……………………………………………………

……………………………………………………
எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு CROSSWORD BOOK AWARDS – 2024 விருதுகளில் Translations பாப்புலர் சாய்ஸ் விருது அவரது CONVERSATIONS WITH AURANGZEB நூலுக்காகக் கிடைத்திருக்கிறது. சந்தோஷமான இந்த வேளையில் சாருவைத் தொடர்பு கொண்டால், ‘எப்போது வேண்டுமானாலும் பேசலாம்’ என அழைப்பு விடுக்கிறார். தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமை… சில முன்மாதிரிகளை உண்டாக்கி முதல் அடி எடுத்து வைத்தவர்… தயங்காமல் கருத்து வைக்கும் கலகப் போராளி. உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்தியவர். இப்படி செழுமையான பின்னணி அவரிடம் உண்டு. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்டது இந்தத் தேநீர் உரையாடல்.
“தமிழ் எழுத்தாளர்களுக்கு இதுவரை கிடைக்காத கௌரவம். உங்களுக்கு விருது கிடைத்தது எவ்வகை உணர்வைத் தருகிறது?’’
‘‘எனக்குப் பெரிய பரவசம் எல்லாம் இல்லை. இந்த நாவலில் நபிகள் நண்பர்களிடம் ‘கல்லறையில் உறங்கும் மனிதர்களைப் போல வாழு’ என்பார். இதை நானும் யோசித்துப் பார்த்தேன். ‘புக்கர் பரிசு’ மாதிரி கிடைத்திருந்தால் சந்தோஷம் அடைந்திருப்பேனா எனவும் நினைத்தேன். அப்படியும் பரவசம் வராது. க்ராஸ்வேர்டு இங்கே இந்தியாவில் 250 இடங்களுக்கும் மேல் கிளைகள் வைத்திருக்கிறார்கள். படிக்கிறவங்களுக்கு நிச்சயம் இந்த நூல் போய்ச் சேரும். எழுத்தாளர் அமிதவ் கோஷுக்கு இதே க்ராஸ்வேர்டில் வாழ்நாள் சாதனையாளர் விருதும், இரண்டு கோடி ரூபாயும் சேர்த்துக் கொடுத்தார்கள். அவருக்கு என்னைவிட குறைந்த வயது. நான் எழுதியதில் ஆறில் ஒரு மடங்குதான் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதுவது அப்படி இங்கே கொண்டாடப்படுகிறது. அதனால் பெரிய மகிழ்ச்சி இல்லாமல் உள்ளார்ந்த சோகம் மட்டும் என்னிடம் இருக்கிறது. ஒரே சந்தோஷமான விஷயம் என்னவென்றால், long list-ல் பத்துப் புத்தகங்களில் ஒன்றாக வந்தது. நடுவர்கள் செய்த short list-லும் தேர்வானது. இறுதியாக மக்கள் ஓட்டு போடுமாறு விட்டுவிடுவார்கள். என்னுடன் இதில் போட்டி, ராகுல் காந்தியின் ஆதரவு பெற்ற பெருமாள் முருகன்தான். அவரை இந்தியா முழுக்கவும் தெரியும். என்னை இங்கு மட்டுமே தெரியும். அப்படியும் என்னை மக்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள். அதுதான் எனக்கு ஆகப்பெரிய ஆச்சரியம்.”
“இந்த நாவலின் முக்கியத்துவம் என்ன?’’
‘‘இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் வாழ்க்கை வரலாற்றைத்தான் நாவலாக எழுதிக்கொண்டிருந்தேன். அவர் காலத்தில் தஞ்சையை அரசாட்சி செய்தவர் சரபோஜி மகாராஜா. தியாகராஜரின் தந்தையார், சரபோஜி மகாராஜாவிடம் பணிபுரிந்தவர். சரபோஜியைப் படிக்கும்போது சிவாஜி வருகிறார். சிவாஜியைப் பற்றிப் படிக்கும்போது ஔரங்கசீப்பைப் படிப்பது தவிர்க்க முடியாதது. சிவாஜியின் வாழ்க்கை ஔரங்கசீப் இல்லாமல் முற்றுப் பெறாது. அப்படித்தான் ஔரங்கசீப்பைப் படிக்க ஆரம்பித்தேன்.
