காங்கிரஸ் “பெரியண்ணன் மனப்பான்மை”யை மாற்றிக்கொள்ளுமா …??? சசிகாந்த் செந்தில், ஐ.ஏ.எஸ். பதில்

………………………………………

……………………………………….

சசிகாந்த் செந்தில், விகடனுக்கு அளித்த பேட்டி –

கர்நாடகா, தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றிபெற முக்கியப் பங்காற்றிய சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்., தற்போது காங்கிரஸ் கட்சியின்
‘சென்ட்ரல் வார் ரூம்’ தலைவராக நியமிக்கப்பட்டி ருக்கிறார்.
இந்தச் சூழலில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் எப்படித் தயாராகிறது, பா.ஜ.க-வை எதிர்கொள்ள என்னென்ன யுக்திகளை வைத்திருக்கிறது என்பது
போன்ற கேள்விகளோடு சசிகாந்த் செந்திலிடம் பேசினேன்…

“ `ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைய, அந்தக் கட்சியின் பெரியண்ணன் மனப்பான்மையே காரணம்’ என்று விமர்சனம் எழுந்தது. நாடாளுமன்றத் தேர்தலிலாவது காங்கிரஸ் தன்னைத் திருத்திக் கொள்ளுமா?”

“நாடாளுமன்றத் தேர்தலுக்கான சீட் பேச்சுவார்த்தையை இப்போதுதான் தொடங்கப்போகிறோம். இந்த விஷயத்தில் நேரடியாகத் தொடர்புடையவர்கள்
யாரும் இதுபோல் விமர்சனம் செய்ததாகத் தெரியவில்லை… பின்னால் இருப்பவர்கள்தான் பேசுகிறார்கள். அடுத்து, மாநில சட்டமன்றத்
தேர்தல்களையும், நாடாளுமன்றத் தேர்தலையும் ஒப்பிட முடியாது.
கேரளாவில் நாங்கள் சி.பி.ஐ (எம்) உடன் சண்டைபோடுகிறோம். ஆனால்,
தேசிய அளவிலான கூட்டணியில் ஒன்றாக இருக்கிறோம். ஒரு பொதுவான
செயல் திட்டத்துக்காக விட்டுக்கொடுத்துச் செல்ல, காங்கிரஸும்,
கூட்டணிக் கட்சிகளும் தயாராகவே இருக்கின்றன.”

“ `இந்தியா’ கூட்டணியிலுள்ள அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி
உள்ளிட்டவர்கள் தொகுதிப் பங்கீடு விஷயத்தில் காங்கிரஸை
விமர்சித்தார்களே..?’’

“எந்த இடத்தில், யார் வெற்றிபெறுவார்களோ, அவர்கள் அந்த இடத்தில்
போட்டியிட வேண்டும் என்பதுதான் அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கும்
விஷயம். அதனடிப்படையில் கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெறுவதற்கான
வாய்ப்பு இருக்கும் இடங்களை காங்கிரஸ் நிச்சயம் விட்டுக்கொடுக்கவே
செய்யும்.”

“ `இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக கார்கேவை
அறிவிக்கலாம் என்கிறார் மம்தா…. உங்கள் சாய்ஸ்?”

“கார்கே அருமையான தலைவர். அவர் பிரதமராக வர வேண்டும் என்று
மம்தா கூறுவதில் தவறு ஏதும் இல்லை. நாங்கள் விரும்புவது ராகுல்
காந்தியைத்தான். அதற்காக ராகுல்தான் `இந்தியா’ கூட்டணியின்
தலைவராக வர வேண்டும் என்று சொல்ல மாட்டேன். இறுதி முடிவைக்
கூட்டணிதான் எடுக்கும். இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன்.
மோடியை வீழ்த்த வேண்டும் என்பது எங்களின் பிரதான நோக்கம் இல்லை.
பா.ஜ.க எனும் பாசிச சக்தியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்கள்
பொது செயல் திட்டம்.”

‘‘பிரதமர் வேட்பாளராகத் தன்னை அறிவிக்கவில்லை என்ற வருத்தத்தில்
தான் `இந்தியா’ கூட்டணி ஒருங்கிணைப்பாளராக இருக்க நிதிஷ் குமார் மறுத்துவிட்டதாகச் சொல்கிறார்களே?’’

