“சோ” அவர்களின் சுயசரிதையிலிருந்து …..

…………………………………………………..

………………………………………………

……………………………………………….

“ விகடன் எம்.டி-க்கு இருந்த அற்புதமான மனசு ” – சோ!

………………………………………………………………………………

சினிமா உலகம் எனக்கு ஒருவித பாப்புலாரிட்டியை ஏற்படுத்திக் கொடுத்தாலும் ‘துக்ளக்’ பத்திரிகைதான் என்னை ஒரு ஜர்னலிஸ்ட்டாக, அரசியல் விமர்சகனாக, பத்திரிகை ஆசிரியராக எனக்கு மரியாதையை எல்லாம் உருவாக்கிக் கொடுத்தது.

இப்படிப்பட்ட ‘துக்ளக்’ பத்திரிகையை ஆரம்பித்தது மிகவும் தற்செயலானது தான். திட்டமிட்டு நடந்தது அல்ல.

“என்னால் ஒரு பத்திரிகையை நடத்த முடியும்” என்று என்னுடைய நண்பர்களிடம் பந்தயம் கட்டினேன். அதற்காக அதை ஆரம்பிக்க முடிவு செய்து அப்போது ‘ஹிந்து’ நாளிதழில் தமிழில் “நான் ஒரு பத்திரிகை ஆரம்பித்தால் படிப்பீர்களா?” என்று ஒரு விளம்பரத்தைக் கொடுத்திருந்தேன்.

அப்போது அதில் தமிழில் விளம்பரம் கொடுப்பது புதிது.

உடனே ஆயிரக்கணக்கான கடிதங்கள் பத்திரிகை ஆரம்பிப்பதற்கு ஆதரவு தெரிவித்து வந்தன. இருந்தும் எனக்கு நம்பிக்கை வரவில்லை. அப்படி ஒரு பத்திரிகை துவக்குகிற ஐடியாவையே நான் கைவிட்டு விட்டேன்.

அப்போது நாடகங்களிலும் நடித்துக் கொண்டு, ஆனந்தவிகடன் பத்திரிகையிலும் பணியாற்றிக் கொண்டிருந்த நண்பனான பாலா என்னிடம் “என்னடா… பத்திரிகை ஆரம்பிக்கிற ஐடியாவை விட்டுட்டியா?” என்று கேட்டான்.

“ஆமாம்” என்றேன்.

“நான் ஆனந்த விகடனில் இது பற்றிப் பேசலாமா?” – கேட்டபோது, நான் “சரி” என்று சொன்னேன்.

பாலா, விகடன் எம்.டி-யான பாலசுப்பிரமணியம் அவர்களிடம் இதுபற்றிப் பேசியிருக்கிறான். அவரை நாங்கள் எல்லோரும் “எம்.டி” என்றுதான் சொல்வோம். இன்றுவரை அப்படித்தான்.

அவர் என்னை அழைத்துக் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார். அதற்கு முன்பே எங்களுடைய நாடகங்கள் பலவற்றை வந்து பார்த்திருக்கிறார். அந்த அறிமுகம் எங்களைப்பற்றி இருந்தது.

ஜெமினி ஸ்டூடியோ அலுவலகத்தில் அவரைச் சந்தித்தேன்.

“என்ன பத்திரிகை ஐடியாவை விட்டுட்டீங்களா?”

“ஆமாம்!”

“அப்படினா எங்களுக்காக ஒரு பத்திரிகை பண்றீங்களா? எனக்கு நெருக்கமான உறவினர்கள் சிலர் பத்திரிகை நடத்தணும்னு நினைக்கிறாங்க. நாங்க அதை விகடன்லேயே பிரிண்ட் பண்ணி டிஸ்ட்ரிபியூட் பண்ணுவோம். அந்த மாதிரி பண்றதா இருந்தா நீங்க எடிட்டரா இருந்து பண்றீங்களா?”

எனக்கு மூலதனம் உட்பட எந்த ரிஸ்க்கும் இல்லாததால் “சரி” என்றேன்.

“சரி ஆரம்பிக்கணும்னா ரெண்டு, மூணு மாசம் வேணுமா?”

“சார்… அவ்வளவெல்லாம் டைம் கொடுத்தா எனக்கு இன்ட்ரஸ்ட்டே போயிடும். சூட்டோடு சூடா பண்ணிடலாம். 20 நாட்களுக்குள் பண்ணிடலாம் சார்”

“என்ன… பத்திரிகையில் என்ன பண்றதுன்னு தீர்மானம் பண்ணிட்டீங்களா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை சார்”

“உங்களுக்கு இதுக்கு முன்னே பத்திரிகை அனுபவம் கூடக் கிடையாதில்லே!”

