……………………………………………….

………………………………………………..

………………………………………
இந்துத்வா பற்றி பேசும் இன்றைய பெரும்பாலான அரசியல்வாதிகள்
அறியாத ஒரு வரலாற்றுப் பின்னணி இது. ஓரளவு ஏற்கெனவே
அறிந்திருந்தாலும் – விவரமாக இதைப் படிக்கும்போது எனக்கு பெரும் பிரமிப்பை உண்டுபண்ணிய ஒரு சரித்திரம்.
மிகுந்த அக்கறை கொண்டு, விவரமாக ஆராய்ந்து, அற்புதமான நடையில், மிகத்தெளிவாக இதை எழுதிய – ஆசிரியரின் பெயரை நான் இந்த இடத்தில்
வெளியிடப் போவதில்லை;
அதற்கான காரணமும் உண்டு.
5 அல்லது 6 பகுதிகளாக இங்கே வெளிவரவிருக்கிற
இந்தத் தொடரின் இறுதியில் – அவற்றை அவசியம் சொல்கிறேன்.
( இதைப்படிக்கும் வாசக நண்பர்கள் சிலர், எழுதியவரை அறிந்துகொள்வார்கள்…. ஆனால், தங்களுக்குத்
தெரிந்தாலும் இங்கே வெளியிட வேண்டாம் என்று அவர்களை
நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்….!!!)
…………………………………………………………
பேலூர், ஹளபீடை ஒரு பேரறிஞனுடைய தோற்றம் என்று சொல்லலாம். ஏனெனில் அது சிற்பங்களை அடுக்கி கட்டப்பட்ட கோவில். ஒவ்வொரு கணுவிலும் சிற்பம் இருக்கும். ஒரு சிற்பத்தின் கையில் இருக்கும் ஒரு கருவிக்குள் இன்னொரு சிற்பம் இருக்கும்.
ஆனால் பெலவாடியை ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் ஒரு தியானி என்று சொல்லலாம். சுற்றி எந்த சிற்பங்களும் இல்லை. அது திரிகுடாசலம் என்ற அமைப்புடைய மூன்று கருவறைகள் கொண்ட கோவில். அதன் உள்ளே மூன்று சிற்பங்கள் உள்ளன. வலப்பக்க கருவறையில் இருக்கும் கோபால கிருஷ்ணனின் கருஞ்சிலை இந்தியாவின் மகத்தான கலைப்படைப்புகளில் ஒன்று.
அதற்கு நேர் எதிர்புறம் நரசிம்மரின் சிலை இருக்கிறது. குரூரம் என்பது எப்படி ஒரு பேரருளாக சித்தரிக்கப்படமுடியும் என்பதை காண விரும்புபவர்கள் கண்டிப்பாக காணவேண்டிய சிற்பம் அது. உலக அளவிலேயே அதற்கிணையான சிற்பம் சிலவே இருக்கமுடியும்.
அதற்கு எதிரில் மையக்கருவறையில் வீரநாராயணர் சிற்பம் இருக்கிறது. வழக்கமாக நரசிம்மர் சிலைகளில் இருக்கக்கூடிய வியாக்ர ஹஸ்தம் முத்திரை அந்த சிலையில் உள்ளது. அது நீள நகங்களோடு புலியின் கரம் போன்றது, அருள்புரியும் கரமல்ல. சங்கு, சக்கரத்தோடு வியாக்ர ஹஸ்தத்துடன் இருக்கும் தோற்றம்.
நான் கடந்த முறை சந்தித்த பூசகர் ஒருவர் என்னை அடையாளம் கண்டுகொண்டார். அவர் எங்களிடம் வந்து நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த ஆலயத்தின் பல செய்திகளை அவர் சொன்னார். ஒன்று, அது வைகானச ஆகம முறைப்படி வழிபடப்படும் ஆலயம்.
வைகானச ஆகமம் இந்தியாவின் மிகத்தொன்மையான வழிபாட்டு முறைகளில் ஒன்று. அது ரிக்வேதத்தை அடியொற்றியது. தமிழகத்தின் கணிசமான வைணவ ஆலயங்கள் பாஞ்சராத்ர ஆகம முறையிலானவை. வைகானச ஆகமத்தை ஒருவகையில் வீர வைஷ்ணவம் என்று சொல்லலாம்.
