………………………………………

………………………………………..
சந்தியா!
முக்கால் பேன்ட்டை போட்டுக்கொண்டு பீன் பேகில் மீதித் தூக்கத்தை முயன்றுகொண்டிருந்தாள் சந்தியா. டிவி ம்யூட்டில் இருந்தது. கிரீன் டீ பேக் பொதுக்கென்று விழுந்து கோப்பைக்குள் சடலமாக மிதந்து கொண்டிருந்தது.
மொபைல் பீன் பேக் பக்கத்தில் அமைதியாக இருந்தது. அதில் இருந்து எழும் ஒலிக்கு அந்தப் பாதித் தூக்கத்திலும் சந்தியாவின் காதுகள் அலெர்ட்டாக காத்திருந்தன.
மொபைலில் ரிங் டோன் அடிக்க ஆரம்பித்ததும் உடனே எழுந்து இடது கையை சற்று மட்டுப்படுத்தி சில செகண்டுகள் இடைவெளி விட்டு எடுத்தாள்.
“என்னடா சீக்கிரமே கால் பண்ணிட்ட… இன்னிக்காச்சும் படத்துக்குப் போறோமா… இல்லை லாஸ்ட் மினிட் அன்செர்ட்டினிட்டியா?”
“……………………….”
“ஏய் ப்ளீஸ்… மூவி பாக்குறதுக்கு முன்னாலும் காபி குடிக்கலாம். பாத்துகிட்டேவும் காபி குடிக்கலாம். பாத்ததுக்கு அப்பறமும் காபி குடிக்கலாம்…”
“……………………”
“இல்லடா… இப்பவே முடிவு பண்ணாதானே புக் பண்ண முடியும்… வீக்எண்ட் வேற… தியேட்டர் ஃபுல் ஆகிடும்”
“………………………….”
“ப்ச்… என்னடா எப்பப்பார்த்தாலும் அப்புறம் சொல்றேன், நேர்ல சொல்றேன்னு… இரிடேட்டிங்கா இருக்குடா…”
“………………………..”
“சரி வரேன்… நீ லேட் பண்ணாம வந்துடு”
நீண்ட குளியலை முடித்து, நன்கு அழகுபடுத்திக்கொண்டு, மிகவும் பிடித்த மற்றும் ரிலாக்ஸான உடையை அணிந்து கொண்டு கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள் சந்தியா. கண்ணாடியில் பார்க்கும்போதே அவள் துள்ளித்துள்ளி அவன் பைக் அருகே செல்வாள் என்று உணர்த்தியது அவள் செய்கை. சனிக்கிழமை சந்தியாவுக்கு ரொம்ப ஸ்பெஷல்.
பைக்கை நிறுத்தியதும் அதிசயமாக சரவணன் காத்திருப்பது தெரிந்தது. குஷியாகிவிட்டாள் சந்தியா. சற்று வேகமாக ஓடி அவன் கையைப் பற்றிக்கொண்டாள். அப்படி பற்றிக்கொண்டால் இறுக்கி அணைத்து உதட்டில் ஒரு முத்தம் என்று அர்த்தம்.
இருவரும் ஒரு மேஜையில் அமர்ந்தனர். ஆர்டர் சொல்லி முடித்ததும்…
“டிக்கெட் பார்க்கவா… பக்கத்துலதான் தியேட்டர்?!”
“இரு சந்தியா காபி வரட்டும். கொஞ்சம் பேசணும்.”
“அப்டி என்னதான் பேசப்போற… இனிமே சரக்கடிக்க மாட்டேன்னு திரும்பவும் சொல்லப்போறியா?”
“இல்ல, வேற வேலை மாறப்போறேன்”
“என்னடா… திடீர்னு சொல்ற… முன்னாடியே தெரியாதா?”
“தெரியும், கன்ஃபார்ம் ஆனதும் சொல்லலாம்னு!”
“எந்த கம்பெனி?”
“கம்பெனி கூட முக்கியம் இல்ல, டெல்லி”
“ஏண்டா இப்படி… என்கிட்ட டிஸ்கஸ் பண்ணவேயில்லையே!”
“ம்ம்… கொஞ்ச நாளாவே நமக்குள்ள டிஸ்டென்ஸ் அதிகமாகிடுச்சு… உனக்குத் தெரியுதா!”
“ஏய்… வேலை பிரஷர்ல…”
“இல்ல… அது மட்டும் இல்ல”
“சரி… இப்ப என்ன கொஞ்ச நாள் லீவ் போட்டு அவுட்டிங் போலாம். அதுக்கு ஏண்டா டெல்லி?”
“அது மட்டும் இல்ல சந்தியா… நம்ம கரியரை கொஞ்சம் யோசிச்சி பாரேன். நாம இன்னும் செட்டில் ஆகவேயில்லை!”
