…………………………………………..

…………………………………………….
டெ ல்லியில் 1965-ம் ஆண்டு கஸ்தூரிரங்கன், இந்திரா பார்த்தசாரதி, லா.சு.ரங்கராஜன், தி.ஜானகிராமன், என்.எஸ்.ஜகந்நாதன், கே.ஸ்ரீனிவாசன், க.நா.சுப்ரமண்யம், கே.எஸ்.ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் வசித்து வந்தோம்.
கஸ்தூரிரங்கன் ஒரு பத்திரிகை தொடங்க விரும்பினார். ‘கணையாழி’ என்று பெயரிட்டார். ஆகஸ்ட் 15-ம் தேதியன்று, முதல் இதழ் வெளிவந்தது. இரண்டாம் இதழிலிருந்தே ஆரம்ப எழுத்தாளனான என்னை எழுதச் சொன்னார். ‘ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்’ என்ற பெயரும் சூட்டினார்.
42 ஆண்டுகள் கழிந்த பின், போன வாரம் கஸ்தூரிரங்கன், இ.பா., லா.சு.ரங்கராஜன், நான் நால்வரும் சந்தித்து அந்தத் தினங்களை நினைவுகொண்டோம். கணையாழியின் தங்க காலத்தில், தமிழகத்தின் அத்தனை கவிஞர்களும், கதாசிரியர்களும் எழுதினார்கள். சிறந்த இலக்கிய, அரசியல் கட்டுரைகள் வெளிவந்தன. எஸ்.எஸ்.வாசன், கருணாநிதி, காமராஜர் போன்றோரின் பேட்டிகள் வந்தன. எம்.ஜி.ஆர். ஆரம்பித்த புதுக் கட்சி பற்றி கட்டுரை எழுதியிருந்தார் ப.சிதம்பரம். ஆரோக்கியமான சர்ச்சைகள் கொண்ட கடிதங்கள் வெளிவந்தன. சிறு பத்திரிகை என்று ஒரு புதிய பாகுபாட்டில் இன்று வெளிவரும் அத்தனை பத்திரிகைகளுக்கும் முன்னோடிகளில் ஒன்றாக இருந்தது கணையாழி.
நாளடைவில், கஸ்தூரிரங்கன் தொடர்ந்து நடத்தச் சிரமப்பட, கணையாழியை தமன் ப்ரகாஷ் பொறுப்பேற்றுச் சில ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார். ‘கௌரவ ஆலோசகர்’ என்று அடியேன் பெயர் அதில் போட்டிருந்தாலும், ஒருவேளை முகவரி தவறிவிட்டதால் காப்பி அனுப்புவதில்லை.
கஸ்தூரிரங்கன் தொடர்ந்து பத்திரிகை நடத்துவதில் உற்சாகம் காட்டவில்லை. அவருடைய கவலைகள் திசை திரும்பி, கிராமத்தில் வேலைவாய்ப்பும் கல்வியும் பரப்ப, ‘ஸ்வச்சித்’ என்று ஓர் அமைப்பைத் துவங்கியுள்ளார்.
கணையாழி நிறம் மாறி, குணம் மாறி இன்னும் வந்துகொண்டுதான் இருக்கிறது எனக் கேள்விப்பட்டேன். பத்திரிகைகள், சினிமா போன்றவை காலப்போக்கில் இவ்வாறு மாறுவது தவிர்க்க முடி யாதது. இன்றைய ‘வெகு ஜனப்’ பத்திரிகைகளின் பழைய இதழ்களைப் புரட்டிப் பார்த்தால், மாற்றம் புரியும். மாறாத பத்திரிகை என்று தேடினால், ஸ்ரீரங்கம் கோயில் வாக்கியப் பஞ்சாங்கம் ஒன்றைத்தான் உடனே சொல்ல முடிகிறது….!!!
