……………………………………….

…………………………………..
ஒரு சுவாரஸ்யமான கதையை ஜூனியர் விகடன் வெளியிட்டிருக்கிறது…இதில் எத்தனை சதவீதம் நிஜமாக இருக்க முடியும் என்பது எழுதியவர்களுக்கே கூட தெரியும் என்றாலும் -சுவாரஸ்யமாக இருப்பதால், அதிலிருந்து சில பகுதிகள் இங்கே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
தற்போதைய ‘ஹாட் டாபிக்’ நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – நடிகர் ரஜினிகாந்த் இடையே நடந்திருக்கும் சந்திப்புதான். இரு துருவங்களாக இருந்தவர்கள், திடீரென ஒன்றாகச் சந்தித்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியிருப்பது அரசியல் களத்தில் ஆச்சர்யத்தைக் கிளப்பியிருக்கிறது.
2017-ல், “தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது. நான் அரசியல் கட்சி தொடங்குவேன்…” என ரஜினி பேசியபோது, “ஸ்வெட்டரைப் போட்டுக்கிட்டு இமயமலைக்குப் போறதை விட்டுட்டு, வெற்றிடம் இருக்குன்னு பேசிட்டிருக்காரு. சுடுகாட்டில்கூடத்தான் வெற்றிடம் இருக்கிறது…” எனக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் சீமான். அப்படி விமர்சனம் செய்தவரும், விமர்சனத்தைச் சந்தித்தவரும் ஒன்றாகச் சந்தித்து அளவளாவியிருப்பதுதான் இத்தனை பரபரப்புக்கும் காரணம்…!
“இருவரும் சந்தித்துக்கொண்டதுகூடப் பிரச்னை இல்லை. சந்திப்புக்குப் பிறகு ‘சங்கி என்றால் சக தோழன், நண்பன் என்றுதான் அர்த்தம்’ எனத் தேவையில்லாத புது விளக்கமெல்லாம் கொடுத்திருக்கிறார் சீமான். கட்சி நிர்வாகிகளிடம் கலந்தாலோசிக்காமல், அவர் இஷ்டத்துக்குக் காவிச் சாயத்தை அள்ளி முழுவதுமாகப் பூசிக்கொண்டு நிற்பது, வேதனையாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. இதை உண்மையில் எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ‘பா.ஜ.க-வின் `பி’ டீம்தான் நாம் தமிழர் கட்சி’ என தி.மு.க-வினர் விமர்சித்துவரும் வேளையில், அவர்கள் வாய்க்கு அவல் கொடுத்ததுபோல ரஜினி – சீமான் சந்திப்பு நடந்திருக்கிறது. `மாவீரர் நாள்’ நெருங்கும் வேளையில் இதை இப்போது செய்திருக்க வேண்டியதில்லை. இந்தச் சந்திப்பால், பா.ஜ.க கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக சீமான் களமிறங்கக்கூடும் என்கிற யூகங்களும் றெக்கை கட்டிவிட்டன…” எனக் கொதிக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியின் சீனியர் புள்ளிகளே.
சீமான் ரஜினி சந்திப்பில் என்ன நடந்தது …???
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ படம் வெளியானபோது, படம் வெற்றியடைய வாழ்த்து அறிக்கை வெளியிட்டார் சீமான். ரஜினியுடன் போனிலும் பேசினார். அப்போதே இருவரும் சந்தித்துப் பேச பரஸ்பரம் விருப்பம் தெரிவித் திருந்தார்கள். நவம்பர் 8-ம் தேதி தன்னுடைய பிறந்தநாளையொட்டி ரஜினியைச் சந்திக்க சீமான் திட்டமிட்டபோது, ரஜினி ஷூட்டிங்கில் இருந்ததால் நேரம் கைகூடி வரவில்லை.
