவேனென்று நம்புகிறேன்.

    முதுமை, உடல் கோளாறுகள், தொலைந்து போகும்
    ஞாபக சக்தி ஆகியவை தான் – எனக்கு இடையூறுகள்….

    தவிர்க்க முடியாத இவற்றை ஏற்றுக்கொண்டே

    • முயற்சிகளை தொடர்கிறேன்.

    இந்த புதிய தொழில் நுணுக்கத்தில் எழுதுவது, இயங்குவது
    எனக்கு மிகவும் சிரமமாகவே இருக்கிறது….

    தொடர்ந்து இயங்க வேண்டும் –
    எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் –
    என்கிற ஆர்வம் தான்
    என்னை இன்னமும் இயக்கிக்கொண்டிருக்கிறது.

    பார்ப்போம் … இறை -இயற்கை இன்னும்
    எத்தனை நாள் என்னை அனுமதிக்கப்
    போகிறதென்று….!!!

    • வலைத்தள மாற்றம் காரணமாக ஏற்படும்
      சிரமங்களை – தயவுசெய்து பொறுத்துக்
      கொள்ளுங்கள் (வேறு வழி … ??? ….!!! )

    • வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்
      28, மார்ச், 2025

    …………………………………………

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      //முதுமை, உடல் கோளாறுகள், தொலைந்து போகும்
      ஞாபக சக்தி ஆகியவை தான் – எனக்கு இடையூறுகள்…// இந்த மாதிரி எழுதாதீர்கள். என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் என்றும் 40-50 வயதுகளில்தான் இருக்கிறீர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். அதனால்தான் என் கருத்தையும் அவருக்கு மனம் நோகக்கூடாதே என்றெல்லாம் பார்க்காமல் பகிர்கிறேன்

      சமீப காலங்களில் மிகவும் வித்தியாசமான பல பதிவுகள் வருகிறது. உங்கள் பரந்த வாசிப்பு/கவனிப்பு ஆச்சர்யப்படுத்துகிறது.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    //நீத்தார் மூத்தார் வழிபாடாக இருந்த பல நம்பிக்கைகள் இந்து மதத்திற்குள் நுழைந்தபோது மனிதர்களே தெய்வமென அமைந்தார்கள்.// கருத்து எழுத கஷ்டமா இருக்கு. வேர்ட் டாகுமெண்டில் வேகமாக எழுதி பேஸ்ட் பண்ணவேண்டியதா இருக்கு.

    இது ஒரு இண்டெரெஸ்டிங் கருத்து. காரணம், சமீபத்தில் நான் படித்த சோழர் வரலாறு. உறையூர் சோழர் தலைநகரமாக 7ம் நூற்றாண்டுக்கு முன் இருந்த து. (250-600 காலகட்டம் களப்பிரர். அதற்கு முன் சோழர்கள் தலைநகரம் பூம்புகார் மற்றும் நிலத் தலைநகரம் உறையூர்). உறையூர் வைணவக் கோயிலில் கமலநாச்சியார் என்பவர் தாயார். அவர் சோழ அரச மரபினர், அந்தக் குலத்தில் உதித்த அரசகுலப்பெண். தற்போது அவர் வழிபடும் தாயார். இதுபோல பீவி நாச்சியார், இன்னும் பல உதாரணங்கள் கொடுக்கலாம்.

    ஏன்… இன்று ஜைனர்களுக்கு லக்ஷ்மி முக்கிய தெய்வம். அவர்களும் சனாதன கட்டமைப்புக்குள் வந்துவிட்டார்கள்.

    பௌத்தம் புலால் உண்ணாமையைக் கூறினாலும், புலான் உண்ணுவதை ஏற்றுக்கொண்டதால்தான் அந்த மதம் கடல் கடந்தும் இருக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.