……………………………………………………………………………..
இவர்களைப் போன்றவர்கள் – நாங்களும் விவசாயிகள் தான் என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்வது ….???

……………………..
நாட்டில், நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு,
பெரிய அளவில் நிலம் வைத்திருப்பவர்கள் அதிகமில்லை என்பதால்,
விவசாய வருமானத்துக்கு வரி விதிப்பது தொடர்பான பேச்சு பெரிய
அளவில் எழவில்லை.
இந்தியாவிலும், பணக்கார நாடுகளுக்கு இணையாக வருமானத்துக்கு
வரி போடப்பட்டுவருகிறது.
- ஆண்டுக்குக் குறிப்பிட்ட தொகைக்குக்கு மேல்
சம்பளம் வாங்குபவர்கள்; - வங்கியில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் சேமிப்பவர்கள்;
- தொழில் மூலம் வருமானம் ஈட்டுபவர்கள்;
- நிதி முதலீடு மூலம் வருமானம் பெறுபவர்கள் என
எல்லா வருமானத்துக்கும் வரி உண்டு.
ஆனால், விவசாயம் மூலம் ஈட்டும் வருமானத்துக்கு மட்டும் வரி இல்லை.
இந்திய அரசின் சட்டங்கள் பெரும்பாலானவை ஆங்கிலேயே அரசின்
சட்டங்களை அடிப்படையாகக் கொண்டவையே. எனவே, `ஏன் இல்லை?’
என்கிற கேள்விக்கான பதிலும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்தே கிடைக்கிறது…..
மன்னர்கள் காலத்தில் வரி விதிக்கும் முறை இருந்தது. அது பெரும்பாலும் தானியமாகவே வழங்கப்படும். அநேகமாக ஆங்கிலேயர்கள் வந்த பிறகுதான்
பணம் புழக்கத்துக்கு வந்தது. இந்தியாவின் பிரதான தொழிலாக விவசாயம்
இருந்து வந்ததால் விவசாயத்துக்கும் வரி முறையை முதலில்ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.
ஆனால், அது நீடிக்கவில்லை. 1860 முதல் 1863 வரையிலும்,
பிறகு 1869 முதல் 1873 வரையிலும் என இரண்டு முறை விவசாய வருமானத்துக்கு
வரி வசூலித்துள்ளார்கள். அதுகூட, விவசாயத்தில் அதிக வருமானம் வருகிறது
என்று யாரோ ஆங்கிலேயே ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்ததால் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த வரி விதிப்பு முறை நீடிக்கவில்லை.
பிறகு, நிதி வசூலுக்கு வேறென்ன முறையைக் கையாளலாம் என்று
யோசித்தது ஆங்கிலேய நிர்வாகம். அதன்படி, நில பிரபுக்கள் மூலம்,
அதாவது ஜமீன்தார்களிடமிருந்து ஆங்கிலேய நிர்வாகம் வரி/கப்பம்
வசூலித்துக் கொள்ளும். ஜமீன்தார்கள், விவசாயிகளிடமிருந்து தானியமாகவோ
மற்ற பொருள்களாகவோ பெற்று ஆங்கிலேய அரசாங்கத்திடம் கப்பம் கட்டிவிட
வேண்டும்.
இதன் மூலம், இந்தியாவில் உள்ள பெரும்பாலான விவசாய நிலங்களை
தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஜமீன்தார்கள், தானியங்களைக் கொடுக்காத விவசாயிகளிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றி, அவர்களை
தங்கள் நிலங்களில் உழைக்கும் தொழிலாளர்களாக மாற்றினார்கள்.
1925-ம் ஆண்டு ‘இந்திய வரி விசாரணைக் குழு’ விவசாயத்துக்கு வரி
விதிக்கலாம் என்று ஒரு பரிந்துரையை அளித்தது. ஆனால், அதுவும்
நடைமுறைக்கு வரவில்லை.
1935-ம் ஆண்டு அதிக வருமானம் உள்ள மாகாணங்களில் விவசாயத்துக்கு
வரி விதிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. ஆனால், அதுவும்
நடைபெறவில்லை.
