……………………………………………………

……………………………………………………
இரண்டு பகுதிகளாக இந்த வைகோ-பாண்டே நிகழ்வு கீழே.
எனக்கொரு விஷயம் புரியவில்லை…!!!!
இது வைகோ அவர்களின் ஃபேன்ஸ் மீட்….!!!
இந்த நிகழ்ச்சிக்கும், ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கும்
என்ன சம்பந்தம். அவரை ஏன் கூப்பிட்டார்கள்.
இவரும் ஏன் ஒப்புக்கொண்டார்… மேடை கிடைத்தால் –
எங்கே வேண்டுமானாலும் போய் விடுவாரோ…?
முதல் காணொளியில், பாண்டேயின் அளவுக்கு மீறிய
“அண்ணன்”புகழ்ச்சி.
அதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால், அடுத்து கேள்வி-பதில் நிகழ்ச்சியிலும் கூட
ரங்கராஜ் பாண்டே – வைகோ அவர்களின் காலில் விழுந்ததும்,
அளவுக்கு மிஞ்சிய பவ்யத்தோடு கேள்விகளை
முன் வைத்ததும் வித்தியாசமாக இருந்தது….
வெளிப்படையாக – இரண்டு காரணங்கள் இருக்கலாம் –
முதலாவது – முதுமையின் தளர்ச்சி வைகோ அவர்களிடம்
மிக அதிகமாகத் தெரிகிறது. வயது 79 தான் ஆகிறது. இருந்தாலும்
மிகவும் தளர்ந்து காணப்படுகிறார். பேசுகிறார்.
இரண்டாவது – நிகழ்வுக்களம் – மதிமுக மேடை என்று தெரிகிறது.
பாண்டே’யின் எச்சரிக்கைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும்.
இதையெல்லாம் தாண்டி, பாண்டே அவர்களிடம் வேறு ஏதோ
காரணம் இருக்கிறது…. ( என் மனதில் அது என்னவென்றும்
தோன்றுகிறது ) ஆனால், அதைப்பற்றி இங்கே நான் விவாதிக்க
விரும்பவில்லை; அதற்கான நேரம் இது அல்ல…!!!
என் கருத்து –
வைகோ அவர்களிடம் இன்னும் அவசியம்
கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன. ஏனோ –
செயற்கையாக – சீக்கிரமாகவே முடித்து விட்டார்கள்.
வேண்டுமென்று தானோ….???
பாண்டே கேட்ட சில கேள்விகளுக்குக்கூட வைகோ நேர்மையான பதிலை தரவில்லை….. தன் சாமர்த்தியத்தைத் தான் காட்டினார், காணொளியை காணும்போது, அதை புரிந்து கொள்ளலாம்.
வைகோ – அவரது அரசியல் பயணத்தின்
கடைசி 10-15 ஆண்டுகளில் அவர் தன் மனசாட்சிப்படி
செயல்படவில்லை என்பது என் கருத்து.
நிறைய செயற்கையான நாடகங்கள்…. பொய்கள்….
இல்லாததை இருப்பதாக உருவாக்கி காட்டுவது என்று
நம் மக்களையே அவை ஏமாற்றுவதாக இருந்தது.
டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி தன்னுடைய ஊரில், இவர் போராட்டம்
நிகழ்த்தியபோது, போட்ட ஆட்டம், லைவ்’வாக தொலைக்காட்சிகளில்
காட்டப்படுகிறது என்று தெரிந்துகொண்டு, போலீஸ் முன்னால்
நெஞ்சை திறந்து காட்டிக்கொண்டு, ஒன்றும் செய்யாமல் சும்மா நின்றுகொண்டிருந்த போலீசிடம் –
” சுடுவாயா….எங்கே சுடு பார்க்கலாம்..” என்று போட்ட கூச்சல் –
மகா கேவலம்… வெறும் மட்டை அரசியல்.
மேலும், சட்டமன்ற தேர்தல் சமயத்தில், 3-ம் அணி என்று ஒன்றை உருவாக்கிக்கொண்டு, மிகவும் பரிதாபகரமான உடல்நிலையில் இருந்த விஜய்காந்த் அவர்களைக் காட்டி, விஜய்காந்த் தான் தமிழ்நாட்டின் அடுத்த சி.எம். என்று தெரிந்தே பொய் சொல்லி, இவர் ஆடிய ஆட்டம் – மறக்க இயலாதது… கேவலமானது என்று கூட சொல்லலாம்.
தன் மகனாகிய மு.க.ஸ்டாலினை அடுத்த திமுக தலைவராக
கருணாநிதி ப்ரமோட் செய்கிறார் என்ற காரணத்தைச் சொல்லி,
திமுகவை பிளந்துகொண்டு வெளியே வந்து மதிமுக-வை உருவாக்கிய வைகோ,
இப்போது கருணாநிதி செய்த அதே காரியத்தைத் தானே
தன் மகன் துரை வைகோ-வை வைத்து செய்கிறார் …???
இவரென்ன லட்சியவாதி…?