அந்த ஆலயத்தின் வரலாற்றை சொல்லிவந்த அவர், அது சிருங்கேரி மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம் என்றார். முந்நூறாண்டுகாலம் சிருங்கேரி மடம் அதை பராமரித்திருக்கிறது. அந்த ஆலயத்திற்கு ஹொய்சாள, நாயக்க மன்னர்கள் அளித்த அவ்வளவு நிலங்களும் கைவிட்டுப்போன பிறகு, அநேகமாக பணமே இல்லாத காலத்திலும் அதைச் செய்திருக்கிறது. நிதி வசூல் செய்து அங்கு பூஜை அறுபடாமல் பார்த்துக்கொண்டது.
திப்புவின் படையெடுப்பு காலத்தில் திப்புவிடம் சமரசம் செய்துகொண்டு அவர்கள் அந்த ஆலயத்தை பாதுகாத்திருக்கிறார்கள். இப்போது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வந்த பின்னரும்கூட அந்த ஆலயம் சிருங்கேரி மடத்தால்தான் பேணப்படுகிறது என்று சொன்னார்.
நாங்கள் அவரிடம் விடைபெற்று வந்தபின்னர் என் மகன் என்னிடம், ‘சிருங்கேரி மடம் சங்கர மடம் தானே. சைவர்களான அவர்கள் ஏன் ஒரு வைணவ, அதிலும் வீரவைணவ ஆலயத்தை பராமரிக்கிறார்கள் ?’ என்று கேட்டான். நான் அதற்கு ‘அவர்கள் சைவர்கள் அல்ல, ஸ்மார்த்தர்கள்.
ஸ்மார்த்தர்களுக்கு சைவம், வைணவம் உள்ளிட்ட மற்ற நான்கு மதங்களும் சமமானவைதான்’ என்றேன். அவன் மீண்டும், ‘ஸ்மார்த்தர்கள் அத்வைதிகள். அவர்கள் ஏன் ஒரு கோவிலை பராமரிக்க வேண்டும் ? ஆலயம், சடங்குகள் என்பதற்கும் அத்வைதத்திற்கும் என்ன தொடர்பு ? ஆதிசங்கரர் இந்த சடங்குகளையும் வழிபாடுகளையும் பேணினாரா ?’ என்று கேட்டான்.
முக்கியமான கேள்வி அது. இந்த கேள்வியில் இருந்துதான் சங்கரரை நாம் பார்க்கத் தொடங்கவேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு முன் ஒரு சிறு வரலாற்றை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
வித்யாரண்யரும் விஜயநகரமும்
இன்று இருக்கும் ஹம்பி என்ற ஊரில் துங்கபத்ரா நதிக்கரையில் காம்பிலி என்ற அரசு இருந்தது. அதில் படைத்தளபதிகளாக இருந்த இளைஞர்கள் ஹரிகரரும் புக்கரும். வடக்கிலிருந்து படையெடுத்து வந்த சுல்தானியர்கள் காம்பிலி அரசை அழித்து அவ்விரு இளைஞர்களையும் சிறைபிடித்துச் சென்று மதம் மாற்றினார்கள். பின்னர் மீண்டும் அவர்களை காம்பிலிக்கு இஸ்லாமிய ஆட்சியாளர்களாக நியமித்து அனுப்பினர்.
இங்கு வந்து ஆண்டுகொண்டிருந்த அவர்கள் ஒருநாள் முயல் வேட்டைக்காக துங்கபத்ரா கரைக்கு சென்றனர். குகைக்குள் சென்ற முயலை தொடர்ந்து சென்றபோது அங்கு ஒருவரை சந்தித்தனர்.
அவருடைய பெயர் வித்யாரண்யர் என்ற மாதவர். அவர் அன்றைய சிருங்கேரி மடத்தின் பன்னிரண்டாவது அதிபதி. அன்றைய சிருங்கேரி மடம் இன்றைக்குள்ளது போல் அல்ல. மிகவும் சிறிய, உணவுக்கே கஷ்டப்படக்கூடிய ஒரு மடம்.
