………………………………………………

………………………………………………
வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘விடுதலை’ இரண்டாம் பாகம் டிசம்பர்-20ம் தேதி திரைக்கு வந்துள்ளது.
இதில், விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போராளியாக வாழ்ந்த கலியபெருமாள் என்பவரின் வாழ்க்கையைப் பிரதியெடுத்த மாதிரியான பாத்திரம் தான் விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியார்.
அப்படி, உண்மையாகவே வாழ்ந்த கலியபெருமாள் அவர்களிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் இதோ.
*************
இரைச்சலுடன் பஸ் நகர்ந்ததால் சிறு தோகை மாதிரி விசிறியடிக்கும் தூசி. கூரையிடுக்கில் நழுவுகிற வெயில். பக்கத்தில் கூடையில், சாக்கு விரிப்பில் குவிந்திருக்கிற காய்கறிகள்.
‘வியாபாரி’யாகத் தோற்றமளிக்கிற அந்த வயதானவர் 30 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் பரபரப்புடன் சம்பந்தப்பட்ட ஒரு நக்ஸலைட் தலைவர் எனும் போது ஆச்சர்யம்.
எழுபத்தைந்து வயதாகிறது. அப்போதுதான் மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யப்பட்ட தனது கண்ணைச் சோதித்துவிட்டுத் தனியாகவே திரும்பியிருந்தார்.
முகத்தில் அனுபவத்தின் சுருக்கங்கள். கண்ணில் சற்றுப் பார்வைக் குறைவு இருந்தாலும் – பேசுகையில் இளைஞனுக்குரிய உற்சாகம் அப்படி நாம் சந்தித்த நபர் – கலிய பெருமாள். சந்தித்த இடம் – கடலூர் மாவட்டத்திலுள்ள பெண்ணாடம்.
“புலவர்னு தான் பல பேர் என்னைக் கூப்பிடுவாங்க. மயிலத்திலும், திருவையாற்றிலும் நான் புலவர் படிப்புப் படிக்கும்போது உடம்புக்குச் சுகமில்லை.
விடுதியின் சமையலறைக்குப் போய் வெந்நீர் எடுத்துக் குடித்தேன். உடனே உயர் ஜாதிக்காரர்கள் அதைப் பிரச்சினை ஆக்கி விட்டார்கள். எனக்குள்ளிருந்த உணர்வு பீறிட ஆரம்பித்துவிட்டது. போராட்ட உணர்வு உருவாயிடுச்சு” – கட்டிலில் உட்கார்ந்தபடி லேசான அரையிருட்டுப் பரவின சிறு வீட்டில் இருந்தபடி சொல்கிறார். (பக்கத்தில் அவரது மனைவி வாலாம்பாள். திருமணமான மூன்று மகள்கள். இரண்டு மகன்கள் இது குடும்ப நிலவரம்.)
“எப்பவுமே என் குடும்பப் பிரச்சினையை விட மற்றவங்க பிரச்சினையைக் கவனிச்சுக்கிட்டுத் திரிஞ்சேன்.
அப்போ கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தடை பண்ணியிருந்தாங்க.
அந்தச் சமயத்திலே ‘மதுரையார்’னு ஒரு கம்யூனிஸ்ட் பழக்கமானார். அவர்தான் எனக்கு ஆசான். அப்புறம் என் வாழ்க்கையே மாறிப் போயிடுச்சு.
அதே நேரத்தில் ஆந்திராவில் நக்ஸல் பாரிப் போராட்டம் ஆரம்பிச்சிடுச்சு அதில் எனக்கு ஆர்வம் வந்தது. நக்ஸல் பாரி இயக்கத் தலைவரான சாரு மஜூம்தாருக்கு நெருக்கமானவரான அப்பு (தமிழகத் தலைவராக இருந்தவர்) கோவையிலிருந்து வந்து என்னைச் சந்திச்சார்.
நிலச் சுவான்தாரர்களுக்கு எதிரானப் போராட்டத்தில் இறங்க முடிவு பண்ணினோம்.
