வ.உ.சி. அவர்கள், இறக்கும் தருவாயில் எழுதி வைத்த உயில் இது ….!

………………………..

நாட்டின் சுதந்திரத்துக்காக, உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்தவர்களில் முதன்மையானவர்
வ.உ.சி. எனும் ” வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை’.
கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்கிய
முதல் இந்தியர்; முதல் தமிழர்.

1872-ஆம் ஆண்டு செப். 5-இல் பிறந்த வ.உ.சி. தனது 64-ஆம்
வயதில் 1936 நவம்பர் 18-இல் காலமானார்.

வ.உ.சி. பற்றி சில அரிய தகவல்களை படித்தேன்….
பகிர்ந்து கொள்கிறேன்….

தூத்துக்குடி – கொழும்புவுக்கும் இடையில் நடந்து கொண்டிருந்த ஆங்கிலேயரின் கடல் வர்த்தகத்தைக் குறைப்பதற்காக வ.உ.சி. கப்பல்களை வாங்க விரும்பினார். இதற்காகத் தனது சொத்துகளை விற்று, சேமிப்பையும் சேர்த்தாலும் தேவையான பணம் கிடைக்கவில்லை. நண்பர்கள் தெரிந்தவர்களிடம் நிதி திரட்டி
ரூ.10 லட்சம் முதலீட்டில் (இன்றைய மதிப்பு ரூ,3,000 கோடி) “எஸ்.எஸ்.காலியா’, “எஸ்.எஸ். லாவோ’ கப்பல்களை வாங்கினார்.

பின்னர், “சுதேசி நீராவிக் கப்பல் கழகம்’ என்ற நிறுவனத்தையும் உருவாக்கினார்.
இரண்டு கப்பல்களில் 42 முதல் வகுப்பு இருக்கைகள்,
24 இரண்டாம் வகுப்பு இருக்கைகள், 1300 சாதாரண வகுப்பு
இருக்கைகள் என்று மொத்தம் 1366 இருக்கைகளும், 4000 டன்
சரக்கு மூட்டைகள் ஏற்றும் வசதிகள் இருந்தது. கப்பல்களின்
கொடியில் “வந்தே மாதரம்’ என்று எழுதப்பட்டிருந்தது.

வாடிக்கையாளர்களைக் கவர, தூத்துக்குடியில் இருந்து
கொழும்பு செல்ல சுதேசி கப்பலில் கட்டணம் படிப்படியாக 4 அணாவாகக் குறைக்கப்பட்டது. அதேசமயம், ஆங்கிலேய
நிறுவனக் கப்பலில் கட்டணம் ஒரு ரூபாய். சரக்குகளைக்
கொண்டு செல்ல தனிக்கட்டணம் வேறு. கட்டணம் மிகக்
குறைவாக இருந்ததால், மக்கள் சுதேசி கப்பலுக்கு பெரும்
அளவில் மக்கள் ஆதரவு தந்தனர்.

ஆங்கிலேய கப்பல் நிறுவனத்துக்குப் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. வ.உ.சி.யை சமரசம் செய்ய முயன்றும், ஆங்கிலேயர்கள்
தோல்வி அடைந்தனர்.

சுதேசி கப்பல் வந்து நிறுத்த புறப்பட இடம் தருவதில் நிர்வாகச் சிக்கல்களை ஆங்கிலேயர்கள் உருவாக்கி, இலவச கப்பல் பயணத்தையும் அறிமுகம் செய்தனர். அதனால் சுதேசி
கப்பல்களுக்கு பயணிகள் கிடைக்கவில்லை.

