…………………………………………….

………………………………………………..

சங்கரரின் வரலாற்று சித்திரம்
சங்கரரின் வரலாறை நாம் ஒரு தொன்மமாக அறிந்திருக்கிறோம். அவரைப் பற்றிய பொதுவான சில கதைகள் உண்டு. ஆனால் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான ஒன்று உள்ளது. சங்கரரை பற்றிய முதல்நூல் என்று சொல்லப்படக்கூடியது சிக்ஷிகர் எழுதிய மஹா சங்கர திக்விஜயம் (மஹா விஜயம்) என்ற நூல்.
இது சங்கரருடைய காலத்துக்கு நானூறு ஆண்டுகளுக்கு பின் பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அந்த நூலின் சில மேற்கோள்கள்தான் இன்று கிடைக்கின்றன. நமக்கு கிடைக்கக்கூடிய முக்கியமான நூல்.. இது வித்யாரண்யரால் எழுதப்பட்டது. இது சங்கரரின் காலத்துக்கு அறுநூறு ஆண்டுகளுக்கு பின் எழுதப்பட்டது. இந்த நூலில் உள்ள செய்திகள் வாயிலாகவே நாம் சங்கரரை பற்றி அறிகிறோம்.
1. சங்கரர் கேரளாவில் காலடி எனும் ஊரில் சிவகுரு என்ற ஆலயப் பூசகருக்கும் அவருடைய மனைவியான ஆரியாம்பிகை என்பவருக்கும் பிறந்தவர். இளமையில் தந்தையை இழந்து தாயால் வளர்க்கப்பட்டவர். ஆனால் சங்கரரை பற்றி எழுதப்பட்ட வேறு எந்த நூலிலும் சிவகுரு என்ற பெயரோ ஆரியாம்பிகை என்ற பெயரோ இல்லை. இன்னொன்று, பெயர்கள் குறிக்கும் ஒரு காலகட்டம் உள்ளது. அதைவைத்து பார்க்கும் போது ஏழாவது எட்டாவது நூற்றாண்டுகளில் சிவகுரு, ஆரியாம்பிகை என்ற பெயர்கள் இருந்திருக்காது. ஆகையால் இப்பெயர்கள் பின்னாட்களில் இடப்பட்ட பெயர்களாக இருக்கலாம்.
2. சங்கரர் மிக இளமையிலேயே துறவுபூணும் ஆசை வந்து அதை தன் தாயிடம் கேட்கிறார். ஆனால் விதவையாகிய அவர் தாய் அதை அனுமதிக்கவில்லை. ஒருநாள் நீராடுவதற்காக ஆற்றுக்கு செல்கிறார்கள். சங்கரர் நீரில் இறங்கி நிற்கும்போது அவர் காலை ஒரு முதலை கவ்வுகிறது.
அப்போது தனது தாயிடம் ‘இப்போது முதலை என்னை இழுத்து சென்றுவிடும். நான் துறவியாகாமல் இறந்தால் மோட்சத்திற்கு செல்லமாட்டேன். ஆகவே எனக்கு ஆபத் சந்நியாசம் கொடு. இப்போதே துறவியாகி மோட்சத்திற்கு செல்வேன்’ என்கிறார். வேறு வழியின்றி அவர் அன்னை அவருக்கு அனுமதி கொடுக்கிறார். கற்பனை முதலை அவர் காலை விட்டுவிடுகிறது. அதன்பின் அவர் தனது அன்னையிடம் ஆசிபெற்றுக்கொண்டு தன் பயணத்தை தொடங்குகிறார்.
3.சங்கரர் கோவிந்தபாதர் என்ற குருநாதரை நர்மதை நதிக்கரையில் சந்தித்து அவரிடம் வேதாந்த கல்வியை கற்கிறார். ஆனால் அன்றைக்கு இருந்த வாய்ப்புகளின்படி பார்த்தால் அவர் முதலில் வரச் சாத்தியமான இடமாக காஞ்சிபுரம்தான் இருந்தது.
