இங்கிவனை யான் பெறவே – ஆர்.வி.

………………………………………………………..

………………………………………………………

மகாபாரதத்தின் முக்கியமான சில கதாபாத்திரங்களை கதாசிரியர் ஆர்.வி.அவர்கள் தனது கற்பனையில், வித்தியாசமான சில கோணங்களில் இங்கே வடித்துக் காட்டி இருக்கிறார்….!!!

………………………………………………….

கர்ணனின் உடல் ஆறு நாழிகையாகக் காத்துக் கொண்டிருந்தது.

துச்சாதனனுக்கு கொள்ளி வைத்துவிட்டு அதற்குப் பிறகுதான் துரியோதனன் கர்ணனின் சிதைக்கு வந்திருந்தான். சிதைக்கருகே வந்ததும் அவன் சரிந்து தரையில் உட்கார்ந்தான். அவன் நோக்கு எங்கேயோ வெற்றிடத்தில் நிலைத்திருந்தது.

17 நாட்களில் எத்தனையோ உடல்கள் எரிக்கப்பட்டதில் எலும்புகளின் சாம்பல் வெண்பூச்சாக தரை மேல் படிந்திருந்தது. இன்றைய சிதைகள் அணைந்து கொண்டிருந்தன. மெல்லிய சிவப்பொளியில் இடுகாடு வினோதக் காட்சியாகத்தான் இருந்தது. துரியோதனன் அணிந்திருந்த கறுப்பு உடை அந்த வெண்பூச்சு தரைக்கு பெரிய மாற்றாகத் தெரிந்தது. அவன் தலைமுடியில் அங்கங்கே கரி படிந்திருந்தாலும் அங்கங்கே மட்டும் நரைத்திருந்த அவன் தலை முடியில் அது தெரியவே இல்லை. கருநிற ஆடை சில இடங்களில் பொசுங்கிப் போய் அவன் வெண்ணிற உடல் சிதைகளின் ஒளியில் பளிச்சிட்டது.

அறிவிப்பு எதுவும் இல்லாவிட்டாலும் துரியோதனன்தான் சிதைக்கு தீ மூட்டப் போகிறான், விருஷகேது அஸ்தினாபுரத்திலிருந்து வரப் போவதில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பின்னும் துரியோதனன் தீ வைக்க எழவில்லை.

இரண்டு நாழிகை காத்திருந்த பின்னர் சகுனி அருகில் சென்று துரியோதனனின் தோளில் கை வைத்து ஏதோ சொல்ல முற்பட்டார். துரியோதனன் கீழ் ஸ்தாயியில் உறுமினான். சகுனி கைகளை விலக்கிக் கொண்டு பின்வாங்கிவிட்டார்.

போருக்கு முன்னரே இடுகாட்டில் சேகரிக்கப்பட்டிருந்த சந்தனக் கட்டைகள் எப்போதோ தீர்ந்துவிட்டிருந்தன. அரச குடும்பத்தினருக்கு மட்டுமே சந்தனக் கட்டைகள் என்று விதி வகுத்தும் தேவையான சந்தனக் கட்டைகள் இல்லை. இரண்டு நாளாக நெய்யும் தீர்ந்துவிட்டிருந்தது.

இன்று இடுகாட்டில் உடைந்த தேர்த்தட்டுகளும், சக்கரங்களும்தான் விறகாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன. விழுந்திருந்த யானை, குதிரைகளின் உடல் கொழுப்புதான் நெய்யாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதனால் துர்நாற்றம் ஏற்பட்டிருந்தது, ஆனால் சில நிமிஷங்களில் பழகிவிட்டதால் அதை யாரும் உணரக் கூட இல்லை.

நேரம் சென்று கொண்டே இருந்தது. சுபாகு சகுனியிடம் “நீங்கள் இன்னொரு தடவை சொல்லிப் பாருங்கள்” என்று மெதுவாகச் சொன்னான். சகுனி பெருமூச்செறிந்தார். “இல்லை, அவனை அவன் போக்கில் விட்டுவிடுவோம். துச்சாதனனின் இறப்பைக் கூட ஏற்றுக் கொண்டுவிட்டான், ஆனால் அவனால் கர்ணன் இனி இல்லை என்பதை ஏற்க முடியவில்லை. எப்போது அவன் மனதில் அது பதிகிறதோ அப்போது தீ வைக்கட்டும். அவனைத் தனிமையில் விடுவோம், நாம் கிளம்புவோம்” என்று சொன்னார்.

மரத்தின் மீது சாய்ந்து கொண்டிருந்த அஸ்வத்தாமன் கிருபரை லேசாக உலுக்கினான். நின்ற நிலையிலேயே கண்ணயர்ந்துவிட்ட கிருபர் சிறு அதிர்ச்சியோடு விழித்துக் கொண்டார். “அரசரை அவர் போக்கில் விட்டுவிடுவோம், பாசறைக்குச் செல்வோம் என்கிறார் காந்தாரர்” என்று அவன் முணுமுணுப்பான குரலில் சொன்னதும் கிருபர் தலை அசைத்தார். அனைவரும் சத்தம் வராமல் பின்வாங்கி பாசறை பக்கம் நடந்தனர்.

