தேர்தல் பத்திர (Electoral Bond ) சட்டம் செல்லுமா ….??? செல்லாதா …???

………………………………….

………………………………..

………………………………….

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திரத் திட்டம் சட்டபூர்வமாக செல்லுபடியாகுமா என்ற வழக்கை தற்போது விசாரித்து வருகிறது.

எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் இந்த வழக்கின் முடிவு 2024-ம் ஆண்டு
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.

முதலில் இந்த பத்திரம் உருவான விதம் குறித்து சில தகவல்கள் –

இந்த திட்டம் 29 ஜனவரி 2018 அன்று மத்திய அரசால், சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது.

தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன?

தேர்தல் பத்திரங்கள் – அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும்
ஒரு நிதி வழிமுறை. உறுதிமொழிப் பத்திரம் போன்ற இந்த தேர்தல்
பத்திரத்தை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும்
பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளிலிருந்து
வாங்கலாம். அவர்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் தங்களது அடையாளத்தை வெளியிடாமல் இதன்மூலம் நன்கொடை அளிக்கலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிடும்.

KYC விவரங்கள் உள்ள வங்கிக் கணக்கு வைத்திருக்கும் எந்த நன்கொடையாளரும் இவற்றை வாங்கலாம். தேர்தல் பத்திரத்தில்
பணம் செலுத்துபவரின் பெயர் – இடம்பெறத் தேவையில்லை.

இத்திட்டத்தின் கீழ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் குறிப்பிட்ட
கிளைகளிலிருந்து – ரூ.1,000 முதல் ரூ.10,000, ரூ.1 லட்சம்,
ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி வரை எந்த மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் வாங்கலாம்.

தேர்தல் பத்திரங்களின் ஆயுள் 15 நாட்கள் மட்டுமே. அதற்குள்ளாக அது கொடுக்கப்பட வேண்டியவர்களுக்கு கொடுக்கப்பட்டு, அவர்களின் வங்கிக்கணக்கில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்…..

அவற்றை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க மட்டுமே பயன்படுத்த முடியும்.

மக்களவை அல்லது சட்டப் பேரவைக்கு – முந்தைய பொதுத் தேர்தலில்
பதிவான வாக்குகளில் குறைந்தபட்சம் ஒரு சதவீத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க முடியும்.

இத்திட்டத்தின் கீழ் – வருடத்தில் 4 முறை,
ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில்
10 நாட்களுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். லோக்சபா தேர்தல் நடக்கக்கூடிய ஆண்டில் கூடுதலாக 30 நாட்களுக்கும் இவை வெளியிடப்படலாம்.

தேர்தல் பத்திரத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் என்ன … ?

இந்தத் திட்டத்தைத் தொடங்கும் போது, ​​தேர்தல் பத்திரங்கள் நாட்டில்
அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கும் முறையை முறைப்படுத்தும் என்று இந்திய அரசு கூறியது.

ஆனால் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிப்பவர் யார்
என்கிற ரகசியமாக வைக்கப்படுவதாகவும் இது கருப்பு பணத்தை ஊக்குவிக்கும் செயல் என்றும் கடந்த சில ஆண்டுகளாக, மீண்டும்
மீண்டும் புகார் எழுப்பப்படுகிறது.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை
வெளிப்படுத்தாமல் பணத்தை நன்கொடையாக வழங்குவதற்காக
இந்த திட்டம் உருவாக்கப்பட்டது என்ற விமர்சனமும் உள்ளது.

இந்தத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள்
தாக்கல் செய்யப்பட்டன. முதல் மனுவை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் லாப நோக்கற்ற அமைப்பான Common Cause-உம்
இணைந்து 2017-ல் தாக்கல் செய்தன. இரண்டாவது மனுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2018-ல் தாக்கல் செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், இந்தத் திட்டம்
வரம்பற்ற அரசியல் நன்கொடைகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு
இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் அனாமதேய நிதியுதவி வருவதற்கான வழியை இந்த திட்டத்தின் மூலம், பெரிய அளவிலான தேர்தல் ஊழலை சட்டப்பூர்வமாக்குகிறது.

