……………………………………….

………………………………………
பஸ் ஒரு ‘ட’ திருப்பத்தில் திரும்ப, மாலை நேர வெய்யில் பளீரென்று
முகத்தில் அடித்தது. ராஜாராமன் வெய்யிலுக்கு எதிர்த் திசையில் முகத்தைத்
திருப்ப, அந்தப் பூங்காவின் கேட் பார்வையில் பளிச்சிட்டு பஸ்ஸின் ஓட்டத்தில் மறைந்தது. அதே பூங்கா… மனம் ஒரு துள்ளுத் துள்ளியது…
அவன் இன்னும் இளைஞனாக இதே பூங்காவில் தான் அன்றொரு நாள்
அமர்ந்து கோதையிடம் தன் குடும்ப பிரச்சினைகளைச் சொல்லி அழுதான்.
“எங்கள் அப்பா-அவர் தான் பெரிய பிரச்சினை. வீட்டில் அமைதியைக்
குலைக்கும் ராட்சஸன்” என்றான்.
கோதை சிரித்தாள். கன்னத்தில் குழி விழ, நேர்த்தியான பல் வரிசை பளிச்சிட, சிரித்தாள். இந்த நேர்த்தி அவளுடைய டிரேட் மார்க். நேர்த்தி கச்சிதம்.
அவனுடைய அம்மாவைப் போல அவள் ‘வழ வழா கொழ கொழா’வாக இல்லாமலிருந்ததே அவனை அவள்பால் ஈர்த்திருக்கலாம்.
“ஏன் சிரிக்கிறாய்?” என்றான்.
“ரவி, ராமு, பாஸ்கர், யாரைக் கேட்டாலும் இதைத்தான் சொல்கிறார்கள்.
அவரவர் வீட்டில் அவரவர் அப்பாக்கள்தான் பிரச்சினைகளென்று.”
கொழுப்பு….! இவள் இவ்வளவு பையன்களுடன் சிநேகிதமாக இருப்பதாக
அவன் மிரள வேண்டுமாம். சீண்டல் தளுக்கு. ஆனால் இந்தச் சீண்டல்தான்
அவனுக்கு இப்போதெல்லாம் வேண்டியிருந்தது.
“அவர்களுடைய அப்பாக்கள் குடியர்களா?” என்று கேட்டான்.
“இந்தக் காலத்தில் குடிக்காதவர்கள் யார்….?”
“அவர்களுடைய அப்பாக்கள் அவர்களுடைய அம்மாக்களை
அடிப்பார்களாமா…..?”
“லுக், அவர்களும் என் நண்பர்கள். அவர்கள் என்னுடன் சகஜமாக
உணர்ந்த வேளைகளில் என்னிடம் கொட்டியதை யெல்லாம் எல்லாரிடமும்
நான் திருப்பிச் சொல்லுவது நாகரிகம் இல்லை”.
“சகஜமாக உணர்ந்த வேளைகளில் என்றால் புரியவில்லையே?”
“சந்தேகப் பிராணி!” என்று அவள் அவன் கை மீது பட்டென்று ஒரு அடி
கொடுத்தாள். “எல்லாருடனுமே சில சமயங்களிலாவது நாம் சகஜமாக உணருகிறோமல்லவா-நம் அப்பாக்களுடன் கூட….?”
அப்பா…..! குப்பென்று அவனுக்குள் கோபம் பொங்கியது.
“என் அப்பாவுடன் நான் எப்போதுமே சகஜமாக உணர்ந்ததில்லை” என்றான்.
“அதை அவர் ஊக்குவிப்பதுமில்லை… தன்னை யாராவது நேசிப்பதோ
அல்லது தன்னிடம் நேசத்தை எதிர்பார்ப்பதோ அதிகப்பிரசிங்கத்தனம்
என்று அவர் நினைப்பது போல் தோன்றுகிறது, அதாவது நேசம் வீழ்ச்சி போல…
எனக்கு எப்படி விளக்குவதென்று தெரிய வில்லை”.
“அவ்வகை மனிதர்கள் சிலருடன் எனக்கும் பரிச்சயமுண்டு” என்று அவள் அனுதாபத்துடன் தலையை ஆட்டினாள்.
“அப்படியா…? எனக்கென்னவோ என் அப்பா மாதிரி ஒரு மிருகம் வேறு எங்குமே
இருக்க முடியாதென்றுதான் தோன்றும்…மிருகம்…! மிருகம்….! ஓ, எப்படி என்
அம்மாவை அடித்து நொறுக்குவார் தெரியுமா….? ஆனால்… ஃபன்னி…
அம்மா அவருடைய வசவுகளையும், முரட்டுப் பாணியையும் உள்ளூர
ரசிக்கத்தான் செய்கிறாளோ என்றும் எனக்குச் சில சமயங்களில் தோன்றும்…”.