துரியோதனனின் மனம் வெறுமையில் ஆழ்ந்திருந்தது. சுற்றிலும் இருந்தவர்கள் சென்றது அவனுக்குத் தெரியவும் தெரிந்தது, அதே நேரத்தில் தெரியவும் இல்லை. அவன் மனதின் ஒரு சரடு உடன் பிறந்தவனும், தனது நிழலானவனுமான துச்சாதனன் மறைவு கூட தனக்கு இத்தனை பெரிய காயத்தை ஏற்படுத்தவில்லை என்பதை உணர்ந்து வியந்தது.

திடீரென்று அவன் கண்களில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. இரண்டு நிமிஷம் கழித்து பெரிய குரலெடுத்து அழுதான். அழ ஆரம்பித்ததும் சுற்றுமுற்றும் ஒரு முறை பார்த்தான். யாரும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டதும் இன்னும் பெரிய குரலெடுத்து விம்மினான். “துச்சா! “ என்று அலறினான். நெஞ்சில் அடித்துக் கொண்டான். தாவி எழுந்தான். கர்ணனின் சிதை அருகே சென்று கர்ணனின் கைகளை எடுத்து தன் கண்ணோடு ஒற்றிக் கொண்டு அழுதான்.

“சுயோதனா!” என்று துயர் ததும்பிய ஒரு பெண் குரல் கேட்டது. தீயை மிதித்தது போல துரியோதனன் அதிர்ந்து திரும்பினான். புதர் மறைவிலிருந்து குந்தியும் யுதிஷ்டிரனும் வெளிப்பட்டனர்.

துரியோதனன் இன்னும் பெருங்குரலெடுத்து அழுதான். “அன்னையே!” என்று அலறியபடியே குந்தியை அணைத்துக் கொண்டான். அடிபட்ட காட்டு மிருகம் போல கதறினான். குந்தி அவன் மார்பளவுதான் உயரம், அவன் அணைப்பில் மூச்சுத் திணறினாள். யுதிஷ்டிரன் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தான். “தருமா!” என்று அழுதபடியே திரும்பி அவனையும் தழுவிக் கொண்டான்.

“யுதிஷ்டிரா, ஏன் வஞ்சமும் போட்டி மனப்பான்மையும் ஆணவமும் அகங்காரமும் உள்ள க்ஷத்ரியராகப் பிறந்தோம்? வேடனாக, மீனவனாக, இடையனாக, குதிரைச் சூதனாக பிறந்திருந்தால் நூற்றைவரும் எத்தனை மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாம்? அடுத்த ஜன்மம் என்று ஒன்று இருந்தால்…” என்று துரியோதனன் விம்மினான்.

தருமன் ஒன்றும் பேசவில்லை. வெறுமனே துரியோதனன் கைகளைப் பிடித்துக் கொண்டான். குந்தி துரியோதனன் முதுகை நீவிக் கொடுத்தாள்.

“குதிரைச் சூதனாகப் பிறந்த இவனையும் நான் நிம்மதியாக வாழவிடவில்லை, அவனையும் அரசனாக்கி இந்த க்ஷத்ரிய நரகத்தில் ஆழ்த்திவிட்டேன்!” என்று துரியோதனன் விசும்பினான்.

மெதுமெதுவாக துரியோதனனின் மார்பு குலுங்குவது அடங்கியது. மீண்டும் தரையில் சரிந்து உட்கார்ந்தான். யுதிஷ்டிரனின் கைகளைப் பிடித்துக் கொண்டான். தழுதழுத்த குரலில் “உனக்கு ஆயிரம் கொடுமை இழைத்த எனக்கு ஆறுதல் சொல்ல வந்திருக்கிறாய், உன் பெருந்தன்மை யாருக்கு வரும்! துஷ்யந்தனும் பரதனும் யயாதியும் ஹஸ்தியும் குருவும் அல்ல, நீயே குரு வம்சத்து அரசர்களில் அறச்செல்வன்!” என்று துரியோதனன் மேலும் அழுதான்.

“நான் அத்தனை உத்தமன் அல்லன்” என்று யுதிஷ்டிரன் முனகினான்.

குந்தி பேச வாயெடுத்தாள்.அவளுக்கு வார்த்தை திக்கியது. மீண்டும் மீண்டும் அவள் தொண்டை ஏறி இறங்கியது. இப்படியே சில நிமிஷங்கள் போனதும் அவள் யுதிஷ்டிரன் பக்கம் பார்வையைத் திருப்பினாள்.

