முக்தா சீனிவாசனும், முக்கூர் சுவாமிகளும் …!!!

………………………………………….

………………………………………….

(முக்தா சீனிவாசன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், கதைவசனகர்த்தா…. இவரும் இவரது சகோதரர் முக்தா ராமசாமியும் சேர்ந்து முக்தா ஃபிலிம்ஸ் எனகிற ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி, தமிழில் பல புகழ் பெற்ற படங்களை எடுத்திருக்கிறார்கள்….

ஜஸ்ட் நினைவுபடுத்த – கமல்ஹாசன்+மணிரத்னம் சேர்ந்து படைத்த பல பரிசுகளைப்பெற்ற “நாயகன்”, ஜெயலலிதா அவர்கள் முக்கிய பாத்திரத்தில் நடித்த “சூர்யகாந்தி”, எஸ்.எஸ்.ஆர். நடித்த “முதலாளி” ஆகியவற்றைச் சொல்லலாம்…..5-6 வருடங்களுக்கு முன்னர் ஒரு தடவை சென்னை புத்தகக் கண்காட்சியில், ஒரு ஸ்டாலில் அவர் எழுதிய சில புத்தகங்களுடன், முக்தா சீனிவாசன் தனியே அமர்ந்திருந்ததைப் பார்த்தேன்.

அவர் ஹாய்யாக உட்கார்ந்திருந்ததாலும், அவரைப்பற்றி எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும் என்பதாலும், அவரும் விரும்பியதாலும், அரை மணி நேரத்திற்கு மேல் அவருடன் உட்கார்ந்து பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். கிளம்பும்போது, அவர் கையெழுத்து போட்டு கொடுத்த , “இணையற்ற சாதனையாளர்கள்’ எனும் ஒரு புத்தகத்தையும் வாங்கினேன்….. அந்த நூலிலிருந்து ஒரு சிறு துளி கீழே …. முக்தா சீனுவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் நெருங்கிய நண்பர்…..)

……………………………………………………….

கவிஞர் வாலி எழுதிய “பாண்டவர் பூமி’ கவிதைகளில் மிகவும் கவரப்பட்டவராக இருந்தவர் ஜி.கே.மூப்பனார். என்னிடம், “”அதற்கு ஒரு விழா எடுத்தால் என்ன?” என்று கேட்டார்.

“”அவசியம் செய்ய வேண்டிய படைப்பு அது” என்றேன் நான்.
விழாவுக்கான ஏற்பாடுகளைத் தொடங்குமாறு என்னையும், கவிஞர் நேதாஜியையும் பணித்தார் ஜி.கே.மூப்பனார்.


பேச்சாளர் பட்டியலைத் தயாரித்தேன். அதை படித்த மூப்பனார், “”ஏன் முக்தா. இந்த விழாவில் பேச முக்கூர் லட்சுமி நரசிம்மச்சாரியரை அழைக்கலாமே? அவரை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
“”தெரியும்” என்றேன்.
“”போய் அவரை அழைத்துவிட்டு வாருங்கள்” என்றார்.
நான் முக்கூர் ஸ்வாமியை சந்தித்து விழாவுக்கு அழைத்தேன்.

மகிழ்ந்தார். “”அவசியம் செய்ய வேண்டும். நான் நிச்சயமாக வருகிறேன்” என்றார் அவர்…
அன்று பாண்டவர் பூமியைப் பற்றி அவர் ஆற்றிய உரையை யாரும் வாழ்நாளிலேயே மறக்க முடியாது.
என்ன புலமை என்ன புலமை!
இந்த மாதிரி மகாமனிதர்கள் இந்தத் தேசத்தில் அவதரிப்பதுதான் நம்முடைய பெருமை.


கூட்டத்தில் நிறைய பேச்சாளர்கள் இருந்ததால், அவருக்கு உண்டான நேரத்தைத் தர முடியாமல் நான் தவித்தேன். அப்போது அவர் தன்னைப் பற்றி ஒரு நகைச்சுவையை சொன்னார். அரங்கமே அதிர்ந்தது கரவொலியில்..!
அப்படி என்ன சொன்னார் தெரியுமா?


“”ஆஸ்திக சமாஜத்தின் தலைவர் ரத்னமய்யர் சொல்வார். எல்லோருக்கும் பேசறதுக்கு பணம் கொடுக்கணும்.”

“முக்கூர் ஸ்வாமிக்கு பேச்சை முடிப்பதற்கு பணம் தரணும் என்று!”

இதை சொல்லிவிட்டு ஸ்வாமி சிரித்த சிரிப்பு இருக்கிறதே (உடம்பெல்லாம் குலுங்கியபடி) அதை நான் இன்றும் அடிக்கடி நினைத்துப் பார்த்து மகிழ்கிறேன்.

.

………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.