போட்டி – SOFT இந்துத்வா’வுக்கும், HARD இந்துத்வா’வுக்கும் தான்….!!!

………………………………………………………

சாத்வி ராம் சியா பாரதி

…………………………………………….

சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும் 5 மாநிலங்களில், 4-ல் போட்டி –
SOFT இந்துத்வா’வுக்கும், HARD இந்துத்வா’வுக்கும் இடையே தான்
என்று சொல்கின்றன செய்திகள்… எப்படி …???

கீழே உள்ள தகவல்களை பாருங்களேன்….

……….

ஐந்து மாநிலத் தேர்தல்களில் – மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸும் பா.ஜ.க-வும் நேரடியாக மோதுகின்றன. இவற்றில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அதைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடுகிறது. தெலங்கானா’வில் சந்திரசேகர் ராவின் ஆட்சி.
இங்கே மும்முனைப்போட்டி.

காங்கிரசார் ‘சிறுபான்மை வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்கள்,
இவர்கள் எல்லோரும் இந்து விரோதிகள். காங்கிரஸே முஸ்லிம்கள்
மற்றும் கிறிஸ்தவர்களின் கட்சி’ – என்று காங்கிரஸ் தலைவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறது பா.ஜ.க.

இந்தப் பிரசாரம், முடிவெடுக்காமல் இருக்கும் வாக்காளர்களை
பா.ஜ.க பக்கம் அனுப்புகிறது. இதைத் தடுக்கவே மென்மையான
இந்துத்துவ அணுகுமுறைக்கு இங்கெல்லாம் மாறியிருக்கிறது
காங்கிரஸ். அதேசமயத்தில் தாங்கள் சிறுபான்மையினருக்கு
எதிரானவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க அவர்களுக்கும் தேர்தலில்
போட்டியிட போதிய அளவு வாய்ப்பு கொடுக்கிறது.

கத்திமீது நடப்பது போன்ற இந்த அணுகுமுறை பற்றி கடந்த
2022, மே மாதம் உதய்பூரில் நடைபெற்ற சிந்தன் ஷிவிர் என்ற
மூன்று நாள் மாநாட்டிலேயே விவாதிக்கப்பட்டது.
‘நம்மை இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று சித்திரித்து,
பெரும்பான்மை வாக்காளர்களைக் கவர்கிறது பா.ஜ.க.
நாம் அதை மாற்ற வேண்டும். காங்கிரஸ் தலைவர்கள் எல்லா
இந்துத் திருவிழாக்களிலும் பங்கேற்க வேண்டும். வெளிப்படையாக
வழிபாடு செய்ய வேண்டும்’ என்று இந்தியாவின் வடக்கு மற்றும்
மத்திய மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் வற்புறுத்தினார்கள்.

ராகுல் மற்றும் பிரியங்காவின் பிரசாரங்கள் உட்பட எல்லாமே
அதற்கேற்றாப்போல் உருவாக்கப்பட்டன. ஆனால், ‘பா.ஜ.க-வின்
தீவிர இந்துத்துவ முழக்கம் போல இல்லாமல், மத நம்பிக்கையை
மட்டும் வெளிப்படுத்தினால் போதும். ஒருபோதும் அது
சிறுபான்மையினருக்கு எதிரான செயல்பாடாக இருக்கக்கூடாது’
என வரம்பும் நிர்ணயிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் யுக்திகள்
வகுக்கப்பட்டன.

சத்தீஸ்கர் மாநிலம் ராமரை சுவீகரிக்கப் பார்க்கிறது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல்,
‘‘ராமரின் அம்மா கௌசல்யாவின் தாய்வீடு சத்தீஸ்கர் மாநிலம்தான்.
ராமர் வனவாசம் போனபோது நீண்ட காலம் இருந்தது இங்குதான்’’
என்று உரிமை கொண்டாடுகிறார். ராமர் வனவாசம் சென்ற பாதையில் இருக்கும் பத்து இடங்களை அழகுபடுத்தி, அங்கெல்லாம் ராமர்
சிலைகளை வைத்து வழிபாடு மற்றும் சுற்றுலாத் தலமாக மாற்ற
அரசே ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.

இதேபோல ‘கோதான் நியாய் யோஜனா’ என்ற திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளது அரசு. இந்தத் திட்டத்தின்படி பசு மாடுகளின்
சாணம் மற்றும் கோமியத்தை விவசாயிகள் மற்றும் கால்நடை உரிமையாளர்களிடமிருந்து அரசே விலைக்கு வாங்கிக்கொள்கிறது.