“அதுக்கென்னடா இப்போ, சீக்கிரமே ஆகிடலாம்!”
“இல்ல சந்தியா, உங்க வீட்ல கல்யாணப் பேச்சு எடுக்குறாங்கன்னு சொன்னல்ல?”
“ஆமா… நான்தான் அவாய்ட் பண்ணிட்டு இருக்கேனே!”
“எவ்ளோ நாள் அவாய்ட் பண்ண முடியும்? நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே ஏஜ். உனக்கு கல்யாண வயசு ஓகே… எனக்கு இன்னும் சில வருஷம் இருக்கு சந்தியா…”
“ஏய் என்னடா திடீர்னு என்னென்னமோ பேசுற?!”
“திடீர்னு பேசலை… யோசிச்சிப் பார்த்துதான் பேசறேன்.”
“சரி, இப்ப அதுக்கு என்ன செய்யணும்?”
ஆர்டர் செய்த ஸ்நாக்ஸும், காபியும் வந்தது.
“நம்ம ரெண்டு பேருக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் ரொம்ப பிடிக்கும். கேரிங்கா இருப்போம். ஆனா இதெல்லாம் கல்யாணத்துக்கு சரியா வராது சந்தியா. நாம இப்படியே இருக்கணும்னா பிரிஞ்சிடுவோம்!”
“பிடிச்சதாலதாண்டா லவ் பண்ணோம். அதனாலதானே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணோம்!”
“லவ் பண்ணது ஓகே… எனக்கு இப்ப கல்யாணம் சரி வராது. நான் இன்னும் நிறைய சம்பாதிக்கணும், செட்டில் ஆகணும். இன்னும் ரொம்ப நாள் சிங்கிளா ஜாலியா இருந்துட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.”
“இப்ப என்ன பெரிய பிரச்னை… திடீர்னு காபி ஷாப்ல வெச்சி… ஏன் இப்டி பண்ற… நேத்து ஃபுல்லா தண்ணியா?”
“ப்ச்… பிரச்னை வந்தாதான் பிரியணுமா… வரும்னு யோசிச்சி ப்ராக்டிக்கலா பிரியக் கூடாதா?”
“ஏய் நாம ஊட்டி, லங்காவி, கோவானு மென்ட்டலாவும், ஃபிஸிக்கலாவும் நல்லாதானடா இருந்தோம்!”
“இது வெறும் மென்ட்டல், ஃபிஸிக்கல் மட்டும் இல்ல சந்தியா. ஃப்யூச்சர் சம்மந்தப்பட்டது. என் ஃப்யூச்சர் எனக்கு முக்கியம் இல்லையா?”
“என்னால என்னடா ஃப்யூச்சர் கெடப்போகுது?”
காபி ஆறிக்கொண்டிருந்தது.
“உனக்குப் புரியலை. எனக்கு இன்னும் ஏஜ் இருக்கு. நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு. அதுவுமில்லாம நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்குற லவ் ஒரு மாதிரி கேரிங்கான… எப்படி சொல்றதுன்னு தெரியல. ஃப்ரெண்ட்ஷிப் வித் பெனிஃபிட்ஸ்னு சொல்லலாம். ஒரு லாங் டேர்ம்ல இது கிக்கா இருக்காது. ஃபிராங்க்கா யோசிச்சிப் பார்த்துதான் சொல்றேன்.”
“எனக்கு அப்டி இல்லையே!“
“எனக்கு இப்பவும் உன்னைப் பிடிக்கும். அது இப்படியே இருக்கணும். அதைக் கெடுத்துக்க விரும்பலை. நாளைக்கு காலைல ஃப்ளைட். திங்கட்கிழமை டியூட்டில ஜாய்ன் பண்றேன்.”
“விளையாடுறியா…”
“சந்தியா… நீ குழந்தை இல்லை. குழந்தை மாதிரி நடிக்காத. உனக்கு சரிவராதுன்னு நீயும் மத்தவனை பிரேக் அப் பண்ணி விட்டிருக்கத்தானே!”
“யேய் என்னடா… அதுவும் இதுவும் ஒண்ணா!”
“ரொம்ப காம்ப்ளிகேட் பண்ணிக்காத சந்தியா. நாம ரெண்டு பேரும் இருந்த வரைக்கும் சந்தோஷமா இருந்தோம். யாரும் எதையும் மிஸ்யூஸ் பண்ணலை. அப்டியே இருப்போம். கொஞ்சம் வேலை இருக்கு. நான் கிளம்புறேன். போயிட்டு பிங் பண்றேன். டேக் கேர். இப்பவும் ஒண்ணும் ஆகலை. நாம அப்டியேதான் இருக்கோம். கல்யாணம் மட்டும் வேணாம்னு சொல்றேன்.”