“சுத்தமா கிடையாது சார்… நான் இதுக்கு முன்னாடி கல்கண்டில் ஸ்போர்ட்ஸ் பற்றி எழுதும்போது தமிழ்வாணனை ஆபீசில் போய்ப் பார்த்திருக்கேன். அதுக்குப்பிறகு இப்போ தான் சார் வர்றேன். அதனால் ஆரம்பிச்சுடலாம் சார்”

“சரி… நீங்க ரெடின்னா உடனே பண்ணச் சொல்லிடுறேன்” என்றார் எம்.டி.

பொங்கல் அப்போது நெருங்கிக் கொண்டிருந்ததால், அப்போதே பத்திரிகையைக் கொண்டு வந்துவிட முடிவு செய்தோம்.

“பத்திரிகைக்கு என்ன பெயர் வைக்கலாம்?”

“துக்ளக் என்று வைக்கலாம்” என்றேன்.

அப்போது ‘முகமது பின் துக்ளக்’ நாடகமாக வெளிவந்து பிரபலமாக இருந்த நேரம். எல்லா வேலைகளையும் அவசரமாகத் துவங்கி விட்டார்கள்.

அன்றைக்கு எம்.டி. பாலசுப்பிரமணியம் பத்திரிகைத் துறையில் கூடுதல் அனுபவம் உள்ளவர். நான் அந்த அனுபவமே இல்லாதவன். இருந்தும் நான் சொன்னதை நம்பி தைரியமாக முடிவெடுத்தார். திட்டமிடுவதற்கு முன்னால் அவர் கண்ணை மூடிக்கொண்டு யோசிப்பார். முடிவெடுத்துவிட்டால் அதை லேசில் மாற்ற மாட்டார்.

அவரிடம் நான் முன்வைத்த கண்டிஷன் ஒன்றுதான்.

“என் இஷ்டப்படி பத்திரிகையை விட்டுருங்க சார்”

“ரைட்” என்று சொல்லிட்டார் எம்.டி. பின்னாளில் எத்தனையோ சிக்கல்கள் ‘துக்ளக்’கிற்கு வந்தபோதும் அதை அவர் மீறவே இல்லை.

பத்திரிகை துவங்குவது பற்றிய அறிவிப்பெல்லாம் வெளிவந்து விட்டது. இருந்தும் முதல் இதழில் என்ன எழுதி நிரப்புவது? என்னென்ன கட்டுரைகளை வெளியிடுவது? ஒன்றும் தெரியவில்லை.

விகடன் அலுவலக காம்பவுண்டுக்குள்ளேயே ‘துக்ளக்’ அலுவலகம் தயாரானது. பாலா உதவி ஆசிரியராக வந்து இணைந்தான்.

பப்ளிஷரான வெங்கட்ராமன் ஒருபுறம் நெருக்கிக் கொண்டிருந்தார். ஒரு வழியாகப் பக்கங்களைத் தேற்றி அட்டையில் கழுதைப் படத்தைப் போட்டு ‘துக்ளக்’ முதல் இதழைக் கொண்டு வந்து விட்டோம்.

பத்திரிகை வெளிவந்ததும் நல்ல வரவேற்பு. அதனால் திரும்பவும் பிரிண்ட் பண்ணி விற்பனைக்கு அனுப்பினார்கள். நான் பத்திரிகை ஆசிரியரானதற்கு அங்கீகாரம் கிடைத்தது என்றால், அதற்கு முழுமுதற் காரணம் எம்.டி.தான்.

‘முகமது பின் துக்ளக்’ நாடகம் பாப்புலராக இருந்த நேரம் அது. சினிமாவும் வெளியாகி ஹிந்தியில் அதைப் படமாக்க ஆர்வமாக இருந்தார்கள் இயக்குநர்கள், ஏ.எல்.எஸ்ஸும், பீம்சிங்கும்.

என்னிடம் அவர்கள் அதைப்பற்றி கேட்டபோது, “பண்ணிடலாம்” என்று சொல்லிவிட்டேன்.

படத்திற்கான டெர்ம்ஸ் எல்லாம் பேசவில்லை.

அப்போது என்னை அழைத்திருந்தார் விகடன் எம்.டி.

ஜெமினியும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நேரம்.

“இந்தி ஆக்டர் மெஹ்மூத் இதைப் படமாக்குவதற்கான உரிமையைக் கேட்கிறார். நல்ல பணம் தருவதாகச் சொல்கிறார். கொடுக்கிறீயா?” – கேட்டார்.