தேர்தல் பத்திரத்தில் நன்கொடையாளரின் பெயர் மறைக்கப்படுவது அரசியலமைப்பின் 19(1)(a)பிரிவின் கீழ் ஒரு குடிமகனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தெரிந்துகொள்ளும் உரிமையை மீறுவதாக
உள்ளதாக மனுக்கள் கூறுகின்றன.

உச்ச நீதிமன்றத்தின் முன் எழுப்பப்பட்ட இன்னுமொரு முக்கிய
பிரச்னை என்னவென்றால், இந்தியாவில் துணை நிறுவனங்களைக்
கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க அனுமதிக்கும் வகையில் FCRA சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சர்வதேச அளவில் லாபி செய்பவர்களுக்கு தங்களது
சொந்த நோக்கத்தை இந்திய அரசியலிலும் ஜனநாயகத்திலும் திணிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

நிறுவனங்கள் தாங்கள் எந்த அரசியல் கட்சிக்கு நிதி அளித்திருக்கிறோம் என்பதை தங்களது ஆண்டு லாப நஷ்ட கணக்குகளில் தெரிவிக்க தேவையில்லை என நிறுவனச் சட்டம் 2013-ல் கொண்டு வரப்பட்ட
சட்டத் திருத்தம் குறித்து இந்த மனு கேள்வியெழுப்பியிருக்கிறது.
இது அரசியல் நிதியில் ஒளிவுமறைவின்மையை அதிகரிக்கும் என்றும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்க
அரசியல் கட்சிகளை ஊக்குவிக்கும் என்றும் மனுதாரர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் பத்திரத் திட்டம் பட்ஜெட்டோடு இணைக்கப்பட்டு உள்ளது.
பட்ஜெட் என்பது ஒரு பண மசோதா என்பதால் ராஜ்யசபா
அந்த திட்டத்தில் எந்தவித மாற்றத்தையும் செய்ய முடியாது.

ராஜ்யசபாவில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், வேண்டுமென்றே எளிதாக நிறைவேற்றும் வகையில், பண மசோதாவுடன் தேர்தல் பத்திரத் திட்டம் இணைக்கப்பட்டது என மீண்டும் மீண்டும் புகார் எழுப்பப்பட்டு வருகிறது.

முதலில், தேர்தல் பத்திரங்களை பண மசோதாவின் கீழ்
நிறைவேற்ற முடியுமா?

இந்த சட்டப்பூர்வ கேள்வியை உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு
அமர்வு தற்போது பரிசீலிக்காது. ஏனெனில் ஒரு மசோதாவை எப்போது
பண மசோதாவாக குறிப்பிடலாம் என்ற கேள்வி ஏற்கெனவே
ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சிகள் தேர்தல் பத்திரங்களுக்கு தொடர்ந்து எதிர்ப்பு
தெரிவித்து வருகின்றன.

இந்தத் திட்டத்தில் எந்தக் கட்சி அதிகம் பயன்பெறுகிறது… ?

2016-17 மற்றும் 2021-22 க்கு இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் மொத்தம்
ஏழு தேசியக் கட்சிகளும் 24 பிராந்தியக் கட்சிகளும் மொத்தம்
ரூ.9,188 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளன.

இந்த ரூ.9,188 கோடியில் பாரதிய ஜனதா கட்சியின் பங்கு மட்டும்
தோராயமாக ரூ.5272 கோடி.

அதாவது தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட மொத்த
நன்கொடையில் 58 சதவீதத்தை பாஜக பெற்றுள்ளது.

அதே காலகட்டத்தில், தேர்தல் பத்திரங்கள் மூலம் காங்கிரஸ்
தோராயமாக ரூ.952 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ்
ரூ.767 கோடியும் பெற்றுள்ளது.