“அப்படி ரசிக்கிற சில பெண்கள் உண்டுதான்…”
“உனக்கு இந்தப் பதினெட்டு வயதில் நிறையவே தெரிந்திருக்கிறது…”.
“ஒன்று மட்டும் தெரியாது”.
“என்ன?”
“உன்னைப் பற்றி” என்று அவள் மறுபடி தன் கன்னங்களில் அவனுக்காகக்
குழி பறித்தாள்.
“ஸாரி-உங்களைப் பற்றி என்று சொல்ல வேண்டும், இல்லை…?”
“சீச்சீ….!வேண்டவே வேண்டாம்…நீங்கள், உங்கள், இதெல்லாம் மறுபடியும்
என் அப்பாவின் கனிவில்லாத தன்மையையும், என் அம்மாவின் சலிப்பூட்டும் பொறுமையையும் நினைவூட்டுகிறது…நீ நான் என்றே நமக்குள் பேசிக்
கொள்ளலாம். அதுதான் நம்மிடையே நெருக்கத்தைப் பலப் படுத்தும்….”.
“நீ நீ நீ நீ நீ” என்று அவள் அவனுடைய ஒவ்வொரு விரலாகப் பிடித்து
நசுக்கினாள். அவன் விளையாட்டாக அலறினான்…
ஆம். நேற்றைக்கு நடந்தது போல அந்த மாலை நேரம். அந்தப் பூங்கா,
அவள் முகத்தில் குமிழியிட்ட உல்லாச வெறி எல்லாம் பசுமையாக நினைவு வருகின்றன. கூடவே ஒரு வெறுமையுணர்வு. “ஆடும்கூத்தை நாடச்
செய்தாயென்னை” என்று முணுமுணுக்கிறான்.
“கையைக் கொஞ்சித் தொடுவாய்
ஆனந்தக் கூத்திடுவாய்
அன்னை அன்னை
ஆடுங்கூத்தை நாடச் செய்தாயென்னை…”
கூத்து, இயக்கம்.
வாழ்வென்னும் இயக்கம்.
அவனைச் சீராக இயங்கச் செய்யும் –
முழுமையை நோக்கி அழைத்துச் செல்லும் -ஒரு அழகிய உந்து சக்தியாக
அவளை அன்று கண்டான். அவன் யாசித்த புத்தம் புதிய ஒரு ஆண் பிம்பத்துக்கு உரைகல்லாக. ஆனால் அவள் மூலம் அவன் பெற்றது புதுமையின் விளக்கமல்ல, பழமையின் விளக்கம் தான்.
அதாவது அன்பின் விளக்கமல்ல, வெறுப்பின் விளக்கம். அன்புதான்
வெறுப்பைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
வேடிக்கைதான்.
“காப்பி இந்தா” என்று அம்மா காப்பி டம்ளரை நீட்ட, அவன் கை நீட்டி வாங்கிக்கொண்டான். திடீரென்று நூறு அல்லது நூற்றைம்பது வருடங்கள் பின்னோக்கிச் சென்று விட்டது போலிருந்தது. அவனுடைய தாத்தா அல்லது
கொள்ளுத் தாத்தா கூடத்தில் ஈஸிச் சேரில் அமர்ந்திருக்க, அவர்களுக்காக
காப்பி எடுத்து வரும் பாட்டி அல்லது கொள்ளுப்பாட்டி; பித்தளை டம்ளரில்தான்
எடுத்து வந்திருப்பார்கள். அப்போது எவர்சில்வர் கிடையாது. பித்தளைப் பாத்திரங்களுக்கு-தம்ளர்-கூஜா-குடம்-ஒரு பிரத்தியேக வாசனை உண்டு;
கண்ணாடி டம்ளருக்கு வாசனை கிடையாது. அதிக விஸ்கியை ஊற்றுகிற
வரையில் அப்பாவும் ஒரு கண்ணாடி டம்ளர் போலத்தான். “அப்பா வாசனை,
அப்பா வாசனை என்று சின்ன வயதில் கூறிக்கொண்டிருப்பான். அதாவது
அப்பா அவனை முத்தமிடும்போது அடிக்கும் வாசனை. ரொம்ப நாள்
கழித்துத்தான் அது விஸ்கி வாசனை என்று புரிந்தது.
