
” சாவி “என்கிற சா.விஸ்வநாதன் அவர்களைத் தெரியுமா உங்களுக்கு…. ???எனக்கு மிகவும் பிடித்த, நன்கு பரிச்சயமான அவரைப்பற்றி – தெரிந்திருந்தாலும் சரி – தெரியா விட்டாலும் சரி … அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு பதிவு இது….
…………………………………….
இந்தியன் படத்தில் ஒருகாட்சி பார்த்திட்டிருந்தேன்.
நெடுமுடி வேணு இந்தியன் தாத்தா வீட்டுக்கு வருவார். சுகன்யாவிடம் தான் சுதந்திரப்போராட்ட தியாகி எனவும் பென்ஷனுக்காக சேனாபதியின் சிபாரிசு கையெழுத்து வேண்டும் என்பார். அதற்கு சுகன்யா “நீங்கள் எந்த போராட்டத்தில் கலந்து கொண்டீர்கள். உப்பு சத்யாகிரஹமா? ரயில் கவிழ்ப்பா?” எனக்கேட்டதும் “சேச்சே…போராட்டக்காலத்துல பக்கத்தாத்து பையன் போஸ்ட் பாக்ஸ்ல நெருப்பள்ளி போட்டுட்டான். நான் வேடிக்கை பார்த்திட்டிருந்தேன்..என்னை பிடிச்சிட்டு போயிட்டா…” என்பார். அது சுகன்யாவை வெகுண்டெழச்செய்யும் ஒரு வசனம்…… எழுதியவர் சுஜாதா.
புத்தகப்பதிவுகளாகவே முகநூலில் பார்த்ததும் ஏனோ சாவி நினைவு வந்தது. சாவி புத்தகம் அன்று விகடன், கல்கியோடு போட்டி போட்டு விற்ற புத்தகம்.
எழுத்தாளர்கள் சாவியும்(சா.விஸ்வநாதன்), ,சுஜாதாவும் மனதளவில் நெருக்கமானவர்கள். சுஜாதாவை பிரபலமாக்கியது சாவி தான். எல்லோரும் சுஜாதாவை பெண் தான் என நினைத்துக்கொண்டிருந்த போது கருகரு மீசையுடன் அவர் போட்டோவை போட்டு ‘அடுத்த இதழில் தொடர்கதை. எழுதுபவர் சுஜாதா’ என விஷுவலாக அறிமுகப்படுத்தியவர் சாவி.
சாவி புத்தகம் இன்றும் எனக்கு மறக்க முடியாதது அதன் ஒரு பதிப்பில் வெளியான போட்டி தான். விஜிபி கோல்டன் பீச்சில் ஒரு தங்கச்சாவியை சாவி மணலில் ஒளித்து வைத்து விட்டார். அதை தேடி எடுக்கும் வாசகர்களுக்கு ஒரு பரிசு என அறிவித்தார். அப்படியே பல வாசகர்களை கோல்டன் பீச்சுக்கு சுற்றுலா அழைத்துச்சென்று தேட வைத்தார். தேடி எடுத்தவருக்கு பரிசும் கொடுத்தார். இப்போ கூட ஒரு இன்ஸ்டா போஸ்டில் ஒருத்தர் பணத்தை கட்டோடு ஒரு இடத்தில் வைத்து விட்டு யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என வீடியோ இட போலீஸ் அவரை லாடம் கட்டி இருக்கிறது.
எழுத்தாளர் சாவி தங்கக்கடற்கரையை பரவலாக அறியப்பட வைக்க செய்த உத்தி தான் அது. விஜிபி பன்னீர் தாசுக்கு ஐடியா கொடுத்து கோல்டன் பீச்சுக்கு நிறைய ஐடியாக்கள் சொன்னது சாவி தான். சாவி வைத்த தென்னைகள் இன்றும் கோல்டன் பீச்சில் இருக்கின்றன.
சுஜாதாவிடம் ஒரு முறை போன் போட்டு “அடுத்த வாரத்திலிருந்து நீ ஒரு தொடர் எழுதுறே”ன்னு சொல்லி விட்டு இவரே டைட்டில் வைத்து விட்டார். சுஜாதாவும் டைட்டிலுக்கேத்த கதையை தொடராக எழுதினார். அப்படி சாவி வைத்த டைட்டில் தான் ‘நில்லுங்கள் ராஜாவே’.
சுஜாதா என்ன எழுதினாலும் விக்குதுப்பா…அவர் சலவைக்கணக்கு எழுதினாக்கூட வித்துடும் போல என ஒரு பேச்சு இருந்தது. உடனே சாவி சுஜாதாவின் சலவைக்கணக்கை கேட்டு வாங்கி அதையும் பிரசுரித்தார். ஆனந்த விகடனிலிருந்து வந்ததால், கல்கியிடம் பாடம் படித்ததால் சாவி இதழ் ஜனரஞ்சமாக இருந்தது. வேணுகோபாலன் என்று ஆன்மீகம் எழுதியவரை அழைத்து “நாளையிலிருந்து உன் பெயர் புஷ்பா தங்கதுரை. போய் த்ரில்லர் தொடர்கதை எழுதிவிட்டு வா…” என ஆளையே மாற்றி விட்டிருக்கிறார் சாவி. அவர் ஸ்ரீவேணுகோபாலன் என்கிற பெயரில் சரித்திரக்கதையும் எழுதும் அளவுக்கு வளர்ந்தார்.
