……………………………………….

………………………………………..
விகடன் தளம் தரும் பிரமிப்பளிக்கும் தகவல்கள் …..
போதைப்பொருள் கடத்தல் வழக்கில், டெல்லியில் தன் கூட்டாளிகள்
மூன்று பேர் கைதானதாக என்.சி.பி அறிவித்தவுடனேயே ஜாபர் சாதிக் தலைமறைவாகிவிட்டார். பத்து நாள்களாகத் தலைமறைவாக இருந்தவரை,
தீவிர தேடலுக்குப் பிறகுதான் தட்டித் தூக்கியிருக்கிறது என்.சி.பி-யின் டெல்லி ஸ்பெஷல் யூனிட்.
என்.சி.பி-யின் சீனியர் அதிகாரிகள் சிலர் பேசுகையில், “பிப்ரவரி 26-ம்
தேதியிலிருந்தே சாதிக்கைத் தேடத் தொடங்கிவிட்டோம். ஒரு சிறு அரசியல் அமைப்பின் பாதுகாப்பில் சென்னையில் சில காலம் இருந்தவர், எங்களுடைய
தேடுதல் தீவிரமானவுடன் திருவனந்தபுரத்துக்குத் தப்பிவிட்டார். அங்கேயும்,
அந்த அரசியல் அமைப்பின் கிளைதான் அவரைப் பாதுகாத்திருக்கிறது.
கேரளாவில் அவருக்குத் தொடர்புகள் இருப்பது தெரிந்தவுடன், அங்கேயும்
தேடுதல் வேட்டையைத் தொடங்கினோம். உடனே, சாலை மார்க்கமாக
புனேவுக்குத் தப்பிச் சென்றவர், அங்கிருந்து அகமதாபாத் வந்து, பிறகு
ஜெய்ப்பூருக்குச் சென்றிருக்கிறார். இந்தக் காலகட்டத்தில், தனக்கென
எந்த மொபைல் போன், நம்பரையும் அவர் பயன்படுத்தவில்லை.
தனக்கு அடைக்கலம் அளித்தவர்களின் மொபைல் எண்களிலிருந்தே நெருக்கமானவர்களிடம் பேசிவந்திருக்கிறார்.
இந்தத் தகவல் கிடைத்தவுடன், சாதிக்குக்கு நெருக்கமான வட்டாரத்தின்
மொபைல் எண்கள், இ-மெயில்களைக் கண்காணிக்கத் தொடங்கினோம்.
அப்போது, தன் உறவினர் ஒருவரை சாதிக் இ-மெயிலில் தொடர்புகொண்டது தெரியவந்தது. அந்த மெயில் அனுப்பப்பட்ட ஐ.பி அட்ரஸைத் துழாவியபோது ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரிலுள்ள ஒரு பங்களாவின் முகவரியைக்
காட்டியது.
உடனடியாக, டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்குப் பறந்தது ஸ்பெஷல் டீம்.
ராஜஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் கடத்தலில் ஈடுபடும் ஒரு முக்கியப்
புள்ளியின் பங்களாவில்தான் பதுங்கியிருந்தார் சாதிக். லோக்கலிலுள்ள
என்.சி.பி அதிகாரிகளையும் உஷார்படுத்தி, அந்த பங்களாவைக்
கண்காணிப்பில் வைத்தோம். அடுத்த சில மணி நேரத்திலேயே ஸ்பெஷல் டீம்
அவரைக் கைதுசெய்தது. எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல், அமைதியாக
எங்களுடன் புறப்பட்டார் சாதிக். டெல்லியில், அவரை நீதிமன்றக் காவலுக்கு
உட்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம்.
சாதிக்கின் சர்வதேசப் போதைப்பொருள் கடத்தல், மலேசியாவிலிருந்துதான்
தொடங்கி யிருக்கிறது. ‘கேட்டமைன்’ என்கிற போதைப் பொருள்,
‘ஸ்பெஷல் கே’ என்கிற அடைமொழியில் மலேசியாவில் சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ், கம்போடியா என
மலேசியாவின் அண்டை நாடுகளிலும், ‘ஸ்பெஷல் கே’-வுக்கு எனத்
தனி டிமாண்ட் உண்டு. அந்த பிசினஸில்தான் முதலில் இறங்கியிருக்கிறார்
சாதிக். அதற்கு, மலேசியாவைச் சேர்ந்த சினிமா ஃபைனான்ஸியரும் தொழிலதிபருமான ஒருவர் பெரும் உதவிகளைச் செய்திருக்கிறார்.
கடத்தல் செய்வதற்கென இரண்டு ஏற்றுமதி நிறுவனங்களைத் தொடங்கிய
சாதிக், (M/S Cube Impex, M/S Hitech Traders),
வெல்ல மூட்டைக்குள்ளும், வளையல்களுக்குள்ளும் ‘கேட்டமைன்’
போதைப் பொருளை மறைத்துவைத்துக் கடத்தியிருக்கிறார்.
