மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் உளறிக் கொட்டினால் ….. என்ன செய்யலாம்…???

…………………………………………………………….

……………………………………………………………………………………………………………….

மோடி சொல்வது சரியா…?
சினிமா மூலம்தான் உலகத்திற்கு காந்தியை தெரிந்ததா…?
உண்மை என்ன?

செய்தித் தளத்திலிருந்து –

#factcheck#

Thursday, May 30, 2024, 12:18 [IST] சென்னை:
https://tamil.oneindia.com/news/chennai/did-the-world-know-gandhi-only-through-cinema-is-what-modi-says-true-609747.html

………………………..

பிரதமர் மோடி சொல்வதைப் போல 1982-ல் காந்தி திரைப்படம் வெளியான
பிறகுதான் அவரை உலகில் உள்ளவர்கள் தெரிந்து கொண்டார்களா?
உண்மை என்ன? வரலாறு என்ன சொல்கிறது?

மகாத்மா காந்தியைப் பற்றி பிரதமர் மோடி அளித்த பேட்டி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ‘காந்தியைப் பற்றி திரைப்படம் வருவதற்கு முன்பு, உலகில்
அவரை யாருக்கும் தெரியாது’ என்று கூறியிருந்தார். அதாவது ரிச்சர்ட்
அட்டன்பாரோ 1982-ல் தான் திரைப்படம் எடுத்தார்.

அந்தப் படம்தான் உலகம் முழுவதும் காந்தியைக் கொண்டு போய் சேர்த்ததா
என்றால் இல்லை. இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே காந்தியைப் பற்றி
ஒரு ஆவணப்படத்தை ‘உலகம் சுற்றிய தமிழன்’ என்று அடையாளப்படுத்தப்படும் ஏ.கே.செட்டியார் என்பவர் எடுத்தார். இதற்கான முயற்சியை ஏ.கே.செட்டியார் 1937-ல் எடுத்தார். இந்த ஆவணப்படத்தைத் தயாரிப்பதற்காகக் காந்தி எந்தெந்த நாடுகளுக்கு எல்லாம் பயணம் செய்தாரோ அந்த நாடுகளுக்கு எல்லாம் பயணம் செய்தார் ஏ.கே.செட்டியார்.

அந்தந்த நாடுகளில் உள்ள செய்தி நிறுவனங்கள் படம் பிடித்து வைத்திருந்த
ஃபிலிம் ரோல்களை சேகரித்தார். காந்தி ஆவணப்படத்திற்காக அவர்
ஒரு லட்சம் மைல் பயணம் செய்தார். உலகத்தை மூன்று முறை சுற்றிச் சுற்றி
இந்த ஃபில்ம் ரோல்களை சேகரித்தார். இதில் ரஷ்யாவுக்கு மட்டும் தான்
செட்டியார் செல்லவில்லை. ஏனெனில் காந்தியும் ரஷ்யாவுக்குச் செல்லவில்லை.


ஆக,மொத்தம் இந்தப் பயணம் மூலம் 50 ஆயிரம் அடிகள் வரை சேகரித்தார்.
இந்த ஆவணப்படம் 1940-ல் வெளிவந்தது. இந்தப் படம்தான் காந்தியைப் பற்றி முதன்முதலாக வெளியே வந்தது. அதை ஒரு தமிழர் எடுத்தார் என்பதுதான்
பெருமை. காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டமாக மத்திய அரசு காந்திக்காக ஒரு இணையத்தளத்தை உருவாக்கியது. அதில் செட்டியார் எடுத்த ஆவணப்படம்தான் உள்ளது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத் தான் அட்டன்பாரோ தனது ஹாலிவுட்
படத்தைத் தயாரித்தார். ஆக, காந்தியை 1940-க்கு முன்பே உலகில் உள்ள
பலருக்கும் தெரியும். குறிப்பாக உலக நாடுகளில் உள்ள தலைவர்களுக்குத்
தெரியும். குறிப்பாகச் சொன்னால், உலக அளவில் மிகப்பிரபலமான
அமெரிக்காவில் வெளியாகும் டைம் வாரப் பத்திரிகை 1932-ல் காந்தியை
அட்டைப் படத்தில் போட்டுக் கட்டுரை எழுதியது.

உலக புகழ்பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாய் 1909-ல் காந்தியைத் தெரிந்துவைத்திருந்தார். அவருடன் நட்பு கொண்டிருந்தார் என்பது வரலாறு. 1920-ல் ஹோ சி மின் காந்தியை அறிந்து வைத்திருந்தார். இதற்கு எல்லாம் மேலாக அறிவியல் உலகின் தந்தை ஐன்ஸ்டீன் 1931-ல் காந்தியைப் பற்றி எழுதியிருக்கிறார்.

