நேரு -அம்பேத்கர் நட்பைக் குலைத்த ராஜேந்திர பிரசாத் ….!!! இருட்டடிப்பு செய்யப்பட்ட நட்பு ….

………………………………

………………………………..

இன்றைய அரசியல்வாதிகள் பலரும் அந்தக்கால முன்னோடிகளை
சகட்டுமேனிக்கு விமரிசிக்கிறார்கள்…. நிஜமான சரித்திரத்தையோ,
நிஜத்தில் நடந்தது என்ன என்று அறியும் ஆவலோ – இல்லாமல்,
எல்லாம் தங்களுக்கு தெரிந்தது போல் அவர்களை குறை கூறுகிறார்கள்.
இன்றைய இளம் சந்ததியினரின் மனதில் பழைய தலைவர்களைப்
பற்றி தவறான பிம்பங்களை உருவாக்குகிறார்கள்.

சிலர் சுயநலம் கருதி, தங்கள் கட்சியின் நலம் கருதி, இத்தகைய விமரிசனங்களை மேற்கொள்கிறார்கள்.

அப்படிப்பட்ட பொறுப்பில்லாத விமரிசனங்களில் ஒன்று தான் –
நாட்டுக்கு உழைத்த சட்டமேதை டாக்டர் அம்பேத்கரை –
அந்நாள் பிரதமர் நேருஜி, வேண்டுமென்றே அவமானப்படுத்தினார்…
அம்பேத்கருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்
நேரு அவரை ஏமாற்றியதன் விளைவாகவே அவர் சட்ட அமைச்சர்
பதவியிலிருந்து விலகினார் என்பது.

உண்மையில் நேருஜியும், டாக்டர் அம்பேத்கரும் நெருங்கிய
நண்பர்கள் …. இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் மட்டற்ற
மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தனர்…..

காலம் எப்படி, அன்றைய ஜனாதிபதியாக இருந்த பாபு ராஜேந்திர
பிரசாத் அவர்களின் வடிவில் வந்து அவர்கள் இருவரிடையே
இருந்த நல்லுறவை பிரித்தது என்பதை கீழேயுள்ள
தகவல் கட்டுரை விளக்கும்…..

“இந்தச் சட்டம் இயற்றப்பட்டாலும் நான் அதற்கு ஒப்புதல்
அளித்து கையெழுத்திட மாட்டேன்” என்று சொல்கிற
குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களை ஒருபக்கமும் –

‘பிரதமரிடம் நேர்மை இருக்கிறது ஆனால் துணிவு இல்லை’-
என்று கூறிய சட்ட அமைச்சர் அம்பேத்கர் அவர்களை மறுபுறமும்
வைத்துக்கொண்டு, பிரதமர் நேருஜியால் அன்று என்ன செய்திருக்க
முடியும் …?

நவீனமான, முற்போக்கான, இந்தியாவைக் கட்டமைக்க வேண்டும்
என்பதில் அவர்களுக்குக் கருத்தொற்றுமை இருந்தும்,
அவர்கள் முரண்பட்டுப் பிரிய நேர்ந்தது எப்படி …???

கீழேயுள்ள தகவல்கள் விளக்கும் …..

……………….

இந்தியாவிற்கு சுதந்திரம் வந்துவிட்டதால், மற்ற கட்சிகளில் உள்ள
அரசியல் சாதுர்யங்களைக் கொண்ட தலைசிறந்த மனிதர்களும் அரசாங்கத்தில் பணியாற்ற வேண்டும் என்று நினைத்த காந்திஜி
சொன்ன யோசனையை ஏற்று –

அன்று பிரதமராக பொறுப்பேற்ற நேருஜி,
டாக்டர் அம்பேத்கர் மற்றும் அது வரை தொடர்ந்து காங்கிரசை
விமரிசித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டி
ஆகியோரை மத்திய அமைச்சரவையில் சேருமாறு அழைத்தார்.
இருவருக்கும் மிக முக்கியமான பொறுப்புகள் வழங்கப்பட்டன.
அம்பேத்கர் சட்ட அமைச்சராகவும், சண்முகம் செட்டி
நிதியமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

…………
சர் பி.என்.ராவ் தயாரித்த வரைவின் அடிப்படையில், அம்பேத்கர்
இந்து சட்டத்தின் மாறுபட்ட விளக்கங்கள் மற்றும் மரபுகளை
இணைத்து ஒரே ஒரு ஒருங்கிணைந்த இந்து சட்டமாக கொண்டு வர முயன்றார்…

இந்த சட்ட மசோதாவின் மூலம் பல்வேறு சீர்திருத்தங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டன –

  • முதல் முறையாக சொத்தில் மகனுக்கு இணையான பங்கு
    இறந்துபோன மகனின் விதவை மனைவி, மற்றும் மகளுக்கும்
    வழங்கப்பட்டது;
  • முதல் முறையாக, பெண்கள் கொடூரமாக நடந்துகொள்ளும்
    கணவனை விவாகரத்து செய்ய அனுமதிக்கப்பட்டனர்;
  • முதல் முறையாக, கணவன் இரண்டாவது மணம் செய்துகொள்ள
    தடை விதிக்கப்பட்டது;
  • முதன்முறையாக, வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த ஆணும்
    பெண்ணும் இந்து சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளலாம் என
    அனுமதிக்கப்பட்டது;
  • முதல் முறையாக, ஒரு இந்து தம்பதியினர் வேறு சாதியைச் சேர்ந்த
    குழந்தையைத் தத்தெடுக்கலாம் என அனுமதிக்கப்பட்டது.

