…………………………………………………….

…………………………………………………….
அரசியல் – பெண்களுக்கு வசதியான களம் அல்ல.
இதில் வெற்றி காண்பவர்கள் வெகு சிலரே….
அதுவும் – இல்லறம், அரசியல் – இரண்டு களங்களிலும்
முழு அளவில் வெற்றி காண்பவர்களை,
குறிப்பாக – தமிழ்நாட்டில் – விரல் விட்டு எண்ணி விடலாம்.
அதில் குறிப்பிடத்தக்கவர் – திருமதி வானதி சீனிவாசன் அவர்கள்.
அண்மையில், விகடன் தளம், திருவாளர் சீனிவாசனிடம்
பேட்டி கண்டு, அவர் தன் மனைவி குறித்து சொன்னவற்றை
கட்டுரையாக தந்தது….
விகடன் தளத்திற்கு நன்றி சொல்லிகொண்டு –
அந்த கட்டுரையிலிருந்து –
…………………………………….
`Happy is the man who finds a true friend,
and far happier is he who finds that true friend
in his wife.’ – Franz Schubert
வழக்கறிஞர் சீனிவாசன்… மத்திய அரசு வழக்கறிஞர், வி.எச்.பி-யின் வழக்கறிஞர் பிரிவின் அகில இந்திய இணை அமைப்பாளர்
எனப் பல்வேறு பொறுப்புகளில் பிஸியாகச் சுழன்றுகொண்டிருப்பவர்.
இவை எல்லாவற்றையும்விட வானதி சீனிவாசனின் கணவர்
என்றவுடன் சட்டென்று நம் நினைவுக்கு வருபவர். பெயரோடு
மட்டுமல்ல நிஜத்திலும் வானதியின் வெற்றிக்குப் பின்னால்
நிற்பவர் சீனிவாசன்.
பா.ஜ.க தேசிய மகளிர் அணித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர் என
‘பேர் சொல்லும் மனைவி’யாக வளையவரும் வானதி சீனிவாசனின்
அரசியல் அர்ப்பணிப்பு, விமர்சனங்களை எதிர்கொள்ளும் பாங்கு, குடும்பத்தலைவியாக மிளிரும் இயல்பு என தான் வியந்த
குணங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சீனிவாசன்.
‘‘நான் பிறந்தது வேலூர் மாவட்டம். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம்.
தாத்தா விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். காமராஜருடன்
நெருங்கிப் பணியாற்றியவர் என் தந்தை. அப்படிப்பட்ட காங்கிரஸ் குடும்பத்திலிருந்து, ஆர்.எஸ்.எஸ் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி-யில்
இணைந்து குறுகிய காலத்தில் மாநிலச் செயலாளர் ஆனேன்.
அப்போது, கல்லூரிகளுக்குச் சென்று மாணவர் பிரச்னை,
மக்கள் பிரச்னை பற்றிப் பேசுவோம். அப்படித்தான் கோவை
பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர்களை எங்கள் அமைப்பின் சார்பில்
சந்தித்தோம். அதில், கலந்து கொண்ட 15 மாணவ, மாணவிகளில்
வானதியும் ஒருவர். அப்போதுதான் முதல்முறையாக வானதியைப்
பார்த்தேன். குழந்தை போல சிரித்த முகம். தெய்வகடாட்சம்
நிறைந்த முகம். எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், முகம்
மட்டும் என் மனதில் ஆழமாய்ப் பதிந்துவிட்டது.
அதன்பிறகு விவேகானந்தர் நினைவு நாளையொட்டி கோவையில்
மாநாடு நடத்தினோம். ‘கேள்விகள் கேட்குறவங்க கேட்கலாம்’
என்று சொன்னேன். ஆண்களே கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
திடீர் என்று, `நான் கேள்வி கேட்கலாமா?’ என்று ஒரு பெண் குரல்.
அது, வானதியின் குரல்தான். ‘காஷ்மீர் பிரச்னைக்கு என்ன தீர்வு காணமுடியும்?’ என்று கேட்டார். அந்தக் கேள்விக்கு பதில் சொல்லி
முடித்த பின் அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டு எங்களை ஆச்சர்யப்படுத்தினார். ‘இப்படியொரு தைரியமான பெண்ணா..!’
என்று ஆச்சர்யப்பட்டேன். இப்போதும், அந்தக் காட்சி என் இதயத்தில் இனிமையாக இருக்கிறது.