“அது போன்ற பிரச்னை ஏதும் இல்லை. `இந்தியா’ கூட்டணி உடைந்து
விடாதா என்ற நப்பாசையில் இது போன்ற தகவல்களைச் சிலர் பரப்புகிறார்கள். இந்தச் சதியை அறிந்து, கூட்டணியில் இருக்கும் அனைவரும் உறுதியாக, ஒற்றுமையாக இருக்கிறார்கள்.”

“ஆயிரம்தான் இருந்தாலும், பா.ஜ.க-வைப்போல `இந்தியா’ கூட்டணியால்
பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியாதது பின்னடைவுதானே?”

“மீண்டும் பிரதமராக மோடியை முன்னிறுத்துவது பா.ஜ.க-வுக்குத்தான்
பின்னடைவு. காங்கிரஸுக்கோ, `இந்தியா’ கூட்டணிக்கோ எந்தப்
பின்னடைவும் இல்லை. எதற்காகச் சொல்கிறேனென்றால், பத்தாண்டுக்
காலம் பிரதமராக இருக்கும் மோடி மீது மக்களுக்கு நிறைய அதிருப்திகள் இருக்கின்றன. 2004-ல் ‘இந்தியா ஒளிர்கிறது’ எனப் பிரசாரம் செய்த
பா.ஜ.க-வுக்குத் தோல்விதான் கிடைத்தது. ஏனெனில், பசியும் பட்டினியுமாக
இருந்த மக்களை அந்த விளம்பரம் மேலும் வெறுப்பாக்கியது. அதேபோல்
இன்று மோடி, ‘அம்ரித் கால்… அம்ரித் கால்’ (பொற்காலம்) எனப்
பேசிவருகிறார். இது மக்களின் கோபத்தை எந்த அளவுக்குத் தூண்டும்
என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும். எனவே, நிச்சயமாக மோடியை முன்னிறுத்துவது பா.ஜ.க-வுக்கு ஒரு வீக் பாயின்ட்தான்.”

“ `ராமர் கோயில் விழாவில், காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளாது’ என்ற
அறிவிப்பை பா.ஜ.க விமர்சனம் செய்கிறதே?”

“இந்த விவகாரத்தில், காங்கிரஸ் நீண்ட நாள்களுக்கு முன்பே தனது
நிலைப்பாட்டைக் கூறிவிட்டது. மதம், நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயத்தில்
யாரும், யாரையும் தடுத்து நிறுத்த முடியாது. ‘ராமர் கோயில் விவகாரத்தை
அரசியல் ஆக்குகிறார்கள்’ என்று சொல்லி சங்கராச்சாரியாரும்
திறப்புவிழாவுக்குப் போகவில்லை. அதேபோல், சோனியா காந்தியும்
கார்கேவும்கூட நிராகரித்திருப்பார்கள். அது அவர்களுடைய
சொந்த விருப்பம்.”

“இதன் மூலம், ‘இந்துக்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ்’ என்ற பிம்பம் ஏற்பட்டுவிடாதா?’’

“நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக்கொடுத்த கட்சியைப் பார்த்து,
‘தேசத்துக்கு எதிரானது’ என்று சொல்லிவருபவர்கள், இந்து மக்களையும் உள்ளடக்கிய – அனைத்து இந்தியர்களுக்காகவும் உழைக்கும் காங்கிரஸை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று சொல்வதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.
ஆனால், அவர்களது விமர்சனம் எடுபடாது.”

“ராகுல் காந்தியின் இரண்டாவது நடைப்பயணத்துக்கென பிரத்யேகத்
திட்டம் ஏதேனும் இருக்கிறதா?”

“மோடி ஆட்சியால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு,
சாதி-மத வேறுபாடு, ஜனநாயகத்துக்கு ஏற்பட்டிருக்கும் சவால் குறித்தும்,
அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் பிரத்யேகப் பிரச்னைகள் பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்வார் ராகுல். இது சமூக நீதிக்கான யாத்திரை
என்பதால், மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்!”

‘‘தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை
தொகுதிகளை எதிர்பார்க்கிறீர்கள்?”

