Work – Life – இரண்டையும் பேலன்ஸ் செய்யும் ரகசியம் ….???

……………………………………………….

…………………………………………………

நவீன வாழ்க்கையில் தங்களின் வேலை நேரம், அந்த வேலையில் இருக்கும் அழுத்தம் குறித்தான கவலைதான் பலரின் உரையாடல்களில் வெளிப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும், மாலை 6 மணி ஆனதும் சுவிட்ச் போட்டது போல வீட்டுக்குக் கிளம்ப முடிவதில்லை. நீண்ட நேரம் கழித்து வீட்டுக்குப் போனாலும், வீட்டிலும் அந்த வேலை தொடர்கிறது. சிலர் தூங்கி எழுந்து வேலைக்குப் போய்விட்டு, உறங்குவதற்காகவே வீடு திரும்புவார்கள். வீடு என்பது உறங்குவதற்கான இடம் போல் ஆகிவிடுகிறது.

வாழ்வில் வெற்றிபெறும் கலையைக் கற்றுத் தரும் அல்கெமி வகுப்புகளை இந்தியாவின் முக்கிய நகரங்களில் நான் நடத்திவருகிறேன். இதில் பங்கேற்கும் கணிசமானவர்கள் இளைஞர்கள். அவர்கள் இந்த விஷயத்தில்தான் குழப்பத்துடன் வருகிறார்கள்.

‘‘குருஜி, அலுவலக வேலையில் அதிகமான நேரத்தைச் செலவிட்டால்தான் முன்னேற முடியும். அதில் பணிச்சுமையும் அதிகம். இதனால் வீட்டுக்குச் செலவிடும் நேரம் குறைகிறது. இது குடும்ப வாழ்வில் பல சிக்கல்களை உருவாக்குகிறது. வேலையிலும் முன்னேற வேண்டும், குடும்ப வாழ்விலும் மகிழ்ச்சி வேண்டும். இதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா?’’ என்பதுதான் அந்த இளைஞர்கள் பலரின் கேள்வி.

வொர்க் – லைஃப் பேலன்ஸ்… இதுதான் இன்றைய இளைஞர்களின் பெரிய சவால். அவர்களுக்கெல்லாம் நான் சொல்லும் பதில், ‘‘குடும்பம், வேலை என்று இரண்டு வாழ்க்கை இல்லை. இருப்பது ஒரு வாழ்வுதான். எல்லோருக்கும் ஒரு நாளுக்கு 24 மணி நேரம்தான். அப்படி இருக்கும்போது ஏன் உங்களுக்கு மட்டும் இந்தப் பிரச்னை வருகிறது, சிந்தியுங்கள்.”

ஒருவர் 10 மணி நேரம் வேலை பார்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மிச்ச நேரத்தை வீட்டு வேலைகள், சுய பராமரிப்பு, தூக்கம் ஆகியவற்றுக்காகச் செலவிடுகிறார். இதில் வித்தியாசம் என்னவென்றால், வீட்டில் இருக்கும் நேரத்தில் நீங்கள் உங்களுக்குப் பிடித்ததைச் செய்வீர்கள். அங்கு எந்த வற்புறுத்தலும் இல்லை. இதுதான் வாழ்க்கை என்று நினைக்கிறீர்கள். சரிதான்… நமக்குப் பிடித்ததைச் செய்வதுதான் நல்ல வாழ்க்கை.

ஆனால், வேலை நேரத்தைப் பொறுத்தவரை அந்த 10 மணி நேரமும் உங்களுக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் அதை நீங்கள் செய்யக் காரணம், சம்பளம். உங்களுக்குப் பணம் வேண்டும். அதற்காக அந்த வேலையைக் கட்டாயத்தின் பேரில் செய்கிறீர்கள். ஒருவேளை பணம் வராது என்றால் அந்த வேலையைச் செய்ய மாட்டீர்கள்.

இதனால்தான் உங்கள் மனதில் வேலை குறித்த எதிர்ப்பு வந்துவிடுகிறது. கடுமையான வேலை என்று ஒன்று கிடையாது. அப்படிச் சொன்னாலே நீங்கள் அந்த வேலை மீது மனதுக்குள் எதிர்ப்புணர்வை வளர்த்து வைத்திருக்கிறீர்கள் என்று பொருள். ‘10 மணி நேர வேலையை முடித்ததும் வீட்டுக்குப் போய், என் வாழ்வை நான் வாழ்வேன்’ என்று நினைக்கிறீர்கள். அதாவது, வேலை பார்க்கும் 10 மணி நேரமும் உங்கள் வாழ்க்கை இல்லை என்று முடிவு செய்கிறீர்கள்.

