ஜகா வாங்கவா…? மண்டியிடவா ..??—கூட்டணிக் கட்சிகள் …. ???

……………………………………………

…………………………………………….

தி.மு.க தலைமையில் காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து, கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன. ‘மதவாதச் சக்திகளுக்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணி’ என்ற அடையாளத்துடன் உருவான இந்தக் கூட்டணி, 2024 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில்,‘இந்தியா’ கூட்டணி எனத் தேசிய அளவிலானதாக உருமாறியது. ‘பா.ஜ.க எதிர்ப்பு’ என்கிற ஒற்றைப்புள்ளியில் எல்லோரும் இணைந்து நின்றாலும், ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட கொள்கைகளும், கோரிக்கைகளும், பிரச்னைகளும் இருக்கின்றன.

அந்த வகையில், இந்தக் கூட்டணிக்குள் முரண்பாடுகளும் மனக்கசப்புகளும் அவ்வப்போது வெடித்துத் தணிந்தபடியிருந்தன. ஆனால், சமீபத்தில் வெடித்திருக்கும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டமும், மது ஒழிப்பு முழக்க விவகாரமும், கூட்டணியின் ஆணிவேரையே அசைத்துப் பார்க்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது. அதேசமயம், “தலைமையில் இருப்பவர்கள், தி.மு.க-வின் ஊதுகுழலாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். பிரச்னைகளுக்கான போராட்ட முன்னெடுப்புகளின் தீவிரத்தை நீர்த்துப்போகச் செய்கிறார்கள்” என்று குமுறத் தொடங்கியிருக்கிறார்கள் கூட்டணிக் கட்சிகளின் கீழ்மட்ட நிர்வாகிகள்!

“அரியணை ஏறியதிலிருந்தே கூட்டணிக் கட்சிகளைக் கிள்ளுக்கீரையாகவே பார்க்கிறது தி.மு.க. எங்களுடைய உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் அது கொஞ்சமும் காது கொடுப்பதில்லை. கூட்டணியிலுள்ள கீழ்மட்ட நிர்வாகிகளெல்லாம் தி.மு.க-மீது பெரும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

எங்களின் குரலாக அறிவாலயத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டிய கூட்டணிக் கட்சித் தலைவர்களோ, தி.மு.க-வை மயிலிறகால் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க மேலிடத்திடம் சீற முடியாதவர்கள், எங்கள் குரலை ஒடுக்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள். வி.சி.க-வின் மது ஒழிப்பு மாநாட்டில் தொடங்கி, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வரையில், தி.மு.க-வின் பிரசார பீரங்கிகளாகவே கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மாறிப்போய்விட்டனர்…” எனப் புலம்பித் தீர்க்கிறார்கள் தி.மு.க உறவிலிருக்கும் கூட்டணிக் கட்சிகளின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள்.

என்னதான் நடக்கிறது தி.மு.க கூட்டணிக்குள்…?

வி.சி.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் நம்மிடையே மனம் திறந்து பேசினார்கள். “கட்சியை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல, சில வியூகங்களைத் தனித்துவமாக முன்னெடுத்துவருகிறார் எங்கள் தலைவர் தொல்.திருமாவளவன். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த விவகாரம் பெரிய அளவில் அவரைப் பாதித்ததால்தான், ‘மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டை’ அவர் முன்னெடுத்தார்.

அரசியல்ரீதியான அங்கீகாரத்தைப் பெறும் முயற்சியில், வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை வைத்து, ‘ஆட்சியில் பங்கு… அதிகாரத்தில் பங்கு…’ என ஆட்டத்தையும் தொடங்கினார். மது ஒழிப்பு மாநாட்டுக்கு அ.தி.மு.க-வுக்கு அழைப்பு விடுத்து, தன்னுடைய பவர் பாலிட்டிக்ஸை அடுத்தகட்டத்துக்கும் கொண்டு சென்றார்.

