………………………………………….

………………………………………….
விழாவுக்கான அழைப்பிதழ், தமிழக அரசின் அப்போதைய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவின் பெயரில்தான் வழங்கப்பட்டது. தவிர, ஒன்றிய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பிலும், மாநில அரசுதான் விழா எடுத்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்
…………………….
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா குறித்து ஜுனியர் விகடன் இதழில் வெளிவந்துள்ள ஒரு சுவாரஸ்யமான கட்டுரை கீழே –
தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது மறைந்த தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கான நாணயம் வெளியீட்டு விழா. “முன்னால வாங்க அண்ணாமலை…” என உரிமையோடு ஸ்டாலின் வரவேற்றதில் தொடங்கி, ‘எமெர்ஜென்சி கதைகள்’ சொல்லி ராஜ்நாத் சிங்கை துரைமுருகன் நெகிழச் செய்தது வரை, விழாவில் பா.ஜ.க-விடம் வளைந்து, குழைந்திருக்கிறது தி.மு.க.
பதிலுக்கு, “கலைஞரைப்போல உண்டா..?” என பா.ஜ.க-வினரும் மகிழ்ந்து, குழைந்து உறவாடி யிருக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் மேலாக, “கலைஞர் போன்ற தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையும், சிந்தனைகளும் நம் தேசத்தின் பயணத்தைத் தொடர்ந்து வடிவமைக்கும்…” எனத் தன் அறிக்கையில் வாசித்திருக்கிறார் பிரதமர் மோடி…!
இரண்டு கட்சிகளும் திடீரென இப்படி ஒட்டி உறவாடியிருப்பது, தி.மு.க கூட்டணிக் கட்சிகளை மட்டுமல்ல, தி.மு.க-வினரையே கடுப்பாக்கியிருக்கிறது.
இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “நாங்களும்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு நாணயம் வெளியிட்டோம். அப்போது, பா.ஜ.க-வுடன் கூட்டணியில்தான் இருந்தோம். ஆனாலும், அவர்களை நாங்கள் அழைக்கவில்லை. ஆனால், நீங்கள் பா.ஜ.க-வை அழைத்திருக்கிறீர்கள். விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை… இதிலிருந்தே பா.ஜ.க-வுடன் தி.மு.க கள்ளக் கூட்டணியில் இருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது” என வெளுத்து வாங்கியிருக்கிறார்.
டேமேஜைச் சரிசெய்ய, “இது மத்திய அரசு நடத்திய விழா. அதற்காகத்தான் ஒன்றிய அமைச்சரை அழைத்தோம்…” என முதல்வரும், தி.மு.க-வினரும் ஏதேதோ உருட்டினாலும், ஒன்றும் எடுபடவில்லை என்பதுதான் உண்மை நிலை.
தி.மு.க இப்படி வளைய… பா.ஜ.க இப்படிக் குழைய… என்ன காரணம்… நாணயம் வெளியீட்டு விழாவில் என்னவெல்லாம் நடந்தன..?
“முன்னால வாங்க அண்ணாமலை…” – வளைந்த தி.மு.க; “உயர்ந்த ஆளுமை கருணாநிதி…” குழைந்த பா.ஜ.க!
பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்களை முன்னிலைப்படுத்தி, தி.மு.க-வினர் விழா எடுப்பது இது முதன்முறையல்ல. 2022-ல், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சென்னை அண்ணாசாலையில் சிலை அமைக்கப்பட்டது. அந்தச் சிலையை, அப்போதைய துணை ஜனாதிபதியும் சீனியர் பா.ஜ.க தலைவருமான வெங்கைய நாயுடுதான் திறந்துவைத்தார். அப்போதே, “ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தத்தில் ஊறிப்போன ஒருவரைவைத்து கலைஞரின் சிலையைத் திறப்பதா..?” என விமர்சனங்கள் எழுந்தன. அதேதான் இப்போதும் நடந்திருக்கிறது.