அந்த வாசனையை அம்மாவால் சுமுகமாக ஏற்றுக் கொள்ள முடியாததே அவர்களிடையே விரிசல் ஏற்படக் காரணமாயிருந்திருக்கலாம். அல்லது
அம்மாவின் வாசனை அப்பாவுக்குச் சலிப்புத் தட்டத் தொடங்கியதுதான் பிரச்சினையா?
மல்லிகை பூ வாசனை.
அந்த வாசனையை அணியும் உரிமையை அம்மா இழந்து ஐந்து
வருடங்களாகின்றன. அந்த வாசனைக்கு இன்னமும் உரிமை பெற்றவளான கோதைக்கோ அதில் சிரத்தையில்லை….
அவளுக்கு அந்த வாசனை ஒத்து கொள்ளாது என்பதும் ஒரு காரணம்: அலெர்ஜி.
கோதை என்ற பெயருள்ளவளுக்கு பூ மணம் அலர்ஜியாக இருப்பது நல்ல வேடிக்கைதான்.
“அப்பாஜி!” என்று உ ஷா ஓடி வந்து அவன் காலைக் கட்டிக் கொண்டாள்.
“அப்பா! இன்னிக்கு எனக்கு இங்கிலீஷ் டிக்டே ஷன் எல்லாமே ரைட்டுப்பா!”
“அப்படியா? எங்கே காட்டு?”
உ ஷா தனது அன்றைய ஸ்கூல் சாதனைகளை ஒவ்வொன்றாக அரங்கேற்ற, ராஜாராமன் வெரிகுட், வெரிகுட் என்று ஒவ்வொன்றையும் பாராட்டினான்.
அவளை அணைத்துக் கொஞ்சினான்…. அப்பா நல்ல மூடில் இருக்கிறார்.
இப்போது எது கேட்டாலும் கிடைத்துவிடுமென்று அவளுக்குப் புரிந்தது.
“அப்பா, எனக்கு ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்து ரொம்ப நாளாச்சுப்பா”
என்றாள்.
“நிஜமாவா?” “இத்தனை நாளாச்சு” என்று உ ஷா இரு கரங்களையும்
பெரிதாக விரித்துக் காட்டினாள்.
“அடேயப்பா! அவ்வளவு நாளாச்சா? சரி, வா”.
“பாட்டி, நீயும் ஐஸ் கிரீம் தின்ன வரயா பாட்டி?” “எனக்கு வேண்டாண்டி
கண்ணு. நீ போய் சாப்பிடு”.
“ஐஸ் கிரீம் ரொம்ப ஜோராயிருக்கும் பாட்டி”.
அம்மா சிரிக்க முயன்றாள். ஆனால் புதிதாக குதிரையேற முயன்றது
போலிருந்தது. படுதோல்வி. “நீ போய்ச் சாபிட்டுக்கோ. நீ சாப்பிட்டா
நான் சாப்பிட்ட மாதிரி” என்றாள்.
ராஜாராமன் சோர்வுடன் தன அம்மாவைப் பார்த்தான். குழந்தை ஆசையாகக் கூப்பிடுகிறது. பாவம் இவள் வந்தாலென்ன? ஐஸ் கிரீம் சாப்பிட்டாலென்ன?
ஆனால் மாட்டாள். வாழ்கை முழுவதும் வேண்டாம் வேண்டாமென்று
சொல்லியே பழகி விட்டது. விலகி விலகி, தனக்குள் சுருங்கிச் சுருங்கியே
பழகி விட்டது. பூஜை, மடி, விரதம். அப்பா அம்மாவை மூர்க்கமாக அடித்த
அந்த இரவுகள்… அன்பையும் கொடூரத்தையும் பிரிக்கும் கோடு எத்தனை
மெலிதானது! அவருடைய அன்புக்கு அதே அலைவரிசையில் அவளிடம்
எதிரொலி கிடைக்காமல் போனதே அவர்களிடையே பிரச்சினையாக இருந்திருக்கலாம். அப்பா ‘வேண்டும். வேண்டும்’ என்ற போது அம்மா
‘வேண்டாம், வேண்டாம் என்றிருப்பாள்.
“ஆடும் கூத்தை நாடச் செய்தாயென்னை…”
ஐஸ்கிரீம் பார்லரில் டிஸ்கோ இசை ஒலித்துக் கொண்டிருந்தது.
உஷா தன்னிச்சையாக, அவளையுமறியாமல், அந்த இசைக்கேற்ப குதிக்கத் தொடங்கினாள். குழந்தைகளின் பரிசுத்தம், அந்தந்த நேரத்து ஆசைகளை உடனுக்குடன் நிறைவேற்றுகிற எளிய லாவகம்.
