……………………………………………..

……………………………………………….
மகாபாரதத்தில் வரும் உன்னதமான கதாபாத்திரங்களில் ஒருவன்
யுதிஷ்டிரன் என்னும் தர்மபுத்திரன்…. அவனை தரும தேவதையின் அம்சம்
என்பார்கள். எதன் பொருட்டும் தருமம் தவறாதவன்; தருமபுத்திரன் என்ற
சிறப்பைப் பெற்றவன். அவனே ஒரு நாள் தன் தவற்றை உணரும்படியான
சம்பவம் நிகழ்ந்தது.
தருமரிடம் யாசகம் வேண்டி நின்றான் ஒருவன். அப்போது ஏதோ
அதிமுக்கியமான சிந்தனையில் இருந்த தருமர், நாளை வாருங்களேன்’’ என்று கூறினார். அவ்வளவுதான், உடன் நின்றிருந்த பீமன்,என் அண்ணா
காலத்தை வென்றுவிட்டார்… என் அண்ணா காலத்தை வென்றுவிட்டார்’’
என்று கூவத் தொடங்கினான்.
யுதிஷ்டிரர் திகைத்தார். ஒருவாறு பீமனை அடக்கி “ஏன் அவ்வாறு
உரைத்தாய்?’’ என்று வினவினார்.
பீமன் சொன்னான், `அண்ணா, இன்று இருப்பவர்கள் நாளை இருப்பார்களா என்பது நம் கையில் இல்லையே. அது காலத்தின் கையில் அல்லவா இருக்கிறது ...? ஆனால் நீங்களோ,நிச்சயம் நாளை இருப்போம்’ என்று
உறுதியான நம்பிக்கையில் அல்லவா யாசகனை நாளை வா எனச்
சொல்லுகிறீர்கள். எனில், நீங்கள் காலத்தை வென்றவர்தானே?’’
தேவைப்படும்போது கொடுக்காதது தருமமே அல்ல என்பதையே பீமன்
இவ்வாறு சுட்டிக்காட்டுகிறான் என்பதை தருமர் புரிந்துகொண்டார். யாசகன் கேட்டதைக் கொடுத்து, திருப்தியோடு அவனை அனுப்பிவைத்தார்.
பீமன் இங்கே, தருமத்தின் நியதியை மட்டுமல்ல, காலத்தின்
முக்கியத்துவத்தையும் சேர்த்தே உபதேசித்தான் என்றே சொல்ல வேண்டும்.
…………………………………………..
ஞானி ஒருவரிடம் கேட்டார்கள், “உலகிலேயே பேரானந்தப் பெரு மகிழ்ச்சிக்கு உரியவர்கள் யார்?’’
ஞானி சொன்னார், “நீங்களும் நானும்தான்!’’
மீண்டும் கேட்டார்கள், “மகிழ்ச்சிக்கு உகந்த இடம் எது?’’
ஞானியின் பதில், “இதோ இந்த இடம்தான்.’’
நிறைவாய்க் கேட்கப்பட்டது ஒரு கேள்வி, “மகிழ்ச்சிக்கான நேரம் எது?’’
ஞானி ஆனந்தமாய்ச் சொன்னார், “இதோ இந்த நொடிதான்!’’
எவ்வளவு பெரிய உண்மையை அந்த ஞானி எவ்வளவு எளிமையாய்
உணர்த்திவிட்டார் பார்த்தீர்களா? ஜென் மரபில் ஒரு வாக்கியம் உண்டு.
`ஒரே நதியில் இரண்டு முறை குளிக்க முடியாது’ என்பார்கள்.
அதாவது,
ஓரிடத்தில் ஓடும் நீர் மறு விநாடியில் வேறு இடத்துக்கு மாறிவிடும்.
நம் வாழ்க்கையும் அப்படித்தானே. கழிந்துபோகும் நொடிகளை எவ்வளவு
முயன்றாலும் நம்மால் மீட்க முடியாது. ஆகவே, ஒவ்வொரு நொடியையும்
அனுபவித்து, மகிழ்வோடு வாழ வேண்டும்.
நம்மில் பலரும் என்ன செய்கிறோம்?
ஒன்று கடந்த கால நினைவுகளில் மிதந்து உழல்கிறோம்.
அல்லது, எதிர்கால பயத்தால் துவண்டு போகிறோம்.
நிகழ்காலத்தை, அதாவது நிகழும் நொடியை அனுபவிக்க
தவறி விடுகிறோம்.
“கடந்த காலம் என்பது உடைந்து போன பானை …
எதிர்காலம் என்பது மதில் மேல் பூனை …..
நிகழ்காலம் என்பது – கையில் உள்ள வீணை –
அதனை இசைத்து, நிகழ்காலத்தை அனுபவிக்க
தெரிந்துகொள்ள வேண்டும்.
.
………………………………………………………………………………………………………………………………



Thank you KM sir fo sharing these wonderful stories