…………………………………………………

………………………………………………….
ஜப்பான் நாட்டின் ‘யமகட்டா’ மாகாணத்தில் உள்ள யமகட்டா மாகாண மருத்துவப் பல்கலைக்கழகம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வறிக்கையின்படி, தினசரி சிரிப்பவர்களுக்கு மாரடைப்பின் அபாயம், மன அழுத்தம், பதற்றத்தைப் பெருமளவில் குறைப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, யமகட்டா மாகாண நிர்வாகம் கொண்டு வந்த அவசரச் சட்டத்தின்படி, மக்கள் அனைவரும் தினசரி ஒருமுறையாவது கட்டாயமாக சிரிக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு மாதத்தில் எட்டாவது நாளையும் சிரிப்புத் தினமாகக் கடைப்பிடித்து அன்றைய தினம் சிரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து, ‘சிரிப்பது என்பது தனிநபர் உரிமை சார்ந்தது. அதை கட்டாயப்படுத்திச் செய்ய சொல்ல முடியாது’ என்று கூறியுள்ளன.
இதற்கு உண்மையிலேயே பலன் கிடைக்குமா….? என்று சென்னை திருவல்லிக்கேணி ஹியூமர் கிளப் செயலாளர் சேகரனிடம் கேட்டபோது, வாய்விட்டுச் சிரித்தவாறே அவர் கூறியதாவது –
இப்படியெல்லாம்கூட சட்டம் போடுவார்களா? என்று பலர் சிரிக்கக் கூடும்.
இந்தச் சட்டத்தை முழு மனதோடு வரவேற்கிறேன்.
‘வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்பது அறிந்த விஷயம்தான். அது விஞ்ஞானபூர்வமாகவும் உலக அளவில் நிரூபிக்கப்பட்டதுதான்.
அதைத்தான் யமகட்டா மாகாண மருத்துவப் பல்கலைக்கழகமும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
‘தினமும் சிரிக்க வேண்டும். மாதம் ஒரு நாள் சிரிப்பு தினம்’
என்பதெல்லாம் சரிதான். ஆனால், மக்களுக்கு சிரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதை அரசுதான் செய்ய வேண்டும் என்று
அவசியமில்லை.
அங்கே ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு, அல்லது அடுக்கு மாடிக் குடியிருப்புக்களுக்கு ஒன்று என ஹியூமர் கிளப்கள் துவக்கினாலே
போதுமானது. பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் நகைச்சுவைக்கு நிறைய வாய்ப்புகளையும் அளிக்க வேண்டும்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கடற்கரை, பூங்கா போன்ற பொது இடங்களில் ‘லாஃப்டர் தெரபி’ என்ற பெயரில் சிலர் ஒன்றுகூடி உடற்பயிற்சிகள் செய்தபடி, விதவிதமாக சிரித்துகொண்டிருப்பதைப் பார்க்கலாம். அவர்கள் செயற்கையாக பல்வேறு வகையான சிரிப்புகளையும் பயிற்சி செய்துகொண்டு இருப்பார்கள். இது, மனதைச் லேசாக்கும். ரத்த ஓட்டத்தை விறுவிறுப்பாக்கும். உடம்பை சுறுசுறுப்பாக்கும்.
சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்வற்றுக்கான முக்கிய காரணமான
மன அழுத்தத்தை இந்த சிரிப்புப் பயிற்சியால் ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக, ஹியூமர் கிளப் கூட்டங்களை மாதம்தோறும் நடத்தி வருகிறோம். அதில் பல்வேறு வயதினரும் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் பங்கேற்கின்றனர்.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வயதானவர்கள் தம்பதிகளாகவும்,
வேலைப் பளு, மன அழுத்தத்தை அதிகரிக்கும் வகையிலான துறைகளில் பணிபுரிவோரும் வருகின்றனர். இவர்கள் நகைச்சுவையான பேச்சுகளைக்
கேட்டு, ‘ஜாலியாக சிரிக்கிறோம். நிகழ்ச்சி முடிந்து புறப்படும்போது, மனசு லேசாகி, புது உற்சாகம் பிறக்கிறது’ என்கின்றனர்.
இன்று பெரும்பாலானோருக்கு வசதியான வாழ்க்கை இருக்கிறது.
செல்போன், டி.வி., இணையம் என்று எல்லாம் இருந்தாலும், மனம் விட்டுப் பேச ஆளில்லை. வாய் விட்டுச் சிரிக்க வாய்ப்பில்லை. இதனாலேயே மனச் சோர்வு அடைந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு நகைச்சுவையே ஓர் அருமருந்து.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் தனது நண்பரை ஹியூமர் கிளப் கூட்டத்துக்கு முதல் முறையாக அழைத்து வந்து, நண்பருக்கு புற்று நோய் பாதிப்பு இருப்பதாகவும், அவர் இன்னும் சில மாதங்களே உயர் வாழ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறிவிட்டதாகவும் என்னிடம் ரகசியமாகத் தெரிவித்தார்.
அவரை நகைச்சுவைகளைச் சொல்ல ஊக்கம் அளித்தேன். அவர் மற்றவர்கள் சொல்லும் நகைச்சுவைகளையும் ரசித்து சிரிப்பதையும் கவனித்தேன்.
அவருக்கு ஹியூமர் கிளப் சூழ்நிலை பிடித்துப் போய், தொடர்ந்து வர ஆரம்பித்தார். நகைச்சுவை ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்தின் காரணமாக, சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அவர் உயிர் வாழ்ந்தார். அதற்காக, இறுதிக் காலத்தில் மன மகிழ்ச்சியோடு இருக்க நகைச்சுவை கை கொடுக்கும்.
யமகட்டா மாகாண நிர்வாகத்துக்கு நான் ஓர் ஆலோசனை சொல்ல விரும்புகிறேன். அதன் கவர்னர் அல்லது முதல்வரை எங்கள் ஹியூமர்
கிளப்பில் கெளரவ உறுப்பினராக சேர்த்துகொள்ள நாங்கள் தயார்.
வந்து எங்கள் நிகழ்ச்சிகளைப் பாருங்கள். எங்களுடைய தமிழ், ஆங்கில நகைச்சுவைகளை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்துச் சொல்லி
உங்களை சிரிப்பு மூட்டவும் நாங்கள் தயார். நீங்களும் நகைச்சுவைகளைச் சொல்லுங்கள். நீங்கள் விரும்பினால் உங்கள் ஊருக்கு வந்து ஹியூமர்
கிளப்கள் அமைத்துக் கொடுக்கவும் நாங்கள் தயார்’ என்கிறார் சேகரன்.
………………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….