அப்போ தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது. தலைமறைவு வாழ்க்கையை ஆரம்பித்தோம். ஆந்திராவில் சில கொடுமையான நிலச்சுவான்தாரர்களை ‘அழித்தொழிக்கிற’ போராட்டத்தில் இறங்கியிருந்தார்கள்.
தமிழகத்திலும் கொரில்லாக் குழுக்களை உருவாக்கி எதிரிகளை அழிக்க முடிவு செய்தோம். அப்படிச் செயல்பட்டு (இந்தியா முழுக்க 77ல் முழு விடுதலை கிடைக்கணும்) என்று திட்டமிட்டோம். அது சரியான திட்டமல்ல என்பதைப் பல வருஷங்கள் கழித்துதான் உணர்ந்தோம்.
அப்போது தான் தமிழரசனை எனக்கு அறிமுகப்படுத்தினார் அப்பு. செயல்பாட்டில் ரொம்பத் தீவிரமாயிருப்பவர் அவர்.
உடுமலைப்பேட்டையில் முதல் பலி ஆரம்பமானது. நிலச்சுவான்தாரர்கள், கந்துவட்டிக்காரர்கள், போலீசுக்குக் காட்டிக் கொடுக்கிறவர்கள் என்று பலர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள்.
தஞ்சை மாவட்டத்திலும் தர்மபுரி மாவட்டத்திலும் தான் அதிகம் இந்தக் காரியங்கள் நடந்தன. நடத்தி முடித்து விட்டு என்னிடம் நடந்ததைச் சொல்வார் தமிழரசன். போலீஸ் நெருக்கடி அதிகமானது.

1970, பிப்ரவரியில் அழித்தொழிப்பில் தீவிரத்துடன் ஒரு அறுவடை இயக்கத்தை நடத்தத் திட்டமிட்டோம்.
ஆந்திராவிலிருந்து ‘சர்ச்சில்’ என்பவர் வெடி மருந்துப் பொருள் கொண்டு வந்திருந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து சில மாணவர்கள் வந்திருந்தாங்க.
இதே பெண்ணாடம் கிராமத்தில், எங்க தோப்பில் உட்கார்ந்து வெடி மருந்தைக் கலக்கிக் கிட்டிருந்தாங்க. பக்கத்தில் நான் இருந்தேன். வெடி மருந்துக் கலவையில் – ஏதோ ஒன்றைச் சேர்த்தும் புகைந்து வெடிமருந்து வெடித்துவிட்டது. கலக்கிக் கொண்டிருந்த மூன்று பேர்களின் உடல்களும் சிதைந்துவிட்டன.
எனக்கும் பலத்த அடி. தூரப்போய் விழுந்தேன். குண்டு வெடித்து இரண்டு பேர் அதே இடத்தில் இறந்து போயிருந்தார்கள். சர்ச்சிலுக்கு முகம் சிதைந்துக் கொஞ்சம் உயிர் இருந்தது.
“நாம அவசரப்பட்டுட்டோம்”னு சிரமப்பட்டுச் சொன்னார். “மாவோ வாழ்க”னு சொன்னபடியே அவர் உயிர் பிரிஞ்சிடுச்சு. அந்தக் தோழர்களின் சிதைந்த சடலங்களை அந்தத் தோப்பிலேயே புதைத்தோம்.
உடனே – எனக்கு வைத்தியம் பண்ண ஆடுதுறை கிராமத்துக்குப் போயிட்டேன். போலீசுக்குத் தகவல் தெரிஞ்சு, என் மனைவி உட்பட சொந்தக்காரங்க ஆறு பேரை கைது பண்ணிட்டாங்க.
எங்க வீட்டைப் பூட்டி சீல் வைச்சுட்டாங்க. எங்க நிலத்தையெல்லாம் அழிச்சுட்டாங்க. அந்தச் சமயம் பார்த்து போலீசுக்குத் துப்புச் சொன்ன ‘ஆள்காட்டி’ ஒருத்தரை வெட்டிக் கொன்றார் தமிழரசன்.
இன்னும் போலீஸ் கெடுபிடி அதிகமானதும் நான் போலீஸ் கையில் சிக்கிக் கொண்டேன்” என்று பழைய ஞாபகங்களை சிலிர்த்திடச் சொல்லும் கலியபெருமாள், வழக்கு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டும் ஜனாதிபதியிடம் கருணை மனு தரவில்லையாம்.
