…………………………………

…………………………………
திருமணமாகி எட்டு ஆண்டுகள் கண்ணீரோடு காத்திருந்ததன் பலனாகப் பிறந்த மகளென்பதால் அப்பா – அம்மாவுக்கு படு செல்லம். சேலத்தில் தன் பெரிய வீட்டில் குறை தெரியாமல் வளர்ந்த செல்லக்கிளி. கல்லூரியில் முதுகலைப்படிப்பு படித்திருந்தாலும் வீட்டு நிர்வாகத்தில்தான் ஆர்வம் அதிகம் அவளுக்கு.
தன் மகளை சென்னையில் ஒரு வங்கியில் மேலதிகரியாகப் பணிபுரிபவருக்கு வெகு சிறப்பாகத் திருமணம் செய்துவைத்தனர்.
`நல்லா சமைக்கறேன்… வீட்டை நல்லா வச்சுக்கிறேன்னு சொன்னாங்கப்பா. நீங்க உடம்பை பாத்துகோங்க. அம்மாவைக் கேட்டதா சொல்லிடுங்க. அடுத்த முறை அம்மா கிட்டே பேசறேன். நானே கூப்பிடறேன்பா. நீங்க கூப்பிட வேண்டாம். யாரோ வர சத்தம் கேட்குது. போனை வச்சிடறேம்பா…’ – இப்படித் தான் திருமணம் முடிந்து சென்னையில் இருந்து முதல் பத்து நாள்களுக்குள் அவசரகதி அலை பேசி அழைப்புகள் வந்தன மகளிடமிருந்து.
‘இப்போ உங்க வீட்டுக்குப் பேசலேன்னா சோறு இறங்காதா உனக்கு. இங்க நடக்கறத அங்க சொல்ற வேலையெல்லாம் வச்சுக்காதே…’ – கைபேசியை அணைத்ததும் மாமியாரின் வார்த்தைகள் ஊசி போலத் தைக்கும். அதனா லேயே கடைக்குப்போகும்போது ஓரமாக நின்று ஓரிரு வார்த்தைகள் பேசுவாள்.
“ஏங்க… நான் எங்க வீட்டுக்கு போன் பண்ணாலே உங்கம்மாவுக்குப் பிடிக்க மாட்டேங்குது.”
“போன் பண்றதுக்கு முன்னாடி அம்மாவை ஒரு வார்த்தை நீ கேட்டிருக்கணும். இல்லாட்டி கோபம் தானே வரும்.”
“சரிங்க… தப்புதான். அதைகூட ஏத்துக் கறேன். ராத்திரி நம்ம ரூம் கதவை ஏங்க தாழ் போடாம தூங்கச் சொல்றீங்க நீங்க? கொஞ்சம் அருவருப்பா இருக்கு எனக்கு..’’
‘`அப்பா இல்லாத என்னை தனியா வளர்த்து படிக்க வச்சு ஆளாக்கினாங்க.
நீ… நான் வந்ததும் முகத்துல அடிச்சா மாதிரி சட்டுனு கதவை அடைச்சுத் தூங்கினா… அவங்க மட்டும் கூடத்துல யாருமே இல்லாம இருக்கறதா நினைக்க மாட்டாங்களா? எல்லா நாளுமா சேரப் போறோம். மற்ற நாள்கள்ல நீ அம்மா கூடவே தூங்கினாலும் எனக்கு சம்மதம்தான். எங்க அம்மா மனசு நோகாம இருக்கற துன்னா இரு… ” கணவனிடமிருந்து இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்க வில்லை அவள்.