கூகுள் பே ஆப்பில் ஸ்கேன் செய்துவிட்டு, சந்தியா தலையில் தட்டிக் கொடுத்து விட்டு வேகமாக வெளியேறினான் சரவணன்.
சரவணன் சொன்னதன் தீவிரம் முழுதாக தாக்காத சந்தியா என்ன செய்வது என்று தெரியாமல் ஆறிப்போன காபியை எடுத்து ஒரு சிப் சிப்பினாள். இயல்பாக இருப்பது போல காட்டிக்கொண்டாள்.
மெதுவாக மொபைலை எடுத்து சரவணனுடனான வாட்ஸ்அப் உரையாடலை மேலே மேலே உருட்டிக்கொண்டு போனாள். அவன் இன்று பேசியதற்கு எங்கேனும் முன்பே சிக்னல் தெரிகிறதா என்று பார்க்க ஆரம்பித்தாள். அருகில் வந்த பேரரிடம் ஒன் மோர் காபி என்றாள்.
அதற்குப்பிறகு 3 காபிகள் குடித்தாள்.
சுமதி!
சைக்கிளை ஓட்டிக்கொண்டு அந்தத் தெரு முக்கு வரை போன சண்முகம் மீண்டும் ஒடித்துக்கொண்டு அதே தெருவில் மிதித்தான். காலை பதினோரு மணி என்பதால் தெருவின் சோம்பேறித்தனத்தைத் தாண்டி, சண்முகம் சுறுசுறுப்பாக மிதிப்பது போல இருந்தது.
வீட்டு வாசல்களில் ஏதேனும் கிழம் கட்டைகள் அமர்ந்திருக்கிறதா என்பதை நோட்டம் விட்டவாறே அந்த மண் சாலையில் தடம் பிடித்து தன் மிதி வண்டியை செலுத்திக்கொண்டிருந்தான்.
தெருவில் பெரிய நடமாட்டம் இல்லை.
அந்தத் தெரு மீண்டும் எதிர்த்திசையில் முடிந்ததும் வலது புறம் ஒடித்து கொஞ்ச தூரம் செலுத்தினான். ஒரு சின்ன காளி கோவில். அதன் எதிரே ஒரு மரம். அந்த மரத்தைச் சுற்றி சிமென்ட்டால் கட்டப்பட்ட ஒரு சதுரம். அதில் தலைக்கு துண்டை வைத்துக்கொண்டு ஒரு பெரியவர் தூங்கிக்கொண்டிருந்தார்.
மரத்தின் இலைகளினூடே சறுக்கிக்கொண்டிருந்த வெளிச்சம் அந்தப் பெரியவரின் வயிற்றில் சிறு சிறு வடிவமில்லாமல் ஆடிக்கொண்டிருந்தது. அவை முகத்துக்கு ஏறும் போது பெரியவர் திரும்பிப் படுத்துக்கொள்வாராயிருக்கும்.
சண்முகம் அந்த மரத்தை ஒட்டி சைக்கிளின் ஸ்டேண்டைப் போட்டான். லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு மீண்டும் அந்தத் தெருவுக்குள் நுழைந்தான்.
தன் பாக்கெட்டுக்குள் இருந்த பணத்தை எடுத்து எண்ணிக்கொண்டே நடந்தவன், ஒரு வீடு சமீபத்ததும் எதேச்சையாக முன்னும் பின்னும் பார்ப்பது போல பார்த்து சடுதியில் அந்த வீட்டினுள் நுழைந்தான்.
பழைய மரக்கதவு. தாள் போடப்படாமல் இருந்தது. ஆனால் அந்தக் கதவில் ஈரம் இருந்தது. உள்ளே நுழைந்ததும் அந்த வீடு இருட்டாக இருந்தது. சற்று நேரம் கண்களை கசக்கிக்கொண்டான்.
இருட்டு பழகியதும் தாவணி அணிந்த சுமதி ஒரு மூட்டை மேல் சாய்ந்து அமர்ந்திருந்தது தெரிந்தது. சண்முகத்தைப் பார்த்து காதலுடன் சிரித்ததும் தெரிந்தது.
லுங்கியை கீழே படரவிட்ட சண்முகம் அப்படியே அமர்ந்து மூச்சை இழுத்து விட்டான். சுமதி எழுந்து “யாராச்சும் பாத்தாங்களா?” என்றாள். பின் பக்கம் தன் பாவாடையில் தட்டி விட்டாள்.
“இல்ல தெருல யாரும் இல்ல… டக்குன்னு உள்ள பூந்துட்டேன்” என்றான்.
“வயித்து வலின்னு சொல்லி வேலைக்கு டிமிக்கி குடுத்துட்டேன்” என்று சிரித்தாள் சுமதி.
லேஸ் சிப்ஸ் பாக்கெட்டை எடுத்து வந்து சாப்பிடு என்றாள்.
