………………………………………….

………………………………………….
கருணாநிதி அவர்கள் முதலமைச்சர் மற்றும் திமுக கட்சித்
தலைவராகவும் எம்.ஜி.ஆர். அவர்கள் திமுக பொருளாளராகவும்
இருந்த சமயத்தில்,
திமுக-வில் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் சொத்துக்
கணக்குகளை கொடுக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கேட்டதும்
அதனால் கடுப்படைந்த கருணாநிதியால் எம்.ஜி.ஆரே, திமுக-விலிருந்து
தூக்கி எறியப்பட்டதும் அந்த சமயத்தில் அரசியலை கவனித்துக்
கொண்டிருந்த அனைவருக்கும் தெரியும்….
ஆனால், இதன் பின்னணி குறித்து கருணாநிதி அவர்கள் தனது
சுயவரலாறான ” நெஞ்சுக்கு நீதி” புத்தகத்தில் என்ன சொல்லி
இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
அந்த சூழ்நிலை பற்றி விவரமாக தெரிவிக்கும் ஒரு கட்டுரை இது –
…………………………..
எம்ஜிஆரை கட்சியிலிருந்து தூக்க உண்மையான
காரணமாக இருந்த பேச்சு –
………………….
நீண்ட காலமாகவே திராவிட இயக்கக் கொள்கைகள் மீது பற்று
கொண்டிருந்த எம்.ஜி. ஆர். தி.மு.கவில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். தி.மு.கவின் பொதுச் செயலாளர் அண்ணாவுக்கும் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மு. கருணாநிதிக்கும் நெருக்கமானவராகவே இருந்தார்.
அண்ணா மறைந்த பிறகு, கட்சியின் அடுத்த தலைவராகவும் முதலமைச்சராகவும் மு. கருணாநிதி பொறுப்பேற்க, கட்சியின் பிற தலைவர்களின் ஆதரவைத் திரட்டியதில் எம்.ஜி.ஆரின் பங்கு
முக்கியமானது.
ஆனாலும் தி.மு.க. இரண்டாவது முறையாக ஆட்சியில் இருந்தபோது, ஆட்சியின் மீதும், கட்சி முக்கியஸ்தர்கள் மீதும் எழுந்த பலத்த ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக –
முதலமைச்சரும் கட்சியின் தலைவருமான மு. கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதில், கட்சி இரண்டாக உடைந்தது. புதிதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் துவங்கினார் எம்.ஜி.ஆர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியைப் பொருத்தவரை, மத்தியில் ஆட்சியில் இருந்த இ. காங்கிரசின் தூண்டுதலே கட்சி உடையக் காரணம் என்று
வித்தியாசமான ஒரு காரணத்தைச் சொன்னார்.
……………..
எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவைத் துவங்கியபோது என்ன நடந்தது…???
என்பது குறித்து தனது, வாழ்க்கை வரலாற்று நூலான ‘நெஞ்சுக்கு நீதி’யில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் மு. கருணாநிதி.
…………
“1972 ஆகஸ்ட்டில் மதுரை மாவட்ட மாநாடு முரசொலி மாறன் தலைமையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மாவட்டச் செயலாளர் மதுரை முத்துவால் துவங்கப்பட்டன.
அப்போது கழகப் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். என்னை வந்து
வீட்டில் சந்தித்தார். அவருடன் படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணியை கழகத்தில் உறுப்பினராகச் சேர்க்க விரும்புவதாகவும் அந்தப் பெண்மணி மதுரை மாநாட்டுக்கு வர வேண்டும் என்றும் மாநாட்டு மேடையிலேயே அந்தப் பெண்மணிக்கு முன்வரிசையில் இடம் தர வேண்டுமென்றும் மதுரை முத்துவுக்கு நான் கட்டளையிட வேண்டுமென எம்.ஜி.ஆர். வலியுறுத்தினார்.
‘திராவிட இயக்கம் இதையெல்லாம் தாங்காது, கொஞ்சம் பொறுமையாக இருந்து சிந்தியுங்கள்’ என்று விளக்கமளித்தேன். ‘நண்பர் முத்துவை உங்களுக்குத் தெரியாதா, அவரிடமே இதுகுறித்துப் பேசுங்கள். ஆனால்,
அவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்’ என்று தெரிவித்தேன்.
( திமுக தலைவர் சொன்னால், மாவட்டச் செயலாளர் ஒத்துக் கொள்ள மாட்டாராம் – அதையும் அந்த தலைவரே சொல்கிறார்… !!!)