பகல் பொழுதுகள் முழுவதும் கண் சிமிட்ட நேரமின்றி வேலை. உள்ளூரிலேயே இருக்கும் இரண்டு நாத்தனார்களில் யாரோ ஒருவர் வாரம் ஒருமுறை எட்டிப்பார்த்து விட்டுப் போகும்போதெல்லாம் கூடுதல் சமையல்… கூடுதல் வேலை. நித்தமும் பெருக்கி, மெழுகி, பாத்திரம் தேய்த்து, துவைத்து முடித்து மதிய உணவுக்குப்பின் கிணற்றடியை சுற்றிப் படர்ந்த பாசியை ப்ளீச்சிங் பவுடர் தேய்த்துக் கழுவுவதும், கொல்லைப்புறத்தைக் கூட்டி குப்பையை எரிப்பதுமாக மற்ற நேரமும் நரகமாகிப்போகும். நைட்டி போட தடை என்பதால் புடவை கட்டிக் கொண்டு வியர்க்க வியர்க்க வேலை செய்வது கூடுதல் பளு. இரவு எவ்வளவு தாமதமானாலும் கணவனும் மாமியாரும் சாப்பிட்ட பிறகுதான் சாப்பிட வேண்டும்.
வங்கியில் பொறுப்பு அதிகமென்பதால் இரவு தாமதாக வரும் கணவனிடம் எந்த மனத்தாங்கலையும் சொல்வதில் பயனில்லை என்று மெள்ள மெள்ள புரிந்து கொண்டாள். பசியையும் பழக்கிக்கொண்டாள். ஆசையாக வளர்த்துப் படிக்கவைத்த அப்பா – அம்மா வுக்கு எதுவுமே செய்யாமல் இங்கே வந்து எதற்காக அவதிப்படுகிறோம் என்ற எண்ணம் தொண்டையை அடைக்கும். ஊருக்குப் போக வேண்டுமாக மனது ஏங்கும்.
படித்து வாங்கிய சான்றிதழ்களை எப்போ தாவது எடுத்துப் பார்க்கும்போது படித்த முட்டாள் எனத் தன்னையே சபித்துக் கொள் வாள். அந்யோன்யமில்லா கணவனுடனும் அனுசரணையில்லா மாமியாருடனுமான அந்த வாழ்க்கை அர்த்தமற்றதாகத் தோன்றும்.
வீட்டுவிலக்கின்போதுகூட மூன்று நாள்களுக்குள் இடுப்பொடிக்கும் வேலை களிலிருந்து சற்று ஓய்வு என்பதுதான் ஒரே ஆறுதல். அந்த மூன்று நாள்கள் ஓய்வுக்காகவே இப்போதைக்கு குழந்தை கூடாது என முடிவு செய் தாள்.
கணவன், தன் தேவைக்காக நெருங்கும்போதெல்லாம் தானாக விலகிக் கொண்டாள்.படுக்கையறைக்குள் ஒரு நள்ளிரவு இது பூகம்பமாக வெடித்து… தூங்கிக் கொண்டிருந்த மாமியாரின் காது வரை எட்ட, “அடங்காப் பிடாரியை என் பையன் தலையில கட்டிட்டாரு உங்கப்பா. விடிஞ்சதும் போன் போட்டு வந்து கூட்டிட்டு போகச் சொல்லுடா அந்த மனுஷனை” எனக் கத்தி தீர்த்தாள்.
“எங்கப்பாவை ஏன் இழுக்கறீங்க?” எனக் கேட்டது தான் தாமதம்… கன்னத்தில் கணவனின் கை பதிந்தது.
“அம்மாகிட்டேயே குரல் உசத்திப்பேசற அளவுக்கு என்ன தைரியம் உனக்கு?”
“விடுடா… அவளை ஏன் அடிக்கறே? நானே வேற ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கறேன். வேலைக்குப்போய் அலுத்து வர்றவன்கிட்ட ஆசையா இருக்க முடியாதவ… இந்த வீட்டுல இருக்கக் கூடாது.”
இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. அந்த நடுராத்திரியே அப்பாவிடம் பேச வேண்டுமாக, அவர் குரலைக் கேட்க வேண்டுமாக, மனக்குமுறல் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்து விட வேண்டுமாகத் தோன்றியது. ‘இதெல்லாம் கேட்டா தாங்கவே மாட்டார்’ என்ற எண்ணம் சட்டெனத் தடுக்கவே அடக்கிக் கொண்டாள்.
ஆறு மணி அலாரம் அடித்ததில் எழுந்தவனுக்கு முதல் நாள் இரவுச் சண்டையின் சொச்சங்கள் தலைவலியாக வெளிப்பட்டது. காபி குடிப்பதற் காக வெளியே வந்தபோது அம்மா தூங்கிக்கொண்டிருந்தாள். அடுக்களை விளக்கு எரியவில்லை. அடுக்களை யிலிருந்து கொல்லைப்புறம் போகும் கதவு மட்டும் லேசாகத் திறந்தபடி இருந்தது.
‘`காபி போடாம கொல்லையில என்ன செய்யறே…’’ கேட்டுக்கொண்டே போன வனுக்கு பதில் ஏதும் வரவில்லை. கொல்லைப் புறத்திலும் அவளில்லை.
“அவளைக் காணோம்மா…” பதற்றமாக கத்தியபடியே அம்மாவை எழுப்பினான்.
“வாசல் கதவு திறக்கவே இல்லையே. எங்கே போயிருக்கப் போறா?”
“கொல்லைக்கதவு மட்டும் லேசா திறந்திருக் கும்மா…” சுருக்கென்றது அந்த அம்மாவுக்கு.
விருட்டென எழுந்து கொல்லைப்புறத்தை நோக்கி ஓடிய அம்மாவின் பின்னால் அவனும் ஓடினான். என்ன தோன்றியதோ… சட்டென கிணற்றை எட்டிப் பார்த்ததும் பயத்தில், ‘என்னடா உன் பொண்டாட்டி இப்படி பண்ணிட்டா…’ எனக் கதறினாள். இவர்கள் போட்ட சத்தத்தில் அக்கம்பக்கத்து வீட்டு ஆட்கள் ஓடிவந்து அரைமயக்கத்தில் முனகியபடி குறுக்கு வாட்டில் கிணற்றுக்குள் பாதி உடம்பு தண்ணியிலும் இருகைகளால் கயிற்றைப் பிடித்தபடி மீதி உடம்பு வெளியே தெரிந்தபடி இருந்தவளை வெளியே எடுத்து ஆம்புலன்ஸில் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்து அவள் அப்பாவிடம் தகவலைத் தெரிவித்தனர்.
‘அய்யோ என் குழந்தையை என்ன பண்ணீங்க’ என கேட்டபடியே அழுது கதறி அடுத்த வண்டி பிடித்து சென்னைக்கு ஓடி வந்தார்.
யார் செய்த புண்ணியமோ உயிருக்கு ஏதும் ஆபத்தில்லை. ஆனால், தண்டு வடத்தில் பலமாக அடி விழுந்ததில் இனி நடக்க முடியாது. சக்கர நாற்காலியில்தான் சொச்ச வாழ்க்கை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
“அப்பா என்ன ஊருக்கு கூட்டிட்டுப் போயிடுங்கப்பா… இங்க விட்டுட்டுப் போயிடாதீங்கப்பா” என கதறிய தன் பெண்ணை விட்டுச் செல்ல எந்த அப்பாவுக்குத்தான் மனது வரும்?
சுமார் எட்டு மாதங்கள் எந்தத் தொடர்புமின்றி அப்பா வீட்டோடு இருந்தவளை பார்க்க அறிவிப்பேயின்றி கணவன் வந்ததும் ‘வாங்க’ என்று கூட சொல்லாமல் ‘அப்பா’ எனக் குரல் கொடுத்தாள்.
மகளின் வேதனையிலேயே மாரடைப்பில் மனைவியைப் பறி கொடுத்தவருக்கு மாப்பிள்ளையின் வருகை எரிச்சலுட்டியது.வாசலோடு நிறுத்தி… “சொல்லுங்க” என்றார்.