அவர் அந்த குகையில் தியானம் செய்துகொண்டிருந்தார். அவரை ஹரிகரரும் புக்கரும் சந்தித்தார்கள். அது இந்திய வரலாற்றில் ஒரு மகத்தான திருப்புமுனைத் தருணம். வித்யாரண்யர் அவ்விருவரையும் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றி அவர்களுக்கு தனது இலட்சியத்தை ஊட்டினார். அப்படி உருவானதுதான் விஜயநகரப் பேரரசு. ஹம்பியில்தான் விஜயநகரம் அமைந்தது.
மாதவ கருணாவிலாசம் என்ற நூல் அந்த விஜயநகர பேரரசை மாதவருடைய கருணையின் ஒரு துளி என்று சொல்கிறது.
நாம் இன்று இந்துவாக பேசிக்கொண்டிருப்பதற்கு காரணம் அந்த பேரரசுதான். இன்று நாம் பார்க்கக்கூடிய அத்தனை ஆலயங்களும் நாயக்கர்களால் கட்டப்பட்டவை. ஆகவேதான் ராயகோபுரம் என்று சொல்கிறோம். ராய என்றால் கல். ராயரின் கோபுரம் என்றும் பொருளுண்டு. அத்தனை ஆலயங்களும் அவர்களால் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டன.
இன்று பேசப்படும் அத்தனை இந்துமத சாஸ்திரங்களும் அவர்களுக்கு பின்னால் உருவானவையே. கிட்டத்தட்ட முந்நூறாண்டுகாலம் அலையலையான படையெடுப்புகளை எதிர்கொண்டு நின்று பாதுகாத்து இந்த கலைப்பொக்கிஷங்களை, ஞானமரபை நமக்கு அளித்தனர்.
சாதாரணமாக, ஆந்திராவை கடந்துவிட்டால் பெரிய ஆலயங்களை நம்மால் பார்க்க முடியாது. ஆனால் இங்கு தமிழகத்தில் நாம் நாம் தினசரி பேராலயங்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.ஊர் ஊராக மாபெரும் ஆலயங்கள் உள்ளன. இங்கே உள்ள பட்டீஸ்வரர் ஆலயத்துக்குச் சமானமான ஆலயத்தை நாம் வடக்கில் பார்க்க முடியாது.
ஒருகாலத்தில் அங்கும் மாபெரும் ஆலயங்கள் இருந்தன. இப்போது அடித்தளங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. நாங்கள் எங்கள் பயணங்களில் வெறும் அடித்தளங்களை மட்டுமே பார்த்துச்சென்றோம். தென்னிந்தியாவிற்கு ஒரு மாபெரும் தடுப்பு அரணாக விஜயநகரம் அமைந்தது. அதை அமைத்தது வித்யாரண்யருடைய கருணை.
அந்த கருணையை அவர் இரண்டு விதங்களில் காட்டினார்.
(1) அன்றிருந்த சிறு சிறு அரசாங்கங்களை ஒருங்கிணைத்து ஹரிகரருக்கும் புக்கருக்கும் அளித்தார். அந்த சிறு அரசுகளின் நம்பிக்கையையும் ஆதரவையும் திரட்டிக் கொடுத்தார். ஆகவே விஜயநகரம் ஒரு பெரிய அரசாக மாறியது.
(2) அதற்கு முன்பிருந்த அரசு புதைத்து வைத்திருந்த பெரும் புதையலை அவர்களுக்கு அளித்தார். அந்த புதையல் மீதுதான் அவர் பட்டினியோடு அமர்ந்திருந்தார்.
அதற்கு மேலும் அவர் ஒரு முக்கிய பங்களிப்பை ஆற்றினார். அது அவர் எழுதிய மூன்று முக்கியமான நூல்கள்.
(1) சர்வ தர்சன சங்கிரகம் (Sarva Darsana Sangraha) – இந்தியாவில் இருந்த பதினாறு மத சம்பிரதாயங்களை, தரிசனங்களை ஒரே நூலில் சுருக்கி அளித்தார். அந்த வகையான முயற்சி இந்திய வரலாற்றில் முதன்முறையாக அவர் காலத்தில் தான் நடக்கிறது. அதற்கு முன்னரும் வாஸஸ்பதி மிஸ்ரர் போன்றவர்கள் அனைத்து தரிசனங்களையும் இணைக்க முயன்றுள்ளனர், ஆனால் அவை வேதாந்தத்திற்குள் மட்டுமே நின்றன. இந்நூல் மிக விரிவானது. கிட்டத்தட்ட ஹொய்சள கோபுரங்கள் போன்றதுதான் அந்நூல்.