அதன்பிறகு, கோவை வரும்போதெல்லாம் ஏ.பி.வி.பி மீட்டிங்கில்
வானதியைத் தவறாமல் பார்ப்பேன். அந்த அரசியல் ஆர்வம், சமூகம்
குறித்த வானதியின் மதிப்பீடெல்லாம் சேர்ந்து அவர்மீது எனக்கு நல்மதிப்பினை உண்டாக்கியது. அப்படியே, பேச ஆரம்பித்து
நல்ல நட்பு எங்களுக்குள் உருவானது. அதன்பிறகு சட்டம் படிக்க
வானதி சென்னை வந்தார். அப்போது, சென்னைக்கும் நான்
பொறுப்பில் இருந்தேன். ஏ.பி.வி.பி-யில இருக்கிற மாணவர்களை
விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு கல்லூரிகளுக்கு அனுப்புவோம்.
அதில், வானதி மகளிர் கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு
அதிக நேரம் வேலை பார்ப்பதோடு சுடச்சுட வந்து ரிப்போர்ட்டும்
பண்ணுவார். அப்போதும்கூட, எங்கள் நட்பு அடுத்த கட்டத்துக்குப்
போகும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள்
லவ் பண்ணினோம் என்றுகூடச் சொல்லமுடியாது. ஆனால்,
எங்களுக்குள் நட்பையும் தாண்டி ஆழமான அன்பு உருவாகியிருந்தது.
எங்கள் குடும்பத்தில் ஆறு சகோதரர்கள், மூன்று சகோதரிகள் என்று
நாங்கள் மொத்தம் 9 பேர். ஆரம்பத்தில் ‘நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டு அமைப்பில் பிஸியாக இயங்கிக்கொண்டிருந்தேன். என் இரண்டு தம்பிகளுக்கும் கல்யாணம் முடிந்திருந்தது. திருமணம் பண்ணிக்கச் சொல்லி அப்பா, அம்மா
என்னை வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள்.
அப்போதுதான் திருமணம் குறித்த சிந்தனை எனக்குள் எழுந்தது.
‘இந்தப் பொண்ணு மேல விருப்பம் இருக்கு’ என்று என் வீட்டில்
வானதியைப் பற்றிச் சொன்னேன். வானதி வீட்டில் ஒப்புக்
கொள்ளவில்லை. ‘ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கோங்க’ என்று
நண்பர்கள் எல்லோரும் சொன்னார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை.
எங்கள் குடும்பம் நகரத்தில் இருந்தது. ஆனால், வானதியின் குடும்பம் கிராமத்தில் இருந்தது. சொந்தபந்தம், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை எல்லாம் சமாளிக்க வேண்டுமில்லையா? அந்த வலியை வானதிக்குக் கொடுக்கக்கூடாது என்று நினைத்தேன். காதலின் வலிமையே
பொறுமையோடு காத்திருப்பதில் இருக்கிறது. அதன்பிறகு நான்
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணிடம் ஜூனியராக டெல்லி சென்று
விட்டேன். வானதியும் நானும் உறுதியாக இருந்ததால் ஒருவழியாக
பெற்றோர் சம்மதத்தோடு மூன்று வருடங்கள் கழித்து 1997-ல்
எங்கள் திருமணம் நடந்தது.
1999-ல் வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது, தேசிய இளைஞர்
ஆணையத்தின் முழுநேர உறுப்பினராக என்னை நியமித்தார்கள்.
பா.ஜ.க தமிழகப் பொதுச்செயலாளர் இல.கணேசன் என்னிடம்,
‘பா.ஜ.க-வுல பொறுப்பேற்கப் போறீங்களா, இல்லை, வேலை
பார்க்கப் போறீங்களா?’ என்று கேட்டார். நான் தமிழ்நாடு பா.ஜ.க-வின் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளராக இருந்தேன். ஏற்கெனவே
வானதி பா.ஜ.க-வில் இருக்கிறார். ஒரே வீட்டில் இரண்டு பேர் கட்சிப்
பொறுப்பில் இருந்தால் நன்றாக இருக்காது. அதனால், ‘வானதியே
அரசியலில் தொடரட்டும்’ என்று சொல்லிவிட்டேன். வானதி
ஏ.பி.வி.பி-யில் இருக்கும்போது ரொம்ப கடினமாக உழைப்பார் என்று இல.கணேசனுக்கும் தெரியும். அதனால், மகளிர் அணியின் மாநிலச் செயலாளர் பதவி கொடுத்தார்கள்.
வானதியின் திறமைமேல் எனக்குப் பெரிய நம்பிக்கை உண்டு.
ஆனால், இவ்வளவு பெரிய பொறுப்புக்குப் போவார் என்று
எதிர்பார்க்கவில்லை. அவரின், உழைப்புக்கான அங்கீகாரம்
கிடைக்கும் என்று மட்டும் தெரியும். கட்சியும் மக்களும் அங்கீகாரத்தைக் கொடுத்தது உண்மையில் எனக்குப் பெருமகிழ்ச்சி!