‘தலைவர் புது ரூட்டில் பயணிக்கிறாரே…’ என நாங்களெல்லாம் புளகாங்கிதம் அடைந்த வேளையில்தான், தலைமையை அழைத்துப் பேசி, மாநாட்டின் நோக்கமே சிதையும் அளவுக்கு தி.மு.க தனது ஆட்டத்தை ஆடிவிட்டது. மது ஒழிப்பு மாநாட்டுக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை அனுப்பிவைத்து, எதற்காக மாநாட்டை நடத்தினோமோ, அதன் நோக்கத்தையே சிதைத்துவிட்டது தி.மு.க.

‘இந்தச் சூழ்ச்சியில் திருமா விழுந்துவிட்டாரா… அல்லது தி.மு.க-வுடன் அவரால் போராட முடியவில்லையா..?’ என்கிற கேள்வி, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கெல்லாம் வந்துவிட்டது. அதற்குக் காரணங்களும் இருக்கின்றன. இவ்வளவு பெரிய மது ஒழிப்பு மாநாட்டில், டாஸ்மாக் கடையில் டார்கெட் வைத்து விற்பனை செய்யும் தமிழக அரசை எதிர்த்து ஒரு தீர்மானம்கூட நிறைவேற்றப்படவில்லை.

மது ஒழிப்புக்காகப் போராடியவர் ராஜாஜி. அவருடன் கொள்கை அளவில் எங்களுக்கு முரண்பாடுகள் இருந்தாலும், மது ஒழிப்புக்காகக் குரல் கொடுத்தவர் என்பதால் அவருடைய பேனரை மாநாட்டில் வைத்திருந்தோம். ஆனால், ‘குலக்கல்வியைக் கொண்டு வந்தவருக்கு வரவேற்பா..?’ என்ற விமர்சனத்தை, சமூக வலைதளங்களில் கிளப்பி எங்களுடைய நோக்கத்தையே மொத்தமாகச் சிதைத்துவிட்டது தி.மு.க ஐடி விங்.


இதையெல்லாம் தலைவர், தி.மு.க தலைமையிடம் கொண்டு சென்று நியாயம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவரோ, அதைச் செய்யவே இல்லை. ‘எங்களைவிட்டு நீங்கள் எங்கே போய்விடுவீர்கள்..?’ என்கிற மமதையோடே கூட்டணிக் கட்சியினரைப் பார்க்கிறது தி.மு.க. எங்களுடைய அடிப்படைப் பிரச்னையான கொடிக்கம்பம் நடும் விவகாரத்தில் இதுவரை தீர்வு காணப்படவில்லை. வேங்கைவயல் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. ஆணவக்கொலை தடுப்புச் சட்ட கோரிக்கை அந்தரத்தில் நிற்கிறது.

இப்படியே போனால், களத்தில் எங்களால் எப்படி மக்களைச் சந்திக்க முடியும்… தொண்டர்களை எப்படிக் கட்சி வேலை பார்க்கச் சொல்ல முடியும்… சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில்கூட, அரசுக்கு எதிராக எங்களால் ஒரு வார்த்தை பேச முடியவில்லை. இந்தச் சிக்கலெல்லாம் எங்கள் தலைமைக்குப் புரியாமலில்லை. ஆனால், ஏனோ தலைமை கனத்த மௌனம் காக்கிறது. `கூட்டணி தர்மம்’ என்கிற பெயரில், தி.மு.க-வை எல்லா விஷயங்களிலும் காப்பாற்ற நினைப்பது, கட்சியின் பெயரை நாமே கெடுப்பதற்குச் சமம்” என்றனர் ஆற்றாமையுடன்.

“எங்கள் இயல்பையே இழந்து நிற்கிறோம்!”

வி.சி.க நிர்வாகிகளைவிட கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள்தான் எரிமலையாகக் கொந்தளிக்கிறார்கள். நம்மிடம் பேசிய சி.பி.எம் கட்சியின் சீனியர்கள் சிலர், “தேர்தல் அரசியலில், வெற்றி முக்கியம்தான். அதேசமயம், நிலைத்த அரசியலுக்குக் கொள்கைதான் அடிப்படை. அந்த வகையில், கொள்கை ஒற்றுமையுள்ள கூட்டணி என்கிற அடிப்படையில் `இந்தியா’ கூட்டணியில் இருக்கிறோம். பிற்போக்கு சக்திகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்கிற எச்சரிக்கையோடு, கூட்டணித் தலைமையின் முன்னெடுப்புகளில் உடன் நிற்கிறோம்.