வந்தவர், தன் அம்மா இறந்த தகவலைச் சொல்லி… தன் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்டபோது… “என் பொண்ணு இனிமே உங்களுக்கு பிரயோசனப்பட மாட்டாங்க. நீங்க போகலாம்” – முகத்தில் அடித்தபடி சொன்னார்.
“இல்ல மாமா… அவளை நான் நல்லா பாத்துக்கறேன். எங்ககூட நீங்களும் வந்து இருங்க. அவளுக்கு ஆறுதலா இருக்கும்” என இரு கைகளைப்பிடித்து அழுதவரிடம்… மேலும் பேச அவர் தயாராயில்லை.
“சண்டை போட எங்களுக்கு மனசுல வலுவில்ல. போயிடுங்க” என கதவை மூடினார்.
திருமணமான ஒரே வருடத்தில் ஏதேதோ நடந்து இதோ ஆண்டுகள் நான்கு ஆகிவிட்டன. அப்பாவோடு சேலத்தில்தான் இருக்கிறாள். விவாகரத்துக்கு விண்ணப்பத்திருக்கிறாள். வீட்டிலேயே நடத்தும் ட்யூஷன் சென்டர்தான் அவளின் மூடிய வாழ்வின் ஒரே நம்பிக்கை சாளரம்.
தன் மனைவியின் எண்ணத்தைப் புரிந்து கொள்ள மனம்விட்டுப் பேசாமல், தன் முன் கோபத்தால் அவளை அடிமை போல நடத்தியதில் என்ன கிடைத்தது? இருவரின் வாழ்வும் புயல் கடந்த சோலையாக ஆனதுதான் மிச்சம்.
தொடக்கத்திலேயே இன்னும் கொஞ்சம் பொறுமையோடு கணவனிடம் எடுத்துச் சொல்லியிருந்தாலோ அல்லது மனம்விட்டு அப்பா – அம்மாவிடம் பேசியிருந்தாலோ, தவறான அவசர முடிவில் இருந்தும் அதன் நீட்சியான நிரந்தர துயரத்தில் இருந்தும் அவளும் தப்பித்திருக்கலாம்தானே?
கண்கெட்டபின்பான ஞானத்தால் யாருக்கு என்ன பயன்?
(நன்றி – சியாமளா ரமேஷ் பாபு ….)
……………………………………………………………………………………………………………………………..



இது நடந்த நிகழ்வா இல்லை புனையப்பட்ட கதையா?
நடந்த நிகழ்வு என்றால், அந்தப் பெண்ணின் தவறு மனதை உறுத்துகிறது. தைரியமாக வெளியில் வந்து பிரச்சனையைப் பேசியிருக்கலாம்.
அம்மாவுக்கு பயந்த பசங்களை, அதிலும் ஒரு பையன் உள்ள வீட்டில் பெண் கொடுக்காமல் இருப்பது நல்லது. பையன் அம்மாவின் மீதுள்ள பாசம், கடமை இவற்றால் பெண்டாட்டியை அடக்குவதும் கொடுமைப்படுத்துவதும் பொதுவாக நிகழும். பையனின் அம்மாவிற்கும், எங்கே வந்தவள், தன் பையனை தன் ஆளுமையில் வைத்துக்கொண்டுவிடுவாளோ என்ற பயம் இருக்கும். அதிலும் அம்மாவிற்கு கணவன் இல்லையென்றால், அந்தக் குடும்பத்தைத் தவிர்ப்பது பெண்ணைப் பெற்றவர்களுக்கு நல்லது. (இதுபோலவே ஒற்றைப் பெண் இருக்கும் வீட்டைப்பற்றியும் ரொம்பவே விசாரிக்கவேண்டும்)
//தன் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்டபோது…// இதுக்கு அவன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம். கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரத்தால் என்ன பயன்?