அதை வாங்கி ஓரம் வைத்த சண்முகம், “தண்ணி குடு” என்றான்.
குவளையில் தண்ணீர் எடுக்கப் போனவளைப் பின்புறமாகப் பார்த்தபோது, பின்னால் சென்று அணைத்துக்கொள்ளலாம் என்று தோன்றியதை தலையை சிலுப்பி மறுத்து லேஸ் சிப்ஸ் பாக்கெட்டை எடுத்து பஃப் என்று தட்டினான்.
சுமதி கொடுத்த தண்ணீரை தொண்டை, மார்பு என சிந்திக்கொண்டே குடித்து குவளையை சுமதியிடம் நீட்டினான்.
“ஏன்யா டென்ஷனா இருக்க… வீட்ல சாயங்காலம்தான் வருவாங்க”
“ஒண்ணுமில்ல”
அவனருகில் அமர்ந்து ஒரு சிவப்பு கலரில் வெள்ளை நூல்கள் ஓடும் துண்டை எடுத்து தண்ணீரைத் துவட்டிவிட்ட சுமதி அவன் மார்பில் சாய்ந்தாள்.
அவளைத் தொடாமல் அமர்ந்திருந்த சண்முகத்தை வியப்பாக ஏறிட்டுப் பார்த்தாள்.
“என்னாய்யா ஆச்சி?”
“இல்ல… ஒண்ணுமில்ல… வெளிநாட்டுக்கு வேலைக்கு போவ ஏற்பாடாயிருக்கு”
“அட, வெளிநாட்டு தொரை ஆவப்போறீங்களோ… நல்ல விஷயம்தானே… அதுக்கு ஏன்யா ஒரு மாதிரி இருக்க?”
“இல்ல சுமதி, எங்க மாமாதான் ஏஜென்ட்டுக்கு பணம் குடுக்கறாரு…”
“அதனால?”
“அதனால… மாமா பொண்ணை கட்டிக்கணும்னு…”
“யோவ் லூஸா நீ… அத சின்ன வயசுல இருந்து தூக்கி வளத்துருக்கேன்… அது எம்பொண்ணு மாதிரின்னு நீதான சொன்ன?”
“ஆமா… அப்டித்தான் சொன்னேன். இப்ப வீட்டு நிலைமைல அதைக் கட்டிக்கச்சொல்லி ஆத்தா அழுவுது!”
“மாமா கடன் கொடுத்தா, வேலைக்குப் போயி கடனைத் திருப்பிக் குடு. இல்ல வேற எடத்துல கடன் வாங்கு. யோவ் வெளிநாடே போக வேணாம்யா…”
“இல்ல சுமதி, உனக்கும் எங்க ஆத்தாவுக்கும் ஒத்து வராது!”
“ஓஹோ இதெல்லாம் இப்பதான் தெரிய வருதோ… நாம படுக்கும்போது ஆத்தாவும் கூட படுக்குமோ?”
“ஆத்தாவைப்பத்தி தப்பா பேசினா மொகறை பேந்துடும்.”
“உன் ஆத்தாவைப் பத்தி நான் ஏன்யா தப்பா பேசப்போறேன். நீ தப்பா சொல்றதாலதான் நான் அப்படி பேசுறேன். என் நெஞ்சில கை வச்சி சொல்லு… இதான் காரணமா?” சுமதி சண்முகத்தின் கையை எடுத்து நெஞ்சில் வைத்துக்கொள்கிறாள்.
சுமதியின் நெஞ்சின் படபடப்புக்கிடையில் சண்முகத்தின் உள்ளங்கையில் வியர்வை ஊறுகிறது. சண்முகத்தை இழுத்து தன் மீது சரித்துக்கொள்கிறாள்.
சண்முகம் மூட்டைகள் மீது வைக்கப்பட்டிருக்கும் அரை மூட்டை சரிவது போல அவள் மீது சரிகிறான்.
கடைசி முயற்சியாக அந்த அரை மூட்டையை முத்தமிடுகிறாள் சுமதி. அரை மூட்டையில் இருக்கும் நெல் மேலும் வெளியேறி அரை மூட்டை கால் மூட்டை ஆகிறது.
கால் மூட்டையை நெம்பித்தள்ளி விட்டு எழுந்து அமர்கிறாள் சுமதி.
“சண்முகம், இதுல்லாம் தப்பு. நீயா ஒண்ணு நெனச்சிக்கின்னு பேசக்கூடாது. நான் ஒருத்தி இருக்கேன். இப்ப நமக்குள்ள புள்ளன்னு ஒண்ணு உருவாயி இருந்தா? ஆண்டவன் புண்ணியத்துல அது நடக்கல. இல்ல ஆண்டவன் புண்ணியத்துல அது நடந்திருந்தா நல்லதா, நடந்திருந்தா நீ இப்டில்லாம் பேசுவியா?”