பெரியவர்களான பிறகு நம்முடைய ஆசைகளைப் புரிந்து கொள்வதே
கடினமாகி விடுகிறது.
சுற்றிலும் சோபாக்கள் போடப்பட்டிருந்தன. ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு
உஷாவுடன் சோபாவில் அமர்ந்தான். பக்கத்து சோபாவில் இரு இளம் ஜோடி ஒரே டம்ளரில் இருந்து இருவரும் மில்க் ஷேக் உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
பாவம், அப்பா….! அம்மாவுடன் இப்படி ஒரே தம்ளரிலிருந்து உறிஞ்ச
வேண்டுமென்று அவர் ரொம்ப ஆசைப்பட்டிருக்கலாம். இத்தகைய
சின்ன சின்ன ஆசைகள் மறுக்கப்பட்டதே அவருடைய உள்ளத்தைக்
கடைந்து கடைந்து வெறுப்பு வெண்ணெயைத் திரளச் செய்திருக்கலாம்.
சீப்பிக் குடிக்காத அம்மா.
கடித்துத் தின்னாத அம்மா.
தனக்குத் தானே எப்போதும் பூட்டுப் பூட்டிக் கொள்கிறவள்.
நெருக்கத்துக்கு அஞ்சுகிறவள்.
அன்பு செலுத்தப் பயம்.
அன்பின் குழந்தைதான் வெறுப்பு.
விஸ்கியும் ரம்மும் அப்பாவுடைய அவமதிக்கப்பட்ட அன்பின் தற்காப்பு நடவடிக்கைகள். “சரிதான் போ சனியனே. உன் தூய்மை எனக்கு
வேண்டியதில்லை. நான் என்னை மேலும் மேலும் அழுக்காக்கிக் கொள்கிறேன் என்னிடம் வரவே வராதே” என்று சண்டி செய்வது போல.
அப்பா அழுக்கான, கசங்கின சட்டைகளுடன் ஆபீஸ் போன நாட்கள் உண்டு.
மடிப்புக் கலையாத சட்டை, பாண்டுடன் படுத்துத் தூங்கின நாட்கள் உண்டு.
எதிர்ப்பு, எதிர்ப்பு, எதிர்ப்பு.
அம்மாவின் தூய்மைப் பித்துக்கு எதிர்ப்பு.
ஐஸ்கிரீம் பார்லரிலிருந்து வெளிப்பட்டபோது வெளியே இருட்டி விட்டது.
“அப்பா, நாளைக்கு ஆயிடுத்தா….?” என்று உஷா கேட்டாள். ஐந்து வயது.
ஒன்றாம் வகுப்பு. நேற்று, இன்று, நாளை எல்லாம் அவளுக்கு இன்னமும்
குழப்பம்தான்.
“இப்ப நாளைக்கு இல்லை… இப்ப ராத்திரி… ராத்திரி முடிஞ்சப்புறம் மறுபடி
சூரியன் வரும். வெளிச்சமா ஆயிடும் – அது தான் நாளைக்கு”
“அப்போ அம்மா வந்துடுவா”
“ஆமாம்”
“அப்பா, அம்மா இப்படி சும்மாச் சும்மா என்னை விட்டுட்டு ஊருக்குப் போனா,
எனக்கு பிடிக்கவேயில்லைப்பா….”.
ஆஃபீஸ் வேலை, என்று அவன் குழந்தைக்குப் புரிய வைக்க முயன்றான்.
கோதையின் ஆஃபீஸ் முதியோர் கல்வி இலாகா. கருத்தரங்குகள், கிராமங்களில்
தகவல் சேகரிப்பு, என்று அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி வருகிறது.
வீட்டுக்குத் திரும்பினால் குழந்தைக்கு அம்மாவின் நினைவு மேலும்
அதிகமாகுமென்று தோன்றியதால், குழந்தையின் கையைப் பிடித்தவாறு
சற்று நேரம் கடைத் தெருவிலேயே சுற்றிக் கொண்டிருந்தான். குழந்தையின்
முகத்தில் – ஆர்வம் மின்னும் கண்களில் தன் சிறு வயது தோற்றம் தெரிவது போலிருந்தது. சின்னப் பையனாக அவன் அம்மாவுடன் கடைத் தெருவுக்குச்
சென்ற அந்த மாலை நேரங்கள்-
அப்பா எப்போதும் லேட்டாகத்தான் வருவார். அம்மாதான் கடைகண்ணிக்குச்
சென்று வரவேண்டும். இவன் தான் அவளுக்குத் துணை. அவனுக்குப்
பெருமையாக இருக்கும். “அம்மாவின் முகத்தில் ஒரு நாள் சிரிப்பை
வரவழைப்பேன்” என்று அவன் அப்போது நினைத்துக் கொள்வான்.
