கணவன் – மனைவி உறவு — சியாமளா ரமேஷ் பாபு …!!!

…………………………………………………….

……………………………………………………

தெரிந்தவர் வீட்டில் சாப்பிடும்போது சட்டென தலைசுற்றி வாந்தி எடுத்ததால் உடனே வீட்டுக்கு கிளம்பிவிட்டனர் இருவரும். வீடு வந்து சேரும் வரை லேசான அசௌகர்யம்.

“பொழுது விடிந்ததும் ஒரு மாஸ்டர் செக்கப் பண்ணிடலாம்ங்க.”

“எனக்கு ஒண்ணுமில்ல… வீணா ஏன் பெருசுபடுத்தறேம்மா… ஏதாவது ஃபுட் பாய்சன் ஆயிருக்கும்.”

“சரி அதுதான் ஏன்னு பாத்துடலாமே” என மனைவி சொன்னதை தட்ட முடியவில்லை அவரால்.

வழக்கமாகச் செல்லும் மருத்துவமனை வளாகம் அன்று மனதுக்கு கிஞ்சித்தும் பிடிக்கவில்லை… குறிப்பாக, மனைவிக்கு.

“டெஸ்ட் ரிசல்ட்ஸ் வந்தா தெரிஞ்சுடப் போகுது. அதுக்கு ஏம்மா இவ்ளோ டென்ஷ னாகறே?”

“திடீர்னு ஏன் உங்களுக்கு அப்படி ஆச் சுன்னு யோசிக்கறேன். குழப்பமா இருக்கு.”

பரிசோதனைகளின் முடிவு கணவனின் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துள்ளன என்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் இதற்கான வழி என்ற செய்தி யையும் இடியாய் இறக்கியது. பாதங்களுக்கு கீழுள்ள பூமி இரண்டாய் பிளப்பது போல இருந்தது இருவருக்கும். வீடு வந்து சேரும் வரை இருவரும் ஒற்றை வார்த்தை பேசிக் கொள்ளவில்லை.

‘கல்லூரியில் முதுகலை படிக்கும் பெண், இருவீட்டிலும் வயதான அப்பா அம்மா… எப்படி அவர் களுக்குச் சொல்வது?

இருபத்தி ஆறு வருட திருமண பந்தம்… எத்தனை கடந்து வந்திருப்போம்… சின்னச் சின்னதாக எத்தனை சண்டைகள்… ஒவ்வொரு சின்ன சண்டைக்குப் பிறகும் எப் போதும் முன் வந்து சமாதானம் செய்யும் அவரின் அன்புக்காகவே சண்டை போடத் தோன்றுவதாக எத்தனை முறை வெட்கமே இல்லாமல் சொல்லியிருக்கிறேன்…

தலைவலி, காய்ச்சல் என்று ஒரு நாளும் சோர்ந்து பார்த்ததே யில்லையே…

இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகிப்போக என்ன காரணம்..? ஒருமுறை கூடவா சமிக்ஞை காட் டாமல் போயிருக்கும். இதற்கு முன்பான அவரின் அசௌகர்யங் களை மேம்போக்காக எடுத்துக் கொண்டோமா?

இதை முதலில் யாரிடம் சொல்வது… எப்படிச் சொல்வது… அப்பாவுக்கு இவ்வளவு பெரிய நோய் என்பதை எப்படி அந்தப் பிஞ்சு மனது தாங்கும்?

வீட்டிலுள்ள வயதானவர்களுக்கு இந்த அதிர்ச்சியை எப்படிச் சொல்வது?’

மனதுக்குள் சிலந்தி வலையாக கேள்விகள் ஒன்றோடொன்று பின்னியபடி.

முதலில் பெண்ணிடம் பக்குவமாகச் சொல்ல முடிவு செய்தாள். கேட்ட மாத்திரத் தில் அப்பாவைக் கட்டிக்கொண்டு அழுதாள் மகள்.

“பயமா இருக்குப்பா. சர்ஜரி பண்ணா சரியாயிடுமாப்பா?” மகள் கேட்க கேட்க கண்கள் குளமாகி தொண்டை அடைக்க, “அம்மாவை இனிமே நீ தான்டாம்மா பாத்துக் கணும்… அப்பா இன்னும் கொஞ்ச நாளைக்குத் தானிருப்பேன்… அம்மாவுக்கு நீதான் தைரியம் சொல்லணும்” என மகளைக் கட்டிக் கொண்டு அழுதார்.

வங்கிக் கணக்கிலுள்ள பணம், ஆர்.டி, எஃப்டி, இன்ஷூரன்ஸ் விவரம் என எல்லாவற்றையும் மனைவி, மகளிடம் தெரியப்படுத்தி னார்.

மறுநாள் இரு வீட்டாரையும் வரவழைத்து மெதுவாக விஷயத்தைச் சொன்னபோது, “நாம யாருக்கும் எந்தப் பாவமும் செய்யலியே… என் புள்ளைக்கா இப்படி? மாற்று அறுவை சிகிச்சைக்கு கிட்னி அவ்வளவு சீக்கிரத்துல கிடைக்குமா? அது கிடைக்கிற வரைக்கும் எம்புள்ள தாங்குவானான்னு தெரியலியே” என ஓயாத அழுகையும் புலம்பலும் சேர்ந்து துக்கவீடாக மாறிப்போனது.