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டிருக்கிறார், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி, கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், நாணயத்தை ராஜ்நாத் சிங் வெளியிட, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். அந்த விழாவுக்கு முன்னதாகவும், விழாவிலும் பா.ஜ.க-வும் தி.மு.க-வும் ‘கொஞ்சம் ஓவராகவே’ ஒட்டி உறவாடிய தருணங்கள்தான் பெரும் பேசுபொருளாகியிருக்கின்றன.
விழா தொடங்குவதற்கு முன்னரே, தி.மு.க-வுடனான நெருக்கத்துக்குப் பிரதமர் மோடி பிள்ளையார்சுழி போட்டுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அவர் அனுப்பிய வாழ்த்து மடலில், “இந்தியாவின் தலைசிறந்த புதல்வர்களில் ஒருவரான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் முக்கியமான தருணம் இது. நாட்டின் உயர்ந்த ஆளுமை கருணாநிதி. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதை நோக்கி நாம் நம்பிக்கையுடன் நடைபோடும் இந்த வேளையில், கலைஞர் போன்ற தலைவர்களின் தொலை நோக்குப் பார்வையும், சிந்தனைகளும், நம் தேசத்தின் பயணத்தைத் தொடர்ந்து வடிவமைக்கும்” எனக் குழைந்து எழுதியதை தி.மு.க-வினரே எதிர்பார்க்கவில்லை.
கலைவாணர் அரங்கத்துக்குச் செல்வதற்கு முன்னதாக முதல்வர் ஸ்டாலின், சீனியர் தமிழக அமைச்சர்களுடன் கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்றார் ராஜ்நாத் சிங். அவருடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரும் உடன் சென்றனர்.
கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அவர்கள் வரிசையில் நின்றபோது, பின்னால் நின்றுகொண்டிருந்த அண்ணாமலையை முன்னால் வரச் சொன்னார்கள் அமைச்சர்கள் எ.வ.வேலுவும் சேகர் பாபுவும். அருகில் நின்றிருந்த முதல்வரும்,
“முன்னால வாங்க அண்ணாமலை…” என உரிமையோடு அழைக்க, பவ்யத்துடன் முன்னால் போனார் அண்ணாமலை. அமைதியாக சமாதியையே பார்த்துக்கொண்டிருந்த அண்ணாமலை, “இப்படிப்பட்ட ஒருவரையா நாம் தவறாக விமர்சித்துவிட்டோம்…” என வருந்தியிருப்பார்போல, கருணாநிதி நினைவிடத்தில் 45 டிகிரியில் வளைந்து கும்பிடு போட்டுவிட்டுப் புறப்பட்டார்.
கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு குறித்து 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட காட்சிகளை, முதல்வரும் ராஜ்நாத் சிங்கும் தங்கள் சகாக்களுடன் கண்டு மகிழ்ந்தனர். இதற்கு அடுத்ததாக, கலைவாணர் அரங்கில் நடந்தவையெல்லாம் ரணகளம்.
“எமர்ஜென்சியால் சிறையில் இருந்தவர்கள் நாம்…” கதர்களைச் சீண்டிய துரைமுருகன்!
விழா மேடையில், ராஜ்நாத் சிங்கை வரவேற்றுப் பேசினார் தி.மு.க பொதுச் செயலாளரும், சீனியர் அமைச்சருமான துரைமுருகன். “உங்களுக்கும் (ராஜ்நாத்) எங்களுக்கும் (தி.மு.க கட்சி) உள்ள சில பொதுவான அம்சங்களைப் பகிர்ந்துகொள் கிறேன். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நலன், சேவைக்கான எங்கள் அணுகுமுறைகளோடு உங்களின் கொள்கைகளும் ஒத்துப் போவதை எண்ணி நான் மிகவும் மகிழ்வதுண்டு.
எங்கள் முதல்வரைப்போல, எமர்ஜென்சி காலத்தில் நீங்களும் 18 மாதங்கள் சிறையில் இருந்தீர்கள்…” என ராஜ்நாத் சிங்கைப் புகழ்ச்சியால் துரைமுருகன் புரட்டி எடுக்க, விழாவுக்கு வந்திருந்த காங்கிரஸ்காரர்களெல்லாம் பொருமத் தொடங்கிவிட்டனர்.