“நடக்காததே நல்லதுன்னு நெனச்சிக்கோ சுமதி… எங்க சாதி வேற… எங்க சாதி சனம் வேற… பெரிய பிரச்னை ஆகியிருக்கும்.”
“அப்ப தொடைச்சி எறிஞ்சிடலாம்னுதான் படுத்தியா?”
“இல்ல சுமதி, அப்பல்லாம் அப்டி நெனச்சி செய்யல…”
“ஓஹோ தாலி கட்றப்ப, இதெல்லாம் தோணுதா?”
“தோ பாரு, எனக்கு நீதான் புருஷன்… நான் அப்டி நெனச்சிதான் பழகினேன். எனக்கு இதெல்லாம் தெரியாது.”
“உன் கால்ல விழுந்து கேட்டுக்கறேன் சுமதி. பெரிய பிரச்னை ஆகிடும். எனக்கு இது வாழ்க்கை பிரச்னை. என் குடும்பப் பிரச்னை. நான் நடுத்தெருவுக்கு வந்துடுவேன்… புரிஞ்சிக்கோ.”
“என்னாய்யா மயிறு மாதிரி பேசற? என் கொலதெய்வம் அது இதுன்னு கொஞ்சி கொஞ்சி பேசனது எல்லாம்?”
“என்னை மன்னிச்சிடு சுமதி. அதெல்லாம் நெசம். ஆனா குடும்பத்துக்கு கடன் இருக்கு. வேற நெறைய பிரச்னை இருக்கு. என் சாதில உன்னை சேத்துக்க மாட்டாங்க. காலம் முழுக்க உனக்கு பிரச்னைதான். என்னை விட்டுடு சுமதி. உன்னை தெய்வமா நெனச்சிக் கேக்கறேன்.”
“ச்சீ பே… நாயே… உன்னை எப்டி மதிச்சேன். என் உயிரா நெனச்சேன். என் தாய் மாமன் கட்டிக்கச் சொல்லி கேக்கறப்போ, குடும்பத்தையே பிரிச்சேன். பன்னி, உன் புத்திய காமிச்சிட்டியே… இதான் உன் சாதி புத்தியா? உங்க சாதில என்ன கட்டிக்க மாட்டீங்களா? கெஞ்சறியே வெக்கமா இல்ல?”
“பன்னி, அது இதுன்னு கேவலமா பேசாத சுமதி. நிலைமை…”
“சண்முகம், தப்பா பேசிட்டேன். மன்னிச்சிருய்யா… கோவத்துல பேசிட்டேன். நீ இல்லன்ற கோவத்துல பேசிட்டேன். இதெல்லாம் வேற பிரச்னை. பணப்பிரச்னை எல்லாம் வேற பிரச்னை. வாழ்க்கைப் பிரச்னை வேற. நாம சேந்தே இருக்கலாம்யா… யோசிய்யா!”
“இல்ல சுமதி. கோவம்லாம் வேணாம். உனக்கு நல்ல புருஷன் கிடைப்பான்.”
“வெளில போடா”
“மனசை மாத்திக்கோ”
“வெளில போடா நாயே”
“ஏதும் பிரச்னை பண்ண மாட்டியே?”
“த்தூ… நான் செத்துட்டேன்னு நினைச்சிக்கோ… வெளக்குமாத்தால அடிக்குறதுக்குள்ள வெளில போ”
“தோ பாரு சுமதி… வெளில ஏதும் தெரிஞ்சிக்க வேணாம். கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும், யாருக்கும் சொல்லிக்க வேணாம். ஒருத்தருக்கு சொன்னாலும் விஷயம் வெளில பரவிடும். நாம நல்லபடியா பழகின மாதிரி நல்ல படியா பிரிஞ்சிடுவோம். எதையும் மனசுல வச்சிக்காத… உனக்கும் நல்ல வாழ்க்கை அமையும். எப்பவும் உன்னை நினைச்சிட்டே இருப்பேன்.”
தலையில் அடித்துக்கொள்கிறாள் சுமதி.
கதவைத் திறந்து விட்டு சரேலென வெளியேறிய சண்முகம் தெருவில் நிதானித்து மெதுவாக லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு வலது புறம் சென்று கொஞ்ச நேரத்தில் இடது புறம் மொத்தமாகத் திரும்பி நடை போடுகிறான்.
ஒரு ஐஸ் வண்டி கடக்கிறது. ஒரு பால் ஐஸ் வாங்கிக்கொண்ட சண்முகம் அதை சீப்பிக்கொண்டே கண்களை இடது பக்கம் ஒதுக்கிப் பார்த்துக்கொண்டே சுமதியின் வீட்டைக் கடக்கிறான்.