அதற்காக, மக்கள் பிரச்னைகளின்போதும், மக்களுக்கு எதிராக அரசு நடந்துகொள்ளும்போதும் ஆளும் அரசுக்கு எதிராகப் போராடக் கூடாது என்றால், கட்சியின் அடிப்படை நோக்கமே காலியாகிவிடும். ஆனால், கம்யூனிஸ்ட்டுகளால் தற்போது அப்படித் தீவிரமாகக் களத்தில் நிற்க முடியவில்லை என்பதுதான் யதார்த்தம்.

தூய்மைப் பணியில் தொடங்கிய தற்காலிகப் பணியாளர் நியமனத்தை, ஆசிரியர் பணி வரை விரிவுபடுத்திவிட்டது தி.மு.க அரசு. தேர்தல் சமயத்தில், ‘பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவோம்’ என்று வாக்குறுதி கொடுத்த தி.மு.க., ‘அதற்குச் சாத்தியமில்லை’ என்று தற்போது கைவிரித்து விட்டது. இதையெல்லாம் கண்டித்து ஒரு வலுவான போராட்டத்தை கட்சித் தலைமை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. விளைவு, இப்போது எங்கள் இயல்பையே இழந்து நிற்கிறோம்.

அ.தி.மு.க ஆட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டபோது, மாநிலம் தழுவிய போராட்டத்தை சி.பி.எம்., சி.பி.ஐ போன்ற கம்யூனிஸ்ட் இயக்கங்கள் நடத்தின. இந்த தி.மு.க ஆட்சியில் இரண்டு முறை சொத்து வரி, மின்சாரக் கட்டணம், பால்பொருள்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. அவற்றைக் கண்டிக்கும் வகையில் வீரியம் மிக்க எந்தப் போராட்டத்தையும் நடத்த முடியவில்லை.

நாங்கள் கண்டனக் குரல் கொடுக்கும்போதே, கட்சித் தலைமையிடமிருந்து அழைப்பு வந்துவிடுகிறது. ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று தலைமை சொல்லிவிடுவதால், அந்தப் பிரச்னை குறித்து வீரியமாகப் பேச முடிவதில்லை. எங்கள் தலைமைகளைக் கூப்பிட்டு அவ்வப்போது சமாதானம் செய்துவிடும் தி.மு.க-வும் அந்தப் பிரச்னைகளுக்கு எந்தத் தீர்வும் காண்பதில்லை.

தற்போது சாம்சங் போராட்டத்திலும் இதுதான் நடக்கிறது. இது தொழிலாளர் நலன் சார்ந்த பிரச்னை. இதற்காகத்தான் தொழிலாளர் நலத்துறை இருக்கிறது. அதற்கு சி.வெ.கணேசன் அமைச்சராகவும் இருக்கிறார்.

ஆனால், கார்ப்பரேட் ஆலைக்கு ஆதரவாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் தா.மோ.அன்பரசனும் களமிறங்கி நிற்கிறார்கள். சாம்சங் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டிய தமிழ்நாடு அரசு, ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவான ஒரு குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி, உடன்பாடு ஏற்பட்டதாக அறிவித்தது. இந்த மோசடி நாடகத்தைக் கண்டித்து எங்கள் தலைமையிடமிருந்து வெறும் அறிக்கை மட்டுமே பாய்கிறதே தவிர, களத்தில் பம்மித்தான் நிற்கிறார்கள்.

“மழுப்புவதுதான் கம்யூனிஸ்ட் சித்தாந்தமா?”

கடந்த அக்டோபர் 8-ம் தேதி காலையிலேயே, ஊழியர்களைப் போராட்டப் பந்தலுக்குச் செல்லவிடாமல் போலீஸார் தடுத்ததோடு, அன்று இரவு வீடு வீடாகச் சென்று கைதும் செய்தார்கள். `போராடத் தடையில்லை’ என நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட, போராடச் சென்றவர்களைக் கைதுசெய்தது காவல்துறை.

