…………………………………

………………………………..
1982-ம் வருஷம். நானும் அவரும் அமெரிக்கா போயிருந்தோம்.
‘பிரிவோம் சந்திப்போம்’ தொடர் எழுதுறதுக்காக, ஆனந்த விகடன்ல
டிக்கெட் வாங்கிக் கொடுத்து, எங்களை ஒரு டூர் அனுப்பியிருந்தாங்க.
அங்கே சங்கர் ரமணினு அவரோட நண்பர் இருந்தார். `டல்லஸ்
தமிழ்ச் சங்கம்’ சார்பா அவர் எங்களை இன்வைட் பண்ணியிருந்தார்.
அங்கே ஒரு கூட்டம் போட்டு, என் கணவருக்கு மரியாதை பண்ணினாங்க.
இந்த கம்ப்யூட்டர், டெக்சஸ் இன்ஸ்ட்ரூமென்ட் கம்பெனியில் அப்போதான்
புதுசா வந்திருந்தது.
பால் பாண்டியன்னு ஒருத்தர்… அவர்தான் அந்த கம்பெனியை ஆரம்பிச்சார்.
அவரும் சங்கர் ரமணியும் சேர்ந்து இவருக்கு இந்தக் கம்ப்யூட்டரைப் பரிசா கொடுத்தாங்க. இதை எடுத்துட்டு இந்தியாவுக்கு வந்தோம்.
ஆனா, பெங்களூர் ஏர்போர்ட் கஸ்டம்ஸ்ல இருந்த அதிகாரிங்க இந்தக் கம்ப்யூட்டருக்கு வரி கட்டணும்னு சொல்லிட்டாங்க. அவங்க சொன்ன
தொகை, அந்தக் கம்ப்யூட்டரின் விலையைவிட அதிகம். `இவ்வளவு
அமௌண்ட் கட்டணும்னா, இந்த கம்ப்யூட்டரே வேணாம்’னு
சொல்லிட்டார் என் கணவர்.
அங்கே இருந்த கஸ்டம்ஸ் ஆபீஸர் மகாராஷ்டிராக்காரர்.
அவரும் மராத்தியில் கதை எழுதுறவர். அவர் எங்க நிலைமையைப்
புரிஞ்சுகிட்டார். ‘நீங்க ஒரு எழுத்தாளர். இந்தக் கம்ப்யூட்டர் உங்களுக்கு
பரிசா வந்த பொருள். இது உங்களுக்குக் கிடைச்ச மரியாதை.
அதனால இதுக்கு வரி போட எனக்கு மனசு வரலை. இருந்தாலும்,
ஒரு சாதாரணத் தொகை சொல்றேன்…… அதைமட்டும் கட்டிடுங்க’ன்னார்.
3,000 ரூபாயோ, 4,000 ரூபாயோ… அதைக் கட்டிட்டு,
கம்ப்யூட்டரை வீட்டுக்கு எடுத்துட்டு வந்தோம்.
அதுக்கப்புறம் அவர் எழுதின எல்லாப் படைப்புகளுமே இந்த கம்ப்யூட்டர்ல
எழுதினது தான். ‘கற்றதும் பெற்றதும்’, உட்பட முக்கியமான
தொடர்கள், நாவல்கள், சிறுகதைகள், சினிமா வசனங்கள் எல்லாத்தையும் இதுலதான் எழுதினார்.
கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்ல அப்டேஷன்ஸ் வர வர, அதையெல்லாம் இந்த
கம்ப்யூட்டர்லேயே செஞ்சுகிட்டார். அவர் ஆபீஸ்ல இருந்து இன்ஜினீயர்கள்
வருவாங்க. அப்பப்போ கம்ப்யூட்டர்ல வேணும்கிறதைச்
செஞ்சு குடுத்துட்டுப் போயிடுவாங்க. கடைசி வரைக்கும் இந்தக்
கம்ப்யூட்டரை அவர் மாத்தவே இல்லை..
மலேசியாவுல இவருக்கு ஒரு ஃப்ரெண்ட் இருந்தார். அவர் மூலமா
தமிழ் சாஃப்ட்வேர், ஃபான்ட்ஸ் (fonts) வரவழைச்சு, தமிழ்ல எழுதிட்டு
இருந்தார். அவருக்குக் கண்ல பிரச்னை இருந்ததால, கம்ப்யூட்டர்ல
ஃபான்ட் பெருசா வெச்சு எழுதுவார்.