ஹொய்சாள கோவில் சிறு சிறு கோபுரங்களை அடுக்கி ஒரு ஒற்றை கோபுரம் அமைத்ததுபோல இருக்கும். இவர் பதினாறு கோபுரங்களை ஒன்றிணைத்து ஒரு கோபுரமாக்குகிறார். அந்த கோபுரத்தின் உச்சியில் கலசமாக அத்வைத வேதாந்தத்தை நிறுவுகிறார்.
(2) பஞ்சதசி (Panchadasi) – இது அத்வைத வேதாந்தத்தை நடைமுறை நோக்கில் விளக்ககும் நூல்.
(3) சங்கர திக்விஜயம் (Sankara dig vijaya) – இது ஆதிசங்கரரின் வரலாற்றை சொல்லும் ஒரு நூல். இன்றுவரை சங்கரரின் வரலாறாக நாம் அறிந்துவருவது மாதவரின் இந்த நூலில் உள்ள செய்திகளைத்தான்.
அதாவது, எல்லா மதத்தையும் ஒருங்கிணைத்து அதன் உச்சியில் அத்வைதத்தை வைத்து மாதவர் அத்வைதம் பற்றி விளக்குகிறார். அவ்வாறு விளக்கும் தகுதி தனக்கு உண்டு என்று நிறுவுவதற்காக சங்கரரின் வாழ்க்கையை எழுதுகிறார். அவர் தன் காலகட்டத்தின் மறுக்கப்படாத பேரறிஞராகத் திகழ்ந்தார் என நூல்கள் காட்டுகின்றன.
மாதவரின் தம்பி சாயனர் வேதங்களுக்கு ஒரு பெரிய விரிவுரை எழுதியிருக்கிறார். சாயன பாஷ்யம் என்று சொல்லப்படும் அது முழுக்கவே சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் வழியாக வேதங்களை புரிந்துகொள்வதற்கான முயற்சி.
பின்னால் வந்த ஆரிய சமாஜத்தின் நிறுவனரான தயானந்த சரஸ்வதி, அரவிந்தர் போன்றோர் சாயன பாஷ்யத்தை முழுக்கவே நிராகரிப்பதை பார்க்கலாம். ஆனால் சாயனருடைய காலத்தில் அது மிக முக்கிய தேவையாக இருந்தது.
ஏனெனில் அன்று அத்தனை மதங்களையும் சேர்த்து ஒரே மதமாக்கும் முயற்சி சிருங்கேரி மடத்தின் முன்னெடுப்பில் நடந்தது.
நாம் இன்று சொல்லும் இந்துமதம் என்பது – அக்காலகட்டத்தில் உருவாகி வந்ததுதான். அதன் மூலநூல்தொகையாக வேதங்களை நிலைகொள்ளச் செய்யும்பொருட்டே சாயனர் தன் உரையை எழுதினார்.
ஒரு தத்துவ அடித்தளத்தை உருவாக்கி, அதன்மேல் ஒரு அரசியல் அடித்தளத்தை உருவாக்கி, அதன்மீது ஒரு பேரரசை கட்டி எழுப்பினார் வித்யாரண்யர். அந்த மகத்தான தருணத்தில் இருந்து தொடங்கித்தான் இந்திய வரலாறு என்பது இந்த காலகட்டம் வரை வந்து சேர்ந்திருக்கிறது. அதன் பொருட்டு மரபில் நிறைய மாற்றங்களை அவர் செய்தார். வரலாற்றை தொகுத்து, தொன்மங்களை ஏற்றி எழுதினார்.
வித்யாரண்யரின் நூல் அவருக்கு நாநூறாண்டுகள் தொன்மையானவரான சங்கரரை மிகப்பெரிய சக்தியாக மீண்டும் இந்திய மண்ணில் நிலைநிறுத்தியது. இன்றைக்கு நாம் காணும் தோற்றத்தில், ஒரு தொன்மமாகவும் தத்துவ ஞானியாகவும் அவரை வளர்த்தெடுத்தது.