கூடவே, ‘சூடோபெட்ரின்’ கடத்தலையும் செய்திருக்கிறார். 2018-ம் ஆண்டு வரை, இந்தக் கடத்தல் பிரச்னையில்லாமல் தொடர்ந்திருக்கிறது. ஆனால்,
அந்த ஆண்டு அக்டோபரில், மலேசியாவுக்கு அவர் அனுப்பியிருந்த
38.68 கிலோ ‘கேட்டமைன்’, மும்பை சுங்கத்துறையிடம் சிக்கியபோதுதான், அவருக்குச் சிக்கலானது. ஆனாலும் பெரிய அளவில் அவருக்கு அது
தடைக்கல்லாக அமையவில்லை. அது தொடர்பான வழக்கு இன்றும்
நிலுவையில் இருக்கிறது.
இதற்கிடையே, துபாயில் இருந்தபடியே சர்வதேச போதைப்பொருள்
கடத்தலை மேற்கொள்ளும் மொகஜித், ரூமி, சாகுல் ஆகியோரின் நட்பு
கிடைத்த பிறகு, சாதிக்கின் சர்வதேசக் கடத்தல் எல்லைகள்
விரிவடைந்திருக்கின்றன.
உணவுப்பொருள் ஏற்றுமதிக்காக, தான் தொடங்கிய (Zuko Overseas
Foodstuff Trading Company) நிறுவனத்தின் கூட்டங்களைப்
பலமுறை துபாயில்தான் நடத்தியிருக்கிறார் சாதிக். அந்த நிறுவனத்தின் மூலமாகத்தான் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்குத் தேங்காய் பவுடர் டின்களில் ‘சூடோபெட்ரின்’ என்கிற போதைப் பொருளுக்கான
மூலப்பொருளைக் கடத்திவந்திருக்கிறார். இன்று, துபாய், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என ஒரு டஜன் நாடுகளுக்கு மேல் தனக்கென தனி நெட்வொர்க்கை வளர்த்திருக்கிறார் சாதிக்.
அந்தத் தொடர்புகளையெல்லாம் உளவு அமைப்பான ‘ரா’ மூலமாகக்
கண்காணிக்க ஆட்சி மேலிடம் உத்தரவிட்டிருக்கிறது. சாதிக் கைது,
சர்வதேச அளவில் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பியிருப்பது உண்மை”
என்றனர்.
சாதிக்கின் கைது, சர்வதேச அளவில் ஓர் அதிர்வைக் கிளப்பியிருப்பது
ஒருபக்கம் என்றால், தமிழகத்திலோ இந்த விவகாரம் ஒரு பூகம்பத்தையே உண்டாக்கிவிட்டது. சாதிக்கைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டாலும், அவரால்
ஏற்பட்ட கறையை முழுவதுமாகத் துடைத்துவிட முடியாமல் சிக்கித்
திணறுகிறது தி.மு.க. சாதிக் வழக்கு தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகாரளித்து, பரபரப்பை எகிறவைத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்
எடப்பாடி பழனிசாமி. .
நம்மிடம் பேசிய சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர், “போதைப்பொருள்
கடத்தல் வழக்கில், ஏற்கெனவே சென்னை போலீஸால் கைது செய்யப்பட்டவர்
தான் ஜாபர் சாதிக். நவம்பர் 2013-ல், ‘சூடோபெட்ரின்’ வைத்திருந்ததாக
அவரை எம்.கே.பி நகர் போலீஸார் கைதுசெய்தனர்.
அவரோடு சேர்த்து மேலும் நான்கு பேர் கைதானார்கள். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க போலீஸ்
தவறிவிட்டது. ஆய்வுக்கு அனுப்பியதிலும் குளறுபடிகள் நடந்தன.
கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் உருண்டோடிய அந்த வழக்கில்,
‘அரசுத் தரப்பு உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை’ என,
சந்தேகத்தின் பலனைக் குற்றவாளிகளுக்குச் சாதகமாக்கி, சாதிக் உட்பட
ஐந்து பேரையும் விடுவித்தது நீதிமன்றம்… !!!
போதைப்பொருள் கடத்தல், ஏ ப்ளஸ் ரெளடிகளின் நடமாட்டம், சட்டம்-ஒழுங்கு
பிரச்னை உள்ளிட்டவற்றில், மாநகர காவல் ஆணையர்கள் கூடுதல்
கவனத்துடன் இருப்பார்கள். அவர்களுக்குத் தகவல்களைத் தர, ‘சிட்டி ஐ.எஸ்’
என மாநகரக் காவல்துறையில் ஓர் உளவுப்பிரிவும் செயல்படுகிறது.
