……………………………………………….

………………………………………………..
பத்தாண்டுகளுக்கு முன்பு பிரபல வார இதழில் வி.ஐ.பி.க்கள் பலரின் கல்லூரிக் கால அனுபவங்கள் தொடராக வெளிவந்தபோது, நல்ல வரவேற்பைப் பெற்றன.
நடிகர் சிவகுமார், பிரபஞ்சன், சாலமன் பாப்பையா, இதய சிகிச்சை டாக்டர் தணிகாசலம், தமிழருவி மணியன், கனிமொழி, நடிகர் ஙிவேக் என்று பலருடைய கல்லூரி அனுபவங்கள் வெளியானது.
சிலர் தாங்கள் படித்த கல்லூரிக்கே குதூகலத்துடன் வந்து மறுபடியும் மாணவப் பருவத்திற்குள் நுழைந்த உணர்வைப் பகிர்ந்தார்கள்.
சென்னையில் டிசம்பரில் நடக்கும் புத்தகக்காட்சியை ஒட்டி நூலாக பரிதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது ……
நூலில் இருந்து –
” ஒரு சோற்றுப் பதமாக”
கனிமொழி எம்.பி.யின் கல்லூரிக் காலம்….
………………………………………………..
சென்னை எத்திராஜ் கல்லூரிக்குள் நுழைந்ததும் கனிமொழியை வரவேற்கின்றன உற்சாகக் கூக்குரல்கள்.
“ஹாய்… ஹாய் கனி!” என்று, கல்லூரி முதல்வரிலிருந்து பேராசிரியர்கள் வரை அனைவரும் சகஜமாகப் பேசி, அணைத்துக் கொள்கிறார்கள். இப்படி ஒரு நட்பான நெருக்கம், ஒரு மாணவிக்கும் பேராசிரியர்களுக்கும் இடையே இருப்பதைக் காணும் நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.
அமைதியான கல்லூரி வளாகத்திற்குள் நடந்தவாறே தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் கனிமொழி!
“அண்ணா சாலையில் இருக்கிற சர்ச் பார்க் பள்ளியில் தான் நான் பனிரெண்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். அதன் பிறகு, சட்டம் படிக்க வேண்டுமென்கிற திட்டம் இருந்தது. ஆனால் அப்பா, “சட்டம் பிறகு பண்ணலாமே” என்றார்.
சட்டத்துக்கு அடுத்து பொருளாதாரம் எனக்கு விருப்பமானதாக இருந்தது. பள்ளியில் மிஸஸ் ஜோசப் என்கிற ஆசிரியை அவ்வளவு அழகாக ‘எக்னாமிக்ஸ்’ சொல்லிக் கொடுப்பார். அதுவும் நான் பொருளாதாரம் தேர்ந்தெடுக்க ஒரு காரணம்.
பள்ளியில் என்னுடன் படித்த பலர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்குப் போனார்கள். நானும் சிலரும் எத்திராஜ் கல்லூரிக்கு விண்ணப்பித்தோம். சீட் கிடைத்தது. இங்கேயே பி.ஏ., எம்.ஏ., இரண்டையும் முடித்தேன். எனவே, எனக்கு கல்லூரி என்றால் அது எத்திராஜ் மட்டும்தான்.
சர்ச் பார்க் பள்ளியில் நல்ல ஒரு சூழ்நிலை இருந்தது. எதைப் பற்றியும் இறுக்கமில்லாமல் ஆசிரியைகளுடன் முரண்படலாம்; விவாதிக்கலாம்.
இந்த வெளிப்படைத் தன்மை, சுதந்திரம் ஆச்சரியமானது.
அந்தச் சூழ்நிலையில் இருந்து கல்லூரிக்குள் நுழைந்த போது, முதலில் சற்று அதிர்ச்சியாக இருந்தது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் வந்த மாணவிகள் அங்கே இருந்தார்கள்.
அவ்வளவு கடுமையாக இல்லை என்றாலும் ‘ராக்கிங்’ இருந்தது. ஆரம்பகால இந்த தயக்கங்கள் நீங்கியது கல்லூரி வளாகம் எனக்கு விருப்பமானதாக மாறிவிட்டது.
குறிப்பாக பலதரப்பட்ட மாணவிகளுடன் ஏற்பட்ட பரிச்சயம் எனக்குப் பிடித்திருந்தது. கல்லூரியில் இருந்த கண்டிப்பான சூழ்நிலையும் மாறி லெக்சரர்கள் மாணவிகளின் தோழிகளாகவே மாறிப் போனார்கள்.
தொடக்கத்தில் கலைஞரின் மகள் என்பதால் என் மீது ஒரு கவனம் இருந்தது. ஆனால், நான் நானாகவே இருப்பதைத்தான் விரும்பினேன். ஒரு பெரிய அரசியல் தலைவரின் மகள் என்று அடையாளப் படுத்தப்படுவதை சங்கடமாக உணர்ந்தேன். எனவே, அதை கவனமாகத் தவிர்த்தேன். அதன் பிறகு கொஞ்ச நாட்களிலேயே அவையெல்லாம் குறைந்து நானும் எல்லோரையும் போல் ஒரு மாணவி ஆகிவிட்டேன்.