நான் ஏ.எல்.எஸ்ஸும், பீம்சிங்கும் படமாக்க விருப்பம் தெரிவித்திருப்பதை நாசுக்காகச் சொன்னேன். ஏ.எல்.எஸ்.ஸிடம் போன் பண்ணிக் கேட்டேன். அவர் தாங்கள் பண்ணப் போவதாகச் சொன்னார்.

இத்தனைக்கும் மெஹ்மூத் சார்பில் எனக்கு செக் கொடுக்க தயாராக இருந்தார் எம்.டி. பிறகு ஏ.எல்.எஸ் எடுக்க முடியாமல் போயிற்று.

எம்.டி. சொன்னதைக் கேட்காததால் நான் அடைந்த நஷ்டம் அது!

பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அவரைக் கவனித்திருக்கிறேன். பெரிய நெருக்கடிகள் வந்தபோதும் கொஞ்சம் கூட அசர மாட்டார்.

துக்ளக்கில் அப்போது பெரியார் நடத்திய ஊர்வலத்தைப் பற்றிய கட்டுரையைப் படங்களுடன் வெளியிட்டோம். உடனே அந்த இதழைப் பறிமுதல் பண்ணினார்கள். தி.மு.க. அரசு முனைந்து அதைச் செய்தது.

விகடன் அலுவலக வளாகத்திற்குள் போலீஸ் நுழைய இருந்த சமயத்தில் நான் எம்.டி.யிடம் “அரசு பறிமுதல் பண்ணுவதற்குள் இந்தப் பத்திரிகையில் உள்ள விஷயங்கள் மக்களிடம் போகணும். அதனால் பத்திரிகைக் கட்டுகளைத் தூக்கி வெளியே விட்டெறிஞ்சி விடுவோம். எடுக்கிறவங்க வாசிக்கட்டும்” என்று சொன்னேன்.

அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார். அதன்படி பறிமுதல் செய்வதற்குள் பத்திரிகைக் கட்டுகளைத் தூக்கி ஆபீசுக்கு வெளியே போட்டோம். அப்படியே அந்த இதழ் வெளியே பரவி கடைசியில் பிளாக்கில் அதிகப்படியான விலைக்கு விற்கிற அளவுக்குப் போய்விட்டது.

அப்போது பத்திரிகை அலுவலகங்களில் போலீஸ் நுழைந்து கெடுபிடிகள் பண்ணுவது சகஜமான ஒன்றாக ஆகவில்லை. அந்த நிலையிலும் கொஞ்சம் கூட அசராமல் ஒத்துழைப்புக் கொடுத்தார் எம்.டி.

“என்ன இப்படிப் பண்ணிட்டியே” என்கிற சிறு வார்த்தைகூட அவரிடமிருந்து வரவில்லை.

அப்போது ஒரு பக்கம் சினிமாவில் நடிப்பு, வசனம், மறுபக்கம் நாடகம், இதற்கிடையில் டி.டி.கே-வில் லீகல் அட்வைசராக வேலை என்றிருந்த நிலையில், கூடவே துக்ளக் வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டேன். அதனால் பரபரவென்று ஓடிக் கொண்டிருந்தேன்.

ஏதாவது நாடக இடைவேளையில் உட்கார்ந்து துக்ளக்கிற்கு கட்டுரைகள் எழுதுவேன். துக்ளக் ஆபீசில் உட்கார்ந்து சினிமா டயலாக் எழுதுவேன். சினிமா படப்பிடிப்புக்கு இடையே டி.டி.கே கம்பெனிக்கான ஏதாவது டிராப்ட்களைத் தயார் பண்ணிக் கொண்டிருப்பேன். எந்த இடத்தில் எதைப் பண்ணுவேன் என்று எனக்கே தெரியாதபடி ஒரு வேகத்தில் போய்க் கொண்டிருந்தேன்.

ஒரு நாளைக்கு 18 லிருந்து 20 மணி நேரம் வரை வேலை பார்ப்பது என்பது அப்போது சாதாரணம்.

எம்.ஜி.ஆரை வைத்து அப்போது எம்.டி பாலசுப்ரமணியம் ஒரு படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். ஜெமினி ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. துக்ளக்கில் நான் அதே நேரத்தில் எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தேன். அசரவில்லை எம்.டி.

இவ்வளவுக்கும் எம்.ஜி.ஆர். எம்.டி-யிடம் இது குறித்து பேசியிருக்கிறார். அப்போதும் “அது அவன் பாடு; அவனுடைய பத்திரிகை பாடு. நான் அதில் குறுக்கிட மாட்டேன் என்று முதலிலேயே சொல்லியிருக்கிறேன். எந்த விதத்திலும் அதில் நான் தலையிட மாட்டேன்” என்று சொல்லியிருக்கிறார்.