“எமர்ஜென்சி காலத்தையெல்லாம் இப்போது மேடையில் பேசவேண்டிய அவசியமென்ன… எமர்ஜென்சி கொண்டுவந்த இந்திரா காந்தியை விமர்சித்து, காங்கிரஸ் கட்சியை மறைமுகமாகச் சீண்டுகிறார் துரைமுருகன். எமர்ஜென்சி முடிந்த பின்னர் நடந்த 1980 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு, ‘நேருவின் மகளே வருக… நிலையான ஆட்சியைத் தருக’ எனப் பிரசாரம் செய்தார் கருணாநிதி. அதையெல்லாம் துரைமுருகன் மறந்துவிட்டாரா… காங்கிரஸ் கட்சியை வம்படியாக விமர்சித்து, பா.ஜ.க-வுடன் உறவாடத் துடிக்கிறது தி.மு.க” என விழா அரங்கிலேயே கதர்கள் முணுமுணுத்தனர்.
`ஒன்றியம்’ போய் `இந்தியா’ வந்தது… டும் டும் டும்!
எமர்ஜென்சி வெடியைக் கொளுத்தியதோடு துரைமுருகன் நிற்கவில்லை. தன் பேச்சை நிறைவு செய்யும்போது, “மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரை வரவேற்கும் அதேவேளையில், நாணயத்தை வெளியிடும் பாதுகாப்பு அமைச்சருக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அடுத்த வெடியை வெடித்தார்.
“என்னடா இது… நாம் ஒன்றிய அமைச்சர் என்றுதானே சொல்வோம். பொதுச்செயலாளர் மத்திய அமைச்சர் என்கிறாரே… நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டோமா..?” என தி.மு.க-வினரே திகைத்தனர். அவர்களின் திகைப்பை மேலும் அதிகரித்தது முதல்வர் ஸ்டாலினின் பேச்சு. “இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவல் அரணாக இருந்த தலைவர் கலைஞர் அவர்களின் உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட, இந்திய நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் வந்திருப்பது மிக மிகப் பொருத்தமானதுதான்” என்றார். முதல்வரின் பேச்சிலும் `ஒன்றியம்’ காணாமல் போய் `இந்தியா’வே மேலோங்கியிருந்தது.
முதல் வரிசையில் நயினார்… இரண்டாவது வரிசையில் பால் கனகராஜ்… ‘நெளிந்த’ கூட்டணித் தலைவர்கள்!
விழாவில், முதல்வர் ஸ்டாலினைவிட கருணாநிதியை அதிகப்படியாகப் புகழ்ந்தது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்தான். வாஜ்பாய் அரசுக்கு கருணாநிதி அளித்த ஆதரவை நினைவுகூர்ந்து, தி.மு.க – பா.ஜ.க உறவைப் புதுப்பிக்கும் வகையில் ராஜ்நாத் சிங் பேசவும், மேடைக்குக் கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்த தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்களெல்லாம் ‘நெளிய’ தொடங்கிவிட்டார்கள்.
நம்மிடம் பேசிய தி.மு.க-வின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலர், “நாணய வெளியீட்டு விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வம் என தி.மு.க-வின் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கெல்லாம் முதல்வரே போனில் அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்களுடன் இத்தனை ஆண்டுகள் ஒன்றாகப் பயணிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு, இரண்டாம் கட்ட தி.மு.க தலைவர்கள், அமைச்சர்கள் மூலமாகவே அழைப்பு வந்தது. ஊரெல்லாம் பாக்கு, வெற்றிலை வைத்தவர்கள், மரியாதைக்குக்கூட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அழைக்கவில்லை.
தேர்தல் சமயத்தில் பிடிபட்ட 4 கோடி ரூபாய் பண விவகாரத்தில், பா.ஜ.க சீனியரான நயினார் நாகேந்திரனை தமிழக சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரித்துவருகிறது. அவருக்கு அரங்கின் முன்வரிசையில் இடமளித்து, அவருக்கு அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான முத்தரசனை அமரவைத்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், பா.ஜ.க நிர்வாகியான பால் கனகராஜை ஏழு மணி நேரம் விசாரித்திருக் கிறது சென்னை போலீஸ். அவருக்கு இரண்டாவது வரிசையில் இடமளித்தனர்.