யுதிஷ்டிரன் இரண்டு கட்டை விரலும் ஒன்றாக சேர்த்து கட்டப்பட்டிருந்த கர்ணனின் பாதங்களையே நோக்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு அவை குந்தியின் பாதங்கள் போலவே தோற்றம் அளித்தன. அவன் பார்த்த வரையில் கர்ணன், குந்தி இருவருக்கும்தான் பாதத்தின் இரண்டாவது, மூன்றாவது விரல்கள் கட்டை விரலை விட நீண்டவை.

திடீரென்று குந்தி தெளிவான, உறுதியான குரலில் “கர்ணன் என் மைந்தன், அவனே நூற்றைவருக்கும் மூத்தவன், அஸ்தினபுரி அரியணை அவனுடையது” என்றாள்.

களைப்பால் மூடி இருந்த துரியோதனன் விழிகள் சட்டென்று திறந்தன. குதித்து எழுந்தவன் கால் தடுமாறி கீழே விழப் போனான். தருமன் அவனைப் பிடித்துக் கொண்டான்.

“உன் சிறிய தந்தையை மணம் புரிவதற்கு முன்பே அவனைப் பெற்றேன். பழி அச்சத்தால் அவனை கைவிட்டேன். அவனை என் மகன், அஸ்தினபுரியின் வாரிசு என்று சொல்ல எனக்கு வாய்ப்புகள் இருந்தன, ஆனால் என் தயக்கங்களால் நான் அவற்றை நான் கை தவறவிட்டேன்.

இந்தப் போருக்கு முன் அவனிடம் உண்மையைச் சொன்னேன், மூத்த பாண்டவனாக அரியணை ஏறும்படி கேட்டேன். கொடை வள்ளல் இரவலனை மறுத்த ஒரே தருணம் அதுதான், துரியோதனனுக்காக மட்டுமே போரிடுவேன் என்று என்னை மறுத்துவிட்டான்” என்று குந்தி தொடர்ந்தாள்.

துரியோதனனின் மார்பு விம்மி விரிந்தது. “எனக்காக குருதி உறவையும் துறந்தானா?” என்று மெல்லிய குரலில் முனகினான்.

குந்தியின் குரல் தாழ்ந்தது. “அவனும் என்னிடம் ஒரு வரம் கேட்டான். அவன் இறந்தால் அவன் என் மகன் என்பதை ஊரறியச் சொல்ல வேண்டும், யுதிஷ்டிரன் அவனுக்கு நீர்க்கடன் செய்ய வேண்டும்” என்றாள்.

துரியோதனனின் மனம் குந்தியின் முந்தைய சொற்களிலேயே சுழன்றுகொண்டிருந்தது. “ஒரு தாய் மக்கள் என்று அறிந்திருந்தும் என் பக்கமே நிலை மாறாது நின்றானா? அட என் சொந்தச் சகோதரன் யுயுத்ஸு கூட எனக்கு எதிராக போரிடுகிறானே!” என்றான்

“விசுவாசத்துக்கு, நட்புக்கு இலக்கணம் இவன்தான்! வரலாறு என்னைப் பற்றி நல்லபடியாக ஏதாவது சொல்லும் என்றால் அது நான் கர்ணனின் நண்பன் என்பது மட்டும்தான்” என்று துரியோதனன் சிரித்தான். சில நிமிஷங்கள் முன் வரை துக்கத்தில் முழுகி இருந்த துரியோதனனா இவன் என்று யுதிஷ்டிரன் வியந்துகொண்டான்.

“நாங்கள் இருவரும் தனியாக இருக்கும்போது அவனை கிண்டல் செய்வேன், உனக்கு அர்ஜுனனின் மூக்கு, யார் கண்டது அர்ஜுனனின் தந்தைதான் உனக்கும் குருதித் தந்தையோ என்னவோ, உன் தாய் உன்னை ஆற்றிலே விட்டுவிட்டாள், அர்ஜுனனின் தாய் அவனை முழுமையாக ஏற்றிருக்கிறாள் என்பேன். அவன் எனக்கு அர்ஜுனன் மூக்கு அல்ல, அர்ஜுனனுக்குத்தான் என் மூக்கு என்று சொல்லிச் சிரிப்பான். ஒரே தந்தை அல்ல, ஒரே தாய்!”

குந்தி விம்மினாள். “நான் பீஷ்மரையும் துரோணரையும் என்றும் அஞ்சியதில்லை. அவர்கள் என் மைந்தரை வெல்லலாம், ஆனால் ஒரு நாளும் அவர்கள் கையால் என் மைந்தருக்கு இறப்பில்லை. நான் எப்போதும் அஞ்சியது கர்ணன் ஒருவனைத்தான். உண்மை தெரிந்தால் அவனையும் அஞ்ச வேண்டி இருக்காது என்று நினைத்தேன், ஆனால் உங்களுக்கு ஆறு மைந்தர் எப்போதுமில்லை, ஐந்து மட்டும்தான் என்பதுதான் உங்கள் ஊழ் என்று சொல்லிவிட்டான்”

துரியோதனன் திரும்பினான். “இன்னும் என்ன ஒளிவு மறைவு? வாருங்கள்” என்று அழைத்தான். பீமனின் பேருருவம் முதலில் வெளிப்பட்டது. சீரான காலடிகளோடு அவன் முன்னால் வர, மற்ற மூவரும் தயக்கத்துடன் அவனைப் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் பின்னால் வந்த திரௌபதியின் கூந்தலில் அங்கங்கே சிவப்பு நிறம் திட்டுதிட்டாகத் தெரிந்தது. கடைசியாக சிறிதும் மாசில்லாத உடையுடனும் மயில் பீலியுடனும் கிருஷ்ணனும் வந்தான்.