அப்போதுகூட, ‘தி.மு.க அரசு தொழிலாளர்களின் பக்கம் நிற்க வேண்டும்’ என்று வருடிக் கொடுத்தார்களே தவிர, ‘காவல்துறையின் அடக்குமுறை, அரசுத் தரப்பின் சூழ்ச்சிதான்’ என்பதைச் சொல்ல மறுக்கிறது எங்கள் தலைமை. எல்லாவற்றுக்கும் மேலாக, தொ.மு.ச பெயரைப் பயன்படுத்தி, சி.ஐ.டி.யூ போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறது தி.மு.க அரசு.

பிரச்னையைப் பெரிதுபடுத்தாதீர்கள். இது போன்ற தொழிலாளர் பிரச்னை சாம்சங்கில் மட்டும் நடப்பதாகச் சித்திரித்துப் பெரிதுபடுத்துவது சரியல்ல…’ என தொ.மு.ச பெயரில் வெளியான அந்த அறிக்கையை, அரசின் செய்தித்துறை வாயிலாக அனைத்து ஊடகங்களிலும் வெளியிடவைத்து தொழிலாளர்களின் போராட்டத்தை அசிங்கப்படுத்துகிறது தி.மு.க.


இதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டியவர்கள், எதற்கெடுத்தாலும்… ‘தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உரசல் ஏற்படுமா என்று வகுப்புவாத சக்திகள் காத்திருக்கின்றன. அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது’ என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள்.

இப்படி வழவழ கொழகொழவென மழுப்புவதுதான் கம்யூனிஸ்ட் சித்தாந்தமா... இந்த தி.மு.க அரசாங்கம், ‘12 மணி நேரம் வேலை’ என்ற தொழிலாளர் சட்டத்தைக் கொண்டு வந்தபோது, அதைக் கடுமையாக எதிர்த்து போராடினோமே... அதைத் தொடர்ந்து அரசாணையை வாபஸ் பெற்றதே தி.மு.க அரசு... அப்படி களத்தில் இறங்க வேண்டாமா...ஆளுங்கட்சி அடக்குமுறை செய்கிறது’ என சி.ஐ.டி.யூ-வின் அ.சவுந்திரராஜன் அரசுக்கு எதிராகக் கொதித்திருக்கிறார். என்னதான் சி.ஐ.டி.யூ களத்தில் நின்றாலும், அரசியல் கட்சிகளான சி.பி.எம்., சி.பி.ஐ வலுவாக உடன் நிற்கவில்லை என்றால், இதில் தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்காது.

மெரினா ‘விமான சாகச’ நிகழ்வின்போது ஐந்து பேர் உயிரிழந்தபோது, ‘உரிய நேரத்தில் குடிநீர் எடுத்துக்கொள்ளாமல், அதனால் ஏற்பட்ட வெப்ப வாதம் உயிரைப் பறித்திருக்கலாம்’ எனச் சுற்றிவளைத்து கதை சொன்னது அரசு. அப்போது, அரசு சொன்னதைவிட ஒரு படி மேலே சென்று தி.மு.க-வின் கருத்தை வழிமொழிந்து பேசினார் சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். அதைக் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் என யாரும் ரசிக்கவில்லை. ‘தங்களின் போராட்ட குணத்தை கம்யூனிஸ்ட்டுகள், தி.மு.க-விடம் அடகுவைத்துவிடக் கூடாது’ என்பதுதான் எல்லோருடைய கவலையும்” என்றனர் ஆதங்கத்துடன்.

சி.பி.எம் கட்சியின் மீது மட்டுமல்ல, சி.பி.ஐ கட்சியின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் அந்தக் கட்சி நிர்வாகிகள். “இதுவரை தி.மு.க-வுக்கு எதிராகப் பெரிய அளவில் முத்தரசன் எப்போதும் குரல் கொடுத்ததே இல்லை. ஆளும் அரசுக்கு எதிராக ‘கீச்’ என்ற சத்தத்தைக்கூட அவர் எழுப்பவில்லை. சாம்சங் பிரச்னையில்கூட, ‘முதல்வரும் அமைச்சர்களும் தலையிட்டிருக் கின்றனர். விரைவில் தீர்வு கிடைக்கும்’ என்று கூலாகச் சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார்.

`விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசின் கொள்கைதான் காரணம்’ என்று பேசுபவர், இங்கே மின்கட்டணம், சொத்து வரி உயர்வு குறித்துப் பெரிய அளவில் வாய் திறக்கவே இல்லை. ஆனால், உதயநிதியை துணை முதல்வராக நியமித்ததை, தி.மு.க-வினரைவிட அதிகமாக ஆதரித்துப் பேசியது முத்தரசன்தான். கள்ளச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்டபோது, ‘அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வரவேற்கத்தக்கவை.

காவல்துறை, வருவாய்த்துறை, மதுவிலக்கு அமல் பிரிவு ஆகியவற்றில் கறுப்பு ஆடுகள் இருக்கின்றன’ என அதிகாரிகள் பக்கம்தான் அந்தப் பிரச்னையைத் தள்ளிவிட்டாரே ஒழிய, அரசை ஒரு வார்த்தை கண்டிக்கவும் இல்லை; விமர்சிக்கவும் இல்லை. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை உற்சாகமாக வரவேற்றுப் பேசியவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்” என்றனர் வருத்தமாக.

மண்டியிடுகின்றனவா கூட்டணிக் கட்சிகள்?

வி.சி.க-வும், கம்யூனிஸ்ட் இயக்கங்களும் மட்டுமல்ல, கதர் கட்சியும் தி.மு.க-வுக்குச் சாமரம் வீசுவதைத்தான் பகுதி நேர வேலையாகச் செய்துகொண்டிருக்கிறது. காங்கிரஸின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்ற சில மாதங்களில், சென்னை கிண்டியிலுள்ள காமராஜர் நினைவிடத்துக்கு விசிட் அடித்தார் செல்வப் பெருந்தகை. அப்போது, ‘எங்கு பார்த்தாலும் குப்பையும், புல்லும், புதருமாக இருக்கின்றன. குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் இல்லை. காமராஜர் என்ன பெரிய தவறு செய்துவிட்டார்… எதற்காக அவரது நினைவிடம் இவ்வாறு பராமரிப்பின்றி இருக்கிறது?’ எனப் பொங்கினார்.

ஆனால், அடுத்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், அப்படி எதுவுமே தான் பேசவில்லை என்பதுபோல நடந்து கொண்டார். இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பது செல்வப்பெருந்தகைக்கே வெளிச்சம்.

நம்மிடம் பேசிய சீனியர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், “சமீபத்தில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய தலைவர்களெல்லாம், ‘நான்கு எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் வி.சி.க-வே ஆட்சி அதிகாரத்தில் இடம் கேட்கும்போது 9 எம்.பி-க்கள், 18 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் நாம் ஏன் ஆட்சி அதிகாரத்தில் இடம் கேட்கக் கூடாது?’ எனக் கொதிக்க, செல்வப்பெருந்தகைக்கு வியர்த்துப்போனது. ‘இது தொடர்பாக மேலிடம்தான் முடிவெடுக்கும். எனவே, நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்’ எனச் சொன்னதோடு, அவசர அவசரமாகச் செயற்குழுவையும் முடித்துவிட்டுக் கிளம்பினார்.

சாம்சங் தொழிலாளிகள் போராட்டம் தனது சொந்தத் தொகுதியில் நடக்கும் நிலையிலும், மறந்தும் அந்தப் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்கவில்லை செல்வப்பெருந்தகை. தி.மு.க-வுடன் இணக்கமாக இருப்பவர் என்பதால்தான் செல்வப்பெருந்தகையை காங்கிரஸ் தலைவராக நியமித்தது டெல்லி மேலிடம். ஆனால், டெல்லியின் எதிர்பார்ப்பையும் தாண்டி காது கிழியும் அளவுக்கு ஜால்ரா போடுகிறார் பெருந்தகை. எதிர்க்கட்சி யினரிடமிருந்து தி.மு.க-வைக் காப்பாற்றுவது மட்டுமல்ல, தன் கட்சிக்காரர்களிடமிருந்தும் தி.மு.க-வைக் காப்பாற்றும் பொறுப்பைச் சிரமேற்கொண்டு செய்துவருகிறார் செல்வப்பெருந்தகை.