ஔரங்கசீப் 80 வயதுக்கு மேல் தன் மகன்களுக்கும் தளபதிகளுக்கும் எழுதிய நூற்றுக்கணக்கான கடிதங்களைப் படித்தேன். அவற்றில் ஔங்கரசீப் முற்றிலும் வேறு விதத்தில் தெரிகிறார். ஆச்சர்யமாகிவிட்டது. அவ்வளவு விறுவிறுப்பான பகுதிகள் மேலோங்கி இருந்த கடிதங்கள் என் மனதை ஆட்கொண்டுவிட்டன. உடனே தியாகராஜரை ஒத்திவைத்துவிட்டு ஔரங்கசீப்பை எழுத ஆரம்பித்தேன். மொகலாய மன்னர்களில் மற்றவர்களை விட ஔரங்கசீப் பாந்தமான அரசியலைச் செய்திருக்கிறார். ஷாஜகான் மாதிரி ஆடம்பரம் இல்லாதிருந்திருக்கிறார். அவரின் காலத்தில் இந்துக்களை இஸ்லாமியர்களாக மாற்றுவது குறைந்திருக்கிறது. வரி விதிப்பைக் கட்டுப்படுத்தியிருக்கிறார். அவரது சுவாரஸ்யமான வாழ்வின் பகுதிகளை வீறுகொண்டு எழுதியிருக்கிறேன். இதை க்ராஸ்வேர்டு அங்கீகரித்து பெரும்பாலானவர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது இன்றைய சூழலில் நல்லதுதான்.”
“இப்போது பெருமாள் முருகன், அழகிய பெரியவன் முதற்கொண்டு சினிமாவிற்குள் வந்துவிட்டார்கள். நீங்கள் ஏன் பின்வாங்கிவிட்டீர்கள்?’’
‘‘நான் சினிமாவைப் பற்றி விமர்சனமும் செய்கிறேன். அதனால் என்னிடம் யாரும் நெருங்கிக் கேட்க மாட்டார்கள். ‘யாரும் என்னை எழுத்தாளர் என்று எவரிடமும் அறிமுகம் செய்து வைக்காதீர்கள்’ என்று என் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். அறிமுகப்படுத்தினால், ‘நீங்கள் எந்தப் படத்திற்கு எழுதுறீங்க’ என்றுதான் கேட்கிறார்கள். இங்கே சினிமாவைத் தவிர வேறு எதுவுமே இல்லையா? எல்லாத்துக்கும் சினிமாவில் இருந்துதான் ஆள் வரணுமா? அரசியலுக்கு வந்தாலும் சினிமாவிலிருந்துதான் வரணுமா! நடிகர் விஜய் கூட இப்போது சினிமாப் புகழை வைத்துக்கொண்டு அரசியலுக்கு வருகிறார். உங்கள் கிட்டே பணம் இருக்கிறது. புகழ் இருக்கிறது. அதிகாரம் மட்டும் இல்லை. முதல்வர் ஆனால் அதிகாரம் கிடைக்கும் என்றுதானே வருகிறீர்கள்! இந்த சிஸ்டத்தை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்யப்போறீங்க! யார்தான் என்ன செய்ய முடியும்! வாழ்வு கொஞ்சம் மேன்மை அடையும் என்றால் இலக்கியம்தான் வழி. இலக்கியவாதிதான் இங்கே ஆசான். அவனைப் பட்டினி போட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏன், கலாசார வெறுமை இருப்பதற்கு சினிமாதான் காரணம். இங்கே எழுத்தாளன் சாப்பிட வேண்டும் என்றால் சினிமாவுக்கு எழுதணும். டைரக்டர் கிட்டே கையைக் கட்டினால்தான் எழுத முடியும். எவர் ஒருவருக்கும் முன்னால் நான் கைகட்டி நின்றவனில்லை. அதனால்தான் சினிமா பக்கம் எழுதுவதற்கு வருவதில்லை!”