அப்போது காஞ்சிதான் தென்னகத்தின் ஞானத்தலைநகரம். கடிகா ஸ்தானம் எனும் மாபெரும் வேத-வேதாந்த பாடசாலை அங்குதான் இருந்தது. பௌத்தர்களுடைய மிக முக்கியமான கல்வித்தலமே காஞ்சிதான். சங்கரர் காஞ்சிக்கு வந்துவிட்டு அதன்பிறகு மற்ற இடங்களுக்கு சென்றிருக்கலாம். அதன்பிறகு காசியிலும் பத்ரிநாத்திலும் கல்வி பயின்றதாக அந்நூல்களில் இருந்து ஊகிக்க முடிகிறது.
4. அன்றிருந்த மிகப்பெரிய வேதாந்த ஆசிரியராகிய கௌடபாதரின் மாணவராக இருந்து கௌடபாத காரிகையை கற்றதாக அவரே சொல்வதாக ஓரிடத்தில் வருகிறது.
5. மீமாம்ச அறிஞர் குமரிலபட்டருடன் விவாதித்து சங்கரர் மீமாம்ஸையை புரிந்துகொண்டதாக ஓரிடத்தில் வருகிறது.
6. மீமாம்ச அறிஞர் மண்டனமிஸ்ரரிடம் சங்கரர் மீமாம்சையைக் கற்றதாக சொல்லப்படுகிறது.
இவர்கள் அனைவருக்கும் சங்கரர் ஞானம் அளித்ததாக சங்கரரின் வாழ்க்கை சார்ந்த பிற்காலப் புராணங்களில் சொல்லப்படுகிறது.
இவ்வாறு கல்வி முழுமையடைந்த பிறகு, காஞ்சி தொடங்கி பத்ரிநாத் வரைக்கும் அவர் பல அவைகளில் சமணர்களையும் பௌத்தர்களையும் பிற உதிரி மதங்களின் அறிஞர்களையும் வாதத்தில் தோற்கடித்தார். அவருடைய முதன்மைச்சீடரின் பெயர் பத்மபாதர்.
சங்கர திக்விஜயம் போன்ற நூல்களை பார்க்கும்போது அவர் வாரத்திற்கு ஒரு ஞானசபையில் பங்கேற்றிருந்தால்கூட அந்த அளவுக்கு வென்றிருக்க முடியாது. ஆகவே பெரும்பாலான கதைகள் பின்னாட்களில் எழுதி சேர்க்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் வலுவாக சொல்லப்படவேண்டிய விஷயம் என்னவெனில், அவர் இந்தியாவின் பெரும்பாலான ஞானசபைகளில் வேதாந்தத்தின் கொடியை பறக்கவிட்டார் என்பதுதான்.
அதன்பிறகு அவர் மேற்குதொடர்ச்சிமலையில் இன்றைய கோகர்ணத்தில் வந்து அங்கிருந்த முக்கியமான ஞானசபையில் வென்று சர்வக்ஞன் (அனைத்தையும் அறிந்தவர் / அனைத்தையும் கற்றுணர்ந்து கடந்தவர்) என்ற பட்டத்தை பெற்றார். பின்னர் தனது முப்பத்திரண்டாவது வயதில் கேதார்நாத்தில் காலமானார். அங்கு அவருக்கு ஓர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதான் ஆதிசங்கரர் பற்றி நமக்கு கிடைக்ககும் சுருக்கமான வரலாறு. புராணங்களையும் தொன்மங்களையும் களைந்து மெய்வரலாற்றை எடுப்பது மிகக்கடினம். அவரை குறித்த நிறைய மிகைக்கதைகள் உள்ளன. ஆனால் அத்தகைய கதைகள் எல்லாமே பதினான்காம் நூற்றாண்டுக்கு பிறகு எழுதப்பட்டவையே.