மகளிர் சுய உதவிக்குழுவினர் அவற்றை வைத்து மண்புழு உரம்
உள்ளிட்ட பொருள்களைத் தயாரிக்கிறார்கள். இந்தத் திட்டம் அமலானதிலிருந்து கிராமப்புறங்களில் மாடுகளை நன்கு பராமரித்து
பணமும் ஈட்டத் தொடங்கிவிட்டார்கள் மக்கள்.

இப்படி பா.ஜ.க-வின் இரண்டு முக்கியத் தேர்தல் அஸ்திரங்களான
ராமரையும் பசுவையும் தங்கள் வசப்படுத்திவிட்டார் பூபேஷ் பாகல்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் ராமரை விடவில்லை.
அங்கிருக்கும் 33 மாவட்டங்களிலும் தலா இரண்டு இயற்கைச் சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். குழந்தைகளைக் கவர்வதற்காக இயற்கைச்சூழல் மற்றும் விலங்குகளுடன் அமையும்
இந்தப் பூங்காக்களுக்கு ராமரின் மகன்கள் பெயரில் ‘லவ குச வாடிகா’
என்று பெயர் சூட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் முழுக்க பசுப் பாதுகாப்பு மையங்கள் அமைக்க
100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 60 வயது தாண்டிய முதியவர்கள் புனிதயாத்திரையாகக் கோயில்களுக்குச் செல்ல அரசு நிதியுதவி தரும் திட்டமும் அங்கு உருவாகியுள்ளது. சுமார் 20,000 பேர் இப்படி யாத்திரை சென்றுள்ளனர்.

அசோக் கெலாட் அரசு, புஷ்கர் பிரம்மா கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்களைப் புனரமைக்க நிதி ஒதுக்கியுள்ளது. இதுதவிர
வேத வித்யாலயா, சம்ஸ்கிருத வித்யாலயா, பல்கலைக்கழகம்,
கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு நல வாரியம் என்று
பா.ஜ.க-வே பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சியில் இல்லை. அதனால் அவர்
வேறு வழி வேறு . கடந்த தேர்தலிலேயே –
‘மாநிலத்தின் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு கோசாலை அமைப்போம்’ என்று வாக்குறுதி தந்தவர் அவர். பசுக்களைக் கொல்வதற்கு எதிரான சட்டங்களைக் கடுமையாக்குவோம் என்றும் வாக்குறுதி கொடுத்தவர்.
15 மாதங்கள் ஆட்சியில் இருந்த அவர், அதற்குள்ளாக, சுமார் ஆயிரம் கோசாலைகளைத் திறந்தார். பசுக்களைப் பாதுகாப்பதற்கான மானியத்தையும் உயர்த்தினார்.

தன் சொந்த ஊரான சிந்த்வாரா பகுதியில் 101 அடி உயர அனுமன்
சிலையுடன் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார் கமல்நாத். அந்தக்
கோயிலில் அடிக்கடி திருவிழாக்கள், ராம கதை சொல்லும் நிகழ்வுகள் நடைபெறும். மாநிலத்தின் முக்கியமான எல்லாக் கோயில்
திருவிழாக்களிலும் தவறாமல் பங்கேற்பதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். ‘இந்து நம்பிக்கைகளைக் காப்பாற்ற வல்லவர் யார்’
என்று சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பில் அங்கு கேள்வி கேட்கப்பட்டது.

பா.ஜ.க-வைச் சேர்ந்த முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் 41% வாக்குகள் வாங்கினார். ஆனால், கமல்நாத்துக்குக் கிடைத்ததோ 47% வாக்குகள்.
அந்த அளவுக்கு அவர் தீவிர பக்தர்.

மத்தியப்பிரதேசத்தில் இந்து ஒற்றுமை மற்றும் பசுக்கள் பாதுகாப்பு
ஆகிய நோக்கங்களுடன் பஜ்ரங் சேனா என்ற அமைப்பு செயல்பட்டு
வந்தது. சமீபத்தில் அது தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்
கொண்டது. இந்துக்களை ஒற்றுமையுடன் பாதுகாக்க சிறந்த கட்சி காங்கிரஸ்தான் என்று அதன் நிர்வாகிகள் காரணம் சொன்னார்கள்.

கட்சிகளில் வழக்கறிஞர் பிரிவு, தொழிலாளர் அணி என்றெல்லாம்
இருப்பது போல மத்தியப்பிரதேச காங்கிரஸில் மத மற்றும்
திருவிழாக்கள் பிரிவு தனியாகச் செயல்படுகிறது. இந்தப் பிரிவு
பல இடங்களில் சமயம் சார்ந்த பிரசங்க நிகழ்ச்சிகளை நடத்துகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ-க்கள் இவற்றில் கலந்து
கொண்டு மேடையில் இருப்பார்கள்.

மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸின் தேர்தல் பிரசாரத்தை
பிரியங்கா காந்தி வந்து ஆரம்பித்து வைத்தார். கடந்த ஜூன் மாதம்
ஜபல்பூரில் நர்மதை நதியில் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்திவிட்டு
பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டது. அனுமன் வேடமிட்ட ஒருவர் கையில்
கதையை எடுத்துவந்து பிரியங்காவிடம் கொடுத்தார்.

இதேபோல கோயில் மற்றும் அர்ச்சகர் பிரிவு என்ற ஒன்றும்
மத்திய பிரதேசத்தில் இருக்கிறது. கோயில் நிர்வாகங்கள் அரசின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக இயங்குவதற்காக இந்தப் பிரிவு போராட்டங்களை நடத்தி வருகிறது.

சாத்வி ராம் சியா பாரதி என்கிற 36 வயதாகும் பெண் துறவி,
மத்தியப்பிரதேச மாநில மல்ஹாரா சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர். முன்னாள் மத்தியப்பிரதேச முதல்வரும், பா.ஜ.க சீனியர் தலைவர்களில் ஒருவருமான உமாபாரதியின் செல்வாக்கு ஏரியா இது. உமாபாரதிக்கும்
சாத்வி ராம் சியா பாரதிக்கும் நிறைய ஒற்றுமைகள். இருவருமே லோதி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உமாபாரதி போலவே இவரும் காவி உடை அணிந்து நெற்றி நிறைய குங்குமம் வைத்திருப்பார். உமாபாரதி போலவே இவரும் ஆன்மிகத்திலிருந்து அரசியல் களம் வந்திருக்கிறார்.

உணர்ச்சிகரமாக ராம கதை, பாகவதக் கதை சொல்வதன் மூலம் மத்தியப்பிரதேசத்தின் கிராமப்புறங்கள் வரை புகழ்பெற்றவர்
சியா பாரதி. பாடல்களும் கதையுமாக அவர் நிகழ்த்தும் ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்க ஏராளமான பெண்கள் கூட்டம் வரும்.
அரசியல் மேடைகளில் அதே போல கதை சொல்லி, கதையின்
இடையில் மக்கள் பிரச்னைகளைச் சொல்லி ஓட்டு கேட்கிறார்.
தன் உரையை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்துடன் ஆரம்பித்து,
‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லியே முடிக்கிறார். இடையில் அவ்வப்போது
‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற முழக்கமும் கேட்கும்.

இவற்றையெல்லாம் படித்துவிட்டு அவர் பா.ஜ.க வேட்பாளர் என்று
நினைத்தால் அதுதான் தவறு. ராம் சியா பாரதியை இங்கு நிறுத்தி
யிருப்பது காங்கிரஸ் கட்சி. ‘‘தேர்தல் நேரத்தில் மட்டும்தான்
பா.ஜ.க-வினர் இந்துக்கள் பற்றிப் பேசுகிறார்கள். பெண்கள் பாதுகாப்பு,
பசுப் பாதுகாப்பு என்று பேசுகிறார்கள். அவர்கள் போலி தேசபக்தர்கள்”
என்று பொங்குகிறார் ராம் சியா பாரதி.

தெலங்கானா’வில் வேறு வித சுவாரஸ்யம் –

தெலங்கானாவில் ராகுல் காந்தியும் பிரியங்காவும் இணைந்தே
காங்கிரஸின் பிரசார பஸ் யாத்திரையைத் தொடங்கினர்.
வாரங்கல் அருகே இருக்கும் புகழ்பெற்ற ராமப்பா கோயிலில் இருந்தே
அது தொடங்கியது.

இருவரும் கோயிலில் வழிபட்ட பிறகே பிரசாரத்தை ஆரம்பித்தனர்.
இப்போது பரபரப்பாக தேர்தல் பிரசாரம் நடக்கும் நேரத்திலும்
ராகுல் காந்தி கேதார்நாத் யாத்திரை போயிருக்கிறார். இந்த எல்லாமே, ‘இந்துத்துவ அரசியலில் நாங்கள் உங்களுக்கு சளைத்தவர்கள் இல்லை’
என்று பா.ஜ.க-வுக்கு காங்கிரஸ் காட்டுவது போலவே இருக்கிறது.
இந்த அரசியல் இதோடு மட்டும் நிற்கவில்லை. அரசின் நலத்திட்டங்கள்
மற்றும் தேர்தல் வாக்குறுதிகளிலும் எதிரொலிக்கிறது.

மற்ற பிரச்சினைகளும், இலவசங்கள் குறித்த வாக்குறுதிகளும்
பிரச்சாரங்களில் உண்டென்றாலும் கூட,

அசல் போட்டி – SOFT இந்துத்வா’வுக்கும், HARD இந்துத்வா’வுக்கும்
இடையே தான் என்றே சொல்லத் தோன்றுகிறது.

.
………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.