சுதந்திரத்துக்குப் பிறகு, உத்தரப் பிரதேசம், கேரளா, அஸ்ஸாம் ஆகிய
மாநிலங்கள் விவசாய வருமானத்துக்கு வரி விதிக்கும் முயற்சியை
முன்னெடுத்ததும் தோல்வியில்தான் முடிந்தது. 1961-ல் பொருளாதார
வல்லுநர் யோகேந்திர அலக், `இந்திய ஜி.டி.பி-யில் 50% விவசாய
வருமானம்தான் பங்களிக்கிறது. எனவே விவசாய வருமானத்திற்கு
வரி விதிக்க வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் வழக்கே தொடர்ந்தார்.
அதுவும் எடுபடவில்லை.
நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு சிறு, குறு
விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. எனவே, விவசாய வருமானத்துக்கு வரி விதிப்பது தொடர்பான பேச்சு பெரிய அளவில்
எழவில்லை.
2019-ல், மத்திய தணிக்கைக் குழு, `விவசாய வருமானம் தொடர்பாக
வரி விலக்கு அளிக்கிறோம். ஆனால், அரசியல்வாதிகள் பலரும்
இதன் மூலம் பலனடைந்துவருகிறார்கள். குறைந்தபட்சம் அவர்கள்
என்ன பயிர் செய்கிறார்கள் என்பதையாவது கண்டறியலாம்’
என்று அறிவுறுத்தியது.
ஆனால், மாறிவரும் பருவநிலை, எதிர்பாராத மழை, வறட்சி போன்ற
காரணிகள், விவசாய வருமானத்தைக் கணக்கிடுவதற்கு இன்றும்
பெரிய சவாலாக இருந்துவருகின்றன.
நாட்டில் 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தை வைத்துள்ள விவசாயிகளே
80% இருப்பார்கள். அவர்களை வரி கட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், விவசாயத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள். பிறகு உணவு உற்பத்தி என்பது கேள்விக்குறியாகிவிடும்.
இந்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கி வரும் ஆகப் பெரிய சலுகை,
வருமான வரி இல்லை என்பதுதான். விவசாயம் என்பதே இயற்கையோடு
போராடுகிற வேலை. ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது விவசாய வருமானம்.
அதனால் விவசாய வருமானத்துக்கு வரி கூடாது என்பதே விவசாயிகளின்,
விவசாயச் செயற்பாட்டாளர்களின் கருத்தாக இருக்கிறது ….!
ஆனால், எளிய விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்கிற நல்ல நோக்கம் –
தகுதியற்ற பலருக்கு மறைமுகமாக வரி ஏய்ப்பு செய்ய உதவுகிறது….!!!
இதற்கு ஒரு மாற்று வழி கண்டு பிடிக்க எத்தனை நேரம் ஆகும் ….?
ஆனால், செல்வாக்கான அரசியல்வாதிகளுக்கு இதுவே சௌகரியமாக இருப்பதால், மாற்றுவதைப்பற்றி யோசனையே எழுவதில்லை….!!!
.
…………………………………………………….



//தகுதியற்ற பலருக்கு மறைமுகமாக வரி ஏய்ப்பு செய்ய உதவுகிறது….!!!// – இவர்கள் செய்வது மோசடி இல்லையா? ஊழல் கிடையாதா? இப்படிப்பட்ட ஏய்ப்பாளர்களுக்கு மற்றவர்களைக் குறை சொல்ல யோக்கியதை உண்டா? மற்றவர்களும் சட்டப்படித்தானே யோக்கியமோ/அயோக்கியமோ செய்கிறார்கள். இதைப் பேசும் தகுதியாவது இவர்களுக்கு உண்டா? அதனால் இவர்கள் (மட்டுமல்ல, அமிதாப்பச்சன், சரத்பவார்,… போன்ற விவசாயிகளும், சச்சின் போன்ற நடிகர்களும்) மற்ற கட்சிகளையோ அல்லது கட்சித் தலைவர்களையோ அல்லது அவர்கள் இயற்றும் சட்டங்களையோ குறை சொல்லக்கூடாது என்பது என் கருத்து.
இதுபோலவே, தேர்தலின்போது காசு வாங்கும் வாக்காளர்களுக்கும் அரசைக் குறை சொல்லும் யோக்கியதை கிடையாது. அரசாங்கம் பரிதாபப்பட்டுக் கொடுப்பதை யாசகம் பெற்றுக்கொண்டு வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும் என்பதும் என் கருத்து.