அப்படியெனில் அதற்கு முந்தைய நூல்களில் சங்கரர் எப்படி சித்தரிக்கப்படுகிறார் ? சங்கரரின் காலகட்டத்தை நாம் சிருங்கேரி மடத்தின் ஆவணங்களில் இருந்து அறியலாம்.
சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்யன் காலத்தில், அவன் முடிசூடி பதினான்காவது ஆண்டில் சங்கரர் பிறக்கிறார் என்ற குறிப்பு உள்ளது. அப்படியெனில் அது எட்டாம் நூற்றாண்டு. இந்த விக்கிரமாதித்யன் ஒரு சுவாரசியமான கதாபாத்திரம். சாண்டில்யன் எழுதிய ஒரு நாவலில் இவர்தான் வில்லன். இங்கிருந்த ராஜசிம்ம பல்லவன் நாயகன். விக்கிரமாதித்யன் தனது மூதாதையரான இரண்டாம் புலிகேசிக்காக பழிவாங்கும் பொருட்டு தமிழகத்தின்மீது படையெடுத்து வந்தவர். அவருடைய காலகட்டத்தில்தான் சங்கரர் பிறக்கிறார்.
எட்டாம் நூற்றாண்டுக்கு பிறகு வந்த பல நூல்களை ஆராய்ந்த அறிஞர்கள் எங்குமே சங்கரருடைய பெயர் குறிப்பிடப்படாததை சுட்டிக்காட்டுகின்றனர்.
(1) அவர் பல சபைகளில் பௌத்தர்களை வென்றிருந்தாலும் கூட பௌத்தர்களின் மாற்றுத்தரப்பாக அவர் எங்குமே குறிப்பிடப்படவில்லை.
(2) பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகு இங்கு சோழர்கள் பெரிய சக்தியாக வளர்ந்து வந்தனர். தமிழகத்தின் அறிவு மறுமலர்ச்சி காலகட்டம் என்பது சோழர்களுடைய காலகட்டம்தான். ராஜராஜன் தொடக்கி குலோத்துங்கன் வரைக்குமான காலத்தை முதல் அறிவுப்பொற்காலம் என்பர். அந்த காலகட்டத்தில் சங்கரருடைய பெயர் எங்குமே குறிப்பிடப்படவில்லை. நமது பக்திக் கவிஞர்கள் யாருக்குமே சங்கரரை பற்றி தெரிந்திருக்கவில்லை. பக்தி இயக்க விவாதங்களிலும் அவர் பெயர் இல்லை.
சங்கரர் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பது ஒரு முக்கியமான தகவல். இந்த தகவல்கள் பெரும்பாலும் ஆங்கில ஆசிரியர்களால் எழுதப்பட்டவை. நூல்கள் அனைத்தையும் படித்து இது எங்கே இருக்கிறது என்று பார்க்கக்கூடிய வழக்கம் அவர்களுக்குத்தான் உண்டு. குறிப்பாக ரிச்சர்டு கிங் (Richard E. King) என்ற அறிஞர் பௌத்த நூல்கள் அனைத்தையும் ஆராய்ந்து எதிலாவது சங்கரர் வந்து பரபக்கமாக சொல்லப்படுகிறாரா என்று பார்க்கிறார். அவ்வாறு எங்குமே சொல்லப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால் அக்காலகட்டத்தில் கௌடபாதர் மிக முக்கியமான தரப்பாக சொல்லப்பட்டிருக்கிறார். அன்றிருந்த மற்ற வேதாந்த தரப்புகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. அவை பௌத்தர்களாலும் மற்றவர்களாலும் மறுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சங்கரர் சுட்டிக்காட்டப்படவில்லை. அப்படியெனில் அவரது இடம் எப்படி உருவாகிறது ? நான் ஏற்கெனவே சொன்னதுபோல வித்யாரண்யருடைய காலகட்டத்துக்கு பின்னர்தான் சங்கரர் இந்திய சிந்தனையில் ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறார். ஒரு வலுவான வீரியமிக்க மூலிகை விதை இந்த மண்ணில் இருந்தது. ஆனால் அது முளைத்து காடாவதற்கான காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டில்தான் ஏற்பட்டது என்று சொல்லலாம்.