இதற்கும் மேலாக வித்யாரண்யருக்கு கிடைத்த ஆதரவு முக்கியமான ஒன்று. ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தை அவரே தன் கையால் உருவாக்கினார். புக்கருடைய மகனான குமாரகம்பனன் படையெடுத்து வந்து மாலிக்கபூரால் தகர்க்கப்பட்டு கிடந்த மதுரை ஆலயத்தை மீட்டு புனரமைத்தான்.
தமிழகத்தின் அனைத்து ஆலயங்களையும் அவர்கள் புனரமைத்தனர். இவ்வளவு பெரிய பேரரசின் பின்னணி இருக்கும்போது சங்கர தரிசனத்தை ஒரு அதிகாரபூர்வ சிந்தனையாக தென்னகத்தில் நிறுவ சிருங்கேரி மடத்தால் முடிந்தது.
இந்துவாக பிறந்த ஒருவர் –
அவர் வைணவராகவோ எந்தப் பிரிவை சேர்ந்தவராகவோ இருந்தாலும்,
ஏதேனும் ஒரு அமைப்புக்கு தனிப்பட்ட முறையில் கடன்பட்டிருக்கிறார் என்றால் அது சிருங்கேரி மடத்திற்குத்தான். அத்தனை பெரிய தொடர் பங்களிப்பை அவர்கள் ஆற்றியிருக்கின்றனர். இதன் காரணமாக சிந்தனை தளத்தில் சங்கரர் மிகப்பெரிய இடத்தை ஆக்கிரமித்தார்.
சங்கரரின் வரலாற்று உருமாற்றம்
சங்கரரின் மடங்களின் பங்களிப்பு என்பது அத்வைதத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் முக்கியமான ஒரு பணி உருமாற்றம் (role changing) காலப்போக்கில் நடந்தது.
அத்வைதத்துடன் சடங்குகளையும் பூஜைகளையும் இணைத்துக்கொண்டு , அவற்றை வகுத்தும் தொகுத்தும் ஒருங்கிணைத்தும், நாம் இன்று பார்க்கக்கூடிய இந்துமதத்தை உருவாக்கும் பொறுப்பை வித்யாரண்யர் ஏற்றுக்கொண்டார். ஆனால் அவர் ஒரு அத்வைதி.
மதச்சடங்குகளை நிர்வாகம் செய்வதாகச் சங்கர மடம் மாறியது. அதுதான் நாம் சங்கர அத்வைதம் என்று இன்று காணும் வடிவில் சடங்குகளுடன் கலந்ததாக நம்மிடம் வந்ததற்கு காரணம்.
இதை ஒரு உவமையாக சொல்லவேண்டுமென்றால் உறையிடப்பட்ட வாள் என்று சொல்லலாம். அந்த உறை என்பது வைரங்கள் பதிக்கப்பட்ட ஒரு பெரும் கலைப்படைப்பு. அந்த உறை இல்லையென்றால் அந்த வாளை நீங்கள் வீட்டில் வைத்துக்கொள்ள முடியாது. அறுநூறு ஆண்டுகளாக உறையிடப்பட்ட வாளாகத்தான் அத்வைதம் நமக்கு கிடைக்கிறது.
இன்று நாம் இங்கிருக்கும் சங்கர மடங்கள் வாயிலாக அத்வைதத்திற்குள் செல்லவேண்டியுள்ளது. அந்த சங்கர மடங்கள்தான் பூஜை முறைகளையும் வேள்வி வழிபாடுகளையும் தீர்மானிக்கக்கூடியவையாக இருக்கின்றன. இவையனைத்திற்கும் ஆதிசங்கரரை ஒரு அதிகாரபூர்வ அடையாளமாக வைத்திருக்கின்றனர். ஆனால் இந்த சங்கரர் அல்ல உண்மையான சங்கரர். இது ஒரு வரலாற்று உருமாற்றமே. இந்த வராலாற்று உருமாற்றத்துக்கு முக்கிய காரணங்கள் உள்ளன.