வீட்ல ஒரு ப்ரின்ட்டர் இருந்தது. கட்டுரையோ, கதையோ எழுதினதும்,
அதை ப்ரின்ட் எடுத்து பத்திரிகைகளுக்கு அனுப்பிவிடுவார். அவரோட
பிடிச்ச சப்ஜெக்ட்டே கம்ப்யூட்டர் தான். அதனால அவருக்கு இந்தக்
கம்ப்யூட்டரோட ஒரு ஒட்டுதல் இருந்தது.
அப்போ நாங்க பெங்களூர்ல இருந்தோம். அவருக்கு ஞாயித்துக்கிழமை
மட்டும்தான் லீவு. பிறகு சென்னைக்கு வந்துட்டோம். தினமும் காலையில
8:30 மணிக்கு வந்து கம்ப்யூட்டர்ல உட்காருவார். மதியம் 12:30 மணிக்குள்
அந்த வாரத்துக்கு அவர் கொடுக்கவேண்டிய தொடர்களை, சிறுகதைகளை,
கட்டுரைகளை எழுதிட்டு இருப்பார்.
அதுக்கப்புறம் சாயந்தரம் 4:30 மணிக்கு கம்ப்யூட்டர்ல உட்கார்ந்தார்னா,
6:30 மணி வரைக்கும் எழுதுவார். எழுதிட்டு, ஒரு பஸ்ஸைப் பிடிச்சு
ரயில்வே ஸ்டேஷன் போய், எழுதினதை போஸ்ட்ல அனுப்பிடுவார்.
அவர் இந்த ரூம்ல உட்கார்ந்து எழுதும்போது, யாருமே உள்ளே வர
மாட்டோம். அவர் என்ன எழுதறார்னு எங்க யாருக்குமே தெரியாது;
புக்ல படிச்சதுக்கு அப்புறம்தான் தெரியும். சாப்பிட வேண்டிய
நேரத்துக்கு வருவார்; சாப்பிடுவார். ரூமுக்குப் போயிடுவார்.
இந்த ரூம் முழுக்க புத்தகங்களாத்தான் இருக்கும். பெட்லயும் படுக்கற
இடம் தவிர, புத்தகங்களாத்தான் பரப்பி இருக்கும்.
எங்கிட்ட கூட அதிகமா பேச மாட்டார். பசங்க வேலை, காலேஜ்னு
போய்ட்டு இருந்தாங்க. சாப்பிடும்போது, டேபிள்ல உட்கார்ந்திருக்கும்
நேரத்துல, அவங்களோட பேசுவார். அதுவும் பொதுவான
விஷயங்களாத்தான் இருக்கும்.
சென்னை வந்த பிறகு, -2008-ம் வருஷம் அவர் இறந்து போறதுக்கு
ஒரு மாசம் முன்னாடி வரை இந்த கம்ப்யூட்டரைத்தான் பயன்படுத்தினார்.
எல்லாப் பத்திரிகைகளில் இருந்தும் வீட்டுக்கே வந்து இவர் எழுதிக்
கொடுக்கறதை வாங்கிட்டுப் போவாங்க. கடைசிக் காலத்துல அவருக்கு
உடம்புதான் பலவீனமாப்போச்சே தவிர, மூளை நல்லா சுறுசுறுப்பாதான்
இருந்தது. ஞாபகசக்தியும் அபாரமா இருந்தது.
இத்தனை வருஷமா இங்கேயே இந்த கம்ப்யூட்டர் இருந்தாலும் எனக்கு
ஆபரேட் பண்ணத் தெரியாது. என் பையன் அமெரிக்காவுல
இருந்து வந்தான்னா, இதுல உட்கார்ந்து வொர்க் பண்ணுவான். மத்தபடி
தூசி படிஞ்சு, சும்மாதான் இருக்கு இந்த கம்ப்யூட்டர். இதை விகடனுக்கே
குடுத்திடலாம்னு முடிவு பண்ணிட்டேன்…!
(நன்றி – திருமதி சுஜாதா & விகடன் )
………….
இது ஸ்பெஷல் – ஒரு முறை கேள்வி – பதில் பகுதி ஒன்றில்,
“உங்களுடைய மூளையை இன்ஷ்யூர்
செய்யவில்லையா?” என்ற கேள்விக்கு சுஜாதா
சொன்ன பதில்,” மதிப்பிடுவதில் சிக்கல்.”
.
………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….