சங்கரருடைய பங்களிப்பாக இன்றைக்கு சொல்லப்படும் மூன்று முக்கிய விஷயங்கள்,
(1) அத்வைத வேதாந்தத்தை உருவாக்கினார். வேதாந்தம் எனப்படும் மெய்ஞானத் தரப்பு ரிக்வேதத்தில் முளைத்து, உபநிடதங்கள் வழியாக வளர்ந்து, பாதராயணரின் பிரம்மசூத்திரத்தில் வரையறை செய்யப்பட்டது. கீதை அதன் கவித்துவ வடிவம்.
ஆனால் சமண, பௌத்த மதங்களின் எழுச்சியால் வேதாந்த மரபு பின்னடைவைச் சந்தித்தது. இந்து மெய்ஞானமரபில் வேதவேள்விகளை முன்னிறுத்தும் பூர்வமீமாச மரபு மட்டுமே அரசர்களின் ஆதரவுடன், புரோகிதர்களின் மதமாக நிலைகொண்டது. சங்கரர் வேதாந்த மரபை மீட்டு நிலைநாட்டினார். அதற்கான புதிய விவாதமுறையை, புதிய விளக்கநூல்களை, புதிய சிந்தனையாளர் மரபை உருவாக்கினார். அது அத்வைதம் எனப்பட்டது.
(2) சங்கரர் ஸ்மார்த்த சம்பிரதாயம் என்ற அமைப்பை உருவாக்கினார். இன்று ஐயர் என்று சொல்லப்படக்கூடிய ஸ்மார்த்தர்கள் ஒரு ஜாதியாக உள்ளனர். ஆனால் அடிப்படையில் அது ஒரு குருமரபு. அத்தகைய ஸ்மார்த்த அமைப்பை உண்டாக்கி இங்குள்ள சைவ வைணவ உள்ளிட்ட ஆலயங்களுக்கு ஒரே பூசகமரபை உண்டாக்கினார்.
அவர்களுக்கு பஞ்சாயதன முறை எனும் ஐந்து தெய்வங்களை வழிபடும் முறையை ஏற்படுத்திக்கொடுத்தார். சிவன், விஷ்ணு, சக்தி, கணபதி, சூரியன் ஆகிய ஐந்து தெய்வங்களை வழிபடும் முறைக்கு பஞ்சாயதன முறை என்று பெயர். இதில் முருகன் இல்லை என்பதை கவனிக்கலாம். அது தனி வழிபாட்டு முறையாக அக்காலகட்டத்தில் இருந்திருக்கிறது. ஷன்மதம் என்று சொல்லக்கூடிய ஆறு மதங்களையும் ஒன்றாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மரபுதான் ஸ்மார்த்த மரபு. அன்றைக்கு அம்மதங்களெல்லாம் தனித்தனியாக இருந்தன. அவற்றையெல்லாம் சங்கரர் தொகுத்து ஒருங்கிணைத்தார்.
(3) இந்த வழிபாட்டு முறைகளை தொடர்ந்து நடத்திச்செல்ல நான்கு மடங்களை அவர் உருவாக்கினார். அவை சிருங்கேரி, பத்ரி, பூரி, துவாரகை.
இதுதான் சங்கரரை பற்றி நமக்கு சொல்லப்படும் வரலாறு. ஆனால் சரியாக பார்த்தால் இந்த வரலாற்றில் சில விஷயங்களை சேர்த்துக்கொள்ளமுடியும்.