Any way – அவசியம் காணவேண்டிய பேட்டி….ஆகையால்,
கீழே பதிகிறேன்.
……………………………….……………………………….
.
……………………………………………………………………………………………………………………..



யார் யாரெல்லாம் ஜெயிலுக்கு அல்லது தீக்குளித்துச் சாகத் தயாராக இருக்கிறீர்களோ அவர்களெல்லாம் என்னோட வாருங்கள். பதவியை எதிர்பார்த்து வராதீங்க. அது என் மகனுக்குத்தான். என்றுதான் வைகோ உண்மையை ஒத்துக்கொள்வார் என்று நினைத்தேன்.
பொதுப்பிரச்சனைகளுக்காக நடையாய் நடந்தார் – இதன் காரணம் என்ன? எந்தப் பிரச்சனைகளுக்காக நடந்தார்? அந்த நிலைப்பாட்டை அம்போ என்று விட்டுவிட்டு, அந்தப் பிரச்சனைகளே கிடையாது என்ற நிலைப்பாட்டை ஏன் எடுத்தார் (முக்கிய உதாரணம் மதுவிலக்கு, இலங்கைத் தமிழர் பிரச்சனை-திமுகவைக் குறை சொன்னது)
மதுக்கடைப் போராட்டங்கள், உடைத்து நொறுக்கினோம், கண்ணீர் புகைக் குண்டு (இதைக்கூட நினைவில் இல்லாமல் டியர் கேஸ் அடிச்சாங்க என்று சொல்லும் தமிழ்ப் புலமை பெற்றவர் வைகோ) அடித்தார்கள் என்றெல்லாம் சொல்லிவிட்டு, தன் மகனுக்குப் பதவி வேண்டும் என்பதற்காக கருணாநிதி காலில் பிறகு ஸ்டாலின் காலில் விழுந்துகிடக்கும் வீராதி வீரரைப் பார்க்கும்போது இவர் பெரிய போராளி என்பதில் எனக்கு சந்தேகமே வரவில்லை.
தொண்டர்கள் யாரும் கட்சியை விட்டு விலகவில்லை, அவர்கள் எல்லோரும் திரும்ப வந்துகொண்டிருக்கிறார்கள் என்று முரண்பட்ட இரண்டு விஷயங்களைச் சொல்லும்போது நக்கீரன் கோபால் கைதட்டி வரவேற்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சி..
மதிமுக என்ற கட்சிக்கான தனித்தன்மை தேவையில்லை என்று ஒத்துக்கொண்ட வைகோ, கட்சியே தேவையில்லை என்று தொண்டர்கள் சொல்லும் காலத்தை நோக்கி விரைந்து செல்கிறார்.
நக்கீரன் கோபால் ரியாக்ஷனைப் பார்க்கும்போது எனக்கு நகைச்சுவையாகத் தோன்றுகிறது….. அடுத்தவன் காலை வருடி அதனால் பிழைக்கும் பிழைப்பு கோபாலுடையது. அதனால் அவருக்கு வைகோ தலைவராகத் தோன்றுகிறார் போலிருக்கிறது.
மொத்தத்தில் இந்தப் பேட்டியில் பாண்டே (பாஜக வின் வளர்ச்சி மற்றும் வெற்றி தவிர), சங்கடமான கேள்விகள் எதையும் தொடவில்லை. இந்தப் பேட்டியே, வைகோ அவருடைய கட்சி முக்கியஸ்தர்கள் முன்னிலையில், ஓரளவு பேசும் நிலையில் (வயோதிகத்தால்) இருக்கும்போது அவரைப் பாராட்டும் விதத்தில் எடுக்கப்பட்டது என்றே தோன்றுகிறது. இத்தகைய பேட்டிகளால் யாருக்கும் பிரயோசனம் இல்லை. வை.கோ. ஒரு தோல்வியுற்ற தலைவர். ஒரு மாவட்டச் செயலாளராக இருக்கும் தகுதி (திமுகவில்) அவருக்கு உண்டு. திமுக மேடைப் பேச்சாளராக இருக்கும் தகுதி உண்டு, அவருடைய பேச்சுத் திறமையினால். ஆனால் அதற்கு மேல் அவருக்குத் தகுதி கிடையாது. அவருக்கென்று தனித்துவமான கொள்கைகள் எதுவுமே இல்லை, அவர் தன் கொள்கைகள் கோட்பாடுகள் என்று சொல்லிக்கொண்ட எதையுமே அவர் நம்பியதில்லை. நாட்டைப் பற்றி அவர் என்றுமே கவலைப்பட்டதில்லை. அதனால் அவர் தமிழக மக்களின் ஆதரவையோ இல்லை இப்படி ஒருவர் அரசியலில் இருந்தார் என்று சொல்லும் நிலைமையையோ என்றுமே பெற வாய்ப்பில்லை.
2009 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் சரியான வியூகத்தை வகுக்க தவறியது வைகோவின் பின்னடைவுக்கு முக்கிய காரணம்.