சுதந்திரப் போராட்டத்தில் வ.உ.சி. கைது செய்யப்பட்டு,
இரண்டு ஆயுள் தண்டனையில் சிறைக்குச் சென்றதாலும்,
சுதேசி கப்பல் நிறுவனப் பங்குதாரர்களை ஆங்கிலேயர்கள் பயமுறுத்தியதாலும், சுதேசி கப்பல் நிறுவனம் மூடப்பட்டது.
ஓர் கப்பலை ஆங்கிலேயருக்கே விற்கும் அவல நிலையும்
ஏற்பட்டது. இதையறிந்த வ.உ.சி. “கப்பலை ஆங்கிலேயருக்கு விற்பதற்குப் பதிலாக சுக்கல் சுக்கலாக நொறுக்கி கடலில் வீசியிருக்கலாமே..’ எனக் குமுறி அழுதார்.

“சிதம்பரம் பிள்ளையின் சொற்பொழிவையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த உடல் கூட உயிர் பெற்று எழும்.
புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில்
விடுதலை பெறும்” என்று வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த நீதிபதி ஃபின்ஹே தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

கோவை மத்திய சிறையில் வ.உ.சி. செக்கிழுத்தார்.
கல் உடைத்தார். நூல்கள் பல எழுதினார். கேரளம்
கண்ணனூர் சிறையில் கைதிகளுக்கு நல்ல நெறிமுறைகளைச்
செய்யுள் வடிவில் சொல்லிக் கொடுத்தார். அது “மெய்யறிவு’
என்ற தலைப்பில் வெளியானது.

தமிழறிஞர், வழக்குரைஞர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர்
என்று பல முகங்களைக் கொண்டிருந்த வ.உ.சி. ஆங்கிலேயர்களை எதிர்த்ததால், வழக்குரைஞராகத் தொழில் நடத்தும் உரிமையைப் பறித்தனர். திருக்குறள், தொல்காப்பியம் நூல்களுக்கு உரை
எழுதிய வ.உ.சி. சிறையிலிருந்து வெளிவரும்போது, அவரை
அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை என்பதைக் கண்டு
அதிர்ச்சி அடைந்தார்.

வ.உ.சி.யை வறுமை சூழ்ந்தபோது, பாலகங்காதர திலகர்
மாதம்தோறும் வ.உ.சி.க்கு ரூ.50 அனுப்பி வைத்து உதவினார். ஆங்கிலேயர் என்றாலும் வ.உ.சி.யை அறிந்தவர் என்பதால்
அன்று நீதிபதியாக இருந்த வாலஸ், வ.உ.சி. க்கு வழக்குரைஞர்
தொழில் செய்யும் உரிமையை மீண்டும் வழங்கினார். இதற்கு
நன்றிக் கடனாக, தனது மகனுக்கு வாலேஸ்வரன் என்று
வ.உ.சி. பெயர் சூட்டினார்.

இறந்துவிடுவோம் என்ற தோன்றியதும் உயிலில் வாங்கிய
கடன் விவரங்களை விலாவாரியாக பதிவு செய்திருந்தார்.
அதில்,

“தூத்துக்குடி நேஷனல் பேங்க் ஆஃப் இந்தியா லிமிடெட்டுக்கு
ஐந்து மாத வீட்டு வாடகை ரூ. 135.
சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளி பாக்கி சுமார் ரூ.30.
வாணியஞ்செட்டியார் எண்ணெய்க் கடைக்கு சுமார் ரூ. 30. இன்ஸ்பெக்டர் பிள்ளைக்கு ரூ. 20. சோமநாத்துக்கு ரூ.16.
வேதவல்லிக்கு ரூ.50. ஆக, மொத்தம் ரூ.86′ என்று
கூறப்பட்டிருந்தது.

மேலும், தான் மிகவும் நம்பிய தூத்துக்குடி அ.செ.க. கந்தசுவாமி ரெட்டியாரிடம் கடனை அடைத்து, மீதமுள்ள சொத்தை விற்று
இரண்டு மகள்களின் திருமணத்தை நடத்தி வைக்குமாறும்,
மனைவி வாழ, தான் விட்டுப் போகும் காப்பீடு தொகையையும் நிர்வகிக்குமாறு உயிலில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இறக்கும் தருணத்தில் தனது நண்பரான பாரதியின்
என்று தணியும் இந்தச் சுதந்திரத் தாகம் பாடலை பாடச் சொல்லி கேட்டவாறே வ.உ.சி. உயிர் நீத்தார்.