2013-ல், சாதிக் கைதுசெய்யப்பட்டபோதும், அவர் விடுதலை செய்யப்பட்டபோதும் சென்னை மாநகர காவல்துறையின் கமிஷனராக இருந்தவர் ஜார்ஜ். இடைப்பட்ட காலத்தில், டி.கே.ராஜேந்திரனும் பல மாதங்கள் கமிஷனராகப் பணியாற்றியிருக்கிறார். சாதிக் மீதான போதைப்பொருள் வழக்கில், அவர்கள் இருவரும் கவனமாகச் செயல்பட்டிருந்தால், சாதிக் தப்பியிருக்க முடியாது. இவ்வளவு பெரிய பிரச்னையும் இப்போது ஏற்பட்டிருக்காது.
தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, அந்தக் கட்சியில் தீவிரமாகச்
செயல்பட்டிருக்கிறார் சாதிக். அவருக்குக் கட்சியில் பொறுப்பும் வழங்கப்பட்டது. முதல்வர், மூத்த அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரிடமும் நெருங்கியிருக்கிறார். அப்போதும்கூட சென்னை மாநகர உளவுப்பிரிவு உஷாராகவில்லை. மாநகர காவல்துறைக்கு சிசிடிவி கேமராக்களை நன்கொடையாக வழங்கியதால் சாதிக்குக்குப் பரிசளித்ததாகவும், அவருடைய உண்மை முகம் தெரிந்தவுடன், அந்த கேமராக்களைத் திருப்பி அளித்துவிட்டதாகவும் சொல்கிறார் டி.ஜி.பி.
அடுத்தகட்டமாக, சாதிக்கை சென்னைக்கு அழைத்து வந்து மேல் விசாரணை
நடத்தத் தீவிரமாகிறது என்.சி.பி. அவரோடு தொடர்பில் இருந்த அரசியல்
புள்ளிகள், திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என 23 பேர் ‘டார்கெட்’டில் இருப்பதாகச் சொல்கின்றன என்.சி.பி வட்டாரங்கள்.
அது குறித்து நம்மிடம் பேசிய சீனியர் என்.சி.பி அதிகாரி ஒருவர், “முதற்கட்ட விசாரணையிலேயே, அதிர்வைக் கிளப்பும் பல விஷயங்களையும்
கொட்டிவிட்டார் சாதிக். அதில், இயக்குநர் அமீருடனான தன் இணக்கத்தைப் பற்றித்தான் விரிவாகப் பேசியிருக்கிறார். ‘2007-லிருந்தே அமீரும் நானும்
நெருக்கம். திரைத்துறையிலும் அரசியலிலும் எனக்குப் பல உதவிகளையும்
செய்தவர் அமீர். இருவரும் சேர்ந்தேதான் இரண்டு ‘கஃபே’க்களை
சென்னையில் தொடங்கினோம்’ என்றிருக்கிறார் சாதிக். சாதிக்கின் ஒரு நிறுவனத்தில் அமீர் இயக்குநராக இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.
இதனால், அமீருக்கு நோட்டீஸ் அனுப்பி, அவரிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.
ஒரு மதபோதகரும் சாதிக்கும் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள்.
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் திரட்டும் பணியில் அந்த
போதகர் ஈடுபட்டவர் என்பதால், என்.ஐ.ஏ-வின் கண்காணிப்பு வளையத்துக்குள் அவர் வைக்கப்பட்டிருக்கிறார்.
போதைப்பொருள் கடத்தல் மூலமாக சாதிக்
திரட்டிய பணம், மதபோதகர் வழியில் சிரியா, இராக் பகுதிகளுக்குச்
சென்றதாகத் தெரிகிறது. அந்த போதகருக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பத் திட்டமிட்டிருக்கிறோம். மண்ணடியில் செயல்பட்டுவரும் ஒரு சமூக அமைப்பைச் சேர்ந்த சிலர் சாதிக்குடன் கொடுக்கல், வாங்கல் பரிவர்த்தனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களையும் விசாரணைக்கு அழைக்கத் திட்டமிட்டிருக் கிறோம். சில அரசியல் கட்சிகளுக்கு சாதிக் நிதியுதவி அளித்த விவரங்கள் தெரிய வந்திருக்கிறது. அது தொடர்பாகவும் விசாரணை நடைபெறுகிறது.
சாதிக்கின் ரியல் எஸ்டேட் முதலீடுகளும் தோண்டப் படுகின்றன. இப்படி,
அரசியல், சினிமா, பிசினஸ் எனப் பல துறைகளையும் சார்ந்த 23 வி.ஐ.பி-களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அவர்கள் அனைவரும் விசாரணைக்கு வரவழைக்கப்படுவார்கள்.
சாதிக் மீதான போதைப்பொருள் கடத்தல் வழக்கை, தீவிரமாகவே
கண்காணிக்கிறது மத்திய உள்துறை. ஓர் ஆய்வுக் கூட்டமும் நடந்திருக்கிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின்
முன்பு நிறுத்தப்படுவார்கள்” என்றார் விரிவாக.
( நன்றி – விகடன் தளம் ….)
.
………………………………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….