அமைச்சர் பதவி 5 வருஷத்துக்கு தான் …. ஆனால், வருமான வரிகட்டவே தேவையில்லாத விவசாயம் …???

……………………………………….

………………………………………

………………………………………….

150 ஏக்கர், 300 மாடுகள்; உணவுக்கு நெல் சாகுபடி, உரத்துக்கு மாடுகள்; அமைச்சர் கே.என்.நேருவின் பண்ணை…!

“அமைச்சர்ங்கிற அடையாளம் அஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை மாறலாம். ஆனா, விவசாயிங்கிற இந்த அடையாளம் ஆயுசு முழுக்க மாறாது. எங்க குடும்பம் இன்னைக்கு இவ்வளவு தூரம் வளர்ந்திருக்குன்னா அதுக்கு
அடிப்படை காரணம் விவசாயம்தான்.

நாங்க படிச்சது, வீடு கட்டினது, எங்க தொழிலுக்கான முதலீடு என எல்லாமே இந்த விவசாயம் கொடுத்ததுதான்” பெருமிதத்தோடு சொல்லி விட்டு, கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப்பசேரென பரந்து விரிந்திருக்கும் தன் நிலத்தைச் சுற்றிக் காட்டியபடி வரப்பில் வீறுநடை போடுகிறார் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு.

45 ஆண்டுகளுக்கும் மேலான தன் அரசியல் வாழ்க்கையில் நான்காவது முறையாக அமைச்சராக இருக்கிறார் கே.என்.நேரு. அரசியலில் அவரும், தொழிலில் அவர் குடும்பமும் பெரிய வளர்ச்சியடைந்தாலும் விவசாயத்தைக் கைவிடவில்லை அவர். பெயருக்கும் பெருமைக்காக மட்டுமல்லாமல் மிகுந்த ஈடுபாட்டுடன் விவசாயம் செய்து வருகிறார்.

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, தென்கால் கிராமத்தில் அமைந்துள்ள அவருடைய பண்ணைக்கு ஓர் அதிகாலை வேளையில் சென்றோம்… பல்வேறு பரபரப்பு களுக்கு மத்தியிலும் `பசுமை விகடனுக்காக’ நேரம் ஒதுக்கி தன் விவசாய அனுபவங்களைப் பகிர ஆரம்பித்தார்…

எங்களை வளர்த்தது விவசாயம்தான்…

“விவசாயம்தான் எங்களுக்கு மெயின். எங்க அப்பா காலத்துல 100 ஏக்கருக்கு மேல நிலம் இருந்துச்சு. என்கூட பொறந்தது நாலு பேர். அரசியல், தொழில், படிப்புனு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திசையில போனாலும் ஆணி வேரா இருக்கிறதது இந்த விவசாயம்தான். அப்பா இருக்கும்போது மிளகாய், மல்லி, சோளம், ராகி, கம்பு மாதிரியான பயிர்களைத் தான் சாகுபடி பண்ணுவோம். அது தவிர, நிறைய மாமரங்கள் இருந்துச்சு. எலுமிச்சையும் பெரியளவுல பண்ணோம்.

நான் பி.யு.சி வரைக்கும்தான் படிச்சேன். படிப்பு முடிஞ்சதும் விவசாயத்தையும் பார்த்துக்கிட்டு அரியலூர்ல மிளகாய் மண்டி வெச்சிருந்தேன். தென்னிந்தியாவுல குண்டூருக்கு அடுத்தபடியா பெரிய மார்க்கெட்னா அது அரியலூர் மார்கெட்தான். அப்போ அங்கே ஒரு நாளைக்கு 10,000 மூட்டைக்கு மேல மிளகாய் வரும். சில வருடங்கள்ல அரசியல்ல முழுநேரமா ஈடுட ஆரம்பிச்சதால அதை விட்டுட்டு வந்துட்டேன். ஆனா, விவசாயத்தை மட்டும் இப்போ வரை விடலை.