உங்களுக்கு ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன். எப்போதும், எந்த வேலையிலும் பணம் என்பது பை புராடெக்ட் (உப விளைவு) தான். பணம் கிடைக்கிறது என்பதற்காக எந்த வேலையையும் செய்யக்கூடாது. ஒரு வேலையைப் பிடித்துச் செய்யும்போது அது கடினமான ஒன்றாக இருக்காது. பிடிக்காமல் செய்தால் அது கஷ்டமாகிவிடும்.

கஷ்டம் என்று நினைத்துக்கொண்டே நீங்கள் ஒரு செயலைச் செய்தால் உங்கள் திறன் குறைவாக இருக்கும். வேலையை எந்திரம் போலச் செய்வீர்கள். அதை விரும்பவே மாட்டீர்கள். அப்படித் தொடர்ந்து விருப்பம் இல்லாத வேலையைச் செய்யும்போது ஒருவர் அதில் நிபுணர் ஆகவே முடியாது. உங்களால் சாதிக்கவும் முடியாது, வளர்ச்சியும் இருக்காது.

அதனால்தான் சொல்கிறேன், நீங்கள் நீண்ட நேரம் வேலை செய்வதால் உங்களுக்கு வளர்ச்சி வருவதில்லை. மாறாக எவ்வளவு திறமையாகச் செயல்படுகிறீர்கள் என்பதில்தான் உங்கள் வளர்ச்சி இருக்கிறது. அப்படி ஒரு துறையில் திறமைசாலியாக மாற வேண்டும் என்றால் அது உங்களுக்கு முதலில் பிடிக்க வேண்டும். பிடித்ததை மீண்டும் மீண்டும் சந்தோஷமாகச் செய்வீர்கள்.

வேலையை விரும்பிச் செய்யும்போது, அதை ஆர்வமாகக் கற்றுக்கொள்வீர்கள். அதன் மூலம் அந்த வேலையில் நிபுணர் ஆகிவிடுவீர்கள். அப்படி நிபுணர் ஆகிவிட்டால், 10 மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை 5 மணி நேரத்தில் முடித்துவிட முடியும்.

உதாரணமாக புதிதாக ஓர் இசையமைப்பாளர் இருக்கிறார். அவர் ஒரு பாடலை உருவாக்க சில நாள்களை எடுத்துக்கொள்வார். இதே அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளர் என்றால், என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று புரிந்துகொண்டு நிமிடங்களில் சிறப்பாக முடித்துக் கொடுத்துவிடுவார்.

இப்படி வேலை என்பது திறன் சார்ந்ததாக மாறிவிட்டால், பிறகு அது நேரம் சார்ந்ததாக இருக்காது. வேலையும் கடினமாக இருக்காது. இலகுவாக அதைச் செய்து முடிப்பீர்கள். வேலையையும் நேசிக்கத் தொடங்குவீர்கள். மீதமாகும் நேரத்தை உங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாகச் செலவிடலாம். அதேநேரம் பணமும் வந்துகொண்டே இருக்கும். திறமைசாலியாக இருப்பதால் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனமும் உங்களை விடவே விடாது.

பிடித்தமான வேலை அல்லது துறை என்பது ஒருவருக்குள்ளேயே இருக்கும். அதை அவர் கண்டுபிடித்துத் தேர்வு செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது பணியிடத்தில் செலவிடும் 10 மணி நேரமும் உங்களுக்குப் பிடித்தமான நேரமாக மாறிவிடும். அதாவது, செய்யும் வேலையே ஒரு விடுமுறை நாளின் மகிழ்ச்சியான தருணம் போல் மாறிவிடும்.

நிறைய பேருக்கு வார இறுதி விடுமுறை முடிந்து திங்கட்கிழமை வேலைக்குப் போக வேண்டியதை நினைத்தாலே கசப்பாக இருக்கும். இதற்குக் காரணம், வேலையைப் பிடிக்காமல் செய்வதுதான். மாறாக வேலை பிடித்திருந்தால், ‘எப்போது வேலைக்குப் போவோம்…’ என்கிற உற்சாகம் உள்ளுக்குள் பிறக்கும். அப்படிப்பட்ட ஆர்வம் உங்களுக்குள் வர வேண்டும். அப்படி இருந்தால் விரைவில் நீங்கள் அந்த வேலையில் சிறப்பானவராக ஆகிவிடுவீர்கள்.

எந்த நிறுவனமும் நீங்கள் 10 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. நீங்கள் திறமையுடன் இருந்தால் உங்களை அவர்கள் சுதந்திரமாக வேலை பார்க்க விட்டுவிடுவார்கள்.

எனவே உங்களுக்குப் பிடித்த வேலையைத் தேர்ந்தெடுங்கள். அதில் நிபுணராகுங்கள். அப்போது வேலை என்பதும் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தோடு செலவிடவும் போதுமான நேரம் கிடைக்கும். இதுதான் மகிழ்ச்சியான வாழ்வுக்கான மிகப்பெரிய ரகசியம்.

(நன்றி …. குரு மித்ரேஷிவா…..)

………………………………………………………………………………………………..….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.