ஆனந்தரங்க பிள்ளையின் டைரியில், ஸ்ரீரங்க வரலாறு …!!!

…………………………………………..

…………………………………………

………………………………………..

நீண்ட நாட்களாக நினைத்து வந்த புதுவை ஆனந்தரங்க பிள்ளையின்
டைரி ஒருவழியாக காணக் கிடைத்தது… பொறுமையாக படிக்க
முடியுமேயானால், சுவாரஸ்யமான விஷயங்களை அதனூடே தேடிக்கண்டு பிடிக்கலாம். 250-300 ஆண்டுகளுக்கும் முற்பட்ட, பெரும்பாலும் அப்போதைய
பேச்சு வழக்கிலிருந்த தமிழ் நடை – எனவே கொஞ்சம் ஆர்வமும் வேண்டும்.

ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில், திருவரங்க வரலாற்றின்
சில ரசமான கட்டங்கள் தெளிவாகக் காணக்கிடைக்கிறது.

திரு. இந்திரா சௌந்திரராஜன் அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரையிலிருந்து,
அவருக்கு நன்றி கூறிக்கொண்டு ஸ்ரீரங்கம் குறித்த சில வரலாற்று
தகவல்களை, அவரது எழுத்துகளிலேயே கீழே தருகிறேன்.

………

திருச்சி, திருவரங்கத்தைப் பெரும் யுத்தக் கலவரம் சூழ்ந்திருக்க,
ஆலய வெளிகளிலும் திரும்பிய பக்கமெல்லாம் துப்பாக்கி ஏந்திய
படைவீரர்கள். அவர்களின் புரவிகள், அவற்றின் பொருட்டு உண்டான
லாயங்கள் என்று ஆலய சாந்நித்தியமே பெரும் கேள்விக்குறியாயிற்று.

திருவரங்கம் ஆலயத்தில் மட்டுமன்றி, திருவானைக்கா ஆலய வெளியையும்
தங்களின் படை ஒளிந்திருக்கும் ஒரு களமாக மாற்றி விட்டிருந்தனர்,
அப்போதைய ஆங்கிலேயர்கள்.

இந்தக் காலகட்டத்தில் எம்பெருமானுக்கான வைபவங்கள் பெரிதும்
தடைப்பட்டிருந்தன. ஆலயத்துக்குள் பக்தர்கள் வந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆலயம் என்பது அமைதிக்கான இடம். ஆனால் அதுவோ யுத்த முகாந்திரம்
உள்ள இடமாக மாறிவிட்டிருந்தது. இதைக் கண்டு மனம் பொறாத திருவரங்க வைணவர்கள், அரங்கன் முன் ஒரு பெரும் சங்கல்பம் செய்து கொண்டனர். அரங்கனிடம் பிரார்த்தித்துக் கொண்டு, பெரும் தீர்மானத்தோடு திருவரங்க ஆலயத்திற்குள் தங்கியிருந்த படைத் தளபதிகளின் முன் சென்று நின்றனர்.

“தாங்கள் இங்கிருக்கும் வரையிலும் தங்களால் எந்த வெற்றியையும் அடைய
முடியாது. இது வணக்கத்திற்குரிய இடம். இதன் அருளை நீங்கள் இருளாக்கிக் கொண்டிருப்பதால், நிச்சயம் தோல்வியே உண்டாகும். நீங்கள் இங்கிருந்து விலகினால்தான் வெற்றி உண்டாகும். அதற்கு அரங்கனின் அருளும்
துணை செய்யும்” என்றனர்.

மட்டுமன்றி, “எங்களின் இந்தக் கருத்தை நீங்கள் ஏற்க மறுத்தால், இங்கேயே தீக்குளிப்போம்” என்றும் உறுதியாகச் சொன்னார்கள். அவர்களின் தீர்க்கமும் தீர்மானமும் படைத்தளபதிகளை அசைத்தன. அவர்கள் அங்கிருந்து
வெளியேற சம்மதித்தனர்.

………….