பீமனின் கண்களில் கேள்வி தெரிந்தது. துரியோதனன் தன் மூக்கின் அடியில் விரல்களை சுழற்றிக் கொண்டான். “உண்மை, நீ காட்டு விலங்குதான், உன் ஓங்கிய உடலையும் உன்னால் புலி மறைந்திருப்பது போல மறைத்துக் கொள்ள முடியும்தான். ஆனால் இடுகாட்டிலும் உன் உடலிலிருந்து வரும் நிண நாற்றம் தனியாக தெரிகிறது பீமா!“ என்று துரியோதனன் சொன்னான்.

பீமன் புன்னகைத்தான். “என்னடா இது வெறும் தசை மலையான உன்னிடம் விற்போரில் எப்படி பதினான்காம் நாள் தோற்றான் என்று வியந்து கொண்டிருந்தேன், இன்றுதான் புரிகிறது, அவனுக்கும் தானாடாவிட்டாலும் தன் சதை ஆடிவிட்டது” என்று துரியோதனன் சிரித்தான். பீமன் புன்னகைப்பதை நிறுத்தவில்லை, ஆனால் அவன் கண்ணோரம் ஈரம் தெரிந்தது.

“தம்பியர் உயிர் அவன் கொடுத்த கொடை! உன் உயிர் கூடத்தான் பார்த்தா!” என்றான். அர்ஜுனன் தன் தலை முடியை சிலுப்பிக் கொண்டான். கண்ணன் அவன் காதருகே ஏதோ முணுமுணுத்தான்.

“ஆம் எனக்கு இப்போதுதான் எல்லாம் புரிகிறது. என் தோழனின் வள்ளன்மையைப் பற்றி உனக்கு ஏதாவது ஐயம் இருந்தால் உன் தோழனிடம் கேட்டுக் கொள்! அவன் நினைத்திருந்தால் போருக்கு வந்த முதல் நாளே உன்னைத் தேடி வந்து போரிட்டிருக்கலாம், சக்தி ஆயுதம் உன்னைக் கொன்றிருக்கும்.

ஒரு வேளை உன் சாரதி அன்று நீங்கள் நேருக்கு நேர் போரிடுவதைத் திறமையாகத் தவிர்த்திருந்தாலும், அடுத்த இரண்டு நாட்களில் அவன் சம்சப்தகனாக உன்னை எதிர்த்திருக்கலாம், இந்த மாயவனாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது. ஜயத்ரதனை நீ தேடி வந்தபோது உன் தமையன் உன்னைக் கொன்றிருக்கக் கூட வேண்டாம், உன்னோடு நேரடியாகப் போரிட்டிருந்தாலே போதும், உன்னால் அவனை மீறி ஜயத்ரதனை அணுகி இருக்க முடியாது, நீயே தீக்குளித்து இறந்திருப்பாய், உன் உயிர் அவன் போட்ட பிச்சை!”

துரியோதனன் குரல் ஓங்கி ஒலித்து அடங்கியது. அவனுக்கு மூச்சிரைத்தது. பாண்டவர்களும் திரௌபதியும் குந்தியும் குனிந்த தலை நிமிரவில்லை. கண்ணன் மட்டுமே புன்னகை மாறாத முகத்தோடு துரியோதனை நேருக்கு நேர் பார்த்தான்.

துரியோதனனின் முகம் பிரகாசித்தது. அவனது நெஞ்சுக் கூடு மேலும் விம்மி விரிந்தது. அவனது ஒரு மயிர்க்காலிலும் மகிழ்ச்சியும் பெருமிதமும் சுடர் விட்டன. “இவனும் பீஷ்மரும் துரோணரும் இருந்தும் தோற்கிறோமே என்று என் மனதில் இருந்த உறுத்தல் இப்போதுதான் தீர்ந்தது. என் தோழன் போட்ட பிச்சைதானா உங்கள் வெற்றி! இனி நீங்கள் வென்றால்தான் என்ன?!” என்று சிரித்துக் கொண்டான்.

