M.P. & M.L.A.க்கள் லஞ்சம் வாங்குவதை – சட்டபூர்வமாக்கும் ஒரு அபூர்வ சூழ்நிலை …..

……………………………………………….

………………………………………………..

இந்தியாவில் நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ அரசுக்கு
எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும்போது,
அல்லது தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிக்கு எதிராக –
தங்களுக்குப் பணம் கொடுக்கும் கட்சிக்கு ஆதரவாக சில எம்.பி-க்களும், எம்.எல்.ஏ-க்களும் வாக்களிப்பது அங்கீகரிக்கப்பட்ட ஒரு வெட்கங்கெட்ட
செயலாகவே தொடர்கிறது.

தமிழ்நாட்டில் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இடையிலான முதல்வர் சண்டையின்
போதும், மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே – உத்தவ் தாக்கரே
இடையிலான பலப்பரீட்சையின் போதும் இத்தகைய கூத்துகள்
அரங்கேறியதை நாம் அனைவருமே பார்த்தோம்….

இந்த கொடுமையின் உச்சமாக சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த
கட்சி, பிற கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி,
ஆட்சியமைக்கும் போக்கும் நாட்டில் அதிகரித்திருக்கிறது.

கோவா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில்
இத்தகைய அத்துமீறல்களில் மத்தியில் ஆளும் பா.ஜ.க-வே ஈடுபட்டதாககுற்றச்சாட்டுகள் எழுந்தன. ‘இதற்காக பல கோடி
ரூபாயை பா.ஜ.க செலவழித்திருக்கிறது’ என்று பகிரங்கமாக
குற்றம் சாட்டினார் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின்
தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
சொல்பவர் உத்தம புத்திரர் அல்ல என்பதால், இந்த குற்றச்சாட்டில்
உண்மை இல்லை என்றும் சொல்லி விட முடியாது…!!!

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் கூட, ‘என் கட்சியைச்
சேர்ந்த 20, 30 எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க முயன்றது.
ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் பல கோடி ரூபாயை வழங்க முன்வந்தனர்’
என்று கூறி, அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் கேலிக்குள்ளாக்கும் இந்த மக்கள்
பிரதிநிதிகள் மீது, சட்டப்படி வழக்கு தொடுக்க முடியாது என்கிற
அபூர்வ நிலை இருப்பது பலருக்கும் தெரியாத விஷயம்….

ஏன் அப்படி ….?

பல வருடங்களுக்கு முன்னர், நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ்
அரசைக் காப்பாற்றுவதற்காக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச்
சேர்ந்த எம்.பி-க்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு, நாடாளுமன்றத்தில்
வாக்களித்தது தொடர்பான வழக்கை தற்போது மீண்டும்
கையிலெடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

அதென்ன வழக்கு என்கிறீர்களா… ஒரு பழைய, எல்லாருக்கும்
மறந்து போய்விட்ட கதை ….

1991 நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிறுபான்மை அரசாக பி.வி.நரசிம்ம ராவ் தலைமையில்
காங்கிரஸ் அரசு பதவியேற்றது. அந்த அரசுக்கு எதிராக 1993-ம் ஆண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அப்போது, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்
ஏழு எம்.பி-க்களும், அஜித் சிங் தலைமையிலான ஜனதா தளத்தைச்
சேர்ந்த ஒரு எம்.பி-யும் லஞ்சம் பெற்றுக்கொண்டு காங்கிரஸ் அரசுக்கு
ஆதரவாக வாக்களித்தனர். வெறும் 14 வாக்குகள் வித்தியாசத்தில்
நரசிம்ம ராவ் அரசு கவிழாமல் தப்பியது.

வாக்களிப்பதற்கு லஞ்சம் வாங்கிய எம்.பி-க்கள் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டுமென்று அப்போது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த
உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வு,
அதன் மீது, 1998-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

‘நாடாளுமன்றத்தில் வாக்களிக்க எம்.பி-க்கள் லஞ்சம் வாங்கினால்,
அவர்கள்மீது வழக்கு தொடர முடியாது. இந்திய அரசியலமைப்புச்
சட்டத்தின் பிரிவு 105 அந்த எம்.பி-க்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது’
என்று தீர்ப்பு கூறி அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காரணம், அவைக்குள் பேசுதல், வாக்களித்தல் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்களுக்கு எதிராக எந்தவொரு
சட்ட நடவடிக்கையிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுவதாக அரசமைப்புச்
சட்டமே சொல்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 194-ம் இந்த சிறப்புரிமையை எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு வழங்குகிறது.