என்னிடம் பல பேர், ‘வானதியை மாநில பா.ஜ.க தலைவரா
ஆக்கலைங்கிற வருத்தம் இருக்கா?’ என்று கேட்கிறார்கள். எங்களுக்கு
எந்த வருத்தமும் கிடையாது. எப்போதெல்லாம் வானதி மாநிலத் தலைவராகப்போறாங்க என்ற தகவல் பரவுகிறதோ, அப்போதெல்லாம் வானதியைப் பற்றி சமூக வலைதளங்களில் பொய்யாக நெகட்டிவான செய்திகளும் வால்பிடித்து வரும்.
ஆனால், வானதி எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டாங்க. கட்சியில்
என்ன வேலை கொடுக்கிறார்களோ அதைச் செய்துகொண்டே இருப்பார்.
அந்த அர்ப்பணிப்பாலதான், பா.ஜ.க தேசிய மகளிரணியின் தலைவர்
பொறுப்பு தேடி வந்தது. இதில் ஒரு முக்கியமான விஷயம், வானதிக்கு
இந்தி தெரியாது. இந்தியே தெரியாத வானதியை அகில இந்திய
மகளிர் அணிக்குத் தலைவராக நியமிக்கறாங்க என்றால்,
அவங்க மேல மேலிடம் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கும்…!
தடைக்கற்களைப் படிக்கல்லாக்கி சிறப்பாக மகளிர் அணியை இன்று வழிநடத்துகிறார். இப்போது இந்தியும் கற்றுவருகிறார். முன்பே இந்தி தெரிந்திருந்தால் இன்னும் பாப்புலரான அரசியல்வாதியாக எப்போதோ மாறியிருப்பார்.
அரசியல் என்பது மகா சமுத்திரம். அதில் குதித்து நீந்திக் கரைசேர
உறுதியான மனம் வேண்டும். அது, வானதியிடம் நிறையவே இருக்கிறது.
அந்த உறுதிதான் 2021 சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனை
எதிர்த்து நின்று ஜெயிக்கவும் வைத்தது.
வழக்கறிஞர் தொழிலிலும் அவங்ககிட்ட சேவை மனப்பான்மைதான்
நிறைய இருக்கு. சிவில் வழக்குகளை நன்றாக நடத்தக்கூடியவங்க.
பெரிய வழக்கறிஞராக இருந்தாலும் ஏழைகளைக் கண்டா இளகிடுவார். கோவையில் சுதந்திரப்போராட்டத் தியாகிகள், பென்ஷன்
வாங்கித் தரச்சொல்லி எங்களிடம் வந்தாங்க. அந்த வழக்கு முதலில் தோற்றுவிட்டது. அந்த வழக்கை அப்பீல் போட்டு ஜெயிச்சாங்க.
பென்ஷன் கிடைக்காததைவிட ‘நீ தியாகியே இல்லை’ என்று சொல்வது எவ்ளோ கஷ்டமான வலி…? தியாகிகள் கூனிக் குறுகிட்டாங்க.
வானதிதான் கைக்காசைப் போட்டு வழக்கை நடத்தி தியாகிகளுக்கு
பென்ஷன் கிடைக்கும் உத்தரவை வாங்கியதோடு 20 வருடங்களுக்கான அரியர்ஸையும் மொத்தமாக வாங்கிக் கொடுத்தாங்க. ஒவ்வொரு
தியாகிக்கும் 5 லட்ச ரூபாய்வரை வந்தது. தியாகிகள் வானதிக்கு
பீஸ் கொடுக்க அலுவலகம் வந்தார்கள். ‘உங்களுக்காக வாதாடுறது
என் கடமை. அதுக்கு எதுக்கு பணம்’ என்று சொல்லி அதை வாங்க மறுத்துட்டாங்க.
எளியவர்களுக்காக நிற்கும் வானதியோட இந்தக் குணமும் பிடிவாதமும் ரொம்பப் பிடிக்கும். அதேமாதிரி, வானதிகிட்ட அரசியலில் பிடித்த
விஷயம், சாதி மதம் பார்க்கமாட்டார். அவங்களோட தொகுதியில
பிறந்த குழந்தைகளுக்கு ‘அமுதம்’ திட்டத்தை ஆரம்பித்து,
இரண்டு வயது ஆகுறவரைக்கும் பசும்பால் கொடுக்கும் சேவையைச் செய்கிறார்கள். தன்னைத்தேடி வருகின்ற இஸ்லாமிய, கிறிஸ்தவ
சிறுபான்மை மக்களின் பிள்ளைகளுக்கும் கல்வி உதவிகளைச் செய்துவருகிறார். எதையும் வெளியே காட்டிக்க மாட்டாங்க.
அதுதான் அவங்க தனிச்சிறப்பு!