இந்தச் சூழலில்தான், சமீபத்தில் ரஜினியிடமிருந்து சீமானுக்கு அழைப்பு வந்திருக்கிறது. “நவம்பர் 21-ம் தேதி வீட்டுக்கு வாங்க. உங்ககிட்ட நிறைய பேசணும்…” என்றிருக்கிறார் ரஜினி. அதைத் தொடர்ந்து, கட்சியின் முக்கியப் புள்ளிகள் சிலர், அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி சகிதம் போயஸ் தோட்டத்திலுள்ள ரஜினியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் சீமான். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த அந்தச் சந்திப்பில், சினிமா, அரசியல், ஆன்மிகம், குடும்பம் எனப் பல விஷயங்களும் பேசப்பட்டதாகச் சொல்கிறார்கள் உடன் சென்றவர்கள்.
அது குறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய நாம் தமிழர் கட்சியின் சீனியர் புள்ளிகள் சிலர், “ரஜினியுடன் அண்ணன் சீமான் சந்திக்கப்போகிறார் என்கிற தகவல் வந்ததிலிருந்தே கட்சிக்குள் ‘கடா முடா’ சத்தம் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. ‘ரஜினி பா.ஜ.க-வின் கைக்கூலி’ என விமர்சித்துவிட்டு அவரைப் பார்க்கச் செல்வது முறைதானா… என சீனியர்கள் பலருமே முணுமுணுத்தனர். ஆனால், அதைப் பற்றியெல்லாம் சீமான் கவலைப்படவில்லை. முதன்முறையாகத் தன் வீட்டுக்கு சீமான் வருவதால், அவரை வெகுவாக உபசரித்தார் ரஜினி. தன்னுடைய வரவேற்பறையில் இருக்கும் புகைப்படங்களை யெல்லாம் சீமானுக்குக் காட்டி விளக்கினார். பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரனின் திரைப் படைப்புகளை இருவரும் சிலாகித்துப் பேசினார்கள். இயக்குநர் மணிவண்ணனுடன் தனக்கிருந்த உறவை ரஜினியிடம் மனம்விட்டுப் பேசினார் சீமான். சினிமா தொடர்பாக இருந்த பேச்சு, சற்று நேரத்தில் அரசியல் பக்கம் மாறியது.
‘விஜய்யோட பொலிட்டிக்கல் என்ட்ரி பத்தி என்ன நினைக்கிறீங்க..?’ எனக் கேட்டார் ரஜினி. ‘அது தேறாது…’ என ஒற்றைவரியில் பதிலை உதிர்த்துவிட்டு பலமாகச் சிரித்தார் சீமான். ‘ஏன்?’ என்பதுபோல சீமானை ரஜினி பார்க்க, ‘பதினைந்து வருஷமா கட்சி நடத்துறோம். ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்குறதுக்குள்ள உயிர் போய், உயிர் வருது. இது ரொம்பக் கொடுமையான போராட்டக் களம்ங்கய்யா. தம்பி விஜய்யால தாக்குப்பிடிக்க முடியாது. நான் மைக் பிடிச்சுப் பேச ஆரம்பிச்சேன்னா, குறிப்பே இல்லாம மணிக்கணக்கா பேசுவேன்.
எந்தத் தலைப்புலயும் என்னால பேச முடியும். என்னையவே இந்த தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் தண்ணி குடிக்க வெக்கிறாங்க. விஜய் எம்மாத்திரம்..?’ என்றார் சீமான்.
அமைதியாகக் கேட்டுக்கொண்ட ரஜினி, ‘அவரோட மாநாடு ஸ்பீச்சை டி.வி-யில பார்த்தேன். அவரோட கொள்கைகளைக் கூமுட்டைக் கொள்கைகள்னு சொல்லிட் டீங்களே… யாரும் இவ்வளவு தைரியமா பேசல… ஐ லைக் தட்!’ எனப் புன்முறுவல் பூத்தார்.
அதற்கு, ‘பின்ன என்னங்கய்யா… திராவிடமும் தமிழ்த் தேசியமும் எப்படி ஒன்றாக முடியும்… ரெண்டையுமே ஒரே தராசில் வெக்கிறதா சொல்றது எவ்வளவு பெரிய அபத்தம்… அதைத்தான் விஜய் செய்யப் பார்க்குறார்…’ என்றார் சீமான்.