‘‘தலைவர்கள் அனைவரும் அமர்ந்து, ‘எந்தத் தொகுதியில், யாரை
நிறுத்தினால் வெற்றி பெறுவார்கள்’ என ஆலோசனை செய்து
முடிவு செய்வார்கள்!”

(நன்றி -விகடன் தளம்….)
.
………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to காங்கிரஸ் “பெரியண்ணன் மனப்பான்மை”யை மாற்றிக்கொள்ளுமா …??? சசிகாந்த் செந்தில், ஐ.ஏ.எஸ். பதில்

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    //ஒரு பொதுவான செயல் திட்டத்துக்காக விட்டுக்கொடுத்துச் செல்ல, காங்கிரஸும், கூட்டணிக் கட்சிகளும் தயாராகவே இருக்கின்றன.”// – இதுதான் எப்படி என்று எனக்குப் புரியவில்லை. காங்கிரஸ், இந்திய அளவில் வாக்குவங்கி உள்ள கட்சி என்றாலும், பல மாநிலங்களில் அது பெரும்பான்மையான (அதாவது முதல் இரண்டு கட்சி அல்ல). முதலிரண்டு அல்லது மூன்று கட்சியாக இருக்கும் மாநிலங்களில் அதற்குப் போட்டி, இந்தி கூட்டணியில் உள்ள கட்சிதான். அதனால் காங்கிரஸுக்கு ஒரே தேர்தல் அறிக்கை, ஒரே ஸ்லோகன் என்பது சாத்தியமற்றது. மேற்குவங்கம், பஞ்சாப், கேரளா, ஆந்திரா, தமிழகம் போன்ற மாநிலங்களில் (சுமார் 150+ தொகுதிகள்) காங்கிரஸுக்கு மொத்தம் 15-20 தொகுதிகள் கொடுக்கப்பட்டாலே (வெற்றிபெற்றாலே) மிக அதிகபட்சம். உத்திரப்பிரதேஷிலும் பிஹாரிலும் காங்கிரஸ் போட்டியிட 5-10 சீட்டுகள்தாம் ஒதுக்குவார்கள் அதுபோல, மத்தியப்ரதேஷ், ராஜஸ்தான், தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் (110 சீட்டுகள்) பிற கட்சிகளுக்கு காங்கிரஸ் சீட்டுகள் ஒதுக்காது. காங்கிரஸ் 150-200 இடங்கள் வெற்றிபெறும் நிலைமை இருந்தால்தான், அதன் தலைவர் பிரதமராக ஆவார் என்று இந்தி கூட்டணி அறிவிக்க முடியும். ராகுல் பிரதமர் வேட்பாளர் என்று யாருமே அறிவிக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. (ராகுல் ஜூனியர் என்பது இந்தி கூட்டணித் தலைவர்களான மம்தா, அகிலேஷ், தேஜஸ், நிதிஷ், ஸ்டாலின், பினரயி போன்றவர்களின் எண்ணம்). நிச்சயம் கம்யூனிஸ்ட் கட்சிகள் காங்கிரஸ் பிரதமர் என்பதை ஒத்துக்கொண்டு தேர்தலுக்குச் செல்லாது.

    இந்தி கூட்டணியின் சாதனை என்று பார்த்தால், பாஜக வுக்கு வலிமையான எதிர்கட்சியாக தன்னைக் கொண்டு செல்வது. அது நடப்பதை நாம் வரவேற்கவேண்டும்.

    //மோடியை வீழ்த்த வேண்டும் என்பது எங்களின் பிரதான நோக்கம் இல்லை. பா.ஜ.க எனும் பாசிச சக்தியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் பொது செயல் திட்டம்// – யார் என்ன சொல்லிக்கொண்டாலும், நாட்டைக் கொள்ளையடிப்பதுதான் எங்கள் பொதுச் செயல் திட்டம் என்று சொல்லாமல் சொல்ல நினைக்கிறது இந்தி கூட்டணி. அவர்கள் ஆண்ட பத்து வருடத்தில் இதைத்தவிர வேறு எதையும் அவர்கள் செய்தமாதிரி மக்களுக்கு நினைவிலிருக்காது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.