………………………………………..

.
………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

4 Responses to வ.உ.சி. அவர்கள், இறக்கும் தருவாயில் எழுதி வைத்த உயில் இது ….!

  1. Karthikeyan Palanisamy's avatar Karthikeyan Palanisamy சொல்கிறார்:

    வருங்காலத்தில் இவரது வாழ்க்கை வரலாறு முழுவதுமாக இரட்டிப்பு செய்யப்படும்

  2. சேந்தன் அமுதன்'s avatar சேந்தன் அமுதன் சொல்கிறார்:

    >>இவரது வாழ்க்கை வரலாறு முழுவதுமாக இரட்டிப்பு செய்யப்படும்

    ஒரு சிறந்த joke.
    இப்போது மட்டும் இருட்டடிப்பு செய்யமல் இருப்பது போல.

    இன்னும் ஒரு படி மேல போயி, இவருக்கு கப்பல் வாங்க காசு (ஏதாவது ஒரு திட்டத்தின் பெயரை சொல்லி) கொடுத்ததே “நம்ம” ஆட்கள் தான் என்று அடித்து விடுவார்கள்…

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      சுதந்திரப்போராட்ட தியாகியாக இருந்தால் போதாது. வாக்கு வங்கி உள்ள ஜாதியில் பிறந்திருக்கவேண்டும். அதிலும் ஒரு பகுதியில் நிறைந்து இருக்கவேண்டும். ஏற்கனவே எழுதியிருக்கிறேன் என்று நினைவு. திருச்சி மலைக்கோட்டை, யானை கட்டியிருக்கும் நுழைவாயில் எதிரே என்று நினைவு. இவரது உறவினர் பூக்கடை வைத்திருந்தார். அவர், இவர் பையன் குடும்ப போட்டோவைக் காண்பித்து ரொம்பவே வருத்தப்பட்டார், நாடு இவர்களை மறந்துவிட்டதே என்று (10 வருடங்களுக்கு முன்பு).

      இந்திய நாட்டுக்குச் சுதந்திரம் கூடாது என்று சொன்னவர்கள், அல்லது ஆங்கிலேயர்களின் அடிவருடிகள், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய வ.உ.சி மீது என்ன மரியாதை வைத்திருக்கப்போகிறார்கள்?

      இதைப்போலவே பாரதியார் குடும்பத்திற்கும் தமிழக அரசியல் தலைவர்கள், குறிப்பாக இராஜாஜி அவர்கள், உதவவில்லை. இதற்குக் காரணம் பாரதியின் புரட்சிகரமான கருத்துகள், வாழ்க்கை முறை. ஏன்…பாரதியின் சொந்த உறவினர்களே உதவவில்லை. ஆனால், பாரதியின் நூற்றாண்டு(?)க் கொண்டாட்டத்தில் எம்.ஜி.ஆர் கையால் 5 லட்சம் ரூபாயை மாத்திரம் அவர்கள் வாங்கிக்கொண்டார்கள்.

      இன்றைக்கு வரை, தமிழக முதல்வர்கள் என்று நினைத்தால், (நல்ல செயல்களைச் செய்தவர் என்ற வரிசையில்), எல்லோரும் சொல்வது காமராஜர் அவர்களை. அவருடைய குடும்பத்திற்கு உருப்படியாக நாடு என்ன செய்தது?

    • Karthikeyan Palanisamy's avatar Karthikeyan Palanisamy சொல்கிறார்:

      இவருக்கு கப்பல் வாங்கி கொடுத்ததே ஈவேரா தாங்க 😆

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.