ஆனந்த ரங்கம் பிள்ளை நாட்குறிப்பு, வரலாற்று ஆவணங்களில் மிக
முக்கியமான ஒன்றாகும். அந்த நாளில் இன்று போல பேனா, மசி, பேப்பர்
போன்றவை புழக்கத்தில் இல்லை. பள்ளிகளில் மணலில் எழுதியே
எழுத்துக்களை அறிந்து கொண்டனர். பாடங்களை மனதில் நிறுத்தி
ஒப்பித்தனர்.

எழுதவேண்டிய அவசியம் மூன்று தரப்பினருக்கே அவசியப்பட்டது.

முதலாவது தரப்பினர் அரசனிடம் பணிபுரிந்த ஓலைப் போக்கிகள்.
இவர்கள் அரசாங்கச் செய்திகளை மயில் அல்லது வேறு பறவை இறகினாலோ,
கூரிய தேக்கு குச்சிகளாலோ எழுதுவார்கள். வெண்ணிற வஸ்திரங்களில்
மூலிகைச் சாந்து கொண்டு எழுதுவர்.

அடுத்து செப்பு தச்சர்கள். இவர்கள் செப்புத் தகடுகளில் கூரிய வஜ்ராவி
கொண்டு எழுத்துக்களைப் பொறிப்பதில் வல்லவர்கள். சாசனங்கள், பத்திரங்கள் இவர்களால் உருவாக்கப்பட்டன. இதுபோக, கல் தச்சர்கள் கல்வெட்டுகளைப் பொறிப்பதில் திறன் பெற்றிருந்தனர்.

மூன்றாவதாக எழுத்தாணியர்கள். இவர்கள் பனை ஓலை களில் கூரிய செப்புக் கம்பிகள் கொண்டும் எழுத்தாணி எனப்படும் இருப்புக் கம்பிகள் கொண்டும் எழுதுவதில் சமர்த்தர்கள்.

இந்த மூன்று தரப்பினரே வரலாற்றுச் சான்றுகள் பலவும் நமக்குக் கிடைக்கப்
பெரிதும் காரணமானவர்கள். இம்மட்டில் மரக்கூழில் காகிதம் செய்யும்
கலை சீனர்களிடம் இருந்து ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் நமக்குக் கிடைத்தது.
குறிப்பாக பாண்டிச்சேரி எனப்படும் புதுகையில் பிரெஞ்சு கலாசாரம் தலைதூக்கியபோது, அவர்களுக்குக் காகிதம் பெரிதும் தேவைப்பட்டது.
நாள் குறிப்புகளை எழுதும் ஒரு பழக்கமும் பிரஞ்சு அதிகார வட்டத்தவரிடம்
இருந்தே தோன்றியது.

எனவே, இவர்கள் தங்கள் தேவைக்கு மரப் பட்டைகளை உரித்து, அதை
வேகவைத்து பின் செக்கில் இட்டுக் கூழாக்கி, அந்தக் கூழை மர அச்சுகளில்
ஊற்றி காய வைத்து காகிதமாக்கிப் பயன்படுத்தத் தொடங்கினர்.

ஆதியில் இந்தக் காகிதங்கள் தடிமனாகவும் மடக்க முடியாதபடி பலகை
போலவும் இருந்தன. பின்னர், தடிமனைக் குறைத்து காகிதங்கள் செய்து,
அதில் சாயம் சேர்த்து வண்ணக் காகிதங்களையும் உருவாக்கத்
தொடங்கினார்கள். இடையில் பட்டுத் துணிகளையும் பருத்தித் துணிகளையும்
கூட பயன்படுத்தி எழுதினர்.

ஆனந்தரங்கம் பிள்ளை புதுவை பிரஞ்சு கலாசாரத்தையும் அங்கு நிகழ்ந்த
அரசியலையும் பதிவு செய்து வைத்திருந்தார்.

கி.பி.1709-ல் சென்னையில் பிறந்த இவர் அதிகம் வாழ்ந்ததும் வசித்ததும்
பாண்டிச் சேரியில்தான். அதற்குக் காரணம் இவரின் பிறமொழிப் புலமை.
பிரெஞ்சு, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், தமிழ் என்கிற நான்கு மொழிகளை
இவர் கற்றுத் தெளிந்திருந்தார். அதனால் இவரைப் பிரெஞ்சு ஆட்சியாளர்கள்
தங்கள் மொழிப்பெயர்ப்பாளராக (துபாஷ்) பயன்படுத்திக் கொண்டனர்.