சினிமாவுக்கான செலவுகளுக்கு முன்னால் பத்திரிகை எம்மாத்திரம்! ஆனால் எந்த விதத்திலும் எம்.டி. அசைந்து கொடுக்கவில்லை. அதற்கு எவ்வளவு பெரிய நெஞ்சுரம் வேண்டும்!

சினிமாவின் பல விதமான டெக்னிக்குகளும் அவருக்கு அத்துப்படி. எது குறித்தும் அவரிடம் உரையாடலாம். அவர் ஒரு வார்த்தை கொடுத்தால் அது கல்லில் செதுக்கினதைப் போன்றது என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு தான் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவதில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்.

எந்த அரசியல் நிகழ்வுகள் நடந்தாலும் உள்ளுக்குள் என்ன நடக்கிறது என்பதைச் சுலபமாகப் புரிந்து கொள்வார். செய்திகள் வெளிவந்தாலும் அதற்கான பின்னணி என்ன, ஏன் இப்படிப்பட்ட செய்தி வெளிவருகிறது என்பதைத் துல்லியமாகப் புரிந்து வைத்திருப்பார்.

எமர்ஜென்சி நேரம். இந்திரா காந்தியை நான் கடுமையாக விமர்சித்து எழுதிக்கொண்டிருந்தேன். அப்போதைய சென்சார் ஷிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு மாதம் துக்ளக்கை வெளிவராமல் நிறுத்தி வைத்தபோதும் எம்.டி. ஒன்றும் சொல்லவில்லை.

வாசகர்கள் ஆபீசுக்கே தேடி வர ஆரம்பித்துவிட்டார்கள். கடிதங்கள் குவிய ஆரம்பித்து விட்டன. திரும்பவும் கொண்டு வந்தோம். ‘சர்வாதிகாரி’ என்கிற பழைய படத்திற்கு மறுபடியும் காட்டமாக விமர்சனம் எழுதினோம். ‘இருபது அம்ச அப்பளம்’ என்கிற விளம்பரத்தை வெளியிட்டோம்.

என் மீது சில வழக்குகள் வந்தபோது அவற்றையும் எம்.டி அசாத்தியமான மன உறுதியுடன் சமாளித்தார்.

ஒரு தடவை ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் நடித்த ஏதோ ஒரு படத்தில் நடிக்க சான்ஸ் கிடைக்கவில்லை என்பதால் சோ, எம்.ஜி.ஆரை விமர்சித்துக் கொண்டிருப்பதாக மணியன் எழுதிவிட்டார்.

நான் பதிலுக்கு கிழிகிழியென்று துக்ளக்கில் பதில் எழுதினேன். மணியனை, ஆனந்த விகடனை எல்லாம் கடுமையாக விமர்சித்திருந்தேன். இத்தனைக்கும் அதே விகடன் வளாகத்தில்தான் அச்சாகிக் கொண்டிருந்தது. எல்லா மேட்டர்களும் அவர் பார்வைக்குப் போய்க்கொண்டுதான் இருந்தன.

அதை எந்த விதத்திலும் எம்.டி. தடுக்கவில்லை. “அவன் எழுதினால், இவன் பதில் சொல்றான்… நீங்க பிரிண்ட் பண்ணுங்க”

எல்லோருக்கும் இந்த மனசு வந்துவிடாது. இதுதான் அவருடைய அணுகுமுறை. அவருடைய பெரிய மனிதத் தன்மை அவருடைய தோரணையிலேயே தெரியும்.

எந்த சந்தர்ப்பத்திலும் என் மீது அவர் காட்டிய அக்கறை மாறவே இல்லை.

ஒருமுறை என்னைக் கூப்பிட்டார் எம்.டி.

“இந்தப் பத்திரிகையை உங்க இஷ்டப்படி தான் பண்ணிட்டு இருக்கீங்க. எல்லாம் உழைப்போம் உங்களுடையது தான். எங்க உறவினர்களுக்காக நாங்க பிரிண்டிங்கும், டிஸ்ட்ரிபியூஷனும் பண்றோம். நியாயமாப் பார்த்தா இது உங்க பத்திரிகைதான். அதனால் இது உங்களுக்குத்தான் சொந்தமாக இருக்கணும். இதை உங்களுக்கு நான் கொடுக்கப் போறேன்” என்றார் அக்கறையுடன்.