நாலடி எடுத்து குந்தியின் அருகே சென்றான். குந்தியின் மோவாயில் கையைக் கொடுத்து அவள் முகத்தை நிமிர்த்தினான். “அது எப்படி அன்னையே? பிறந்ததும் அவனை ஆற்றில் விட்டீர்கள். அவனிடம் ஒரு வார்த்தை கருணையுடன் பேசியதில்லை. குதிரைச் சாணத்தின் நாற்றம் வீசுகிறது என்று இந்த பீமன் இழித்துரைக்கும்போது தமையன் என்று சொல்ல உங்கள் ஆசைகள் உங்களைத் தடுத்தன,

சரி. ஆனால் இது முறைமை அல்ல, அவனை இழிவாகப் பேசாதே என்று பட்டும் படாமலும் அறிவுரைக்கக் கூட உங்களுக்கு மனம் வரவில்லையே! போர் உறுதியான பிறகு மட்டுமே புத்திரபாசம்! நீ மூத்தவன், அரியணை உனக்குத்தான் என்று ஆசை வேறு காட்டி இருக்கிறீர்கள்! இதோ இந்த பாஞ்சாலி உனக்கும் துணைவி ஆவாள் என்று கூட சொல்லி இருப்பீர்கள்! இதெல்லாம் இந்தக் மாயக்கண்ணனின் ஆலோசனையாகத்தான் இருக்கும், இருந்தாலும் உங்கள் நா கூசவில்லையா அன்னையே!” என்று மெல்லிய குரலில் கேட்டான்.

பீமன் மடிந்து தரையில் அமர்ந்தான். “என் தமையன்! அவனை, அவன் ஆற்றலை என்றும் பழித்திருக்கிறேன். பதிலுக்கு பதிலாகக் கூட உன் மேல் அடுப்புக்கரி வாசம் என்று அவன் சொன்னதில்லை” என்று அழுதான்.

குந்தியின் கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. துரியோதனன் புன்னகைத்தான். “அவன் கேட்டிருக்க மாட்டான், அவனுக்காக நான்தான் கேட்க வேண்டும். நீ என் மகன், உன் சகோதரர்களோடு போரிடாதே என்று அவனிடம் சொன்னீர்களே, ஏன் இந்தப் பார்த்தனிடம் கர்ணன் உங்கள் தமையன், அவனோடு போரிடாதே என்று சொல்லவில்லை?

கர்ணன் தன் தம்பிகளுடன் போரிடுகிறான் என்பதை உணர வேண்டும், தம்பி ஆயிற்றே என்று அவன் வில் ஒரு கணமாவது தயங்கும், பார்த்தனுக்கு அப்படி எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாது, அவன் கர்ணனை இரக்கமில்லாமல் கொல்ல வேண்டும் என்பதுதானே உங்கள் திட்டம்?” குந்தியின் வாய் சிறிய வட்ட வடிவில் திறந்தது. அவள் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். அவள் கண்ணீர் கூட நின்றுவிட்டது.

துரியோதனன் சுற்றுமுற்றும் பார்த்தான். பீமனின் அருகே சென்று முழந்தாளிட்டான். “நீயும் நானும் அவனும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள். பீமன் கௌரவனாக இருந்திருக்க வேண்டும் என்று அவன் அடிக்கடி சொல்லுவான், அவன் – நானும் – நெருக்கமாக உணர்ந்த எதிரி நீயே, என்றாவது நீ வீர சுவர்க்கம் போனால் உன்னை மெய் தழுவி வரவேற்கப் போகும் முதல் வீரன் அவனாகத்தான் இருப்பான். நாம் நம் வஞ்சங்களுக்கு அடிமையானோம், ஆனாலும் அவன் ஆசி – என் ஆசியும் – உனக்கு எப்போதும் உண்டு” என்று அவன் தலையைத் தொட்டான். பீமன் அவன் கையைப் பிடித்துக் கொண்டு விசும்பினான்.

துரியோதனன் எழுந்தான். கர்ணனின் உடலருகே சென்று அவன் வலது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.“செத்தும் கொடுக்கிறாய் கர்ணா! நானும் உன் பின்னால் தொடரத்தான் போகிறேன், ஆனால் உன் நண்பன் என்ற பெருமிதத்தோடு இறப்பேன். அற்பர்களால் உன்னை நேர்மையான போரில் வெல்ல முடியுமா என்ன?” என்று தழுதழுத்தான்.

பிறகு யுதிஷ்டிரன் பக்கம் திரும்பினான். “யுதிஷ்டிரா, அவனைத் திட்டமிட்டு கொன்ற உன் அன்னை இன்று வந்து கண்ணீர் வடிப்பது நீலித்தனம். நீங்களே அவனைக் கொன்றுவிட்டு கொள்ளியும் வைப்பீர்களா? அவனே வரமாகக் கேட்டிருந்தாலும் சரி, உனக்கு இவன் சிதைக்கு தீயூட்டும் தார்மீக உரிமை இல்லை. நீங்கள் போகலாம்” என்று திட்டவட்டமாக அறிவித்தான். பிறகு மீண்டும் திரும்பி கர்ணனின் உடலை நோக்கினான்.