‘துபாஷ்’ என்னும் சொல்லுக்கு `த்வயி பாஷ்யர்’ என்பது பொருள். அதாவது
இரு மொழி தெரிந்தவர் என்பதே அதன் உட்பொருள். ஆனந்த ரங்கம்பிள்ளைக்கு
நான்கு மொழிகள் தெரியும் என்பது கூடுதல் சிறப்பு. இவராலேயே டைரி
எனப்படும் நாட்குறிப்பு எழுதும் ஒரு கலை இங்கே தோன்றியதாகவும் கூறலாம்.

தமிழர்கள் பலரும் ஓலைப் போக்கிகளாகவும் பாடல் இயற்றுபவர்களாகவுமே இருந்தனர். நாள் நடவடிக்கைகளைத் தேவைக்கேற்ப குறித்துக்கொள்ளும்
அவசியம் அன்று ஏற்படவில்லை. ஆனால் 17-ம் நூற்றாண்டில்
பிரஞ்சுக் காரர்களிடம் இருந்து இக்கலை ஆனந்த ரங்கம் பிள்ளையால்
நமக்கெல்லாம் அறிமுகமாகியது.

உலக அளவில் சாமுவேல் ஃபெப்பீஸ் என்பவரே நாட்குறிப்புகளின் முன்னோடி
என்று கருதப்படுகிறார். இவராலேயே நாட்குறிப்பு எழுதும் கலை தோன்றியது.
அது ஆனந்தரங்கம் பிள்ளையால் நம் தென்னாட்டிலும் அறிமுகமானது
எனலாம். இதனால் ஆனந்தரங்கம் பிள்ளையை இந்தியாவின் பெப்பீஸ்
என்றும் அழைத்தனர்.

இவருக்கு அரசியலாளர்கள் நடுவில் பெரிய மதிப்பும் மரியாதையும் இருந்தது.
மாவட்ட ஆட்சியாளர் முதல் கவர்னர் வரையிலும் தங்களின் சகல அரசியல் நடவடிக்கைகளின் போதும் இவரை உடன் வைத்துக்கொண்டிருந்தனர்.
அவர்களுக்குத் தமிழ் தெரியாது. தமிழர்களுக்கோ பிரஞ்சு தெரியாது என்பதால்
அந்த இரண்டையும் அறிந்த மொழிபெயர்ப்பாளர் முக்கியத்துவம் பெற்றார்.

ஒரு மந்திரிக்குரிய மதிப்பும் செல்வாக்கும் பெற்றிருந்தனர்.
சாரட் வண்டி, பணியாளர்கள், அரண்மனை போன்ற வீடு என்று பல
சலுகைகளும் கிடைத்தன. இங்ஙனம் தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை
நன்கு பயன் படுத்திக்கொண்டார் ஆனந்தரங்கம் பிள்ளை. மேல்மட்டத்தில்
உள்ளவர்கள் எப்போது வேண்டுமானாலும், எந்த விஷயத்தை வேண்டுமானாலும் தன்னிடம் கேட்கலாம். அதனால், தான் எப்போதும் தயாராக இருக்கவேண்டும்
என்கிற முனைப்பில் இவர் வரலாற்று நிகழ்வுகளை தேதி வாரியாக பதிவு
செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.

அது, பின்னாளில் வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகப் பயன்படப் போவதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை. ஆனந்தரங்கம்
பிள்ளை திருவரங்கம் மீதும் அரங்கன் மீதும் பெரும் பக்தி உடையவராக
இருந்தார்.

ஆட்சியாளர்களுக்கு மிக நெருக்கமாய் இருந்தமையால், இவர் திருவரங்கம் ஆலயத்துக்கு வரும் தருணங்களில் இவருக்குப் பூரண கும்ப வரவேற்பு
அளிக்கப் பட்டது. ஆலய வரலாற்றிலும் இவர் பெரிதும் கவனம் செலுத்தினார்.
அந்த வகையில், இவரின் குறிப்புகள் மூலம் பல தகவல்களை அறியமுடிகிறது.