மிதி வண்டியை நெருங்கிய சண்முகம் செல்போன் எடுத்து மாமன் மகளுக்கு போன் அடிக்கிறான்.
“பொடவை எடுக்கப்போறேன். உனக்கு என்ன கலர் புடிக்கும்?“
லேஸ் சிப்ஸ் பாக்கெட்டை காலால் மிதித்து சிதறடிக்கிறாள் சுமதி.
மிர்ஷா!
“In Chennai… Landed Today Morning”
மெசேஜ் அனுப்பி விட்டு உடனடியாக மொபைலைத் தூக்கி டவல் மேல் எறிந்தான் அதீத்.
இடது கையால் ஆட்காட்டி விரலை மட்டும் சற்று தூரத்தில் இருக்கும் கவுன்ட்டரை நோக்கி ஆட்டிவிட்டு அவர்கள் பார்த்தார்களா இல்லையா என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் நீச்சல் குளத்திற்குள் மெல்ல இறங்கினான். நிறுத்தாமல் நான்கு ரவுண்ட் நீந்தி விட்டு தலையைத் தூக்கும் இடத்தில் பேரர் ஒரு பியர் கேனுடன் நின்று கொண்டிருந்தார்.
அதை எடுத்து சிப்பிக்கொண்டே… மிர்ஷா என்று முணுமுணுத்தான்.
மிர்ஷாவின் 3 மெசேஜ்கள் டவல் மேல் கிடந்த அவனின் மொபைலில் சேகரம் ஆகியிருந்தன.
“ஏய்… நாளைக்குத்தானே வரேன்னு சொன்ன?”
“எங்க இருக்க?”
“மீட் பண்ணலாமா?”
“Love u ba…” இந்த மெசேஜ் பாதி அடிக்கப்பட்டு முடிக்காமல் மிர்ஷாவின் மொபைலிலேயே இருந்தது.
“யெஸ்… ஆனா, திடீர்னு அதீத் வந்துட்டான். என்ன ப்ரோகிராம்னு தெரியலை. பேசிட்டு கன்ஃபார்ம் பண்றேன்…” மிர்ஷா யாரிடமோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததால் அவளின் டெக்ஸ்ட் காதல் இன்னும் அதீத்தின் மொபைலை அடையாமல் பாதியில் தள்ளாடிக்கொண்டிருந்தது.
பேசி முடித்துவிட்டு அதீத்திடம் இருந்து பதில் வந்திருக்கிறதா என்று பார்த்தாள். ”Delivered… Not Read.” தன் முற்றுப்பெறாத டெக்ஸ்ட் காதலை அழித்தாள்.
அவள் அழிக்கும் சமயத்தில் மொபைலைப் பார்த்தபடியே அதீத் தன்னுடைய அறைக்குச் சென்று கொண்டிருந்தான். அறைக்குள் சென்றதும் மிர்ஷாவை அழைத்தான்.
“மிர்ஷா… நாளைக்குதான் மீட்டிங். இன்னைக்கே வந்து கொஞ்சம் செட்டில் ஆகிட்டா நாளைக்கு போர்ட் மீட்டிங்ல ரிலாக்ஸா பேசலாம்னுதான்!”
“எங்க பேபி இருக்க?”
ஒரு கடற்கரை ஓர ஐந்து நட்சத்திர விடுதியைச் சொல்லி “Sunday Brunch” என்றான்.
“Any Plans Today“
“Need Rest”
“நான் வரவா?”
“வாயேன்…”
“லன்ச்சுக்கு வரவா… டின்னருக்கா?”
“இப்ப பியர் அடிச்சிட்டுத் தூங்கப்போறேன். ஈவ்னிங்தான் எழுந்திருப்பேன். நோ லன்ச். அரவுண்ட் 6 வரியா?”
“ம்ம்… ஹேவ் எ டைட் ஸ்லீப்“
பியர் அடித்து, பஃபேவில் இருக்கும் வகைதொகையில்லாத பிரேக் ஃபாஸ்ட்டை கவ்விக் குதறி இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கினான் அதீத்.
ஷவரில் குளித்து முடித்து டவலுடன் வெளியே வந்து கண்ணாடி அருகே சென்று கண்களை விரித்துப் பார்த்தான். அப்பா Calling.
“டாட்… டாட்” என்று தீர்க்கமாகப் பேசிக்கொண்டிருக்கையில் அறையின் அழைப்பு மணி இசைத்தது. பேசிக்கொண்டே திறந்தான்.
மிர்ஷா சிக்கனமானப் புன்னகையுடன் அவன் பேசுவதை தொந்தரவு செய்யாமல் அவன் கன்னத்தில் சத்தமில்லாமல் முத்தமிட்டு, நகர்ந்து போய் கட்டிலில் அமர்ந்தாள்.