இரண்டு நிமிஷத்தில் அவன் தோளில் ஒரு கை படிந்தது. நீளமான அழகிய கருமை நிற விரல்கள். எதுவுமே நடக்காத மாதிரி துரியோதனன் காட்டிக் கொள்ள விரும்பினாலும் அவன் உடல் இறுகியது. அவன் உதடுகள் அழுந்தின. “இல்லை கண்ணா, என் உறுதி மாறாது” என்றான்.

“கர்ணனின் உடலுக்கு யார் தீயூட்டுவது என்பது உன் முடிவு மட்டுமே. நானோ, அத்தையோ, யுதிஷ்டிரனோ அதைத் தீர்மானிக்க முடியாது. கர்ணனே தருமன்தான் தன் உடலுக்கு தீயூட்ட வேண்டும் என்று அத்தையிடம் வரம் கேட்டிருந்தாலும் அதையும் மாற்றும் உரிமை உனக்குண்டு” என்று மிருதுவான குரலில் துரியோதனனின் தோளை அழுத்திக் கொண்டே கண்ணன் சொன்னான்.

துரியோதனன் திரும்பி கண்ணனை கண்ணீருடன் பார்த்தான். “அவன் அபூர்வமாக இன்னொருவரிடம் ஒன்றைக் கேட்டிருக்கிறான், அதையும் அவனுக்கு மறுக்கிறேனே” என்றான். “வீர சொர்க்கத்திலிருந்து அவன் உன் முடிவை நிச்சயம் ஏற்றுக் கொள்வான், உனக்கு எந்த யோசனையும் வேண்டாம்” என்று கண்ணன் புன்னகையோடு சொன்னான்.

“இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!” என்று துரியோதனன் மிருதுவான குரலில் புலம்பினான். கண்ணன் அவனை அணைத்துக் கொண்டான். யுதிஷ்டிரனுக்கு கண் காட்டினான். அவர்கள் மெதுவாக இடுகாட்டை விட்டு விலகத் தொடங்கினர். கண்ணனும் தன்னை விடுவித்துக் கொண்டு அவர்களைத் தொடர்ந்தான். அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த நகுலனிடம் “இது பெரும் துக்கம். ஒரே நாளில் துச்சாதனனும் இவனும் இறந்திருக்கக் கூடாது” என்று சொன்னான்.

துச்சாதனனின் பேரைக் கேட்டதும் துரியோதனனின் முகம் இறுகியது. அவன் தாவி கண்ணனின் வலது கையைப் பிடித்தான். கண்ணன் திரும்பி தன் கண்களாலேயே என்ன என்று வினவினான். துரியோதனன் பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் மனதில் ஏதோ தீவிர சிந்தனைகள் ஓடுவது தெளிவாகத் தெரிந்தது. பாண்டவர்கள் காத்து நின்றனர்.

ஒரு நிமிஷம் கூட சென்றிராது, ஆனால் அது ஒரு யுகமாகத் தெரிந்தது. துரியோதனன் “அடப்பாவி” என்று முனகினான்.

மீண்டும் மௌனமானான். கண்ணனைத் தவிர்த்த மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றனர். மேலும் இரண்டு நிமிஷம் கழித்து வலுத்த குரலில் “துரோகி!” என்று உறுமினான். அருகே இருந்த நெய்ப்பந்தத்தை எடுத்து யுதிஷ்டிரனை நோக்கி எறிந்தான். பீமன் பாய்ந்து அது தருமன் மீது படாமல் பிடித்துக் கொண்டான்.

“அவன் என் தோழன் அல்லன், உங்கள் தமையன் மட்டுமே!” என்று கத்தியபடியே தன் நெஞ்சில் மாறி மாறி அறைந்து கொண்டான். “தன் தம்பியரின் உயிரைக் காக்க என் தம்பியரை, ஏன் என்னையே பலி கொடுத்துவிட்டான்!” சிங்கத்தைப் போல உறுமிக் கொண்டே அருகில் இருந்த அடிமரத்தை உதைத்தான். மரம் ஆடி மீண்டும் நிலை கொண்டது.

“நான் இவனைத்தான் முழு மனதாக நம்பினேன், பீஷ்மரையும் துரோணரையும் நம்பி போர் தொடுக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் தன்னை நிராகரித்த அன்னை ஒரு வார்த்தை சொன்னதும் மற்ற நால்வரையும் கொல்லேன் – அதுவும் என்னைக் கொல்லப் போவதாக சூளுரைத்திருக்கும் இந்த பீமனையும் கொல்லேன் – என்று வாக்களித்திருக்கிறான். அர்ஜுனனைக் கொல்லக் கிடைத்த வாய்ப்புகளையும் அவன் வேண்டுமென்றேதான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அன்னை என்று தெரிந்த அன்றே பாண்டவர் வெல்ல வேண்டும், நான் தோற்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறான்,

தன் மேல் பழி வரக்கூடாது என்பதற்காக தன் உயிரைக் கொடுத்திருக்கிறான். பீமனிடமிருந்து இவனைக் காக்க எத்தனை தம்பியர் அன்று ஒரே நாளில் உயிர் இழந்தனர்? அடப்பாவி! இதுதானா உன் செஞ்சோற்றுக்கடன்? குதிரைச் சாணம் பொறுக்க வேண்டிய உன்னை அரசனாக்கி தோழன் என்று மார்போடு அணைத்து கொண்ட எனக்கு நீ காட்டிய விசுவாசம் இதுதானா?