‘தி.மு.க ஃபைல்ஸ்’ என ஒரு பெரிய டிரங்குப் பெட்டியோடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தி.மு.க-மீது புகாரளித்த அண்ணாமலை, வார்த்தைக்கு வார்த்தை தி.மு.க-வை அநாகரிகமாகப் பேசும் அண்ணாமலை… முதல் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். போலீஸ் விசாரணையில் உள்ளவர்களுக்கும், தி.மு.க-மீது குற்றச்சாட்டு சொன்னவர்களுக்கும் ஏன் இந்த முக்கியத்துவம்… என்பதுதான் கேள்வி.
தன்னுடைய பேச்சில், கலைஞரின் இலக்கியம், மொழி ஆளுமை பற்றிச் சிலாகித்து, சில வார்த்தைகளோடு ராஜ்நாத் சிங் விடைபெற்றிருக்கலாம். ஆனால், கலைஞரின் அரசியல், அவர் பா.ஜ.க-வுடன் கொண்டிருந்த நட்புறவையெல்லாம் குறிப்பிட்டுச் சிலாகித்தார் ராஜ்நாத் சிங். மீண்டும் உறவைப் புதிப்பிக்கவே கருணாநிதியைப் புகழ்ந்து பா.ஜ.க குழைந்து அடிபோடுகிறது. அதற்கு, தி.மு.க-வும் வளைந்து இடம் கொடுக்கிறது. இதெல்லாம், இப்போதிருக்கும் தி.மு.க கூட்டணி உறவுக்குள் நிச்சயமாகச் சலசலப்பை ஏற்படுத்தும்” என்றனர்.
மாநில அரசு விழாவா… மத்திய அரசு விழாவா..?
கூட்டணிக்குள் சலசலப்பு உருவாக ஏன் காத்திருக்க வேண்டும்… நாமே எதிர்முகாமை நோக்கிக் கேள்விகளை வீசுவோம் என்று நினைத்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சமூக நீதி, திராவிட மாடல் பேசும் தி.மு.க., ஏன் பா.ஜ.க-வை அழைத்தீர்கள்… ராகுல் காந்தியை ஏன் அழைக்க வில்லை..?” எனக் கொளுத்திப் போட்டார். தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவில் தொடங்கி முதல்வர் ஸ்டாலின் வரை அவருக்கு நீண்ட விளக்கமளித்தனர்.
முதல்வர் அளித்த விளக்கத்தில், “மத்திய அரசு அனுமதி கொடுத்து, மத்திய அரசின் மூலமாகவே இந்த நிகழ்வு நடைபெற்றது. ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை என எடப்பாடி கேள்வி எழுப்பியிருக்கிறார். கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா, தி.மு.க நடத்திய நிகழ்ச்சி கிடையாது. அது மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்துகொள்ள வேண்டும். ராஜ்நாத் சிங்கை அழைத்து நாம் நிகழ்ச்சி நடத்தியதால் தி.மு.க., பா.ஜ.க-வுடன் உறவுவைத்திருக்கிறது என்ற ஒரு செய்தியைக் கிளப்புகிறார்கள். அண்ணாவின் மீது ஆணையாகச் சொல்கிறேன். நமக்கென்று இருக்கிற உரிமையை ஒரு நாளும் விட்டுத்தர மாட்டோம்” என்று மூச்சுவாங்கப் பேசினார்.
ஆனால் முதல்வரின் விளக்கத்தை, அவரின் கூட்டணிக் கட்சிக்காரர்களே ஏற்கவில்லை. “விழாவுக்கான அழைப்பிதழ், தமிழக அரசின் அப்போதைய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவின் பெயரில்தான் வழங்கப்பட்டது. தவிர, ஒன்றிய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பிலும், மாநில அரசுதான் விழா எடுத்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘என்னைத் தமிழக அரசு அழைத்தமைக்கு நன்றி’ என ராஜ்நாத் சிங்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். நிலைமை இப்படி இருக்கும்போது, யாரை ஏமாற்றுகிறது தி.மு.க தலைமை..?” என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

“பா.ஜ.க-வின் `பி’ டீமா தி.மு.க?”
இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார், “விழாவை மத்திய அரசுதான் முன்னெடுத்தது என்றால், அழைப்பிதழில் மத்திய அரசின் இலச்சினை எங்கே… மத்திய அரசு விழா என்றால், ஆளுநர் ஏன் வரவில்லை… தமிழக தலைமைச் செயலாளர் பெயரில் பத்திரிகையைக் கொடுத்துவிட்டு, `மத்திய அரசின் நிகழ்ச்சி’ என்று முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறார் முதல்வர்.
தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பலரும் சிறைக்குச் செல்லும் நெருக்கடியில் இருக்கிறார்கள். ‘பா.ஜ.க-வுடன் கள்ளக் கூட்டணி வைத்துக் கொண்டால் தி.மு.க-வின் ஊழல் தப்பும்’ என்ற எண்ணத்தில் இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறது தி.மு.க. மக்களுக்கு தி.மு.க-வின் உண்மை முகம் தெரிந்துவிட்டது. இனி தி.மு.க-வின் பா.ஜ.க எதிர்ப்பு நாடகம் ஒருபோதும் எடுபடப்போவதில்லை” என்றார் காட்டமாக.
நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன், “இப்போது மட்டுமல்ல, எப்போதுமே தமிழகத்தில் பா.ஜ.க-வின் `பி’ டீம் தி.மு.க என்று நாங்கள் பல நேரங்களில் சொல்லியிருக்கிறோம். அது தேநீர் விருந்திலும், நாணய வெளியிட்டு விழாவிலும் இப்போது வெளிப்படையாக நிரூபணமாகிறது. தங்களின் தேவைக்காக எதை வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் செய்யத் தயங்காத கூட்டம் தி.மு.க” என்றார்.
ஏன் இந்த நெருக்கம்?
தி.மு.க கூட்டணிக் கட்சிகளிடம் மட்டுமல்ல, மொத்தமாகவே நாணய வெளியீட்டு விழா பெரிய அளவில் சலசலப்பை உருவாக்கியிருக்கும் நிலையில், “பா.ஜ.க-விடம் தி.மு.க ஏன் வளைந்து செல்ல வேண்டும்… தி.மு.க-விடம் பா.ஜ.க ஏன் குழைந்து வர வேண்டும்..?” கேள்வியுடன் சில தி.மு.க தலைவர்களிடம் பேசினோம்.
கனத்த மெளனத்துக்குப் பிறகே பேசினார்கள். “பல்வேறு ரயில்வே திட்டங்கள், மெட்ரோ ரயில் பணிகளுக்கு ஒன்றிய அரசிடமிருந்து நிதி வர வேண்டும். ஒன்றிய பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டுக்கென எந்தச் சிறப்புத் திட்டமும் இல்லை. மாநில அரசுக்கு உரிய நிதி வந்தால்தானே இங்கே பணப் புழக்கம் இருக்கும்… இன்னும் ஒன்றரை ஆண்டில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய நிலையில், சம்பளம் போடுவதே கேள்விக்குறியானால், அது மாநில அரசுக்குப் பெரும் சிக்கலாகிவிடும். ஏற்கெனவே, `கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’, `புதுமைப்பெண் திட்டம்’ எனச் செலவிட்டுவரும் மாநில அரசு, தற்போது `தமிழ்ப் புதல்வன்’ என்ற திட்டத்தையும் செயல்படுத்திவருகிறது. இந்தத் திட்டங்களுக்காக ஒவ்வொரு மாதமும் மிகப்பெரிய தொகையைச் செலவிட்டுவருகிறது மாநில அரசு. ஒன்றிய அரசின் நிதி உதவி இல்லாமல் இவற்றையெல்லாம் தொடர்ந்து செயல்படுத்துவது சாத்தியமல்ல.