ஒரு குழந்தையின் அசட்டு நம்பிக்கை ஆர்வம்.
ஆனால் அம்மா இன்னமும் சிரிக்கத் தொடங்கவில்லை. முதியோர்களுக்குக்
கல்வி கற்பிக்க முடிகிறது. ஆனால் யார், எப்படி, அவர்களுக்குச் சிரிக்கக் கற்றுக் கொடுப்பது? துன்பங்களின் சுமைக்கடியில் நசுங்கிப் போனவர்களின்
நசுங்கல்களை நேராக்குவது எப்படி…?
திடீரென்று கோதையின் கடுகடுத்துக் கொள்ளும் முகம் அவன் நினைவில்
எழுந்தது. அவனுடைய அம்மாவின் அசட்டு ஆதாரங்கள், நம்பிக்கைகள்,
ஆகியவற்றின் உரசலினால் கோதையின் முகத்தில் ஏறும் வெறுப்பின்
கோடுகள்… மாலையில் பஸ்ஸில் திரும்புகையில் அவன் பார்த்த கோதையின்
சிரித்த முகம் இப்போது மறந்து போயிற்று.
கோதையின் முகமும் அம்மாவின் முகம் போல ‘வேண்டாம். வேண்டாம்’
என்று சொல்லுகிற முகமாகிவிடாதே….?
இந்த ‘வேண்டாம்’ இந்த வீட்டின் சுவர்களுக்கிடையில் இறுக்கத்தின் தாயாக, இன்பத்தின் எதிரியாக, என்றென்றும் உலவியவாறிருக்கிறது-
இரவுச் சாப்பாடு, உஷா, ராஜாராமன், அவன் அம்மா.
இன்று கடைசித் தடவையாக மூன்று குழந்தைகள் உட்கார்ந்து சாப்பிடுவதாய் ராஜாராமன் நினைத்துக் கொண்டான். உஷா நிஜக் குழந்தை; அவன் தன்
அம்மாவின் குழந்தை; அவனுடைய அம்மா தாவணி அணிவதற்கு முன்பே
தாலியில் சிறையான குழந்தை. அந்தக் குழந்தையைப் பெரியவளாக்க
அப்பா முயல்வதும், அந்த முயற்சியை அம்மா எதிர்ப்பதுமாகவே
அவர்களுடைய வாழ்நாள் கழிந்துவிட்டது.
இப்போது தாலி இல்லை. சிறை இல்லை. விடுதலை….! கிழவியின் முகம்.
ஆனால் மனத்தளவில் வெறும் குழந்தை.
ராஜாராமனுக்கு அவளைப் பார்க்கப் பார்க்க மனதில் இரக்கம் சுரந்தது.
பூங்கா, ஐஸ்கிரீம் பார்லர், இந்தக் கிழவி.
நாளைக்கும் தன் மனதில் இந்த இரக்கம் நிலைத்திருக்குமென்று
சொல்வதற்கில்லை. நாளைக்குக் கோதை வந்துவிடுவாள்.
உஷா தூங்குவது வரையில் ராஜாராமன் காத்திருந்தான். பிறகு அம்மாவிடம் சென்றான். “அம்மா!” என்று கூப்பிட்டான்.
சமையலறைக்குள்ளிருந்த அம்மா அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
கண்களில் அதே சோகம். அந்தச் சோகம் பரிசுத்தமானதாகத் தோன்றியது.
உலகம் தொடங்கிய நாள் முதல் நிலவி வந்துள்ளதும் என்றென்றும்
நிலைத்திருக்கப் போவதுமான ஒரு சோகமாகத் தோன்றியது.
“அம்மா!” என்று தேம்பியவாறு ராஜாராமன் அம்மாவை அணைத்துக்
கொண்டான். அவனுடைய அம்மா எந்த வித எதிர்ப்புமின்றி அவனுடைய அணைப்பினுள் புதைந்து கிடந்தாள். அப்பா, நீயும் அழுதிருக்க வேண்டும்.
இளகியிருக்க வேண்டும். குழந்தையாக மாறியிருக்க வேண்டும்.
ஒரு நாளாவது.
“இப்போது ராத்திரி” என்று குழந்தைக்குச் சொல்லுவது போல ராஜாராமன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். “ராத்திரி முடிஞ்சப்புறம் மறுபடி
சூரியன் வரும் வெளிச்சமா ஆயிடும் அதுதான் நாளைக்கு…”
.
……………………………………………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….