25 வருஷத்துக்கு முன்னாடி அப்பா வெச்சிருந்த நிலத்தை வித்துட்டு இந்தப் பக்கம் நிலம் வாங்கிட்டேன். நான் வாங்கும்போது இந்த இடம் பள்ளமா இருந்துச்சு. ஆயிரக் கணக்கான லோடு மண் அடிச்சு நிலத்தை சீர் செஞ்சேன். இந்த நிலத்துக்கு நடுவே வடிகால் வாய்க்கால் வர்றதால இங்கே தண்ணீருக்குப் பிரச்னை இல்லை. காவிரி தண்ணீரே வருது. தண்ணீர் நிறைய இருக்கதால இங்கே வாழை, நெல், தென்னை, கரும்புதான் பண்ண முடியும். அதைத் தவிர, காய்கறி யெல்லாம் இங்கே செய்ய முடியாது. அதுக்கு நிலம் காய்ச்சலும் பாய்ச்சலுமா இருக்கணும். இந்த இடம் ஒத்து வராது” என்றவர் இடைநிறுத்தி, வயல்வெளியில் வேலை செய்பவர்களிடம் ஆலோசனை சொல்லி விட்டுத் தொடர்ந்தார்…

“இது குடும்ப சொத்துதான் இப்போ வரைக்கும் எல்லோரும் ஒண்ணாதான் இருக்கோம். 200 ஏக்கருக்கு மேல இங்கே விவசாயம் செய்யுறோம். அதுல 70 ஏக்கருக்கு மேல குத்தகை நிலம். 80 ஏக்கரில் நெல், 40 ஏக்கரில் பாக்கு, 80 ஏக்கரில் தென்னை இருக்கு. பாக்கு சாகுபடி ஆரம்பிச்சு நாலு வருஷம்தான் ஆகுது. சில இடங்கள்ல தென்னைக்கு நடுவே ஊடுபயிராவும் சில இடங்கள்ல தனியாவும் நடவு செய்திருக்கேன். . முன்னாடி அந்த இடத்துல வாழைதான் போட்டுருந்தேன். கொரோனா சமயத்துல விளைஞ்சிருந்த வாழையை விற்க முடியாம ஒரு கோடி ரூபாய்க்கு மேல நஷ்டமாகிருச்சு. அதனாலதான் வாழையை எடுத்துட்டு பாக்கு போட்டுருக்கேன். நெல், தென்னை, பாக்கு ஆகிய மூணுபயிர்கள்தான் இங்கே பிரதானமா இருக்கு. இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்துலதான் என் சொந்த கிராமம் இருக்கு. அந்த ஊர்ல உள்ள நிலத்துல என் தம்பி நட்ட, செம்மரங்கள் நிறைய இருக்கு.

அதைத் தவிர, இப்போ 10,000 செம்மரக் கன்றுகள் நடவு செய்திருக்கேன்.. பிற்காலத்துல அது நமக்கு அடுத்து வர்றவங்களுக்குப் பலன் கொடுக்கும். நெற்பயிரைப் பொறுத்தளவுல ஆந்திரா பொன்னி, டி.கே.எம்.9, சி.ஆர்.1009 ஆகிய ரகங்கள்தான் அதிக அளவில் போட்டுருக்கேன். 10 ஏக்கரில் கறுப்புக் கவுனி, மாப்பிள்ளைச் சம்பா உள்ளிட்ட நாட்டு ரகங்களைச் சாகுபடி செஞ்சிருக்கேன். ஏக்கருக்கு 35 மூட்டையிலிருந்து 42 மூட்டை வரை கிடைக்குது. தென்னையும் நல்ல லாபம் கொடுக்குது.

மகன் ரைஸ் மில் வெச்சிருக்கார். அதை அப்படியே மில்லுக்கு அனுப்பிருவோம்” என்றவர், ஒரு வயலில் அதிக அளவில் களைகள் தென்பட… உடனே விரைந்து சென்று, யப்பா இந்த ஏரியாவுல நிறைய புல்லு மண்டியிருக்குப்பா உடனே எடுக்கச் சொலுங்க” என்று களையெடுக்கும் ஆள்களிடம் சொல்லிவிட்டு, நம்மிடம் தொடர்ந்தார்.முன்னாடியெல்லாம் இந்த அளவுக்கு களை இருக்காது. இப்போ எங்கிருந்துதான் இவ்வளவு களை வருதுன்னே தெரியலை. அதுக்காக பயந்துகிட்டு களைக் கொல்லி தெளிச்சிரக் கூடாது. அதைத் தெளிச்சா நிலத்தின் தன்மையே போயிரும். களை வந்தாலும் பரவாயில்லை விளை யுறது விளையட்டும்னு விட்டுரு வோமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் களைக்கொல்லியைத் தெளிக்கிறதில்லை. எவ்வளவுக்கு எவ்வளவு ரசாயன உரங்களைக் குறைக்க முடியுமோ குறைத்துவிட்டு மாட்டுச் சாண உரத்தை அதிக அளவில் பயன்படுத்துறோம்.