இந்த உண்மையிலேயே புரட்சிகரமான மாற்றங்கள்,
பழமையில் ஊறிய, மரபுவழி சிந்தனை கொண்ட மக்களிடையே
எதிர்ப்புப் புயலை எழுப்பியது.

விவாகரத்து என்பதும் விதவைத் திறுமணம் என்பதும்
கடுமையாக எதிர்க்கப்பட்டது.
-பெண்களுக்கு சொத்தில் பங்கு என்பது ஆண்களிடையே
கொதிப்பை ஏற்படுத்தியது.

‘இந்து மதம் ஆபத்தில் உள்ளது’ என்று பலமான கண்டனக் குரல்கள்
எழுந்தன.

எதிர்ப்பு தெரிவித்த அமைப்புகளின் முன்னணிப் படையாக ஆர்.எஸ்.எஸ் (ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்) இருந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு
1949 –ல் – ஒரே ஒரு ஆண்டில் மட்டும் டெல்லியில் 79 கூட்டங்களை
ஏற்பாடு செய்தது.

அங்கு நேரு மற்றும் அம்பேத்கரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.
‘இந்து சட்ட மசோதா என்பது இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான தாக்குதல்’ என்று வன்மையாக கண்டனம் செய்யப்பட்டது.

1950, ஜனவரி -யில் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற
ராஜேந்திர பிரசாத் உட்பட இந்து சட்ட மசோதாவுக்கு மரியாதைக்குரிய
பொறுப்புகளில் இருந்த எதிர்ப்பாளர்களும் இருந்தனர்.

இந்த மசோதா கொண்டு வரப்பட்டால் – நான் அதற்கு ஒப்புதல்
கொடுக்க மாட்டேன்; கையெழுத்திட மாட்டேன் என்று
ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அவர்கள் நேருஜியிடமே சொன்னார்.

1950 மற்றும் 1951 ஆம் ஆண்டுகளில் மசோதாவை நிறைவேற்ற
பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எதிர்ப்பு வலுத்ததால்,
அதைக் கைவிட வேண்டியதாயிற்று.

அம்பேத்கர், நேரு அமைச்சரவையிலிருந்து மனம் வெறுத்து ராஜினாமா செய்தார். ‘நேருவுக்கு இந்த மசோதாவை இறுதிவரை ஆதரிக்கத்
தேவையான அக்கறையும் உறுதியும் இல்லை’ என்று அம்பேத்கர்
குற்றம் சாட்டினார்.

உண்மையில், நேரு முதல் பொதுத் தேர்தல் வருவதற்காகக்
காத்திருந்தார். அந்தத் தேர்தலில் அவருக்கும் காங்கிரஸுக்கும் மக்கள் ஆதரவை வழங்கியபோது, ​​அவர் இந்து சட்ட மசோதாவை மீண்டும்
அறிமுகப்படுத்தினார்.

ஒற்றை மசோதாவாக அல்லாமல், திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு போன்றவற்றைக் கையாளும் பல தனித் தனி சட்ட மசோதாக்களாகப் பிரித்து அறிமுகம் செய்தார்.

நேரு இந்த சீர்திருத்தங்களுக்காக தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய முக்கியமான உரைகள் சக காங்கிரஸ்காரர்களை அவர் பக்கம் கொண்டு வந்தன.

1955 மற்றும் 1956 -ல் இந்து சட்ட மசோதா பல்வேறு மசோதாக்களாகப்
பிரித்து அறிமுகம் செய்யப்பட்டு சட்டங்களாக நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில் அம்பேத்கர் இறந்தார். அவரது மறைவு குறித்து
மக்களவையில் பேசிய நேரு, “எல்லாவற்றிற்கும் மேலாக இந்து சமுதாயத்தின் அனைத்து அடக்குமுறை அம்சங்களுக்கும் எதிரான கிளர்ச்சியின் அடையாளமாக அம்பேத்கர் நினைவுகூரப்படுவார்”
என்று குறிப்பிட்டார்.

“இந்து சட்டங்களை சீர்திருத்தும் பிரச்சினையில் அவர் காட்டிய
அக்கறை மற்றும் சிரமத்திற்காகவும் அவர் நினைவுகூரப்படுவார்.

அவரே வடிவமைத்த ஒரே பெரிய மசோதாவாக இல்லாமல் தனித்தனி மசோதாக்களாகவாவது, அந்தச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதைக் கண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று நேரு தனது உரையில் குறிப்பிட்டார்.
(மூலம் – ராமச்சந்திர குஹா – மற்றும் பல வலைத்தள தகவல்கள்….)

.
……………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.