(1) புறவயமான பாதிப்பை எதிர்கொள்ளுதல்
பன்னிரண்டாம் நூற்றாண்டில் இந்தியாவின் அரசியல் கட்டுமானத்தையும் ஞானமரபையும் தத்துவ கட்டுமானத்தையும் மோதி உடைக்கக்கூடிய மிகப்பெரிய படையெடுப்புகள் நடந்தன. குறிப்பாக சுல்தானியப் படையெடுப்புகள் இந்தியாவின் ஆன்மாவில் ஏற்படுத்திய புண் என்பது சாதாரணமானது அல்ல. இந்தியா எனும்போது இந்துமதத்தை மட்டும் நான் குறிப்பிடவில்லை.
பக்தியார் கில்ஜி நாலந்தா பல்கலைக்கழகத்தை சூறையாடி முப்பதாயிரம் பிக்ஷுக்களை கொன்றதுடன் இந்தியாவில் பௌத்தம் முடிவுக்கு வந்தது.தட்சசீலம் முதல் காஞ்சி வரைக்கும் பெரும்பாலான கல்விநிலையங்கள் அழிக்கப்பட்டன. சமண வழிபாட்டிடங்களான பாலிதானா, கிர்நார் போன்றவை முழுமையாக அழிக்கப்பட்டன. பெரும்பாலான இந்து ஆலயங்கள் இல்லாமலாயின.
இப்படியொரு அழிவு நேரும்போது அதற்கு எதிரான பாதுகாப்பு முயற்சியாக இந்து தர்மங்கள் ஒருவித உருமாற்றத்தை அடைந்தன.
அந்த உருமாற்றத்திற்கு சில வழிகள் உண்டு. அதில் ஒன்று, ஆலயங்களை தவிர்த்து, குருநாதர்களை மையப்படுத்திய ஒரு மதமாக தங்களை மாற்றிக்கொள்வது. அதனால்தான் மடங்களுக்கு இத்தனை முக்கியத்துவம் வந்தது. ஆலயங்கள் அவசியமில்லை, அந்த குரு எங்கு இருந்தாலும் அவர் இருக்குமிடம் ஓர் ஆலயம்தான். அவரே ஓர் ஆலயம். அந்த குருவும் அவசியமில்லை அவருடைய சீடர்கள் இருந்தால் போதும்.
ஆகையால் அழிக்கமுடியாதபடிக்கு தன்னை மாற்றிக்கொள்வதற்காக இந்து தர்மம் ஒருவித குணமாற்றத்தை அடைந்த தருணம் இது.
(2) அகவயமான இணைப்புக்கான தேவை
வித்யாரண்யர் காலகட்டத்தில் இந்து மதம் என்பது பல்வேறு கிளைகளாக பிரிந்து ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டிருந்தது. சைவமும் வைணவமும் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாததுபோல் இருந்தன. பதினாறு மதங்கள் இருந்ததாக வித்யாரண்யரே சொல்கிறார். வேதமதமே ஐந்திரம், ஆக்னேயம் வருணம், சைவம் என பல பிரிவுகளாக இருந்தது. சைவர்கள் பேசத்தொடங்கும்போதே ஆறு புறச்சமயம், ஆறு அகச்சமயம் என்றே தொடங்குவர்.
தனித்தனிச் சமயங்களாக இருந்த இந்துமதத்திற்கு தன்னை ஒருங்கிணைத்து கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது. தத்துவார்த்தமான ஒருங்கிணைப்பு முதலிலும், அதை ஒட்டிய நடைமுறை ஒருங்கிணைப்பு தொடர்ந்தும் தேவைப்பட்டது. அதன்பொருட்டு அத்வைதம் ஒரு ஒருங்கிணைப்புக் கொள்கையாக அக்காலகட்டத்தில் உருவாயிற்று.
இன்று நாம் காணும் வேதாந்தம் உள்ளிட்ட சிந்தனைகள் அனைத்தும் இந்த தொகுப்பு செயல்பாட்டிற்கு உள்ளே அமைந்துள்ளன. அதை பிரித்து புரிந்துகொள்வதற்கு நமக்கு வரலாற்று அறிவு தேவை.
(பகுதி-2-ல் தொடரும் ….)
…………………………………………………………………………………………………………………………………………………..



[…] […]