ஸ்கர்ட் அணிந்து ஹை ஹீல்ஸ் போட்டிருந்தாள். ஒரு காலை இன்னொரு கால் மீது போட்டதால், அந்த இன்னொரு கால் ஹை ஹீல் படுக்கை விளிம்பில் பட்டு சின்ன பழுப்பு புள்ளி வைத்தது.
பேசிக்கொண்டிருக்கையிலேயே, மிர்ஷாவின் கால்களைப் பார்த்ததால் பேச்சை சீக்கிரமாக முடித்தான் அதீத். மொபைலை தூக்கிப்போட்டு விட்டு அவள் அருகில் வந்து சிரித்துக்கொண்டே அணைத்துக்கொண்டான். காதருகே “லவ் யூ மிருக்குட்டி” என்றான். அதீத் அவன் கையை அலைய விட ஆரம்பிக்கும் போது அவனை தள்ளி விட்டு நகர்ந்தாள் மிர்ஷா. ஸ்கர்ட்டை சரி செய்து கொண்டாள். மீண்டும் படர்ந்த அதீத்தை நகர்த்தி விட்டு…
“அப்புறமா” என்றாள்.
“இப்ப என்ன பிரச்னை?”
“இவ்ளோ அவசரமா ஏன்… இப்பதானே வந்திருக்க?”
“அவ்ளோ லவ் மிரு”
“இதான் லவ்வா… நேர்ல பார்த்தா மட்டும்… ஒரு வாரமா ரெஸ்பான்ஸே இல்லை” சிரித்துக்கொண்டே புன்னகையை வழிய விட்டாள். அது ஒரு அசௌகர்யமான புன்னகை.
“கமான்… வந்ததுமே சண்டையா?“
மீண்டும் நெருங்கி அவனைக் கட்டிக்கொண்டு…
“சண்டைல்லாம் இல்ல பேபி… கொஞ்ச நாள் கழிச்சி பார்க்கிறோமா? அதான் கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம். வெளில போலாம்.”
“வெளில வேணாம். டயர்டா இருக்கு. பீச் வியூ பார் போகலாம்.”
பீச் வியூ பாரில் யாரும் இல்லை. அது ஒரு பார் போலவும் இல்லை. அமைதியாக கடலைப் பார்த்துக்கொண்டே உட்காரலாம்.
அதீத் பியரில் இருக்க, மிர்ஷா லாங் ஐலேண்ட் காக்டெய்லில் லயித்தாள்.
கொஞ்ச நேரம் போனதும் “பீச்சில் நடக்கலாமா?” என்றாள்.
“போலாம் வெயிட் பண்ணு” என்றான். இன்னொரு பியருக்குள் நுழைந்தான்.
திடீரென “கொஞ்சம் ஃபாரின் மார்க்கெட் எக்ஸ்ப்ளோர் பண்ணலாம்னு இருக்கேன்” என்றான்.
“நானும் அதைத்தானே சொல்லிட்டிருக்கேன். இங்க கொஞ்ச நாளுக்கு டிரை மார்க்கெட்!”
“மிர்ஷா, ஒண்ணு கவனிச்சியா… நமக்குள்ள அட்ராக்ஷன் கம்மி ஆயிட்டே வருது…”
”இஸ் இட்… நான் நோட்டீஸ் பண்ணலையே… உனக்கு குறையுதா?”
“உனக்குத்தான் மிர்ஷா… உன்னை குறை சொல்லல… நேச்சுரலா குறைஞ்சா அக்செப்ட் பண்ணித்தான் ஆகணும்.”
“ஏய் அதீ… கொஞ்ச நாள் கழிச்சி பார்க்குறோம். ஜாலியா குடிக்கும் போது…”
“அதான் ஜாலியாவே பேசிக்கலாம்னு…”
“சரி… வாட் இஸ் தி இஷ்யூ?”
“நீ உன்னையே ரொம்ப கவனிச்சிக்கிற மாதிரி இருக்கு. அதாவது ரொம்ப செல்ஃப் சென்ட்ரிக்கா…”
“நாம ரெண்டு பேரும் அப்டித்தானே அதீ… அவங்கவங்கள அவங்களே கவனிச்சிப்போம்…”
“அது ஓகேதான்… பட் எனக்கு நீ கொஞ்சம் கூட இம்பார்ட்டன்ஸ் கொடுக்குறது இல்ல.”
“ஹேய்… நமக்கு முன்னமே தெரியும். வீ ஆர் பவர் கப்பிள்ஸ். அதனாலதான் ரெண்டு பேருக்கும் புடிச்சது, லவ் பண்ணோம். இப்ப என்ன திடீர்னு?”
“என்மேல கொஞ்சம் கேர் எடுத்துக்கணும் இல்ல?”
“ஏய் என்னடா… தோசை ஊத்திக் கொடுக்கணுமா? இல்ல உன் பேங்க் அக்கவுன்ட்ஸ் எல்லாம் மெயின்டெய்ன் பண்ணனுமா?”