அதன்பிறகும் அவ்வளவாகத் தெரியாது மாணவிகள் கடந்து போகும் போது, “அந்த அல்லா பாட்டுப் பாடுவாரே, அவரோட தங்கச்சி போகுது பாரு” என்று சொல்வார்கள்.
முத்து அண்ணனைக் குறிப்பிட்டுச் சொல்லும்போது மகிழ்ச்சியாகவும், அதே சமயம் அவரது அடையாளமாகவே அந்தப் பாடல் இருந்தது சிரிப்பையும் வரவழைக்கும்.
இப்போது மாணவிகளுக்கு கொடுப்பதுபோல் அப்போதெல்லாம் ‘பாக்கெட் மணி’ கொடுக்க மாட்டார்கள். அதற்கு என்ன தேவை என்று நினைத்திருக்கலாம். என் கையில் அதிகபட்சமாக பத்து, இருபது ரூபாய்தான் இருக்கும். என் தோழிகளின் நிலையும் இதுதான்.
எனவே, நாங்களெல்லாம் சேர்ந்து சினிமாவுக்குப் போவது என்று முடிவு எடுத்தால், அதற்கான பணத்தைச் சேகரித்து அதை நிறைவேற்றுவதற்குள் மிகவும் திண்டாடிப் போவோம்.
என்னை சீரியசான ஒரு ஸ்டூடண்ட் என்று சொல்ல முடியாது. விழுந்து விழுந்து படிக்கிற இயல்பு கிடையாது. வகுப்புகளில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் போது கவனித்துக் கேட்பேன். பிடித்த பாடங்களை மட்டும் நன்றாகப் படிப்பேன்.
மற்றவற்றில் அந்த அளவு கவனம் செலுத்த மாட்டேன். தேர்வு நெருங்குகிறபோது கூட, அப்போது ஏதாவது ஒரு சுவாரசியமான புத்தகம் படித்துக் கொண்டிருந்தால் அதை முடித்த பிறகு தான் பாடப் புத்தகங்களை கையில் எடுப்பேன்.
மதிப்பெண்களை வீட்டில் பார்த்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். இதனால், இப்போது படிக்கிற மாணவர்களைப் போல் மிகத் தெளிவான இலக்கை வைத்துக் கொண்டு நான் படிக்கவில்லை. இலக்கும் இருந்ததில்லை.
குறிப்பிட்ட வேலைக்குப் போகும் திட்டமெல்லாம் சுத்தமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வாழ்க்கையோடு அதன் போக்கில் போகிற மனநிலை மட்டுமே அப்போதிருந்தது.
சர்ச் பார்க் போகும் போது அம்மா காரை ஓட்டிக் கொண்டு வந்து, விட்டுவிட்டுப் போவார்கள். எத்திராஜ் வந்ததும் நான் தனியாகவே காரில் போய்த் திரும்பினேன். சில சமயங்களில் அப்பா, கல்லூரிக்கு முன்னால் என்னை இறக்கி விட்டுவிட்டு முரசொலி அலுவலகம் போயிருக்கிறார்.
எங்க வகுப்பில் சுமார் 60 பேர் இருந்தார்கள். முதலாம் ஆண்டு முடிவதற்குள் எல்லோரும் ஒரே குடும்பம் மாதிரி உணர ஆரம்பித்து விட்டோம். கல்லூரிக்குக் ‘கட்’ அடிக்கிறபோது, ஆச்சரியம் ஏற்படுத்துகிற விதத்தில் அறுபது மாணவிகளும் மொத்தமாகச் சேர்ந்து ‘கட்’ அடித்திருக்கிறோம்.
ஒரு தடவை செட்டாகச் சேர்ந்து பஸ்ஸில் மகாபலிபுரம் போனோம்; சத்தியம் தியேட்டருக்கு ஊர்வலம் மாதிரி போயிருக்கிறோம். அதை எல்லாம் இப்போது நினைக்கும்போதும் அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. அக்கால தோழிகள் பலருடன் இப்போதும் நட்பு நீடிப்பது இன்னும் மகிழ்ச்சியான விஷயம்.
வகுப்பில் ‘கிளாஸ் ரெப்ரசன்டேடிவ்’வாக என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். அது ஒரு கொடுமை. மாணவிகளின் வெவ்வேறு விருப்பங்களை நிர்வாகத்திடம் சொல்லி அனுமதி வாங்கிக் கொண்டு வரவேண்டும். கேட்டால் பேராசிரியர்களுக்குக் கோபம் வரும்; கேட்கா விட்டால் மாணவர்களுக்குக் கோபம் வரும்!
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பாடப் புத்தகங்களைக் கடந்து ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்களை விரிவுபடுத்துகிற மாதிரியான கல்விச் சூழல் அக்காலத்தில் இல்லை; இப்போதும் இல்லை.