“உங்களுக்கு எழுத்தாளனை இங்கே கொண்டாடவில்லை என்ற தீராத வருத்தம் இருக்கிறது…’’
‘‘தமிழில் ஒரு சிலர் தவிர எந்த எழுத்தாளரும் வசதியாக வாழவில்லை. புதுமைப்பித்தன் மாதிரியான எழுத்தாளர்கள் வறுமையில் செத்திருக்கிறார்கள். இங்கே எழுத்தாளனாகவும் வாழ முடியவில்லை, நாடோடியாகவும் வாழ முடியவில்லை. நாடோடியாக வாழக்கூட பணம் தேவைப்படுகிறதே! ‘உங்களிடம் கையைக் கட்டிக்கொண்டு மனிதனைப் பாட மாட்டேன்’ என மன்னர் சரபோஜியிடம் தீர்மானமாகச் சொல்லிவிட்டு உஞ்சவிருத்தி செய்து வாழ்கிறார் தியாகராஜர். இப்படித்தான் இங்கே எழுத்தாளர் வாழ்க்கை இருக்கிறது. நான்கு தினங்களுக்கு என்னை கேரளாவின் கண்ணூர்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் திருவிழாவைத் தொடங்கி வைக்கவும், தொடர்ந்து ஓர் இலக்கிய உரையாடலை நடத்தவும் அழைத்தார்கள். எழுத்தாளனைப் போற்றுகிற கலாசாரம் அங்கே இருக்கிறது. எழுத்தாளர் பஷீருக்கு விருது கொடுக்க முன்னாள் முதல்வர் நாயனார், பஷீரின் கிராமத்திற்கே பயணப்பட்டார். அதெல்லாம் இங்கே நடக்குமா? பல்கலைக்கழகத்தில் விழாவென்றால் அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் இடங்களை நிறைத்து விடுவார்கள். ஆங்கிலத்தில் 1,000 வார்த்தைகளில் கட்டுரை எழுதினால் 10,000 ரூபாய் தருகிறார்கள். இங்கே 1,000 வார்த்தை எழுதினால் 1,000 ரூபாய்தான் தருகிறார்கள். எழுத்தாளனை வாட விடுவது எந்த விதத்திலும் முறை கிடையாது.”
“திடீரென நடனமாடி சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் போட்டீர்கள்?’’
‘‘வாழ்க்கை என்னைப் பொறுத்தவரை ஒரு பெரும் கொண்டாட்டம். அதற்கு வயது ஒரு தடையல்ல. இந்திய சமூகத்தில் 40 வயதைக் கடந்தாலே முதுமையை நோக்கி மனதளவில் புறப்பட்டுப் போய்விடுவார்கள். அப்படியில்லாமல் இந்த வாழ்க்கையைக் கொண்டாடித் தீர்க்க வேண்டும் என்பதற்கான குறியீடுதான் இந்த நடனம். ஆனால் பலர் இதைப் பார்த்துவிட்டு, நான் பொறுக்கித்தனம் செய்வதாக நினைத்துவிட்டார்கள். ‘குடித்து விட்டு ஆடுகிறான்’ எனக் கொச்சைப்படுத்தி விட்டார்கள். இங்கே கொண்டாட்டம் என்பது குடியோடு சம்பந்தப்பட்டதாக மாறிவிடுகிறது. அதனால் இதன் அர்த்தமே மாறிவிடுகிறது. இனிமேல் டான்ஸ் ஆடுவதைத் தனியாக ஆடுவோம், அதை ரீல்ஸ் போட வேண்டாம் என முடிவு செய்து நிறுத்திவிட்டேன். ஆனால் தொடர்ந்து ஆடுகிறேன்.”
“முன்பெல்லாம் சாரு கலகக்காரராக தீவிரமாக அறியப்பட்டது போய், ‘இந்தச் சமூகம் இப்படித்தான்’ என்ற மனநிலைக்கு சாரு போய்விட்டாரா?’’
‘‘மறுக்கிறேன். முன்பெல்லாம் என் நடவடிக்கைகளில் ஒரு முரட்டுத்தனம் இருந்தது. இப்போது இல்லை. ஆனால் முரட்டுத்தனம் என்பது மட்டுமே கலகம் இல்லை. காந்தியின் செயல்களில் முரட்டுத்தனம் இருந்ததில்லை. ஆனால் அவர் செய்த அத்தனையும் கலகம்தான். கொஞ்சமாக வயது ஏறி அகிம்சாவாதியாக மாறிவிட்டதால் கலகத் தன்மையை இழந்ததாக அர்த்தம் இல்லை. முன்பு எனக்கு நாய் பூனைகள் பிடிக்காது. இப்போது பூனைகளைக் குழந்தைகள் மாதிரி வளர்க்கிறேன். என் வாழ்வில் நான் சமரசம் செய்து கொண்டதில்லை. சமரசம் இல்லாமல் வாழ்வதே கலகம். என்னுடைய ‘எக்ஸைல்’ நாவல்கூட கலக எழுத்துதான். எவ்வளவோ தைரியமாகக் கருத்துகளைச் சொல்லியிருக்கிறேன், இப்போதும் சொல்கிறேன். அதனால் கலகத் தன்மையை இழந்துவிட்டதாகச் சொல்வது சரியில்லை.”