தேசிய மகளிரணித் தலைவராக வானதியை அறிவித்தபோது,
வானதியின் ஊரில் இருக்கிற பட்டியலின மக்கள் மட்டுமே வணங்கும் பட்டத்தரசி அம்மன் கோயிலுக்குப் போய் வணங்கியதோடு,
பட்டியலின மக்களை நிற்கவைத்து சாஷ்டாங்கமாக காலில் விழுந்து மரியாதை செய்தார். வானதியை நினைத்து நான் பெருமைப்படறது
இந்த விஷயத்துக்காகத்தான்.
அரசியலில் பிசியாக இருந்தாலும் குடும்பத்தின் மீது ஒரு கண்
வைத்திருப்பார். எங்கே போனாலும் எனக்கென்று விதவிதமான
பிள்ளையார் சிலைகளும் பரிசுகளையும் வாங்கி வருவார்.
‘மகிழ்வித்து மகிழ்’ – இதுதான் வானதியின் குணம். வானதிக்கு
முத்துக்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும். முத்துக்கள் பதித்த வளையல்,
செயின் ஆரம்பத்தில் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். குழந்தை மாதிரி
அதை மகிழ்ச்சியாக அணிந்து கொண்டாடுவார்.
தேசிய அளவில் அரசியலில் ஈடுபடுவதால் சமைக்க நேரம்
இருப்பதில்லை. ஆனால், வீட்டில் இருந்தாரென்றால் அவர் வைக்கும்
சிக்கன் பிரியாணி பக்கத்துத் தெருவரை கமகமக்கும். கொங்கு
ஸ்டைல் சமையல் கைப்பக்குவம் அற்புதமாகக் கைகூடிவரும்.
‘அம்மாதான் செஞ்சாங்களா… இல்ல, ஹோட்டலில் வாங்கியதா?’
என்று பிள்ளைகள் ஆச்சர்யப்பட்டுக் கேட்பார்கள். அந்த அளவு சுவை!
எங்களுக்குள் விவாதங்களோ சண்டையோ வந்ததில்லை. இதனால்
நண்பர்கள் Made for each other என்று எங்களைச் சொல்வார்கள். ‘உங்கள் மனைவி இவ்வளவு பெரிய இடத்துக்குப் போயிட்டாங்களே…’
என்று சிலபேர் என்னை வானதியோடு ஒப்பிட்டுக் கேட்கிறார்கள்.
எப்போதுமே அப்படியொரு ஒப்பீட்டு எண்ணம் எங்களுக்குள்
இருந்ததில்லை. என் மனைவி சாதிக்கும்போது அதைவிட எனக்கு என்ன
பெரிய சந்தோஷம் இருந்துவிடப்போகிறது…?
வழக்கமான அம்மா போல் பிள்ளைகளுடன் நேரம் செலவிட
முடியவில்லையே தவிர, மகன்கள்னா வானதிக்கு அவ்வளவு உயிர்.
பெரியவன் காரில் போகும்போது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆனால், தெய்வாதீனமாக ஒன்றும் ஆகவில்லை. அப்போதுதான்,
‘நாம செஞ்ச தர்மம் தலைகாத்தது’ என்று சொல்லி நெகிழ்ந்து
அழுதாங்க. அது உண்மைதான்.
வானதியின் வாஞ்சையான மனதை நன்கறிவேன். மூத்தவன் ஆதர்ஷ் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு ட்ரோன் ஆராய்ச்சியில் வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறான். சின்னவன் கைலாஷ் ஜிண்டால் லா ஸ்கூலில் சட்டம் படித்துக்கொண்டிருக்கிறான். அவனுக்கு அம்மா
மாதிரியே சமூகத்துக்காக வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம்
இருக்கிறது.
எனக்கு மனைவியாக, பிள்ளைகளுக்கு நல்ல அம்மாவாக மட்டுமல்ல…
ஒரு நல்ல மருமகளாகவும் தன் கடமையைச் செவ்வனே செய்துகொண்டிருப்பதுதான் வானதியின் தனித்துவம்.
என் அம்மாவின் நினைவு நாள் அன்று எங்கிருந்தாலும் எல்லோரும்
படையல் போடுவோம். பாத்திரம் கழுவுவதில் ஆரம்பித்து எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு வானதி செய்வாங்க.
இப்பவும் என் சகோதர, சகோதரிகள் குடும்பங்களின் எல்லா
விசேஷத்திலும் ரொம்பப் பாசமாக முதல்நாளே போய் வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்வாங்க. அந்த அன்பும் பண்பும் வானதிக்கு
இயல்பாவே இருக்கு. வானதி எனக்கு மனைவியாகக் கிடைத்ததற்கு
தினம் தினம் சந்தோஷப்படுகிறேன். எங்களுடையது காதல்
திருமணம்தான். ஆனால், இன்றுவரை நானும் வானதியும் ‘லவ் யூ’ சொல்லிக்கொண்டதே இல்லை.
.
………………………………………………………………………………………………………………………



நிஜமான சாமியாரா இல்லை ….