பொருளாதாரம் என்பதால் ஆடம் ஸ்மித், கேய்ன்ஸ், கார்ல் மார்க்ஸ் போன்றவர்கள் என்ன சொன்னார்கள் என்பதைத் தான் படித்துக் கொண்டிருந்தோமே தவிர, சமகாலத்தில் என்னென்ன மாற்றங்கள் பொருளாதாரத்தில் நடந்திருக்கிறது என்பதை பாடத்திட்டத்தில் ‘அப்டேட்’ செய்யவில்லை.
இப்படி பாடப் புத்தகங்களுக்குள்ளேயே மாணவர்கள் முடங்கி விடக் கூடாது. தடைகளற்று கற்றுக் கொள்வதற்கான தளமாக கல்லூரி இருக்க வேண்டும்.
ஓரளவுக்கு எனக்கு எத்திராஜ் கல்லூரி அப்படி இருந்தது. நான் படித்த போது பேராசிரியர் யசோதா சண்முகசுந்தரம் தான் கல்லூரி முதல்வராக இருந்தார். தவமணி என்கிற ஆசிரியை ‘பெரியாரிஸ்ட்’. ராஜி என்கிற ஆசிரியை ‘பெமினிசம்’ பேசுவார்கள்.
வாழ்க்கையின் தடத்தில் அப்படியே போய்க் கொண்டிருப்பதைத் தாண்டி சிந்திக்கக் கூடிய மாணவிகளும் கல்லூரியில் இருந்தார்கள். பாடத் திட்டத்திற்கு வெளியே நான் கற்றுக்கொண்டவற்றில் இந்தப் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளின் பங்கும் நிறைய உண்டு.
இதனால், அதுவரை நான் நம்பிக்கொண்டிருந்த பல நம்பிக்கைகள் உடை படக்கூடிய கால கட்டமாக கல்லூரி வாழ்க்கை இருந்தது. நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய ஆர்வத்தை அது உருவாக்கியிருந்தது.
பெண்ணுரிமை உள்ளிட்ட பல பிரச்சனைகளைப் பேசுகிற தருணங்களையும் பகிர்ந்து கொள்வதற்கான வெளியையும் கல்லூரி உருவாக்கிக் கொடுத்தது.
கல்லூரி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது எனக்கு ஜாலியான ஒன்று. நாடகங்களில் நடித்திருக்கிறேன்; நானே நாடகத்திற்கு ‘ஸ்கிரிப்ட்’ எழுதி இருக்கிறேன்; கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன்.
ஒருமுறை பல்கலைக்கழக அளவில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் எனக்குப் பரிசு கிடைத்தது. சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் கையால் பரிசு வாங்க வேண்டும்.
அப்பா தான் தமிழக முதல்வர். மேடை ஏறி அப்பாவிடம் பரிசை வாங்கி விட்டு, கூச்சம் காரணமாக சீக்கிரமாக இறங்க முயற்சித்தபோது, “என்ன எனக்கு நன்றி கூட சொல்ல மாட்டியா?” என்று கிண்டல் பண்ணினார் அப்பா.
அந்த சம்பவத்தை நினைத்துச் சிரித்தபடியே எக்னாமிக்ஸ் பிரிவுக்குள் நுழைந்தார் கனிமொழி. அவர் படித்தபோது ஆசிரியையாக இருந்த ரேணுகாதேவி அங்கே இருந்தார்.
“இவங்க படிக்கிறப்போ ரொம்ப அமைதி. ஒரு முதல்வரோட மகளா எப்பவும் காட்டிக்க மாட்டாங்க” என்று கனிமொழியின் வார்த்தைகளை உறுதிப்படுத்தினார், ரேணுகாதேவி.
“அக்காலத்தில் அப்பாவுடைய கூட்டங்களுக்கும் மற்ற கூட்டங்களுக்கும் நண்பர்களுடன் போயிருக்கிறேன் என்றாலும், அரசியலில் எனக்குப் பொதுவான ஆர்வம் தான் இருந்தது. அரசியலை நோக்கி நகரப் போவதைப் பற்றி அப்போது நினைத்துக் கூட பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.” என்று கனிமொழி மீண்டும் நினைவலைகளில் மூழ்கினார்.
விடைபெறும்போது, “என்ன தான் அரசியல் புகுந்து எம்.பி ஆனாலும் எங்களைப் பொறுத்தவரை கனி எப்போதும் எங்கள் ஸ்டூடண்ட் தான்” என்று செல்லமாக வழி அனுப்புகிறார்கள் கல்லூரி ஆசிரியர்கள்.
தன் நிழலில் வளர்த்த வி.ஐ.பி. – யை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது 70 வயதுக்கு மேற்பட்ட எத்திராஜ் கல்லூரி!.
( நன்றி — கட்டுரை ஆசிரியர் மணா அவர்களுக்கு …)
………………………………………………………………………………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….