ஒரு பெண்மணி ஒரு ஓவியர். ஒரு ஓவியத்தை வரைந்து சாவியிடம் பிரசுரிக்கக் கொடுத்திருக்கிறார். “இந்த ஓவியத்தைப் பற்றி நாலு வார்த்தை எழுதிக்கொண்டு வா..” என்கிறார். அந்தப்பெண்மணி எழுதிக்கொடுக்க “உனக்கு ஓவியத்தை விட எழுத்து நல்லா வருது. நீ கதையெழுதிட்டு வா..” என அனுப்புகிறார். அவர் தான் பின்னாளில் அனுராதா ரமணன்.
சாவி தான் தினமணிகதிரை பிரபலமாக்கியவர். அதிலிருந்து சாவி விலக சாவிக்காக கலைஞர் ஒரு வார இதழை தொடங்குகிறார். அது தான் குங்குமம் பத்திரிக்கை.
சாவியை திரையில் இன்றும் பார்க்கலாம். எம்.ஜி.ஆரின் ‘புதியவானம், ,புதிய பூமி.’ என்கிற அன்பே வா பாட்டில் எம்ஜிஆரோடும், குழந்தைகளோடும் இரண்டு கோட்சூட் ஆசாமிகள் வருவார்கள். ஒருவர் ஏவிஎம்.சரவணன். ஒருவர் சாவி.
சுஜாதாவிடம் கதைகள் மட்டுமல்லாது கட்டுரைகள் எழுதச்சொல்லி அவரை வேறொரு உச்சத்துக்கு அழைத்துச்சென்றது சாவி தான். அதற்கு சுஜாதா கைம்மாறு செய்ய வேண்டாமா?
இந்தியன் படத்தில் நெடுமுடி வேணு சொல்லும் டயலாக்கில் வரும் பக்கத்தாத்து பையன் வேறு யாருமல்ல. சாவி தான்.
சாவி – சுதந்திரப்போராட்டக்காலத்தில் மண்ணடி தபால் நிலையத்தை தீ வைத்து விட்டு போலீசுக்கு அவரே தகவல் சொல்லி விட்டு போலீஸ் வரும் வரை அவரே காத்திருக்கிறார். போலீஸ் அவரை கைது செய்து அலிகார் சிறையில் அடைத்திருக்கிறது.
இந்தக்காட்சியை நெடுமுடி வேணு வேடிக்கைப்பார்த்ததாக சுஜாதா இந்தியன் படத்தில் வசனத்தை வைத்திருந்தார்.
குரு-சிஷ்ய பந்தம் இது தான் போல….!!!
(நன்றி – செல்வன் அன்பு அவர்களின் பதிவுக்கு ….!!! )
…………………………………………………………………………………………………………………………………………………..



சாவியைப் பற்றித் தெரியவேண்டுமென்றால் அவருடன் வேலை பார்த்த ரவி(ரவி பிரகாஷ்?) என்பவர் அவருடைய பிளாக்கில் நிறைய அனுபவங்களை எழுதியிருக்கிறார். எழுத்தின் மீதும் பத்திரிகை நடத்துவதிலும், புதியவர்களை அறிமுகப்படுத்துவதிலும் அவர் தீராத காதல் கொண்டிருந்தார். அவருக்கு கோபம் என்ற கெட்டகுணமும் இருந்தது.
இந்த புஷ்பா தங்கதுரை, எங்கள் கிராமத்துக்காரர்.
” இந்த புஷ்பா தங்கதுரை, எங்கள் கிராமத்துக்காரர்…”
this is interesting …Any idea as to what is his original name..?? Do you know him personally…!!!
இரண்டு நாட்கள் திருப்பதி பயணம். அதனால் மொபைலில் பதில் எழுத முடியவில்லை.
புஷ்பா தங்கதுரையின் பெயர் ஸ்ரீவேணுகோபாலன். இது திருநெல்வேலியில் உள்ள (5 கிமீ தூரம்) கீழநத்தம் என்னும் கிராமத்தின் பெருமாள் கோவில் பெருமாள் பெயர். (அவருடைய ஒரிஜினல் பெயர் வேணுகோபாலனாகவும் இருக்கலாம்). அவர் அந்த ஊரைச் சேர்ந்தவர். (என் அப்பா, அவர் சகோதரர்கள் கீழநத்தத்தில் வசித்தவர்கள். நானோ சிறு வயதில் வருட விடுமுறைக்கு அந்த ஊருக்குச் சென்று வருவேன்). 88ல், அவர் கேகே நகரில் இருந்தபோது (நாங்களும் கேகே நகரில் இருந்தோம்/சென்னை) என் அப்பா அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தார். அப்போது நான் ‘புஷ்பா தங்கதுரை’ நாவல்கள்/கதைகளின் ரசிகன். (அந்த எழுத்துகள் எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. நான் 20களில்). அதனால் அப்பாவிடம் நான் அவருடைய எழுத்துக்களின் ரசிகன், என்னையும் ஒரு தடவை கூட்டிக்கொண்டு போகிறீர்களா என்று கேட்கவில்லை.
ஸ்ரீவேணுகோபாலன் பெயர் பிராபல்யமானது அவர் அரங்கனின் “திருவரங்க உலா’ எழுதிய பிறகுதான்.