Association for Democratic Reforms (ADR) அமைப்பின் அறிக்கையின்படி, 2017-18 நிதியாண்டுக்கும் 2021-22 நிதியாண்டுக்கும்
இடையே தேர்தல் பத்திரங்கள் மூலம் தேசிய கட்சிகள் பெற்ற
நன்கொடைகள் 743 சதவீதம் அதிகரித்துள்ளது. மறுபுறம், இதே
காலகட்டத்தில் தேசிய கட்சிகளுக்கு கார்ப்பரேட் நன்கொடைகள்
48 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளன. ( ???? – !!!! )

இந்த ஐந்தாண்டுகளில், 2019-20 ஆம் ஆண்டில் (இது மக்களவைத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு), தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகபட்சமாக
ரூ.3,439 கோடி நன்கொடையாக வந்துள்ளதாக ADR தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.

இதேபோல், 2021-22 ஆம் ஆண்டில் (11 சட்டமன்றத் தேர்தல்கள்
நடைபெற்ற சமயத்தில் ), அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம்
சுமார் 2,664 கோடி ரூபாய் நன்கொடை பெற்றன.

இந்த விஷயம் குறித்து, தேர்தல் ஆணையம் மற்றும் ரிசர்வ் வங்கி
ஆகியவை என்ன சொல்கின்றன …. ?

தேர்தல் ஆணையத்தின் கருத்து-

2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட
பிரமாணப் பத்திரத்தில், தேர்தல் பத்திரங்கள் அரசியல் நிதியில்
வெளிப்படைத் தன்மையை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும்
அவை இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்த வெளிநாட்டு
கார்ப்பரேட் சக்திகளை அழைப்பதற்கு சமம் என்றும்
தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

இதன்மூலம், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும்
நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்படும் ஷெல் நிறுவனங்களை
திறக்க வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் தேர்தல் ஆணையம்
கூறியிருந்தது.

ரிசர்வ் வங்கியின் கருத்து –

ADRன் மனுவின்படி, கறுப்புப் பணப் புழக்கத்தை அதிகரிக்க,
பணமதிப்பழிப்பு மற்றும் எல்லை தாண்டிய மோசடியை அதிகரிக்க
தேர்தல் பத்திரங்கள் பயன்படுத்தப்படலாம் என்று இந்திய ரிசர்வ்
வங்கி (ஆர்பிஐ) பலமுறை எச்சரித்துள்ளது.

தேர்தல் பத்திரங்களை ‘நிதி வழங்குவது குறித்த தெளிவில்லாத முறை’
என்று குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி, இந்த பத்திரங்கள் நாணயம் போன்று
பலமுறை கை மாறுவதாலும் அது யார் பெயரில் வழங்கப்படுகிறது
என்பது தெரியாததாலும் இந்த பத்திரங்கள் மூலம் பண மோசடி
நடக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி –
இந்தத் திட்டத்தை ஆதரித்து வாதாடி இருக்கிறார். அவர் கூறுகையில்,
“சுத்தமான பணத்தை” பயன்படுத்துவதை இந்த திட்டம் ஊக்குவிக்கிறது
என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பொதுமக்கள் எதை வேண்டுமானாலும், எதைப்பற்றியும் தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலை இருக்கக்கூடாது என்றும் நியாயமான கட்டுப்பாடுகள் தேவை என்றும் அட்டர்னி ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார்.

இந்த வாதம் ‘சுத்த’ – ‘அபத்த’வாதமாக இருக்கிறது.

பொதுமக்கள் தெரிந்துகொள்ள கூடாது என்பதற்கு இது
நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமா என்ன…..?????

தேர்தல்கள், எந்தவித ஒளிவு மறைவுமின்றி, வெளிப்படையாக
நடைபெற வேண்டும் என்பது தான் இந்திய அரசியல் சட்டத்தின்
அடிப்படை நோக்கம். அட்டர்னி ஜெனரலின் வாதம், விசித்திரமாக –
அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கே எதிராக இருக்கிறது.

மேற்படி சூழ்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தினசரி நடைபெறும்
வாதங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன….

தீர்ப்பும், அதன் பின் விளைவுகளும் மிகவும் சுவாரஸ்யமாக
இருக்குமென்று நிச்சயம் நம்பலாம்.

.
……………………………………………………………………………………………………………………..……

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.