…………………………………….

…………………………………….
இந்த இடுகைக்கு -” சபாஷ் …. சரியான போட்டி …” அல்லது
“வல்லவனுக்கு வல்லவன்…” அல்லது
விடாக்கண்டனும் கொடாக்கண்டனும் –
என்று பெயர் வைக்கலாமா என்றெல்லாம் முதலில் யோசித்தேன்….. .
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு உள்ளேயோ, அல்லது வெளியே நுழைவாயில் மேலேயாவது – சிசிடிவி கேமராக்கள் இல்லாமலா இருந்திருக்கும்…. வந்தவர்கள் பற்றிய விவரங்கள் இவர்களுக்கு இதுவரை தெரியாமலா இருக்கும்….. கண்டவர்களை எல்லாம் ஆபீஸ் கம்ப்யூட்டர்கள், ஃபைல்கள் எல்லாவற்றையும் கையாள அவ்வளவு சுலபமாக அனுமதித்து இருப்பார்களா …? பிறகு ஏன் இந்த ஆட்டம்….???
இந்த கூத்துக்கு “காதுல பூ ” என்ன பெயர் வைத்தால் இரண்டு தரப்புக்குமே பொருத்தமாக இருக்காது ……. ??? 😊
சரி……சொல்ல வந்த செய்தி –
……………………
இந்து தமிழ் திசை வலைத்தளத்தில் வெளிவந்துள்ள செய்தி —
“மதுரை அலுவலகத்தில் சோதனை நடத்தியது சட்டவிரோதம்: டிஜிபி அலுவலகத்திடம் அமலாக்கத் துறை புகார் -“
……………
சென்னை: மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் தமிழக
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது சட்டவிரோதம்.
இந்த சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறை டிஜிபி
அலுவலகத்திடம் அமலாக்கத் துறை புகார் அளித்துள்ளது.
மதுரையில் உள்ள அமலாக்கத் துறையின் துணை மண்டல
அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய அன்கித் திவாரி,
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில்
கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் பணியாற்றிய மதுரை
அமலாக்கத் துறை துணை மண்டல அலுவலகத்தில் டிச.1-ம் தேதி
மாலை 6 மணியளவில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார்
விசாரணையைத் தொடங்கினர்.
டிஎஸ்பி சத்யசீலன் தலைமை யில் விடிய விடிய நடந்த 13 மணி நேர
சோதனை டிச.2ம் தேதி காலை 7 மணிக்கு முடிவடைந்தது.
இதையொட்டி, 100-க்கும் மேற்பட்ட தமிழக போலீஸாரும்,
50-க்கும் மேற்பட்ட இந்தோ-திபெத்தியன் பாதுகாப்புப் படையினரும்
அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த சோதனையில், அன்கித் திவாரி அறையிலிருந்து பல்வேறு
முக்கிய ஆவணங்கள், பதிவேடுகள், அவரது வங்கிக் கணக்கு மற்றும் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அன்கித் திவாரி அளித்த வாக்குமூலத்தின்படி, இதில் தொடர்புடைய அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க,
லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மேலும்,
அன்கித் திவாரியை 15 நாள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்கவும்
லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
…………………..
இந்த நிலையில், அமலாக்கத் துறை சார்பில் தமிழக காவல் துறை
டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
உதவி இயக்குநர் பிரிஜேஷ் பெனிவால் அளித்துள்ள அந்த புகாரில்,
‘மதுரையில் உள்ள அமலாக்கத் துறையின் துணை மண்டல
அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார்
அத்துமீறி நுழைந்து அடையாளம் தெரியாத நபர்களைக் கொண்டு
சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, மிக முக்கியமான அமலாக்கத் துறை விசாரணை செய்து வரும் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
டிச.1-ம் தேதி, மதுரை அலுவலகத்தினுள் பிற்பகல் 1.15 மணிக்கு
நுழைந்த இரண்டு சந்தேகத்துக்கிடமான முறையில் நுழைந்த இருவர்
தங்களை உளவுத் துறை அதிகாரிகள் என்று தெரிவித்தனர்.
இந்த இருவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் அடையாள அட்டை
மற்றும் சோதனைக்கான காரணங்கள் குறித்து கேட்டபோது, அவர்கள் இருவரும் அதை சட்டை செய்யாமல் கடந்து சென்றனர்.
இதிலிருந்து ஒரு மணி நேரம் கழித்து, சுமார் 2.30 மணியளவில்,
கிட்டத்தட்ட 35 பேர் சாதாரண உடையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்
எனக் கூறிக்கொண்டு ஊடகத்தினருடன் அமலாக்கத் துறை
அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
அவர்கள் யாரும் தங்களது அடையாள அட்டையை அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் காட்டவில்லை. டிஎஸ்பி சத்யசீலன் ஒருவர் மட்டுமே
தன்னை யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆனால்,
சோதனைக்கான அனுமதியை காட்டவில்லை. சோதனையில் வந்த
போலீஸார் யாரும் அடையாள அட்டையும் வைத்திருக்கவில்லை, தங்களுக்கான பெயர் பட்டையையும் அணிந்திருக்கவில்லை.