இவர் எப்படி தி.மு.க-வை விமர்சிப்பார் என்று எதிர்பார்க்க முடியும்… ஆளும் அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து போராட ஆயிரத்தெட்டு விஷயங்கள் இருக்கும்போது, `நானும் போகிறேன் கச்சேரிக்கு’ என்கிற கதையாக, கூட்டணிக் கட்சித் தலைவர்களை யெல்லாம் அழைத்து, சூழலுக்குச் சம்பந்தமே இல்லாமல், ‘ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வின் வெறுப்பு அரசியலை எதிர்த்து மாபெரும் கண்டனக் கூட்டம்’ என்ற ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறார்.


செல்வப்பெருந்தகை மட்டுமல்ல, தி.மு.க கூட்டணியிலுள்ள மற்றக் கட்சித் தலைவர்களும் தி.மு.க மனம் புண்பட்டுவிடக் கூடாது என்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தி.மு.க அரசாங்கமும் தொழிலாளர்கள் விஷயத்தில் பா.ஜ.க-வைப்போல மக்கள் விரோத அடக்குமுறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதைத் தட்டிக் கேட்காமல், ‘இஸ்ரேல் அரசின் பயங்கரவாதத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கிறோம்’ என்று கிளம்புகிறார்களென்றால், எந்த அளவுக்குக் கூட்டணிக் கட்சிகள் அறிவாலயத்திடம் மண்டியிட்டுவிட்டன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஒரு பிரச்னையை தி.மு.க உருவாக்கினால், அதைப் பேசி அமுக்கவும், எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கவுமே கூட்டணிக் கட்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எதற்கு தனித் தனியே கட்சிகள்..?” என்றனர் விரக்தியாக.

தி.மு.க-மீதும், அரசின் மீதும், தங்களது கட்சித் தலைமைகளின் மீதும், கூட்டணிக் கட்சிகளின் கீழ்மட்ட நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். ‘உள்ளாட்சிப் பதவிகளைக்கூட விட்டுத் தர மறுத்த தி.மு.க-வுக்காக, நம் கட்சிக் கொள்கைகளையே விட்டுத் தரவும் துணிகிறார்களே நம் தலைமைகள்..?’ என்கிற கசப்பும் கோபமும் அவர்களிடத்தில் அதிகரித்திருக்கின்றன.

‘தி.மு.க-வுக்கு நோகாமல் நடந்துகொள்ள வேண்டும்’ என்பதிலேயே அதிக கவனம் செலுத்தும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் காதுகளுக்கு, அந்தக் கட்சிகளின் கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்களின் ஆதங்கக் குரல்கள் கேட்குமா? ( நன்றி – ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையிலிருந்து …)

…………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஜகா வாங்கவா…? மண்டியிடவா ..??—கூட்டணிக் கட்சிகள் …. ???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கம்யூனிஸ்டுகளுக்கும் வேற வேலையில்லை. விசிகவுக்கும் வேலையில்லை. காலில் விழுந்துகிடப்பவர்களுக்கு கொள்கையாவது ஒண்ணாவது? அதெல்லாம் ஜீவா காலத்திலேயே குழிதோண்டிப் புதைத்தாகிவிட்டது. விசிகழின் மது ஒழிப்பு மாநாடு ஸ்பான்சர் திமுக, மாநாட்டுத் தலைவர்களில் திமுகவும் உண்டு என்று பத்திரிகைச் செய்திகள் சொல்லின. இவங்களையெல்லாம் சீரியஸாக நினைக்கவே கூடாது. இதெல்லாம் நகைச்சுவைக் காட்சிகள் என்று கடந்துவிட வேண்டும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.