“நிறைய எழுதிவிட்டீர்கள், வாசிக்கப்படுகிறவராகவும் இருக்கிறீர்கள். க்ராஸ்வேர்டு விருதுவரை வந்துவிட்டீர்கள். இப்போது உங்கள் தேவைகளுக்கான பொருட்தட்டுப்பாடு குறைந்துவிட்டதா?’’
‘‘இங்கே எழுத்தாளர்களில் ஒன்றிரண்டு பேர்தான் வசதியாக வாழ்கிறார்கள் எனச் சொல்வேன். ஒரு சிலர் வசதியாக வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் சினிமாவுக்கு எழுதுகிறார்கள். நானெல்லாம் எழுத்தை மட்டும் நம்பாமல் அரசு வேலைக்குப் போய்விட்டேன். ஆனால் எனக்குக் கிடைத்தது குமாஸ்தா வாழ்க்கை. குமாஸ்தாவாக வாழும் ஒருவன், எப்படி தான் விரும்பியபடி நாடோடியாக வாழ்ந்து அலைய முடியும்? அதனால்தான் அந்த வேலையைத் துறந்தேன். இப்போது கூட ஜப்பானுக்குப் போய் வந்தேன். ஏழெட்டு லட்ச ரூபாய் பணம் செலவாகிவிட்டது. நான் விருப்பப்பட்ட இடம் இது. பயணங்களில் எனக்குப் பெருவிருப்பம் உண்டு. அதற்குத் தான் பணம் தேவைப்படுகிறது. இங்கே சினிமாக் கலைஞர்களுக்குக் கிடைக்கும் மரியாதையில் பத்தில் ஒரு சதவிகிதமாவது எழுத்தாளருக்கு இருந்தால் எல்லாம் சாத்தியப்படும். தமிழின் பல எழுத்தாளர்களின் கதைகளை ஆராய்ந்தால், அதுவே அவர்களின் கதையிலும் இருப்பதைப் பார்க்கலாம். அப்படி எழுதுவதற்கு நீங்கள் மிகப்பெரிய தியாகத்தைச் செய்ய வேண்டும். முன்பு மாதிரி எழுத்துக்காக தன்னையே பலி கொடுப்பது நியாயம் இல்லை என இப்போது எழுத்தாளர்கள் உணர்ந்துவிட்டார்கள். இயற்கையை வழிப்படுத்துவதற்கும், நீண்ட பயணங்களுக்குமே எனக்குப் பொருள் தேவைப்படுகிறது.”
“உங்களுடைய அறம் என்ன? இது சரி, இது தப்பு என எப்படி முடிவுக்கு வருகிறீர்கள்?’’
‘‘யாருக்கும் நம்மால் தொந்தரவு வரக்கூடாது. யாரையும் நான் துன்புறுத்தக் கூடாது. அறம் மட்டுமல்ல, என் மதமே அதுதான். இது பார்க்க எளிதாகத் தோன்றினாலும் மிக விரிவான அர்த்த தளங்களைக் கொண்டது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதே என் அறம். எல்லா மொழியும் என் மொழி, எல்லா நாடும் என் நாடு, எல்லா மதமும் என் மதம். இது உசத்தி, இது தாழ்த்தி என்ற பேச்சுக்கே இடமில்லை. கொஞ்ச நாள்களுக்கு முன் ஒரு பூனை என் வீட்டுக்குள் வந்தது. அதை விரட்டாமல் உணவை வாங்கிப் போட்டேன். இப்போது பூனைகள் பெருகிவிட்டன. அவற்றுடன் தகப்பன் பிள்ளையாகப் பழகுகிறேன். இப்போது அந்தப் பூனைகள் என் வாழ்வில் நீங்காத இடம் பெற்றுவிட்டன. ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்…’ இதுதான் என் அறம். இதுதான் அடிப்படையான என் எழுத்தின் சாரம்.” (விகடனுக்கும், சாருநிவேதிதாவுக்கும் நன்றிகளுடன் ….)
…………………………………………………………………………………………………………………………………………………..



உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…