கணவனைத் தேற்றுவதா, மகளைத் தேற்றுவதா, தன் அப்பா – அம்மா, மாமியார் – மாமானாரைத் தேற்றுவதா எனத் தெரியவில்லை அவளுக்கு.

ஏதேனும் செய்து இதிலிருந்து இவரை மீட்க வேண்டும். இதுவும் கடந்து போகும் என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். இரவும் முழுவதும் தூங்காமல் யோசித்து திடமாக ஒரு முடிவுக்கு வந்தாள்.

“நானே ஏங்க உங்களுக்கு கிட்னி தரக் கூடாது? ஏன் யாராவது தருவாங் கன்னு காத்திருக்கணும்?”

“எமோஷனலா டிஸ்டர்ப் ஆகி யிருக்கேம்மா நீ… என் காலம் முடியப் போகுது. நீயாவது உன் உடம்பை நல்லா கவனிச்சிக்கோ… என்னைப்பத்தி கவலைப் படாதே…” விரக்தியாகச் சொன்ன கணவனின் வார்த்தைகள் அவள் திடத்தை திசைத் திருப்பவில்லை.

“இல்லீங்க… நான் திடமா சொல்றேன்… என் கிட்னி மேட்ச் ஆகுதான்னு பார்ப்போம். ஆபீஸுக்கு மூணு மாசம் மெடிக்கல் லீவு போடுங்க. வீட்டிலிருக்கறவங்ககிட்ட நம்ம முடிவைத் தெரியப்படுத்தி சம்மதிக்க வைப் போம். என்னோட நகையும், வீடும் இருக்கு… ஒண்ணு ஒண்ணா யோசிப்போம். நீங்க தைரியமா இருங்க…” கணவனைத் தேற்றினாள்.

பிரச்னையை எதிர்கொள்வதுதான் ஒரே வழி எனும்போது வரும் மனத்திடத்திற்கு இணையான சக்தி இந்த உலகில் வேறேது. அந்த நொடி முதல் மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாக எத்தனை முறை போய் வந்தார்கள் என்பது எண்ணிக்கையில் அடங்காது.

கணவனுக்கு வாரம் மூன்று முறை டயாலிசிஸ், அதுதவிர தனக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதய பரிசோதனை, கிட்னி தானம் செய்பவர் பெண் என்பதால் அதற்கான பிரத்யேக பரிசோதனைகள், சட்டரீதியான ஆவணங்களின் ஒப்புதல்கள் என ஒருவழியாக எல்லாம் சரிபட்டு வருவதற்குள் நான்கு மாதங்கள் கரைந்து போயின. உடல் துவண்டு போனது. வீட்டின் இயல்பு தலைகீழாக மாறிப்போனது. பசி, தூக்கம், ஓய்வு மறந்து போனது. எனினும், கணவனைக் காப்பாற்றி விட வேண்டுமென்ற அதீத தீவிரம் உந்து சக்தியாக இயக்கியது.

எல்லா பரிசோதனைகளும் சாதகமாக அமைந்து அறுவை சிகிச்சைக்கு நாள் குறித்ததும் நம்பிக்கை வலுத்தது அவளுக்கு. ‘அவருக்கு எதுவும் ஆகாது. நாங்க நல்லா இருப்போம். இதுவும் கடந்து போகும்…’ தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.

நம்பிக்கை வீண் போகவில்லை. உறவுகள், நண்பர்கள், நலம் விரும்பிகள் என அனைவரின் பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் வீண் போகவில்லை.

அறுவை சிகிச்சை நன்கு முடிந்து தங்களின் வெள்ளி விழாவை விமர்சையாக கொண்டாடியதோடு இதோ ஆறு ஆண்டுகள் கடந்தும் ஆரோக்கியமாக இருக்கின்றனர் கணவனும் மனைவியும்.

அம்பு துளைத்த இதயத்துக்கு பதிலாக ஒற்றை சிறுநீரகம்தானே இவர்களின் காதல் சின்னம்.

திருமணம் என்ற ஒற்றைக் கூரையின் கீழ் ஒருவருடன் சலிக்காமல், சோர்ந்து போகாமல், ஆர்வம் குறையாமல், வருடக்கணக்காக அன்பு செலுத்த முடியுமா என்ன?

வெடித்துச் சிதறும் கோபமும், வறட்டு வம்பும், தான் என்கிற அகங்காரமும், அவ்வப் போது எட்டிப்பார்க்கும் சந்தேகமும், குத்திக் கிழிக்கும் கூர் வார்த்தைகளும், சத்தில்லா சண்டைகளும் இல்லாததொரு வாழ்க்கை சாத்தியமா என்ன…..?

ஆம்… என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் இருக்க முடியுமா என்ன…..??

( நன்றி – சியாமளா ரமேஷ் பாபு …)

……………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.