(i) சங்கரர் நான்கு மடங்களை உருவாக்கினார் என்பது ஒரு பிற்கால நம்பிக்கை மட்டுமே. இவ்வளவு பெரிய அமைப்புகளை உருவாக்கவேண்டிய அவசியமோ அதற்கான வாழ்க்கையோ அவருக்கு இருந்திருக்கவில்லை. அவர் ஒரு குரு சம்பிரதாயத்தைத்தான் உருவாக்கினார். அவர் மறைந்து நானூறு ஆண்டுகளுக்கு பிறகுதான் அவை மடங்களாக ஒருங்கிணைவதற்கான அவசியம் ஏற்பட்டது. ஆலயங்களுக்கு நிகராக மடத்தை முன்னெடுத்து செல்லவேண்டிய கட்டாயம் குரு மரபுகளுக்கு ஏற்பட்டது.
சிருங்கேரி மடத்து ஆவணங்களில், சிருங்கேரியிலேயே வேறு ஐந்து சங்கர மடங்கள் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. அவை குடலி, அவனி, புஷ்பகிரி, விரூபாக்ஷா, சங்கேஸ்வரா. இம்மடங்களெல்லாம் காலப்போக்கில் மறைந்து சிருங்கேரி மட்டும் வளர்ந்து வந்தது. அதற்கு காரணம் விஜயநகர பேரரசின் பின்புலம். அவ்வாறு நிறைய மடங்கள் தோன்றி அவை நான்கு மடங்களாக ஒருங்கிணைந்து இன்று இந்திய அளவில் பெரும் செல்வாக்கை செலுத்தக்கூடியதாக உள்ளன.
(ii) வெவ்வேறு தெய்வங்களை வெவ்வேறு முறைகளில் வழிபடக்கூடிய பல்வேறு பூசாரி குழுக்களை ஒருங்கிணைத்து ஸ்மார்த்த மரபு என்பதாக ஒரே குழுவாக அவர் மாற்றினார் என்று சொல்கிறார்கள். ஆனால் அவையனைத்துமே மேற்சொன்னபடி சங்கர மடங்கள் செய்ததுதானே ஒழிய சங்கரர் செய்தது அல்ல. இந்த செயல்பாடுகள் யாவும் பதிமூன்றாம் நூற்றாண்டுக்கு பின்னர் நிகழ்ந்தவை. ஏனெனில் இப்படியொரு ஒருங்கிணைப்பு தேவைப்பட்ட காலகட்டம் என்பது பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு பிறகே.
இவையனைத்திற்கும் சங்கரர் பொறுப்பேற்கும்படி செய்யப்பட்டார் அல்லது சங்கரரை முன்னிறுத்தி செய்யப்பட்டவை இவை என்று சொல்லலாம். இவை எல்லாவற்றிற்கும் முதல் குருவாக சங்கரர் கட்டமைக்கப்பட்டார்.
அப்படியொரு செயல்பாடுகள் நடந்திருக்கவில்லை எனில் நாம் இன்று இந்துவாக பேசிக்கொண்டிருக்க முடியாது.
சமீபத்தில் இந்தோனேசியாவில் இருக்கும் பிரம்பனான் (Prambanan) எனும் மாபெரும் ஆலயத்திற்கு சென்றிருந்தோம். உலகின் மிகப்பெரிய இந்து ஆலயங்களில் ஒன்று. ஆனால் அந்த ஊர் மக்கள் யாருக்குமே அது ஒரு இந்து ஆலயம் என்றே தெரியாது. அங்கு ஒரு பிரம்மாண்டமான துர்க்கை சிலை உள்ளது. ஆனால் உள்ளூரில் அதை ஒரு ராஜகுமாரி என்று நினைத்து ஒரு கதையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இன்று இந்துமதம் அங்கு இல்லை என்பது மட்டுமல்ல, அம்மதம் அங்கு இருந்ததற்கான நினைவுகளும் இல்லை. பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை இந்துமதம் அங்கு செல்வாக்கோடு இருந்திருக்கிறது.
ஆகையால் இந்துமதம் இன்று இருக்கிறது என்பதாலேயே அது என்றும் அழியாது என்பது பொருள் அல்ல. ஞானிகளின் விவேகத்தினாலும் அவர்களுடைய தரிசன பலத்தினாலும் தான் அது நிகழ்ந்ததேவொழிய, வெறும் தற்செயலால் அல்ல. அதை இறைஆணை என்று சொன்னால் அது இந்த ஞானிகள் வழியாக நிகழ்ந்தது, அவர்களே இறையின் கைகள் என்றுதான் சொல்லவேண்டும்.