உலகையே தன் நடிப்பால் கட்டிப்போட்ட சார்லி சாப்ளின் 1931-ல் காந்தியைச்
சந்தித்து பேட்டி எடுத்துள்ளார். 1940-களில் நெல்சன் மண்டேலா காந்தியிடம்
இருந்து, தான் பாடம் கற்றுக் கொண்டதாகப் பேசி இருக்கிறார். நோபல் பரிசு
பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் லூயி ஃபிஷர் காந்தியைப் பற்றிய சுயசரிதையை
எழுதி புத்தகமாக வெளியிட்டார். ஒரு வெளிநாட்டு எழுத்தாளர் காந்தியைப் பற்றி சுயசரிதை எழுதும் அளவுக்கு மிகவும் பிரபலமாக இருந்தார் காந்தி.

இதை எல்லாம் தாண்டிதான் காந்தியின் திரைப்படம் 1982-ல் வெளியானது.
ஆனால், காந்தி 1948-ல் சுட்டுக் கொலை செய்யப்பட்டபோது உலகில் உள்ள
52 நாடுகள் அவருக்காகத் துக்கம் அனுசரித்தன. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூடி அஞ்சலி செலுத்தினர். அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் கண்ணீர் மல்க அறிக்கை வெளியிட்டார். ஐன்ஸ்டீன், ‘உலக அரசியல்
சரித்திரத்தில், காந்தியடிகள் ஒரு சிறந்த புருஷர். வருங்காலத்தில் இப்படி ஒரு
மனிதர் நம்முடன் வாழ்ந்தார் என்பதை வரும் தலைமுறை நம்ப மறுப்பார்கள்’
என்று எழுதினார்.

‘அளவுக்கு மீறி நல்லவனாக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை
இந்தச் சம்பவம் காட்டுகிறது’ என்று எழுதினார் பெர்னார்ட் ஷா.
லண்டனில் உள்ள பிபிசி நிறுவனம் காந்தியின் இறுதி யாத்திரையை ஒளிபரப்பு செய்தது. அந்நாட்டுப் பிரதமர் அட்லி அஞ்சலி செய்தியை வெளியிட்டார்.

காந்தி இந்திய விடுதலைக்காகப் போராடுவதற்கு முன்பே அவர் சவுத் ஆப்ரிக்காவில் உள்ள இந்தியர்கள் மற்றும் ஆப்ரிக்க கறுப்பர்களுக்காக போராடினார். அங்கேதான் அவரது போராட்டம் தொடங்கியது. ஆகவே, அவரை உலக நாடுகள் 1914-களுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்தனர். அங்கே காந்தி நடத்திய போராட்டம் வெற்றி பெற்ற பிறகே அவர் இந்தியாவுக்கு நிரந்தரமாக 1919-ல் திரும்பினார்.

அதன்பின்னர் அவர் நடத்திய உப்பு சத்தியாகிரகம் போராட்டம் உலக அளவில் பேசப்பட்டது. இந்தப் போராட்டத்தைக் கண்டு வியந்துதான் 1932-ல் டைம்
பத்திரிகை அவரை அட்டையில் போட்டுக் கட்டுரை எழுதியது. காந்தி
இந்தியாவின் தலைவர் இல்லை. அவர் முதலில் அரசியல் தலைவராக
உருவெடுத்தது தென் ஆப்ரிக்காவில். ஆகவே அவர் முதலில் ஆப்ரிக்க
கண்டத்தில் தலைவராக வலம் வந்தார். அடுத்து அவர் பிரிட்டிஷ் ஆட்சியை
எதிர்த்தார். இங்கிலாந்து அரசாட்சியை எதிர்த்ததால் அவரை ஐரோப்பா
கண்டம் முழுவதும் தெரிந்தது. ஆகவே அவர் ஐரோப்பா கண்டத்தில்
தலைவராக மாறினார்.

அவர் இந்தியாவில் செய்த அரசியல் மாற்றத்தால், ஜப்பான், ஆப்கானிஸ்தான்
போன்ற ஆசியக் கண்டமே அவரை அறிந்து வைத்திருந்தது. அவர் ஆசியக்
கண்டத்தில் தலைவராகவும் வலம் வந்தார். அன்றைக்கு மூன்று கண்டங்கள்
அறிந்து வைத்திருந்த ஒரே தலைவர் காந்திதான். அதை நாம் சொல்லவில்லை.
காந்தி பற்றி ஆராய்ச்சி செய்து புத்தகங்களை எழுதியிருக்கும் இந்திய
புகழ்பெற்ற எழுத்தாளர் ராமச்சந்திர குஹா சொல்கிறார்.

.
……………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் உளறிக் கொட்டினால் ….. என்ன செய்யலாம்…???

  1. ஆதிரையன்'s avatar ஆதிரையன் சொல்கிறார்:

    அவர் ஹிந்தியில் அளித்த பேட்டியை சிறிதும் பார்த்திராமலே, அவர் காந்தியை பற்றி இப்படி கூறிவிட்டார் என்று பொங்க ஆரம்பித்துவிட்டார்கள். என்ன செய்வது , படிப்பறிவு இல்லையெனில் நம்மை இந்த முட்டாள்கள் கூட்டம் தான் ஆளும் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.