விஜய்யிடமிருந்து 2026 சட்டமன்றத் தேர்தல் பக்கம் திரும்பியது பேச்சு. ‘சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஐந்து முனைப் போட்டி இருக்குமா… இந்த முறையும் நீங்க தனிச்சுத்தானே நிக்குறீங்க..?’ என ரஜினி கேட்க, ‘அது தொடர்பாகத்தான் உங்களிடம் பேச வந்தோம்’ என ஆரம்பித்தார் எங்களுடன் வந்த ஒரு பிரமுகர்.
‘பா.ஜ.க கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக சீமானை நிறுத்தினால் எப்படி இருக்கும்?’ என அவர் கேட்க, ஒரு கணம் ‘ஷாக்’ ஆகிவிட்டார் ரஜினி.
தொடர்ந்து பேசிய அவர், ‘நாம் தமிழர் கட்சி தற்போது எட்டு சதவிகித வாக்குகளைப் பெற்று, மாநிலக் கட்சியாக அந்தஸ்து பெற்றிருக்கிறது. இதற்குமேல் கட்சி வளர வேண்டுமென்றாலும், எம்.எல்.ஏ-க்களாக வெற்றிபெற வேண்டுமென்றாலும் ஒரு வலுவான கூட்டணி அவசியம். திராவிட எதிர்ப்பைப் பிரதானமாக வைத்துக்கொண்டு தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது, நாம் தமிழர் கட்சியை அழிப்பதற்குச் சமமாகிவிடும். 2011-ல் தே.மு.தி.க-வும், 2024-ல் மக்கள் நீதி மய்யமும் அந்தத் தவறைச் செய்துதான் தற்போது பெருமளவு பலவீனமாகியிருக்கின்றன. அதனால்தான், பா.ஜ.க-வுடன் அணி சேர்வது சரியானதாக இருக்கும் எனத் திட்டமிடுகிறோம்’ என்றார். அருகே அமர்ந்திருந்த சீமானும், ‘ரஜினி என்ன கருத்து சொல்லப்போகிறார்?’ என கவனித்துக்கொண்டிருந்தார்.
‘கொள்கை முரண்பாடு வராதா..?’ என ரஜினி கேட்கவும், ‘இந்திய தேசியமும் தமிழ்த் தேசியமும் முரண்பாடான கொள்கைகள்தான். ஆனால், அது போன்ற முரண்பாடுகளோடுதானே 25 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க-வும் மராட்டிய இன உணர்வுள்ள சிவசேனாவும் கூட்டணியில் இருந்தன. அதுபோல தமிழர் இன உணர்வுள்ள நாம் தமிழரும், இந்திய தேசிய உணர்வுள்ள பா.ஜ.க-வும் இணைவதில் என்ன தவறு இருக்கப்போகிறது… வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் ஒரு வலுவான கூட்டணியைத் தமிழகத்தில் அமைத்து, இரண்டாமிடத்தையாவது பெற்றுவிடப் பார்க்கிறது பா.ஜ.க. அதற்கு, எட்டு சதவிகித வாக்குகளை வைத்திருக்கும் சீமான் அவர்களுக்குத் தேவை.
`சீமான் தேவையென்றால், அவரை முதல்வர் வேட்பாளராக அங்கீகரிக்க வேண்டும்’ என டெல்லியிடம் சொல்லியிருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. அதேநேரத்தில், பிரதமர் மோடியுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் உங்களைப் போன்றவர்களின் ஆலோசனைகளும் வேண்டும்’ என நீண்ட விளக்கத்தைக் கொடுத்தார் அவர்.
சற்று நேரம் அமைதியாக சீமானையும், உடன் சென்றவர்களையும் பார்த்துக்கொண்டிருந்த ரஜினி, ‘கொள்கை முரண்பாடுள்ள கட்சிகளோட பா.ஜ.க கடந்தகாலங்கள்ல கூட்டணி வெச்சுருக்கு. பீகார்ல நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக ஏத்துக்கிட்டாங்க. 2004-ல், மம்தாவோட தேர்தல் கூட்டணி போட்டாங்க. 2016-ல், காஷ்மீரின் மெகபூபா முஃப்தியை மாநில முதல்வராக்கிக் கூட்டணி ஆட்சியும் அமைச்சாங்க. மெகபூபாவையே ஏத்துக்கிட்ட பா.ஜ.க., சீமானை ஏத்துக்காதா?’ என்றார் ரஜினி.