சுப்ரியையை சேடியாக அல்ல, சகோதரியாகவே கருதினாளே பானு! உங்கள இருவருக்கும் எத்தனை விமரிசையாக திருமணம் செய்து வைத்தாள்? அவளுக்கும் துரோகமா? உன்னை நம்பி மோசம் போனேனே! துச்சா! துச்சா!” என்று அலறினான். “அய்யோ! அய்யோ!” என்று தலையில் அடித்துக் கொண்டான். ஓநாய் போல ஊளையிட்டான்.

சகதேவன் தவிர்த்த மற்ற பாண்டவர்களும் குந்தியும் திகைத்து நின்றனர். யாருக்கும் வார்த்தையே எழவில்லை. கிருஷ்ணன் தனது வழக்கமான புன்னகையோடு நின்றிருந்தான். சகதேவன் மட்டும் முன்னகர்ந்து துரியோதனனை அணைத்துக் கொண்டான். துரியோதனன் சகதேவன் தோளில் சாய்ந்து அழுதான்.

சகதேவன் துரியோதனனின் தலை முடியைக் கோதினான். “உங்கள் துக்கம் எங்களுக்கும் உண்டு அண்ணா! என்ன செய்வது, இவை அனைத்தும் சூதாட்டத்தின்போதே முடிவாகிவிட்டது. ஆனால் இரண்டு பக்கத்திலும் அடி மனதில் இன்னும் பாசம் வற்றவில்லை. இரண்டாமவரின் ரத்தத்தை தலையில் பூசிக் கொண்டபோது பாஞ்சாலியும் கண்ணீர் உகுத்தாள் என்பது உங்களுக்கு வியப்பளிக்கலாம், ஆனால் உண்மை” என்றான்.

துரியோதனன் நிமிர்ந்து திரௌபதியைப் பார்த்தான். பெருங்குரலெடுத்து அழுதான். “உயிர் நண்பன் என்று நம்பியவன் துரோகம் செய்துவிட்டான். நான் இழிவுபடுத்திய எதிரிகள் என் மீது பாசம் காட்டுகிறீர்கள்” என்று விக்கிக் கொண்டே சொன்னான். தருமன் தன் கச்சையிலிருந்து ஒரு மதுக் குப்பியை எடுத்து நீட்டினான். துரியோதனன் விம்மிக் கொண்டே இரண்டு மிடறு மதுவை அருந்தினான். மது அவன் வாயோரம் கொஞ்சம் வழிந்தது.

பீமன் திடீரென்று கடகடவென்று நகைத்தான். “அவன் உடலுக்கு தீயூட்டும் தார்மீக உரிமை எங்களுக்கு இல்லைதான். ஆனால் உனக்கும்தான் இல்லை. இறந்த பிறகும் அவனுக்கு விடிவுகாலம் இல்லை. அவன் உடலை நாயும் நரியும் தின்னத்தான் விடப் போகிறோம்! உன் விதி அதிசயமானதுதான் அண்… அண்… அண்ணா!” அதே மூச்சில் அவன் நகைப்பு அழுகையாக மாறியது.

துரியோதனன் புரியாமல் தலையை உயர்த்தினான். “மூடா, எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது, விருப்பம்தான் இல்லை. அவன் வாழ்வே நான் போட்ட பிச்சை” என்றான்.

“பிச்சை போட்டிருக்கிறாய். அதாவது, நீ புரவலன், அவன் இரவலன். நீ எஜமானன், அவன் பணியாள். சமமான தோழர்கள் இல்லை” என்று பீமன் முகத்தை சுளித்தான்.

துரியோதனன் அடிபட்டது போல தள்ளாடினான். “இல்லை…” என்று வாயெடுத்தான், உடனே மௌனமானான்.

“அவனை அரசனாக்கினேன், க்ஷத்ரியன் என்று ஏற்றுக் கொண்டேன் என்று பெருமை பேசுகிறாயே, நீ ஏன் துச்சளையை அவனுக்கு மணம் செய்து வைக்கவில்லை? அவன் வீரமும் கவசமும் குண்டலமும் கொடையும் குணமும் அப்போது உன் கண்ணில் படவில்லையா?”

“இல்லை… அதாவது… வந்து… தந்தையும் அன்னையும் மறுத்திருப்பார்கள்”

“ஓ! தந்தை சொல்லை மீறமாட்டாய்! அப்புறம் எப்படி கண்ணன் தூதை மறுத்தாய்?”