நேஷனல் ஜியாக்ரஃபி, ரீடர்ஸ் டைஜஸ்ட், டைம் போன்றவைகூட மெள்ள, அடையாளம் இழக்காமல் மாறியிருக்கின்றன. இன்றைய அமுதசுரபி, கலைமகள், மஞ்சரிகளின் அந்தக் காலத்து வடிவங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதும் சுவாரஸ்யமாக இருக்கும். யாராவது இதில் எம்.ஃபில் செய்திருக்கிறார்களா, தெரியவில்லை.
பத்திரிகைகள் மாறுவதற்கு மூன்று காரணங்கள்…
- ஆசிரியர் மாற்றம் 2. முதலாளி மாற்றம்
- கால மாற்றம்.
‘மீண்டும் கணையாழி’ என்று ஒரே ஒரு மெகா இதழ் கொண்டுவரலாமா என்று கொஞ்ச நேரம் பேசிவிட்டு, பெருமூச்சு விட்டுவிட்டுப் புறப்பட்டோம்.
If you’re yearning for the good old days, just turn off the air conditioning என்னும் Griff Niblack- ன் பொன்மொழி நினைவுக்கு வந்தது.
‘அம்பல’த்தில் குறுந்தொகையின் எளிய அறிமுகம் எழுதிவருகிறேன். சில பாடல்கள் பிரமிக்கவைக்கின்றன. உதாரணம், 130-ம் பாடலின் எளிய வடிவம் இது.
நிலம் தோண்டிப் புகுந்துகொள்ளவில்லை
வானில் ஏறிச் செல்லவில்லை
கடல் மேல் நடந்து செல்லவில்லை
நாடு நாடாக, ஊர் ஊராக
வீடு வீடாகத்
தேடினால் கிடைக்காமலா போவார் காதலர்…..?
வெள்ளிவீதியாரின் இந்தப் பாடல் இரண்டாம் நூற்றாண்டில் இல்லாமல் நேற்று எழுதப்பட்டது என்று சொன்னாலும் நம்பலாம்.
சங்க காலச் சொற்கள் பல இன்று வழக்கொழிந்துவிட்டன. பல பொருள் மாறிவிட்டன.
கீழ்க்காணும் பத்து சங்க கால வார்த்தைகளின் அர்த்தங்கள் (அடைப்புக் குறிக்குள் மூன்றில் ஒன்று) உங்களுக்குத் தெரியுமா எனப் பரிசோதித்துப் பாருங் கள். சரியான விடை இறுதியில்.
- எழுதாக் கற்பு – (பெண்களின் நற்குணம், கருமை, வேதம்.)
- புலத்தல் – (வெறுப்பது, கலைப்பது, கலக்குவது.)
- வரைவு – (சித்திரம், பரிசம், மலைப் பகுதி.)
- ஆடு – (ஒரு சாதுவான மிருகம், வெற்றி, நடனம்.)
- ஐயர்- (புரோகிதர், தலைவர், அரசர்.)
- முருங்குதல் – (கோபிப்பது, சிதைவது, வளைவது.)
- ஞாழல் – (நாணல், கொன்றை, தாமரை.)
8.கறங்கல் – (ஒலித்தல், கமறல், நீக்கல்)
- மகிழ்னன் – (சந்தோஷமானவன், மகிழம்பூ அணிந்தவன், மருத நிலத் தலைவன்.)
- தலைபோதல் – (முடிதல், இறந்துபோதல், காணாமற்போதல்.)
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், தென் அமெரிக்க நாடுகள் முன்னே வராதது எனக்கு வருத்தமே! குறிப்பாக, கால்பந்துக் கவிஞர்கள் அர்ஜென்ட்டினா, பிரேசில்….! இத்தாலி ஆரம்பத்தில் தவித்து, பிற்பாடு ஆட்டத்தை உயர்த்திக்கொண்டது.
ஜிடேன் சிவப்பு அட்டை வாங்கியதும், இறுதியாட்டம் பைத்தியக்கார பெனால்ட்டி ஷூட் அவுட்டில் தீர்மானிக் கப்பட்டதும் சோகமே!