இவ்வாறு அமலாக்கத் துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த
35 பேரும், டிச.1-ம் தேதி பகல் 2.30 மணியில் இருந்து, டிச.2-ம் தேதி
காலை 7.15 மணி வரை தொடர்ந்து அலுவலகத்துக்குள் இருந்தனர்.
அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனைக்கான காரணம்,
அனுமதி, முதல் தகவல் அறிக்கை நகல், சோதனைக்கு
வந்திருந்தவர்களின் அடையாள அட்டை எங்கே தொடர்ந்து கேட்டும் அவர்களிடம் உரிய பதிலளிக்கவில்லை. மாறாக, கீழ்க்கண்ட
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி
அன்கித் திவாரி அறையினுள் நுழைந்தனர். சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான கோப்புகள் மட்டுமின்றி,
தேவையில்லாத பிற வழக்குகளின் கோப்புகளையும் அவர்கள்
ஆய்வு செய்தனர். இந்த வழக்குக்கு சிறிதும் தொடர்பே இல்லாத,
அமலாக்கத் துறையின் மிக முக்கியமான வேறு சில வழக்குகளின் ஆவணங்களை எடுத்தனர். அன்கித் திவாரியின் அறைக்குள் அங்கீகரிக்கப்படாத அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்து
அமலாக்கத் துறையின் ஆவணங்களை எடுத்துள்ளனர்.
மேலும், இந்த சோதனையில் அமலாக்கத் துறை அலுவலகம்
முழுவதும் சூறையாடப்பட்டுள்ளது. சோதனை என்ற பெயரில்
உள்ளே நுழைந்தவர்கள், தொடர்ந்து பல்வேறு நபர்களுடன் பேசி,
அமலாக்கத் துறை ஆவணங்கள் குறித்த தகவல்களை தெரிவித்தனர்.
மறுமுனையில் பேசியவர்களிடம் இருந்து பல்வேறு அறிவுரைகளைப் பெற்றனர். பின்னர், சோதனையின் முடிவில் இசிஐஆர் உள்ளிட்ட ஆவணங்களைப் பறிமுதல் செய்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீஸாரின்
பஞ்சநாமா ரிஜிஸ்டரில் புனைந்து எழுதப்பட்டது. மேலதிகாரிகளின்
உத்தரவின் பேரில் இந்த சோதனையை தாங்கள் மேற்கொள்வதாக, சோதனையில் ஈடுபட்டவர்கள் தொடர்ச்சியாக கூறிக்கொண்டே
இருந்தனர்.
பஞ்சநாமாவைப் பார்த்தபோது நாங்கள் அதிர்ந்து போனோம்.
டிஎஸ்பி சத்யசீலன் உள்ளிட்ட 4 காவல் அதிகாரிகள் மற்றும்
ஆர்.ஐ, விஏஓ ஆகிய 2 சாட்சிகள் உட்பட 6 பேர் மட்டுமே இந்த
சோதனையில் ஈடுபட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
35 பேர் குறித்த எந்த தகவலும் அதில் இடம்பெறவில்லை.
அவர்கள் உண்மையில் போலீஸாரா அல்லது தனிநபர்களா
என்பது தெரியவில்லை. வேறு யாராவது அமலாக்கத் துறை
அலுவலகத்துக்குள் புகுந்து ஆவணங்களை எடுத்துச் செல்ல
வந்தனரா என்பதும் தெரியவில்லை.
இந்த சோதனையில் எத்தனை ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு
போலீஸார் கைப்பற்றினர். எந்த ஆவணங்கள் எல்லாம் தவறாக கையாளப்பட்டுள்ளன என்பது குறித்தும் தெரியவில்லை.
அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனை சட்ட விரோதமானது.
எனவே, உரிய அனுமதி மற்றும் அடையாள அட்டை இன்றி அமலாக்கத்
துறை அலுவலகத்தில் நுழைந்து சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
அனுமதியின்றி அமலாக்கத் துறை அலுவலகத்துக்குள் நுழைந்த
லஞ்ச ஒழிப்பு போலீஸார் மற்றும் உரிய அனுமதி மற்றும் அடையாள
அட்டை இல்லாமல் நுழைந்தவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு
செய்ய வேண்டும்.
அமலாக்கத் துறை விசாரித்து பல அதிமுக்கிய வழக்கு விவரங்கள்
மற்றும் ஆவணங்களை திருடிச் சென்றது, பல்வேறு வழக்கு
ஆவணங்களை ஆபத்தான முறையில் மொபைல் உள்ளிட்ட
எலெக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தியது உள்ளிட்ட
பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்”
என்று அமலாக்கத் துறையின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
……
link – https://www.hindutamil.in/news/tamilnadu/1162670-madurai-enforcement-directorate-raids-illegal-complaint-to-dgp-office-2.html
.
………………………………………………………………………………………………………



நிஜமான சாமியாரா இல்லை ….