“ஆனா, என் மனைவி நான் சொல்லியும் கேட்காமல் பலருக்குக் கருணை மனு அனுப்பிச்சாங்க. தமிழக அமைச்சரவை கூடி என் தண்டணையை ஆயுள் தண்டனையாக் குறைச்சாங்க. பன்னிரெண்டு வருஷங்கள் ஜெயிலில் இருந்துட்டு 83ல் வெளியில் வந்தேன்.”
”87-ல் தமிழரசன் மக்களாலேயே தாக்கப்பட்டு இறந்த சம்பவம் என்னை மிகவும் பாதிச்சுது. அப்புறம் கொஞ்சங்கொஞ்சமா ஒதுங்கிட்டேன். இப்போ கூட என் மேலே ஒரு வழக்கு இருக்கு.
இப்போ மனைவி கூட இந்த வீட்லேதான் இருக்கேன். காய்கறி வியாபாரம் பண்ணினேன். இப்போ இன்னொருவரை வெச்சுப் பண்றேன். ஒரு நாளைக்கு 25 ரூபாய் கிடைக்கும். வருமானத்துக்கு அவ்வளவு நெருக்கடி”
தலையைக் குனிந்தபடி சொன்னாலும் நம்பிக்கைத் தொனிகுரலில்.
“எவ்வளவோ நெருக்கடிகள், சங்கடங்களை அனுபவிச்சாச்சு. இருந்தாலும் நம்பிக்கை தளர்ந்து போகலைங்க. போராடுறவங்க யாராக இருந்தாலும் அவங்களுக்கு நடைமுறை யதார்த்தம் தெரியணும்.
பொருளாதார அடித்தளம் இருக்கணும். முக்கியமாக ஜனங்களோட ஒத்துழைப்பு இருக்கணும். அவங்களோட ஒத்துழைப்பில்லாம எந்தப் போராட்டமும் வெற்றி பெற முடியாது.
இத்தனை வருஷ அனுபவத்தில் நான் தெரிஞ்சுக்கிட்டது இதைத் தான்” – ஆபரேஷன் ஆகியிருந்த கண்கள் குறுகுறுக்கச் சொல்கிறபோது கனத்த துளிகளுடன் மழைப் பெய்து ஓய்ந்து அதன் ஈரம் நம்மைத் தொட்ட மாதிரி ஒரு உணர்வு.
வெடிகுண்டும் ஆயுதமுமே பலம் என்று நம்புகிறவர்களுக்கும் இந்த மாதிரி உணர்வு வருமா?
– மணா எழுதி, 2003-ல் வெளிவந்த ‘கனவின் பாதை‘ நூலிலிருந்து ஒரு கட்டுரை.
…………………………………………………………………………………………………………………………………..



புலவர் கலியபெருமாள் தன் வாழ்க்கையில் உருப்படியாக எதுவும் செய்தமாதிரி எனக்குத் தோன்றவில்லை. பயங்கரவாதிகளால் சமூகத்திற்கு ஒரு பயனும் கிடையாது.
//போராடுறவங்க யாராக இருந்தாலும் அவங்களுக்கு நடைமுறை யதார்த்தம் தெரியணும்.பொருளாதார அடித்தளம் இருக்கணும். முக்கியமாக ஜனங்களோட ஒத்துழைப்பு இருக்கணும்.// அதைவிட, அவங்க போராடுவது ஜனங்களின் நன்மைக்காக இருக்கவேண்டும். அவர்கள் வாழ்க்கையை இன்னும் சிக்கலில் ஆழ்த்துவதாக அமைந்துவிடக்கூடாது. சந்தனக் கடத்தல் வீரப்பன் செய்ததும் இதைத்தான். அவனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனேகம். அதனால்தான் அவன் பயங்கரவாதியாகவே அறியப்படுகிறான். அவனால் நன்மை அடைந்த இருவர், நக்கீரன் கோபால் (கோடி கோடியாகச் சம்பாதித்துவிட்டார்), சன் தொலைக்காட்சி (அதுவும் கோடிகளில் பணத்தைச் சம்பாதித்துவிட்டது)