சங்கர தரிசனம் என்பது பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கு பிறகு வழிபாடுகளோடும் வேள்வி மரபோடும் தொடர்புபடுத்தப்பட்டு மறுவிளக்கம் அளிக்கப்பட்டது. பல்வேறு ஆகமங்கள் அதோடு இணைந்துகொண்டன. பல ஆகமங்கள் சங்கரரின் பெயரால் அறியப்படுகின்றன. உதாரணமாக, கேரள ஆலயங்களில் உள்ள பூஜை முறைகளை வகுத்துரைக்கும் ஒரு ஸ்மிருதி சங்கர ஸ்மிருதி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் சங்கரருக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அது பதினான்காம் நூற்றாண்டுக்கு பிறகு உருவானது. இவ்வாறு சங்கரருக்கு மறுவிளக்கம் அளிக்கப்பட்டது ஓர் இன்றியமையாத காலத்தேவை.
அது ஒரு குறிப்பிட்ட விளைவை உண்டாக்கியது. கந்தக அமிலத்தை திறந்துவைத்தால் அது நீர்த்து நீர்த்து நாளடைவில் தண்ணீராக மாறிவிடும். காற்றின் ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு தன்னை நீர்த்துக்கொள்ளக்கூடிய அம்சம் கந்தக அமிலத்திற்கு உண்டு. கிட்டத்தட்ட அதுபோலவே அத்வைதமும்.
அது அறுநூறாண்டுகாலம் திறந்து வைக்கப்பட்டு அத்தனை பூஜை முறைகளையும் உள்ளே இழுத்து இழுத்து இன்றுள்ள வடிவத்தை அடைந்தது. இன்று அத்வைதத்தை பார்த்தால், தேங்காய் உடைக்கலாமா வேண்டாமா, வெற்றிலையுடன் மூன்று பாக்குகள் வைக்கவேண்டுமா அல்லது ஒரு பாக்கு போதுமா என்கிற அளவுக்கு வந்து நிற்கிறது.
ஆகையால் ஒரு தலைகீழ்ப் பார்வையுடன் திரும்பிப்போக்கு வழியாகத்தான் நாம் அத்வைதத்தைச் சென்று சேரமுடியும். அதிலிருந்து அடுத்த கேள்வி எழுகிறது. அப்படியெனில் சங்கரர் எதைத்தான் உருவாக்கினார் ? ஏன் இவர்கள் சங்கரரை எடுத்துக்கொண்டார்கள் ? சங்கரர் மடங்களை உருவாக்கினார் என்பதை நாம் உறுதியாக சொல்லமுடியாது. ஏனெனில் அதை ஆய்வு செய்த அறிஞர்கள் யாரும் சங்கரர் உருவாக்கிய மடங்கள் என்பதை ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனால் இந்த மடங்கள் அமைவதற்கான தத்துவப் பின்புலத்தை சங்கரர் உருவாக்கி அளித்தார். அது என்ன என்பது முக்கியமானது.
சங்கரருடைய காலத்தில் இந்தியாவில் மிக வலிமையான மதப்பரப்புநர்களாக இருந்தவர்கள் சமணர்களும் பௌத்தர்களும். அவ்விரு தரப்பிலும் அலைந்து திரியக்கூடிய துறவிகள் இருந்தனர். ஊர் ஊராக சென்று மதமாற்றம் செய்துகொண்டிருந்தனர். அந்த மதங்களை பரப்பி நிறுவியவர்கள் இந்த அலையும் துறவிகள் தான். இதற்கு நிகராக இந்துமதத்தில் இருந்த அலையும் துறவிகள் ஒரு குறிப்பிட்ட வகைப்பட்டவர்களே. அவர்களை திரிதண்டிகள் என்று சொல்வர். திரிதண்டிகள் என்றால் மூன்று தண்டங்கள் / சூலங்கள் ஏந்திய துறவிகள். காபாலிகர்கள், காளாமுகர்கள் உள்ளிட்ட அவர்கள் சைவத்தை ஒருங்கிணைக்கக்கூடியவர்களாக இருந்தனர்.