இந்த ஆட்டம் தொடர்பான சிறந்த கார்ட்டூன் அவார்ட், தி ஹிந்துவின் சுரேந்தருக்குப் போகிறது.
இ.சி.ஆர். ரோட்டிலோ, ஐடி சூப்பர் ஹைவேயிலோ பண்ணை வீடுகளின் நீண்ட சுவர்களைக் கடந்து செல்வீர்கள். அந்தச் சுவர்களில் நம்மைப் பிடிவாதமாகத் தொடர்ந்து வரும் சுவர் எழுத்துக்களில் கலைஞர், அம்மா, கேப்டன், தளபதி என்று கட்சிப் பாகுபாடில்லாமல் நம்மோடு வரும். ஒவ்வொரு எழுத்தும் ஐந்துக்கு ஐந்து சீரான உயர, அகலத்துடன் உள்ளன. சுவர்களில் எழுதுபவர்களைப் பற்றி யோசிக்கிறேன். அழகான எழுத்துக்களை எப்படி சுவரின் நீள, அகலத்துக்கேற்ப நெருக்கமோ, பெருக்கமோ இல்லாமல் உத்தேசிக்கிறார்கள் என்று வியக்கிறேன்.
இந்த நாட்களில் சுவரெழுத்துக் கலை நலிந்து வருகிறது. இப்போதெல்லாம் வினைல் வந்துவிட்டது. ஒரு ஃபளாப்பியிலோ சி.டி-யிலோ கொடுத்துவிட்டால், அரை நாளில் பிரமாண்டமான பிரின்ட்டர்களில் புடவைபோல் அச்சடித்து, விளிம்புகளில் வளையம் வைத்துக் கொடுத்துவிடுகிறார்கள். அவற்றை போர்டுகளின் பின்புறம் மடித்து, இழுத்து இறுக்கக் கட்டினால் முடிந்தது வேலை! மெய்வருத்தமே கிடையாது. ஒவ்வொரு பேனரிலும் அழகழகான மாடல்கள், கவனம் கலைக்கும் சுந்தரிகள்.
சுவரெழுத்துக் கலைஞர்களுக்கு நகரத்தில் சில சதுர அடிகளே மிச்சம் உள்ளன. ஜெமினி பார்சன் காம்ப்ளெக்ஸ் அருகில் சில சதுர அடிகள். வள்ளுவர் கோட்டம் தாண்டினதும் சில. அவ்வளவுதான்!
இந்தக் குறுகிய இடத்தில் புதுப்படங்களை அறிவிக்க வேண்டும். வாரப் பத்திரிகைகள் அலற வேண்டும். பிறந்த நாள், இறந்த நாள், மறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டும். சிரம ஜீவனம் தான்.
இவர்களுக்கு ஆறுதலாக ஒரு வெண்பா தர, நண்பர் நவகாளமேகனைக் கேட்டபோது…
வினைல்போர்டு வந்து வியாபாரம் போனால்
நினைந்து வருந்த வேண்டாம் நண்பா – வினைல்போர்டு
அலுத்துப்போய் மீண்டும் அதேவடிவில் உந்தன்
எழுத்துக்குத் தேவை வரும்.
சங்க கால விடைகள் :
1.வேதம், 2.வெறுப்பது, 3.பரிசம், 4.வெற்றி, 5.தலைவர், 6.சிதைவது, 7.கொன்றை, 8.ஒலித்தல், 9.மருத நிலத் தலைவன், 10.முடிதல்.
9-லிருந்து 10 வரை சரியென்றால், உங்களுக்கு ‘சங்கராசு’ என்று பட்டப் பெயரும், ஒரு கிராம் தங்கக் காசும், ஆரோக்யா நாலரைப் பால் ஒரு பாக்கெட்டும் வாங்கிக்கொள்ளவும். (நிறைய நீர் சேர்த்துக் காய்ச்சவும்.) …😉😉😉
……………………………………………………………………………………………………………………………………………..



[…] […]