…………………………………………………

………………………………………………..
வாழ்வில் எவ்விதமான துயரச் சூழலில் நீங்கள் இருந்தாலும், அபூர்வமான ஒரு கைவிளக்கு மட்டும் உங்களிடம் இருந்தால் போதும். அது, இருளிலிருந்து நீங்கள் எளிதில் வெளிச்சத்துக்கு வர உதவும். ஆம்! நமக்குள் இருக்கும் நம்பிக்கைதான் அந்த அபூர்வ கைவிளக்கு.
நமக்குள் நம்பிக்கையை வளர்ப்பதும், சக மனிதர்களுக்குள் நம்பிக்கையை விதைப்பதும், நம்பிக்கையானவர்களை இனம் காண்பதும் வெற்றிக்கு அவசியமானவை. சமீபத்தில் படித்த சம்பவம் ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
அந்தச் சிறுவன் மிகவும் ஏழை. நாளிதழ்கள், பலசரக்குப் பொருள்கள் போன்றவற்றை வீடு வீடாகக் கொடுத்து அந்த வருமானத்தில் படித்துக்கொண்டிருந்தான்.
ஒரு நாள் அவனுக்குக் கடும் பசி. கையிலோ காசு இல்லை. பசி பொறுக்காததால், அருகில் இருந்த வீட்டில் சிறிது உணவு வாங்கிச் சாப்பிடலாம் என்று கருதி, அந்த வீட்டின் கதவைத் தட்டினான். இளம்பெண் ஒருத்தி கதவைத் திறந்தாள். அவளைப் பார்த்ததும் தைரியத்தை எல்லாம் இழந்த சிறுவன், உணவுக்குப் பதிலாக, ‘`குடிப்பதற்குத் தண்ணீர் கொடுங்கள்’’ என்று கேட்டான்.
ஆனால், அவன் பசியுடன் இருப்பதை அவனது முகத்தைப் பார்த்தே உணர்ந்து கொண்ட அந்தப் பெண், ஒரு கோப்பையில் சூடான பால் கொண்டு வந்து கொடுத்தாள். நன்றியுடன் பெற்றுக்கொண்ட சிறுவன், யோசித்துக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக குடித்து முடித்தான். பிறகு, கவலையுடன்,‘`இதற்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும்?’’ என்று மெதுவாகக் கேட்டான்.
‘`ஒன்றும் வேண்டாம். அன்புடன் தரும் எந்தப் பொருளுக்கும் பணம் பெறக் கூடாது என்பது என் தாயின் அறிவுரை!’’ என்றாள் அந்தப் பெண். அவளுக்கு நன்றி கூறிவிட்டுக் கிளம்பினான் சிறுவன்.
வருடங்கள் ஓடின. அந்தப் பெண் திடீரென நோய்வாய்ப்பட்டாள். அருகிலுள்ள நகரத்தில் பெரிய மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டாள். பரிசோதனைக்குப் பிறகு, புகழ் பெற்ற மருத்துவரான ஹோவார்ட் கெல்லி என்பவரை ஆலோசனைக்காக அழைத்தனர். அவர், அந்தப் பெண்ணின் சிகிச்சையில் அதீத ஆர்வம் எடுத்துக்கொண்டார். தனது மருத்துவ அறிவு மற்றும் அனுபவத்தால், அவளைப் படிப்படியாகக் குணப்படுத்தினார்.
அவள் டிஸ்சார்ஜ் ஆகவேண்டிய நாள். பிணி நீங்கிய சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும், மருத்துவச் செலவு எவ்வளவு ஆகியிருக்குமோ என்ற கவலை அவளை நெருடிக்கொண்டிருந்தது. சற்று நேரத்தில், அவளிடம் ஒரு கவரை நீட்டினார் ஊழியர். மருத்துவமனை பில்தான் அது. பதற்றத்துடன் பிரித்தாள். உள்ளே ஒரு காகிதத்தில்… அவளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அதற்கான செலவுகள் ஆகியன பட்டியலிடப்பட்டிருந்தன. அவை எல்லாவற்றுக்கும் கீழே சிவப்பு மையினால் கொட்டை எழுத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது…
‘மருத்துவச் செலவுகள் அனைத்தும், சூடான ஒரு கோப்பைப் பாலின் மூலம் முழுவதுமாகச் செலுத்தப்பட்டுவிட்டன! இப்படிக்கு, டாக்டர் ஹோவார்ட் கெல்லி.’
அவள் வியந்துபோனாள். வறுமை தந்த துன்பத்தால், நம்பிக்கை இழந்திருந்த அவனிடம் அந்தப் பெண் காட்டிய அன்பும் பரிவும், சக மனிதர்கள் மற்றும் இறைவனின் மீது அவனுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தின. அந்த நம்பிக்கையே அவனைப் பெரிய மருத்துவராக்கியது என்பதை மருத்துவர் ஹோவார்ட் கெல்லி விவரித்தபோது, அவளின் கண்கள் பனித்தன!


அன்பும் அது கொடுக்கும் நம்பிக்கையும் வலிமையானவை.
” The smallest act of kindness is worth
more than the grandest intention “
- Oscar Wilde
.
…………………………………………………………………………………………………………….



இப்படியும் நடந்திருக்குமா என்று தோன்றியது. எம்ஜிஆர் வீட்டில் வறுமை சூழ்ந்திருந்தபோது தன் டிரௌசர் பாக்கெட்டுகளில் அரிசி நிரப்பிக்கொண்டுவந்து அவர் அம்மாவிடம் தேவர் கொடுத்ததாகவும் பிற்காலத்தில் தேவர் பிலிம்சுக்குத் தொடர்ந்து படங்கள் நடித்துக்கொடுத்து அதன் மூலம் தேவர் கோடீஸ்வரன் ஆனதையும் மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தபோது (எம்ஜிஆர் குண்டடிபட்டு மருத்துவமனையில் இருந்தபோது) தேவர் எதிர்பார்ப்பின்றி அள்ளிக் கொடுத்ததாகவும், இதற்காக தன் சொந்தச் சகோதரர்களிடம் அதை எதிர்த்ததற்காகக் கடிந்துபேசியதாகவும் படித்திருக்கிறேன்
வாழ்க்கையில் படித்துமுடித்துவிட்டு நானும் என் நண்பனும் கம்ப்யூட்டர் இன்ஸ்ட்டியூட்டில் டிரெய்னியாக வேலை பார்த்துக்கொண்டிருந்த காலம். ஒருநாள் கண்ணதாசன் சாலையில் (அப்போது ஹென்ஸ்மன் ரோடு) நடந்துகொண்டே வருத்தப்பட்டு எப்படி முன்னேறுவோம் என்று பேசிக்கொண்டே நடந்துகொண்டிருந்தோம். கொஞ்சம் சப்தம் போட்டு பேசியிருப்பேன் போலிருக்கிறது. பின்னால் நடந்துவந்துகொண்டிருந்த பெரியவர் வேகமாக முன்னால் வந்து நிச்சயம் முன்னேறுவாய் என்று என் தலையில் கை வைத்துச் சொன்னது நினைவுக்கு வருது