…………

…………………………………………….
எம்.ஜி.ஆர். மதுரை முத்துவிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அவர் அனுமதிக்க மாட்டேன் எனக் கூறிவிட்டார். எஸ்.எஸ். ராஜேந்திரனும் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டார் எம்.ஜி.ஆர்.
ஆனால், அவரது மனதில் ஏற்பட்ட ஏமாற்றம், வெறுப்புணர்வாக மாறி
விட்டது என்பதை பிற்கால நடவடிக்கைகள் எடுத்துக் காட்டின.” என்று மு.கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.
நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் இதுகுறித்து அவர் மேலும் விரிவாக குறிப்பிட்டுள்ளார். ” சினிமாவில் நடித்துக்கொண்டே அவர் அமைச்சராக வேண்டுமென்றார். படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு அமைச்சராவதில் எந்தத் தடையுமில்லை” யென்று கூறினேன். அதன் காரணமாகவும் அவரது உள்ளத்தில் புகைச்சல் இருந்தது.
இதற்கிடையில்தான் கழகத்தில் பிளவு ஏற்படுத்த மத்திய அமைச்சர்
மோகன் குமாரமங்கலம் எம்.ஜி.ஆரைப் பயன்படுத்தும் முயற்சியில்
ஈடுபட்டார். மத்திய அமைச்சர்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே
இருந்த ரகசியத் தொடர்புகளைப் பற்றி சேலம் மாவட்டக் கழக
அவைத் தலைவர் எஸ்.எஸ்.எம். சுப்பிரமணியம் சென்னையில் உள்ள
தனது நண்பருக்கு கடிதம் எழுதி, அதனை எதிர்க்கட்சிப் பத்திரிகையில் வெளியிடுமாறு குறிப்பிட்டிருந்தார்.
(கருணாநிதி சொல்லாமலே, அவருக்குத் தெரியாமலேயா எஸ்.எஸ்.எம். இதை செய்திருப்பார் …?? )
ரகசியத் தொடர்பு என்பது அந்நியச் செலாவணிச் சிக்கல்,
வருமானவரிச் சிக்கல் போன்றவைகளாகும்.
இந்த விவகாரம் வெளியானதும் ‘கட்சியில் நான் இருக்க வேண்டுமா, எஸ்.எஸ்.எம். இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள்’ என்றார் எம்.ஜி.ஆர்.
இதையடுத்து எஸ்.எஸ். எம். ஐந்தாண்டு காலத்திற்கு சாதாரண உறுப்பினர் பொறுப்பில் துவங்கி அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலக்கி வைப்பதாக செயற்குழு தீர்மானித்தது.
இந்த சம்பவம் ஜூன் மாதம் நடந்தது. இதற்குப் பிறகுதான் ஆகஸ்ட்
மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் எம்.ஜி.ஆரின் பேச்சு மத்திய அரசுக்கு எதிரான போர் முழக்கமாக இருந்தது. கழக அரசு தூய்மையானது என அழுத்தம் திருத்தமாகப் பேசினார்.
இதற்குப் பிறகு சென்னையில் அண்ணா பிறந்த நாள் விழாவும் எம்.ஜி.ஆர். ‘பாரத்’ பட்டம் பெற்றதற்கான பாராட்டுவிழாவும் நடைபெற்றன.
இதில் பேசிய எம்.ஜி.ஆர். ‘மந்திரிகள் – சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்குக் காட்டவேண்டுமென்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.க. கழகப் பொதுக்குழு ஏன் கேட்கக்கூடாது….?
” ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான், சம்பாதிக்கிறான்.
நீ சம்பாதித்தால் அதற்குக் கணக்குக் காட்டு’ – என்று பேசினார்” – என்று நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிடுகிறார் மு. கருணாநிதி.
எம்.ஜி.ஆரின் இந்தப் பேச்சே பிரச்னையின் வெளிப்படையான துவக்கமாக அமைந்தது.
அதற்குப் பிறகு, எம்.ஜி.ஆரை கட்சிப் பொறுப்புகளில் இருந்தும்
கட்சியிலிருந்தும் தற்காலிகமாக நீக்கும் அறிக்கையை நெடுஞ்செழியன் பத்திரிகைகளுக்கு அளித்தார். இதற்குப் பிறகு விளக்கம் கேட்டு
எம்.ஜி.ஆருக்கு கடிதம் ஒன்று அளிக்கப்பட்டது.
“தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தால், எம்.ஜி.ஆர். மீதான
நடவடிக்கையைக் கைவிட முடிவு செய்யப்பட்டது. இதற்குப் பிறகு
முரசொலி மாறனும் நாஞ்சில் மனோகரனும் சென்று எம்.ஜி.ஆரைச் சந்தித்தார்கள். அப்போது தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து
பொதுச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுத எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார்”
என்று குறிப்பிடுகிறார் மு. கருணாநிதி.
“ஆனால், அப்படி ஒரு கடிதம் எழுதத் தொடங்குவதற்கு முன்பாக
தொலைபேசி மணி அடித்திருக்கிறது. எம்.ஜி.ஆர். எடுத்துப் பேசி
இருக்கிறார். யார் பேசினார்கள், என்ன பேசினார்கள் என்பது தெரியாது.
அது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும். மறுமுனையில் இருந்தவர்கள்
சமரச முயற்சியை முறியடித்துவிட்டார்கள் என்பதும் நாஞ்சிலாருக்கும் முரசொலி மாறனுக்கும் புரிந்துவிட்டது.
தொலைபேசி ரிசீவரைக் கீழே வைத்தவுடன் எம்.ஜி.ஆர். அப்படி ஒரு கடிதத்தைத் தர முடியாது என்றும் நடந்தது நடந்ததுதான் என்றும் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்” என்கிறார் மு. கருணாநிதி.
இதற்குப் பிறகு, தி.மு.கவின் செயற்குழுவில் அவர் மீது நடவடிக்கை
எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருவருக்கும் இடையில்
சமரசம் செய்துவைக்க பெரியார் முயற்சி செய்தார். ஆனால், அதில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.
இதற்குப் பிறகு அவருடைய ஆதரவாளர்களும் ரசிகர்களும் வலியுறுத்த
புதிய கட்சியைத் துவங்கினார் எம்.ஜி.ஆர்.
-இப்படிப் போகிறது கருணாநிதியின் சுயசரிதை…. இது எவ்வளவு தூரம் நிஜம் – எந்த அளவிற்கு பொய் என்பதை அந்த சந்திப்பில் கூடவே இருந்த ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் என்ன சொல்கிறார் என்பதன் மூலம் பார்ப்போமா …???
……………
இது குறித்து அந்த சந்திப்பில் பங்குகொண்ட
ஆர்.எம். வீரப்பன் சொல்வது என்ன….?
முரசொலி மாறனும் நாஞ்சில் மனோகரனும் சமாதான முயற்சிகளை மேற்கொண்ட தினத்தில் என்ன நடந்தது என்பதை வேறொரு
பார்வையில் சொல்கிறார் அன்றைய தினத்தில் எம்.ஜி.ஆருடன் இருந்த
ஆர்.எம். வீரப்பன். ராணி மைந்தன் எழுதிய ‘ஆர்.எம்.வீ. ஒரு தொண்டர்’
என்ற வாழ்க்கை வரலாற்று நூல் இதைப் பற்றிச் சுருக்கமாகக்
குறிப்பிடுகிறது.
“மாறன், ஆர்.எம்.வீ. எம்.ஜி.ஆர். ஆகியோர் சென்னை தியாகராய நகரில் எம்.ஜி.ஆரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்கள்.
அந்தப் பேச்சுவார்த்தை தோல்வி என்று சொல்ல முடியாதபடி மதியம்
உணவு வேளைவரை நீண்டு, பிரச்சனை தீர்க்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஓர் ஒப்பந்தம் ஏற்படும் நிலையில், ஒப்பந்தத்துக்கான வரைவைப் பகலுணவுக்குப் பின் முடிவுசெய்து
எழுதலாம் என்று முடிவெடுத்து அவரவர் வீட்டுக்குக் கிளம்பினார்கள்.
ஆர்.எம். வீரப்பனுக்கோ மிகவும் சந்தோஷம்.
திடீரென ஆர்.எம்.வீ. வீட்டில் தொலைபேசி ஒலித்தது.
“தெரியுமா…? நம்ம ரசிகர்கள் பயங்கரமாக தாக்கப்படுகிறார்களாம்.
இந்த நிலையில் என்ன பேச்சுவார்த்தை வேண்டிக் கிடக்கிறது…?
என்ன ஒப்பந்தம் வேண்டிக் கிடக்கிறது…? பிற்பகலில் பேச்சுவார்த்தை
ஏதும் வேண்டாம். மாறனுக்குச் சொல்லிவிடுங்கள்.” என்று மறுமுனையில் சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். போனை வைத்துவிட்டார்.