“பாரு, ஒரு லவ்வபிளாவா பேசுற? எதோ எனிமி மாதிரி…”
“ஹே… நான்தானே போன் பண்ணி, உன்னைத் தேடி வந்தேன். நீ வந்ததைக் கூட சொல்லலை”
“இல்ல உன்னோட கான்சென்ட்ரேஷன் எல்லாம் வேற எங்கயோ போன மாதிரி…”
“என் கான்சென்ட்ரேஷன் வேற எங்கேயும் போகலை. உன் மேல லவ்வும் குறையலை.”
“நாம இவ்ளோ பேசிக்கிறதே சரியில்லைதானே… எதோ சம்திங் இஸ் ராங் இல்லையா… இல்லன்னா நான் ஏன் இப்டி ஃபீல் பண்ணப் போறேன்?”
“பேசிக்கிறதே தப்பா… சரி இப்ப என்னடா, என்ன பண்ணனும்… ஹலோ பேரர்… ரிப்பீட் ப்ளீஸ்“
“இட் இஸ் எ டைம் டு…”
“டைம் டு…”
“நாம நம்ம ரிலேஷன்ஷிப்பை ஒரு ஸ்டெப் இறக்கிக்கலாம்னு…”
“நீயே முடிவு பண்ணி சொல்லுவியா?”
“இல்ல… ஜஸ்ட் நான் ஸ்டார்ட் பண்றேன். ஒரு கான்வர்சேஷன்தான்.”
“சரி ஓப்பனா சொல்லு, என்ன பிரச்னைடா?”
“எக்ஸாக்ட்டா எதுவும் இல்ல… பட் நாம லைஃப் லாங்க் பார்ட்னர் இல்லைன்னு புரியுது!”
“வேற எந்தப் பொண்ணு கிட்டயாவது சேஃபா ஃபீல் பண்ணியா?”
“ஏய் அதெல்லாம் இருந்தா சொல்லியிருக்க மாட்டனா?”
“சரி டிரிங்க் வந்திருக்கு!“
“நாம் ரிலேஷன்ஷிப் இருந்த வரைக்கும் வீ போத் எஞ்சாய்ட்…” என்று ஆரம்பித்தான்.
“இப்ப தானடா பேச ஆரம்பிச்சோம். அதுக்குள்ள முடிவே பண்ணிட்டியா… என்ன ஆச்சி உனக்கு?”
“ப்ளீஸ் புரிஞ்சிக்கோ… எனக்கு தனியா இருக்கணும்னு தோணுது. Relationship Is Bit Burden!”
“நான் பேர்டனா?”
“நீ இல்ல மிரு… ரிலேஷன்ஷிப்!”
“அப்பா எதாவது பொண்ணு பாத்திருக்காரா?”
“ஹேய்… ஏன் இவ்ளோ சீப்பா யோசிக்கிற?”
“சரி ஓகேடா… Lets forget our Releationship… இப்ப ஃப்ரீயா?”
“தேங்க்யூ மிரு!”
எழுந்து வந்து அணைத்துக்கொண்டான். “தேங்க்ஸ் ஃபார் தி அண்டர்ஸ்டேண்டிங் ஹனி” என்றான்.
”லவ் யூ அதீ” என்றாள் மிர்ஷா.
( நன்றி – ஆசிரியர் அராத்து …)
…………………………………………………………………………………………………………………………………………………..



நாம் ஒத்துக்கொள்கிறோமோ இல்லையோ, நமக்குப் பிடிச்சிருக்கோ இல்லையோ… எந்த ரிலேஷன்ஷிப்பிலும், ஆண்கள்தாம் Safe. என்ன நடந்தாலும் துடைச்சிக்கிட்டு புது வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும், தன் கண்டிஷன்களுக்கு ஏற்றவாறு. பெண்கள் எப்போதும் affected party. இதை இளமை முறுக்கில் யாரும் புரிந்துகொள்வதில்லை. ஆணும் பெண்ணும் சமம் என்பது வேலை, படிப்பு அறிவு, குடும்பம் நடத்துவது போன்றதில்தான். ஆனால் ரிலேஷன்ஷிப், லவ் போன்ற உறவுகளில் பெண்தான் எப்போதும் பாதிக்கப்படப்போகிறவள். அது எந்த ஜெனெரேஷன் ஆனால் என்ன?
நடப்பதை கதையாக்கியிருக்கிறார் அராத்து. ஆனால் அராத்துவின் கதைகளில் செக்ஸ் மற்றும் நேரடியான வார்த்தைகள் (இலைமறைவு காய்மறைவாக அல்லது இடக்கரடக்கலாக) இருப்பதால் கொஞ்சம் இசகுபிசகாக இருக்கும்.