இவர்களுக்கு மாற்றாக சங்கரர் ஏகதண்டி எனும் தரப்பினை உருவாக்கினார்.
இன்று சங்கராச்சாரியர்கள் கையில் வைத்திருக்கக்கூடிய ஒற்றைத்தண்டு அதுதான். அது பன்னிரண்டு சமயங்களையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தண்டு. சங்கரர் இந்து மெய்மரபின் ஆறு சமயங்களையும் ஒன்றாக்கி அதில் தனது சீடப்பரம்பரையை உண்டாக்கிவிட்டு சென்றார். அந்த மரபில் வந்ததுதான் வித்யாரண்யரின் மடம் போன்ற அமைப்புகள். அவர்கள் அதை ஒரு பெரும் நிறுவனமாக மாற்றி நமக்கு அளித்திருக்கிறார்கள்.
இதுதான் சங்கரர் உருவாகி வந்து நம் முன் நிற்பதன் வரலாறு. இதை முக்கியமாக சொல்லக்காரணம், ஒரு விஷயத்தை இன்றிலிருந்து பார்க்கும்போது சில தவறுகள், பிழையான புரிதல்கள் ஏற்படும். மதுரையில் ஒரு முனீஸ்வரர் ஆலயம் உள்ளது (பாண்டி முனீஸ்வரர்). அந்த ஆலயத்தில் சித்திரை மாதத்தில் பலி கொடுப்பர். ஆயிரக்கணக்கான ஆடுகளை வெட்டி அந்த ரத்தத்தை சாமியின் தலையில் கொட்டுவர். எனது நண்பர் அ.கா.பெருமாளும் அவருடைய நண்பர் பாலசுந்தரம் என்பவரும் சேர்ந்து அங்கு ஆராய்ச்சி செய்ய சென்றனர். ஒருநாள் விடியற்காலையில் அந்த முனீஸ்வரருடைய எல்லா கவசங்களையும் கிரீடங்களையும் களைந்துவிட்டு பார்த்தால் அது சமணர்களுடைய இருபதாவது தீர்த்தங்கரராகிய முனீஸ்வரநாதர். வரலாறு என்பது இவ்வாறுதான் மாறி நமக்கு வந்துகொண்டிருக்கிறது.
அத்வைதத்தை இன்று பார்க்கும்போது அது ஓர் உற்சவ மூர்த்திபோல யானை, குதிரை சூழ தாரை தப்பட்டையுடன் பல்லக்கில் சென்றுகொண்டிருக்கிறது.
ஆனால் நாம் பார்க்கவேண்டியது விடியற்காலையில் பிரம்மமுகூர்த்தத்தில் ஆலயத்திற்குள் சென்று அதன் நிர்மால்ய தரிசனத்தையே.
அங்கிருந்து தொடங்கும்போதுதான் இந்த நூற்றாண்டுக்குரிய சிந்தனைகளை நாம் உண்டாக்கிக்கொள்ள முடியும். இப்போதைக்கு அதை ஒரு மீட்புப்பணியாக நாம் செய்யவேண்டியுள்ளது. தொன்மங்களில் மூழ்கி, வழிபாட்டு மனநிலைக்குள் செல்பவர்கள் பக்தர்கள். அவர்களின் வழி வேறு. அறிவார்ந்த விவாதம் வழியாக சங்கரரை நோக்கி, அத்வைதம் நோக்கி நாம் செல்லவேண்டியுள்ளது. சிலராவது அதைச் செய்யவேண்டும்.
(பகுதி-3-ல் தொடர்கிறது …)
………………………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….