இது தொடர்பாக டெல்லியிலிருந்து பா.ஜ.க சீனியர்கள் தன்னிடம் கருத்து கேட்டால், தன் கருத்தை வலுவாகத் தெரிவிப்பதாவும் உறுதியளித்தார். கிளம்புவதற்கு முன்னதாக, ‘நீங்க பெரிய இடத்துக்கு வருவீங்க சீமான்…’ எனத் தட்டிக்கொடுத்து, கைகொடுத்து வழியனுப்பினார் ரஜினி. இந்தச் சந்திப்பு அரசியல் அரங்கில் எவ்வளவு பரபரப்பைக் கிளப்பியதோ, அதே அளவுக்குக் கட்சிக்குள்ளும் பலவித சலசலப்புகளை உருவாக்கிவிட்டது.
ஒருகாலத்தில், `என்னையையா சங்கினு சொல்ற..?’ எனச் செருப்பை எடுத்துக்காட்டிய சீமான், `சங்கி என்றால் சக தோழன்… நண்பன்’ என இன்று புது விளக்கமளித்திருப்பதை நாங்களே எதிர்பார்க்கவில்லை. தீவிரமான பா.ஜ.க கருத்தியல் ஆதரவாளர்போல அவர் பேசியிருக்கிறார். பா.ஜ.க வலையில் நாம் தமிழரைச் சிக்கவைக்க பல முயற்சிகள் நடைபெறுகின்றன. அதை சீமான் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
குறிப்பாக, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, அந்தச் சந்திப்பில் உடன் இருந்த தகவல் கட்சியினருக்கே தெரியாதது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது. ‘பா.ஜ.க கூட்டணியில் சீமான்’ எனக் கிளம்பியிருக்கும் தகவல்களால் கட்சிக்குள் பெரிய அளவில் பதற்றம் உருவாகியிருக்கிறது. மொத்தத்தில் ஆர்.எஸ்.எஸ் முத்திரையை நெஞ்சில் பச்சை குத்திவிட்டு வந்ததுபோல அமைந்திருக்கிறது இந்தச் சந்திப்பு. இதனால், கட்சியிலிருந்து பிரிந்து செல்வோர் இதையே ஒரு முக்கியக் காரணமாகச் சொல்வார்கள். விமர்சனத்தில் இதுவரை வீழாமலிருந்த சீமான், புகழ்ச்சியில் விழுந்துவிடுவாரோ என்ற பயத்தில் இருக்கிறோம்…” என்றனர் விரிவாகவே.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் குழப்பங்களுக்கும் விளக்கம் கேட்டு, நா.த.க-வின் தமிழ் மீட்சிப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகைச் செல்வனிடம் பேசினோம்.
கடும் எரிச்சலுடன் பேச ஆரம்பித்தவர், “ `வேட்டையன்’ படத்தைப் பாராட்டி அறிக்கை கொடுத்தமைக்காக அழைத்துப் பேசினார் ரஜினிகாந்த். இந்தச் சந்திப்புக்கு எந்த அரசியல் நோக்கமும் இல்லை.
ஆனால், சந்திப்பை அரசியலோடு கலந்து பொய்த் தகவல்களை ரவீந்திரன் துரைசாமி பரப்புவதற்குப் பின்னால் அவருக்கு ஒரு அஜண்டா இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஆரிய, திராவிடத் தரப்புகள் நா.த.க-வைக் கீழ்த்தரமாகவும், சதித்திட்டங்களின் மூலமாகவும் வீழ்த்தப் பார்க்கிறார்கள். அப்படி ரஜினி சந்திப்பை வைத்து மீண்டும் மீண்டும் கூச்சமின்றி ‘பி’ டீம் முத்திரையை எங்கள்மீது ஆழமாகப் பதிக்கப் பார்க்கிறது தி.மு.க.