“கர்ணன் துச்சளைக்கு சகோதரன் முறை, அவனுக்கு எப்படி துச்சளையை…”

“அது இப்போதுதானே உனக்குத் தெரியும்!”

துரியோதனன் மௌனமானான். ஆனால் பீமன் நிறுத்தவில்லை.

“சரி ஏதோ உள்ளுணர்வால் உறவு முறையைப் புரிந்து கொண்டிருந்தாய் என்றே வைத்துக் கொள்வோம். நூற்றுவரின் மனைவியர் எவருக்கு தங்கைகள் இல்லையா? நீ அழுத்தம் கொடுத்திருந்தால் மறுக்க முடிந்திருக்குமா என்ன? அது என்ன சூதப் பெண்ணும் சேடிப் பெண்ணும்தான் அவனுக்கு மனைவியரா? உன் பட்டமகிஷியின் சேடியை அவனுக்கு மனைவி ஆக்கி இருக்கிறாய்! நாய் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறோம்தான், ஆனால் அதற்காக நாயை நம் இலையிலிருந்தே சாப்பிடவிடுவதில்லை. அவனை நீ நாயாகத்தானே பார்த்திருக்கிறாய்?”

துரியோதனன் தலையைக் குனிந்து கொண்டு நிலத்தை நோக்கினான். “உண்மையைச் சொல், அவன் ஏறக்குறைய அர்ஜுனனுக்கு சமமான வீரனாக இல்லாவிட்டால் உன் தோழன் என்று சொல்லிக் கொண்டிருப்பாயா?”

துரியோதனன் குனிந்த தலை நிமிரவில்லை. பீமன் தொடர்ந்தான். “அவன் வாழ்நாள் முழுவதும் தேடியது அங்கீகாரம். உனக்கு அவன் தோழன் அல்ல, வெறும் தொண்டு செய்யும் அடிமை. அவனை ஒரு க்ஷத்ரியனாக நீயும் முழு மனதாக ஏற்கவில்லை. எங்கள் கதையோ, என்னத்தைச் சொல்ல! பிதாமகர் அவனை நல்ல வீரனாக அங்கீகரிக்கவில்லை. துரோணர் அவனை நல்ல மாணவனாக அங்கீகரிக்கவில்லை.

பரசுராமரைப் பற்றி சொல்லவே வேண்டாம். உன்னிடம் கிடைத்த குறைந்த பட்ச அங்கீகாரத்துக்காக, வெறும் சோற்றுக் கடனிற்காக உயிரைக் கொடுத்திருக்கிறான். என் தாய் தானம் கேட்டபோது அவனால் வாழ்க்கையில் முதல் முறையாக சூதன் என்ற இடித்துரைப்புகளிலிருந்து விடுபட முடிந்திருக்கிறது. அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் தர அவன் தயாராக இருந்திருக்கிறான்” என்று கசப்போடு நகைத்தான்.

கண்ணனே பீமனை வியந்து நோக்கினான். பீமனின் முகம் இறுகிக் கிடந்தது. “அவனை இத்தனை தூரம் புரிந்து கொண்டிருப்பது எனக்கே அதிசயமாகத்தான் இருக்கிறது, கண்ணா! ஆனால் இந்த நால்வரையும் எத்தனை தூரம் அறிவேனோ அதே போலத்தான் இப்போது இவனையும் அறிந்திருக்கிறேன். மூத்த பாண்டவன்! கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!” என்று பீமன் விரக்தியோடு நகைத்தான்.

சிறிது நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. பிறகு துரியோதனன் அங்கிருந்த பந்தத்தை எடுத்தான். பீமனின் உடல் தன்னிச்சையாகத் துள்ளியது. ஆனால் துரியோதனன் சிதை பக்கம் போகவில்லை, பந்தத்தை யுதிஷ்டிரனிடம் கொடுத்தான். யுதிஷ்டிரனின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அவன் திருப்பி பந்தத்தை துரியோதனனின் கையிலேயே திணித்தான். துரியோதனன் யுதிஷ்டிரனின் கையோடு சேர்த்து பந்தத்தைப் பிடித்துக் கொண்டான். இருவரும் முன்னகர்ந்து ஒன்றாக சிதைக்கு தீயூட்டினர். குந்தி பெருங்குரலெடுத்து ஓலமிட்டாள்.

………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to இங்கிவனை யான் பெறவே – ஆர்.வி.

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ரொம்ப நல்லா எழுதியிருக்கிறார். இதிஹாசம் என்பதால்தான் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் அவர்கள் செயலை, நடந்துகொண்ட விதத்தை எப்படியும் நியாயப்படுத்த முடியும். Such a grand great history Mahabaratham is. எனக்கு அதைப் படிக்கும்போதெல்லாம் அலுப்பு ஏற்படுவதில்லை. If one wants he can argue for any one’s character and deeds to justify his actions

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.