பாக்கு மரங்களுக்கு மாட்டுச் சாண உரம் மட்டுமல்லாம, கடலைப் புண்ணாக்கு, கொட்டப் (ஆமணக்கு) புண்ணாக்கு, புங்கம் புண்ணாக்குனு கலந்து கொடுக்கிறோம். இவ்வளவு பயிர்களுக்கும் சாண உரம் வேணும்னா மாடும் அதிகமா இருக்கணும் அதுக்காக இதுக்குள்ளேயே மாட்டுப் பண்ணையும் வெச்சுருக்கேன். வாங்க அதைப் பார்க்கலாம்” என்று மாட்டுப் பண்ணைக்கு அழைத்துச் சென்றார்.

300-க்கும் மேற்பட்ட மாடுகள்…

ரெட் சிந்தி, சாஹிவால், ஹரியானா, தார்பார்க்கர், ஹெச்.எஃப் எனப் பல்வேறு வகையான மாடுகள் அவருடைய மாட்டுப் பண்ணையில் இருக்கின்றன.

“என்கிட்ட 300 மாடுகளுக்கு மேல இருக்கு. இங்கே 150 மாடுகளும், இன்னொரு இடத்துல 150 மாடுகளும் இருக்கு. பயிரைப் பார்த்தாலே தெரியுற மாதிரி, ஒரு மாட்டைப் பார்த்தாலே அது தேறும் தேறாதுன்னு எனக்குத் தெரியும். ஆளுங்க வாங்கிட்டு வர்ற மாடு சரி இல்லைன்னா பார்த்ததும் கண்டுபிடிச்சு, உடனே திருப்பி அனுப்பிருவேன்.

இங்கே இருக்க மாடுகள்ல யிருந்து 350 முதல் 400 லிட்டர் பால் கிடைக்குது. அதை அப்படியே மொத்தமா ஆவினுக்குக் கொடுத்துடுறோம். இன்னொரு இடத்தில் உள்ள 150 மாடுகள்லேயிருந்து சுமார் 400 லிட்டர் பால் கிடைக்குது. அதைக் கடை களுக்குக் கொடுத்துடுறோம். பாலைவிட சாணத்துக்காகத்தான் இவ்வளவு மாடுகளை வெச்சிருக்கோம். இதுக்கான தீவனத்தையும் இங்கேயே பயிரிட்டுக்கிறோம்’’ என்றவரிடம்,

“நாம அமைச்சராகிட்டோம். ஏன் விவசாயம் செய்யணும்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா?” என்று கேட்டதுதான் தாமதம்

“ஒருத்தர் என்ன பதவியில இருந்தாலும் எவ்வளவு பெரிய வசதி படைச்சவங்களா இருந்தாலும், எவ்வளவு பெரிய தொழில் முனைவோரா இருந்தாலும் பசிச்சா சாப்பிட உணவு வேணும். பதவி, பசியைப் போக்காதுங்கிறதை உணர்ந்தவன் நான். அதனாலதான் விவசாயத்தை விடாம செஞ்சு கிட்டிருக்கேன். என்னையைவிட என் மனைவிக்கு விவசாயத்துல ஆர்வம் அதிகம். நானாவது கொஞ்சம் ரசாயன உரங்களைப் பயன்படுத்துறேன். ஆனா, என் மனைவி முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் செய்யுறாங்க. இதையும் முழுக்க இயற்கை விவசாயம் மாத்துற முயற்சியில இருக்கேன்.

இன்னைக்கு வேணா நிறைய பேர் லாபம் இல்லைன்னு சொல்லி விவசாயத்தை விட்டுட்டு வெளியேறலாம் ஆனா, இன்னும் 25 வருஷம் கழிச்சு அவ்வளவு பேரும் விவசாயத்துக்கு வந்துதான் ஆகணும். அதுக் கான சூழல் நிச்சயமா வரும். விவசாயத்துல ஒருமுறை லாபம் வரும், ஒருமுறை நஷ்டம் வரும்… எதுவந்தாலும் நாம விவசாயத்தை விடாம செஞ்சுகிட்டே இருக்கணும். அப்படிச் செஞ்சா விவசாயம் நம்மைக் கைவிடாது” என்று தீர்க்கமாக முடிக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. ( நன்றி – பசுமை விகடன் )

……………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.