தவிர, சில அரசியல் நெருக்கடிகளும் இரு தரப்புக்கும் இருக்கின்றன. ஜாபர் சாதிக் வழக்கு, செந்தில் பாலாஜி ஜாமீன், அமைச்சர்களைச் சுற்றும் வழக்கு விசாரணைகள் எனத் தொடர்ச்சியாகப் பல்வேறு சிக்கல்களை தி.மு.க எதிர்கொண்டுவருகிறது. அதற்கு பா.ஜ.க-வின் அனுசரணை தேவை.
தி.மு.க-வுடன் காட்டும் நெருக்கத்தின் மூலமாக, நிதிஷ் குமாருக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் மறைமுகமாக ஒரு செய்தியை பா.ஜ.க-வால் சொல்ல முடிந்திருக்கிறது.
தவிர, நாடாளுமன்றத்தில் `வெளிநடப்பு’ என்கிற பெயரில் எதிர்ப்பை தி.மு.க நாசுக்காகக் காட்டிக்கொண்டால், பல மசோதாக்களில் ஓட்டெடுப்பில் பா.ஜ.க சாதித்துக்கொள்ள முடியும். அதையெல்லாம் கணக்கிட்டுத்தான் இந்த நெருக்கம் உருவாகியிருக்கிறது” என்றனர்.
ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் உண்டு. ஆனால், இந்த நாணய வெளியீட்டு விழா தொடர்பான சர்ச்சைகளுக்குப் பல பக்கங்கள் இருக்கின்றன.
நிச்சயமாக இந்த நிகழ்வு ஓர் அரசியல் புயலைக் கிளப்பியிருக்கிறது. இந்தப் புயல், தி.மு.க-வை மட்டுமல்ல, அதன் கூட்டணிக் கட்சிகளையும் புரட்டிப்போடத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குள் பல புதுக்கணக்குகள் போடப்படலாம்!
(நன்றி – ஜுனியர் விகடன் …)
…………………………………………………………………………………………………………………………………………………..



//ஒன்றிய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பிலும், மாநில அரசுதான்// – அட … நீங்களும் இந்த ‘ஒன்றிய அரசு’ பஜனை கோஷ்டியுடன் சேர்ந்தாச்சா?
பாஜக திட்டமிடுகிறதா இல்லை திமுக திட்டமிடுகிறதா என்று தெரியவில்லை (அடுத்தவனைக் கவிழ்க்க). எனக்கென்னவோ, தனி மெஜாரிட்டி இல்லாததானால் வலிய வந்து விழுபவனை எதற்கு எட்டி உதைக்கணும் என்று பாஜக நினைக்கிறதோ என்று தோன்றுகிறது (உலகத்தில் எங்குமே கிடைக்காத வெள்ளைக் குடை நாடகம் நினைவுக்கு வருகிறதா?)
நாணய வெளியீட்டுவிழா என்ற பஜனை திமுக அரசால் நடத்தப்பட்டது. ஏதோ மத்திய அரசே கருணாநிதிக்கு தானே முன்வந்து நடத்தியதுபோல ஒரு நாடகம் காண்பிக்கத்தான் திமுக அரசு முனைந்தது என்று நினைக்கிறேன். அண்ணாவிடம், கருணாநிதி மோதிரம் வாங்கிக்கொடுத்து, நீங்களே வெற்றி மோதிரமாக எனக்கு பொதுக்கூட்டத்தில் அணிவிக்கணும் என்று சொன்ன கருணாநிதி தந்திரத்தைத்தான் ஸ்டாலினும் கடைபிடிக்கிறார். ஒருவேளை நானும் காசு கொடுத்து பாஜக மத்திய பொறுப்பாளர்களை அழைத்து ஒரு விழா நடத்தினால் என்னையும் இந்திரன், சந்திரன், இந்தியாவுக்கே இவர் ஒரு உதாரண புருஷன் என்று பாராட்டுவார்களாக இருக்கும். அதை டெஸ்ட் பண்ண என்னிடம் காசு இல்லையே என்ன பண்ண?