சந்தாசாஹிப்பின் படை திருவரங்கத்தில் முகாமிட்டிருந்தது.
இவர்களுக்கான உணவு திருச்சியில் இருந்துதான் செல்ல வேண்டும்.
இவர்கள் முகாமிட்டிந்த தருணத்தில் பெரும் வெள்ளம் உண்டாகி இருந்தது.
தற்போது உள்ளது போன்று அணைக்கட்டுகள் பெரிதாய் இல்லாத காலம் அது.
கரிகால் சோழனின் கல்லணை மட்டும்தான் காவிரியின் குறுக்கில் இருந்தது.

புராண காலத்தில், கரை புரண்டு வந்த வெள்ளம் ஆலயத்தையே மூழ்கடித்து விட, புதைந்துபோன ஆலயம் கிளி சோழனால் மீட்டெடுக்கப்பட்ட வரலாறும் உண்டு.
பின்னர் வந்த காலங்களில், தற்போது உள்ள தெற்குவாசல் ராஜகோபுரம் வரை வெள்ளம் வருமாம். அதை அம்மா மண்டபத்திற்கு அப்பால் செல்லும் விதமாக
மாற்றி… நீர் வடிவதற்கு தோதாக `திருமஞ்சன காவிரி’ எனும் பெயரில் ஒரு வாய்க்காலைத் தெற்குக் கோபுரத்தை ஒட்டி உண்டாக்கினார்கள். அது திருவானைக்காவலைக் கடந்து ஓடி, மூலக் காவேரியோடு சேரும்படி
செய்திருந்தனர்.

இருந்தும் வெள்ளப்பெருக்கான காலங்களில் ஆற்றில் பரிசலிலோ,
தெப்பங்களிலோ செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் வெள்ளம்
சூழும்போது திருவரங்கத்து மக்கள் உணவுப் பஞ்சத்தில் சிக்கிய காலமும்
உண்டு. இதனால் சித்திரை, வைகாசி மாதங்களிலேயே தேவையான
தானியங்களைச் சேமித்து வைக்கும் ஒரு பழக்கமும் காலத்தால்
உருவாகி இருந்தது.

அப்படித்தான், சந்தாசாஹிபின் படை திருவரங்கத்தில் முகாமிட்டிருந்த
போதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை ஆங்கிலேய படைவீரர்கள்
பயன்படுத்திக் கொண்டனர். உணவுப் பொருள்கள் போய் சேராதவாறு
தடுத்து நிறுத்தினர்; காவிரியின் மறுகரையில் காவலும் இருந்தனர்.

இதனால் சந்தாசாஹிப் படைவீரர்கள் பட்டினிக்கு ஆளாகி திருவரங்கத்தார்
வீடுகளில் தஞ்சம் புக முயன்றனர். குறிப்பாக குதிரைப் படை வீரர்கள்,
தங்கள் குதிரைகளுக்கு உணவிட முடியாத நிலையில், தங்கள் குதிரைகளை ஆற்றுக்குள் தள்ளிவிட்டு. `முடிந்தால் கரையேறி பிழைத்துக் கொள்’
எனும்படி செயல்பட்டனர்.

இந்தச் சூழலை ஆனந்தரங்கம் பிள்ளை தன் டைரி குறிப்பில் பதிவு
செய்துள்ளார். இதன் மூலம் அன்றைய எழுத்து மொழி எப்படி இருந்தது
என்பதையும் நாம் உணர முடிகிறது….!

……….

( பின்னுரை – ஆனந்தரங்க பிள்ளை டைரி’யின் மூலம்
அந்தக்கால புதுச்சேரி குறித்து சில சுவாரஸ்யமான வரலாற்று சம்பவ
விவரங்களும் கிடைத்தன…. அவற்றையும் விரைவில் இந்த தளத்தில்
பகிர்ந்து கொள்கிறேன்… )

.
…………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.