காரணம், அன்று பிற்பகல் மேட்னி ஷோவின்போது எங்கெங்கு எம்.ஜி.ஆர். படங்கள் ஓடிக் கொண்டிருந்தனவோ அந்தத் திரையரங்குகளில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் தாக்கப்பட்டார்கள்
என்று ஒரே ரகளையாகிவிட்டது.
குறிப்பாக சென்னையில் பிளாஸா தியேட்டரில் அப்படிப்பட்ட தாக்குதல் அதிகமாக இருந்ததாக எம்.ஜி.ஆருக்கு தகவல் கிடைத்திருந்ததால் தான்
இந்த முடிவு.
(கருணாநிதி சுயசரிதையில் சொல்லப்பட்டிருக்கும் காரணம் சரியா அல்லது ஆர்.எம்.வீ. தனது சுயசரிதையில் சொல்வது சரியா ….? அந்த காலங்களில் வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த நம்மை போன்ற பொது மனிதர்களுக்கே தெரியும் – கருணாநிதி அவர்கள் சொல்லி இருப்பது அவரது சொந்த கற்பனையில் உதித்தது என்று…!!!)
இனி தி.மு.கவுடன் எம்.ஜி.ஆர். ஒட்டமாட்டார் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அவர் ஏதேனும் செய்தாக வேண்டும் என அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் பெரிதும் விரும்பினார்கள்.
இதற்கிடையில் ‘தென்னகம்’ பத்திரிகையை நடத்திவந்த கே.ஏ. கிருஷ்ணசாமியும் தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டார்.
தனியாக ஒரு கட்சி ஆரம்பித்தாக வேண்டும் என்ற நிலையை
அவர்களே உருவாக்கி விட்டார்கள்.
தவிர்க்க முடியாத அந்தச் சூழலில்தான் 1972ஆம் ஆண்டு அக்டோபர்
மாதம் 17ஆம் தேதியன்று அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர். தொடங்கினார்”
என்கிறது ஆர்.எம்.வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று நூல்.
( நன்றி – திரு.முரளிதரன் காசி விஸ்வநாதன் – அவரது கட்டுரையிலிருந்து நிறைய தகவல்கள் இங்கே பெறப்பட்டுள்ளன. )
.
…………………………………………………………………………………………………………………….…..



விதி என்பது வித்தியாசமானது. எம்ஜிஆர் ப்ரூக்ளின் மருத்துவமனையிலிருந்து வந்ததும் அவரிடமே சமத்தாக ஆட்சியை ஒப்படைத்துவிடுகிறேன், எனக்கு வாக்களியுங்கள் என்று கருணாநிதியை தேர்தல் சமயத்தில் பேச வைத்தது. செய்த தவறுகளை மன்னித்து எங்களுக்கு வாக்களியுங்கள் என்று குமுதம் பின்னட்டையில் விளம்பரம் கொடுக்கச் செய்தது. மனத்தளவில் மற்றும் செயல் அளவில் கெட்டவர் என்பதால், ‘கருணாநிதியின் ஆட்சியைக்’ கொண்டுவருவேன் என்று திமுக எந்தக் காலத்திலும் சொல்லமுடியாமல் போனது. கருணாநிதி அசிங்கமாகத் திட்டிய காமராஜரின் ஆட்சியைத்தான் கொண்டுவருவோம் என திமுக சொல்லவேண்டியதாக இருக்கிறது.
அது சரி…நெஞ்சுக்கு நீதியில் எவ்வளவு சதவிகிதம் உண்மையை கருணாநிதி எழுதியிருப்பார்? இருபது சதவிகிதம் இருக்குமா? கண்ணதாசனின் ‘மன வாசம்’ மற்றும் ‘வன வாசம்’ நூறு சதவிகித உண்மையைக் கொண்டுள்ளதா?
இந்தக் கேள்விகளுக்கு விக்கிரமாதித்தன் பதில் சொல்ல முடியாமல் போகலாம். நீங்களாவது பதில் சொல்லலாமே.
புதியவன்,
நிஜ உண்மையை (…??? !!!) எழுதியவர்கள் மட்டுமே
அறிவர்.
இருந்தாலும், நாளைய இடுகையில் உங்களுக்கு எதாவது
விளக்கம் கிடைக்கின்றதா பாருங்களேன்….😊😊
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்