‘தி.மு.க-வும் பா.ஜ.க-வும் ஒன்று’ என அடிக்கடி நாங்கள் சொல்வதை உறுதிசெய்வதுபோலவே, தி.மு.க-வைப்போலவே, பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ்-ஸும் `சீமான் எங்கள் அரசியலைத்தான் பேசுகிறார்’ எனத் தங்கள் ஆட்களைவிட்டு வெட்கமின்றி சொல்லவைத்து இந்தச் சந்திப்பில் நஞ்சைக் கலந்து சுயலாபமடைகிறார்கள்.
ரஜினிகாந்தைச் சந்தித்ததால் சீமான் `சங்கி’ என்றால், விழாக்களில் பா.ஜ.க அமைச்சர்களை, இதே ரஜினியைத் தன் அருகில் அமரவைக்கும் ஸ்டாலின் சங்கியா…
‘பா.ஜ.க-வின் மெகா கூட்டணிக்கு சீமான்தான் முதல்வர் வேட்பாளர்’ என்பது நகைப்புக்குரிய, அதேசமயம் அரசியல் வன்மம்கொண்ட கருத்துருவாக்கம். உண்மை எதுவென்பது 2026 சட்டமன்றத் தேர்தலின்போது தெரியவரும்” என்றார்.
இறுதியாக, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடமே பேசினோம். “இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். அண்ணனும் தம்பியும் அன்பைப் பரிமாறிக் கொண்டார்கள். நடிகர் சிவகார்த்தி கேயனின் சினிமா வளர்ச்சி குறித்துப் பேசினார்கள். ‘அவர் ஒரு பான் இந்தியா ஸ்டார்’ என ரஜினியே உச்சி முகர்ந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில், சீமான் தனித்துத்தான் போட்டியிடுவார். விஜய் யெல்லாம் ஒரு போட்டியே இல்லை” என்றார்.
கதைக்கிறார்கள் – என்று சொல்லி சிரித்து, கடந்து போய் விட முடியாமல் ரவீந்திரன் துரைசாமி அவர்கள் இந்த சந்தி(ப்பி)ல், குறுக்கே புகுந்து தடுக்கிறார்…
இந்த சீமான்-ரஜினி சந்திப்பில், ரவீந்திரன் துரைசாமி வந்தது எப்படி …? சோழியர் குடுமி சும்மா ஆடுமா …???
இங்கே, தமிழக அரசியலில் – எது சாத்தியம் …. எது சாத்தியமில்லை – என்று யாரால் உறுதியாக சொல்ல முடியும் …???
…………………………………………………………………………………………………………………………………………………..



விகடன் பாதி செய்தியைத்தான் தந்திருக்கிறது. விட்டுப்போன பக்கங்கள் என் கையில் கிடைத்துள்ளது. அதில் உள்ள முக்கியமான பாயிண்டுகளை உங்களுக்காகத் தருகிறேன்.
இப்போது அமைதியாக இருங்கள். தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்னதாக அதிரடியாகச் செயல்படுவோம். மோடியிடம் நான் நேரடியாகப் பேசி இதற்கு ஒப்புதல் பெற்றுத்தருகிறேன் என்றாராம் ரஜினி. இதற்காக மக்கள் கருத்தையும் மாற்ற வேண்டும் என்பதால் விகடன் குழுமமும் இதில் பங்கெடுத்துக்கொள்வதால், விகடன் குழும எம்.டி. சீனிவாசனுக்கும் அமைச்சரவையில் முக்கியப் பதவி தந்துவிடுவதாகவும் ஒப்புக்கொண்டார்களாம். பாராளுமன்றத்தில் மாறனைத் தலைவராக்கிவிடுவதற்கும் ஒப்புக்கொண்டாராம்.
நாவல் எழுத லாயக்கானவங்கள்லாம், பத்திரிகை தொழில் நடத்தினால் இப்படித்தான் சரடு விடுவாங்க.