அதுவரை நான் மாதச் சம்பளத்திற்கு தான் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு சிறிது காலம் கழித்து மறுபடியும் என்னை அழைத்து “என்ன… நான் சொன்னது ஞாபகம் இருக்கா?” என்றார்.

“இல்லை… சார்… நீங்க சொன்னீங்க. அதுக்கு ஒரு டைம் பிக்ஸ் பண்ணி இருப்பீங்கன்னு பேசாம இருக்கேன்.” – என்றேன்.

“இன்னைக்குதான் அந்த டைம்” என்று சொல்லி – துக்ளக்கிற்கான எல்லா உரிமைகளையும் எனக்கு மாற்றிக் கொடுத்தார்.

உண்மையைச் சொல்லப் போனால் நான் மாதாமாதம் நன்றாக பணம் சம்பாதிக்க ஆரம்பித்ததே அதற்குப் பிறகுதான். துக்ளக் மூலம் பெரும் அந்தஸ்து என்னைத் தேடி வந்தது.

ஜெமினி ஸ்டூடியோ, பிக்சர்ஸ் இது தவிர ஒரு விளம்பரக் கம்பெனி என்று பல முனைகளில் அவர் இயங்கிக் கொண்டிருந்தபோது கவனித்திருக்கிறேன். எந்த லாபமும் நஷ்டமும் அவரை அசர வைக்காது. அப்படி ஒரு இயல்பு அவருக்கு.

‘ஸ்தித பிரக்ஞன்’ என்று சொல்வார்கள். எது தன்னைச் சுற்றி நடந்தாலும் அதைச் சாதாரணமாக ஏற்றுக்கொள்கிற அபூர்வமான மனம் அவருடையது.

சுக துக்கங்கள் எல்லாம் சீதோஷ்ண நிலை மாதிரி வெயில், மழையாய் மாறி மாறி வரும்; அதனால் பாதிக்கப்பட்டு விடக் கூடாது. இவை தவிர்க்க முடியாத விஷயங்கள் என்பதை உணர உள்ளுரத் தெரிந்து வைத்திருப்பவர் எம்.டி.

சிவாஜி எப்படி நான் சினிமாவில் பிரபலமாவதற்கு உதவியாக இருந்தாரோ அதேப் போல துக்ளக்கை ஆரம்பித்து, அதை எனக்கே கொடுத்து எனக்கு பத்திரிகையிலும் அரசியலிலும் தனி மரியாதையை ஏற்படுத்தித் தந்தவர் எம்.டி. பாலசுப்பிரமணியம் என்றால் அது மிகையில்லை.”( திரு. மணா அவர்களுக்கு நன்றியுடன் -“ஒசாமஅசா” தொகுப்பிலிருந்து …..)

……………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to “சோ” அவர்களின் சுயசரிதையிலிருந்து …..

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியம் அவர்களைப் பற்றி சோ அவர்கள் எழுதியிருந்ததை முன்பே படித்திருக்கிறேன். திரும்பவும் படிக்க மிகவும் இண்டெரெஸ்டிங் ஆகவே இருந்தது.

    பாலசுப்ரமணியம் அவர்கள் திரைத்துறையில் சாதிக்காவிட்டாலும், எழுத்துலகில் நிறையவே சாதித்தார், விகடன் குழுமத்தை வாசகர்களின் மனநிலைக்கு ஏற்ப நடத்தினார் (குமுதத்தை ஏஎஸ்பி அவர்கள் நடத்தியது போல). விகடனுக்கு என்று கொள்கைகளும் வைத்திருந்தார்.

    என்னைப் பொறுத்தவரையில் அவர் சறுக்கியது, தன் மகன் விஷயத்தில்தான். மகனுக்காக மதனை வெளியேற்றியதும், பிறகு மகன் விகடன் குழுமத்தை திமுக பத்திரிகைக்குழுமமாக மாற்றியதும் (திமுக ஜால்ரா.. காரணம் சன் தொலைக்காட்சியில் அவர் நடத்திக்கொண்டிருந்த சீரியல்கள்) நடுநிலை வாசகர்கள் தேவையில்லை திமுக தொண்டர்கள் மாத்திரம் போதும் என்று தங்கள் குழுமத்தைத் திசைதிருப்பியதும், ஆசிரியர் பாலசுப்ரமணியத்தின் அந்த ஒரு முடிவால்தான் என்று நான் நினைக்கிறேன்.

    முழுதும் நனைந்தபின், பிறகு நடுநிலை வேஷம் போட்டால், விகடன் குழுமத்திற்கு முன்பிருந்த மரியாதை கிடைக்குமா? கிடைக்கவே கிடைக்காது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.