கற்பழிப்பு குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க உதவிய குஜராத் அரசு ….உச்சநீதிமன்றம் கண்டனம் …. !!!

………………………………………………

………………………………………………..

பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகளின் முன்கூட்டிய விடுதலை ரத்து;
2 வாரங்களுக்குள் சிறையில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Published On : 09th January 2024 –
https://www.dinamani.com/india/2024/jan/09/bilki-bano-case-supreme-court-orders-4136522.html
…………..

புது தில்லி: பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.

குஜராத் அரசு அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள்,

‘குற்றவாளிகள் 11 பேரும் 2 வாரங்களுக்குள் சிறைக்கு திரும்ப அனுப்பப்பட வேண்டும்’ என்றும் உத்தரவிட்டனா்.

‘வழக்கின் தீவிரத்தை மனதில் கொள்ளாமல் குஜராத் அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது’ என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

வழக்கின் பின்னணி: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, 21 வயது முஸ்லிம் கா்ப்பிணி (5 மாத கா்ப்பிணி) பெண்ணான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். மேலும், பில்கிஸ் பானு கண் முன்பே அவருடைய 3 வயது மகள் உள்பட அவரின் குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் கொலை செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு
மகாராஷ்டிர மாநில சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இதை மும்பை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.

கடந்த 15 ஆண்டுகளாக கோத்ரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த
குற்றவாளிகள் தங்களை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனா். இதையடுத்து, அவா்களின் தண்டனைக் குறைப்பு மனுவைப் பரிசீலிக்குமாறு குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதனடிப்படையில், வழக்கின் குற்றவாளிகள் 11 பேரும் குஜராத் அரசின்
உத்தரவின் அடிப்படையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி
விடுதலை செய்யப்பட்டனா். இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம்
தெரிவித்தன.

இவா்களுடைய விடுதலையை எதிா்த்து, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு
தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுபோல,
மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சுபாஷினி அலி, பத்திரிகையாளா்
ரேவதி லாலு, லக்னெள பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ரூப் ரேகா
வா்மா, அண்மையில் எம்.பி. பதவியிலிருந்து நீக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸ்
மூத்த தலைவா் மஹுவா மொய்த்ரா ஆகியோா் தரப்பிலும் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீது கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தொடா்ந்து 11 நாள்கள் விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், தீா்ப்பை ஒத்திவைத்தது. மேலும், 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது தொடா்பான அசல் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்குமாறு மத்திய அரசு மற்றும் குஜராத்
மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

குஜராத் அரசுக்கு அதிகாரமில்லை:

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, உஜ்ஜல் புயான்
ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு
வந்தது. அப்போது, வழக்கின் குற்றவாளிகள் 11 போ் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனா்.

251 பக்கங்கள் கொண்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளான 11 பேரை முன்கூட்டியே விடுதலை
செய்ய குஜராத் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.

வழக்கு விசாரணை மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்று, அந்த
மாநிலத்திலேயே குற்றவாளிகளுக்கான தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரும் மனுவையும் மகாராஷ்டிர மாநில அரசுதான் பரிசீலித்து முடிவெடுக்க முடியும்.

அந்த வகையில், குஜராத் அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி
சட்டத்தின் ஆட்சியை மீறியிருக்கிறது. அதனடிப்படையில், குற்றவாளிகளின் முன்கூட்டிய விடுதலை உத்தரவுகள் ரத்து செய்யப்பட தகுதியானவை
என நீதிமன்றம் கருதுகிறது.

எனவே, குற்றவாளிகளின் முன்கூட்டியே விடுதலை கோரிய மனுவைப் பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்ற அமா்வு கடந்த 2022-ஆம் ஆண்டு
மே 13-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வழக்கின் குற்றவாளிகள் 11 பேரும் 2 வாரங்களுக்குள் சிறையில் மீண்டும் அடைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

.
…………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to கற்பழிப்பு குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க உதவிய குஜராத் அரசு ….உச்சநீதிமன்றம் கண்டனம் …. !!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    குஜராத் அரசு செய்தது தவறு. அதில் சந்தேகமில்லை. தற்போது உச்சநீதி மன்றம் முழித்துக்கொண்டு நியாயத்தை வழங்கியிருக்கிறது.

    //குற்றவாளிகளின் முன்கூட்டியே விடுதலை கோரிய மனுவைப் பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்ற அமா்வு கடந்த 2022-ஆம் ஆண்டு
    மே 13-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. // – இந்த உச்சநீதிமன்ற அமர்வுக்கும் குஜராத் அரசுக்கும் என்ன சம்பந்தம்? உச்சநீதிமன்ற அமர்வு ஒழுங்காகத் தீர்ப்பு தந்திருந்தால் இந்த அனர்த்தம் நடந்திருக்குமா? குற்றவாளிகள் தப்பிக்க உதவியது குஜராத் அரசா அல்லது உச்சநீதிமன்ற அமர்வா என்பது எனக்குப் புரியவில்லை. யாராவது விளக்குவார்களா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.