பேச்சுரிமைக்காக வழங்கப்பட்ட அந்த சிறப்புரிமையை எதிர்காலத்தில்
நம் மக்கள் பிரதிநிதிகள் இப்படித் தவறாக பணம் பண்ண
பயன்படுத்துவார்கள் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும் … ???

ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 1998-ம் ஆண்டு
அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை
உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் – கடந்த ஆண்டு, நவம்பர் மாதம்
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில், விசாரணைக்கு வந்தபோது
மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா,

  • ‘1998-ம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு சரியானது.
    அந்தத் தீர்ப்பை மீண்டும் ஆராயத் தேவையில்லை’ என்று வாதிட்டார்.

லஞ்சம் வாங்கும் எம்.பி., எம்.எல்.ஏ-க்களின் கொட்டத்தை அடக்க சட்டத்
திருத்தம் கொண்டு வருகிறோம் என்று சொல்லாமல், அந்தத் தீர்ப்பை
அப்படியே ஏற்கிறோம் என்று மத்திய அரசு சொன்னது அப்போதே விமர்சனத்துக்குள்ளானது.

இந்த நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான
அண்மையில், செப்டம்பர் 20-ம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு
வந்தது.

அப்போது, 1998-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்காக
ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்படும்’ என்று தலைமை
நீதிபதி உத்தரவிட்டார். விரைவில் மக்களவைத் தேர்தல் வரவிருப்பதால்,
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் பணம் பெற்றுக்கொண்டு,
ஆதாயத்திற்காக வாக்களிப்பதும், அதை அரசியல் சட்டம் அனுமதிப்பதும்
எப்பேற்பட்ட கேலிக்கூத்து…. ???

இந்த தவறை இப்போதாவது சரி செய்ய ஒரு வாய்ப்பு உருவாகி இருப்பது,
ஜனநாயகத்தில் ஆர்வமுடைய, கட்சி அரசியல்களில் சம்பந்தப்படாத,
பொது மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இப்படியான பிரிவுகள்
இடம்பெற்றிருப்பது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு விரோதமானது.

அதனை இயற்றியவர்கள் சற்றும் எதிர்பார்க்காத விளைவை
இந்த பிரிவுகள் உண்டாக்கி இருக்கிறது.
எனவே, இந்த முரண்பாடு இப்போதாவது அவசியம் திருத்தப்பட வேண்டும். இதற்காக ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்படுவது
வரவேற்கத்ததக்கதே.

மத்திய அரசும், மனசாட்சியை மதித்து, அத்தகைய ஒரு சட்ட திருத்தம்
உண்டாகும் சூழ்நிலையை வரவேற்றும், ஒத்துழைக்கவும் செய்தால்,
அது நிச்சயம் மக்களின் நன்மதிப்பை பெறும்.

.
…………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to M.P. & M.L.A.க்கள் லஞ்சம் வாங்குவதை – சட்டபூர்வமாக்கும் ஒரு அபூர்வ சூழ்நிலை …..

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    //மத்திய அரசும், மனசாட்சியை மதித்து, அத்தகைய ஒரு சட்ட திருத்தம்
    உண்டாகும் சூழ்நிலையை வரவேற்றும், ஒத்துழைக்கவும் செய்தால்,// – கனவில்கூட நீங்கள் இந்த எதிர்பார்ப்பை வைத்துக்கொள்ளாதீர்கள்.

    அரசியலில் நேர்மை மிக முக்கியம் என்று நினைத்திருந்தால் புதுச்சேரி, மஹாராஷ்ட்ரா, முன்பு கோவா என்று நினைவு, எனப் பல்வேறு மாநிலங்களில் பாஜக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்திருக்குமா? பாஜகவும், இதுதான் அரசியல் வழி என்று ஏற்றுக்கொண்டுவிட்டது என்றுதான் நான் நினைக்கிறேன். தேனின் சுவைய அறிந்த கரடி, அதனை அப்புறப்படுத்த விடுமா?

    //இந்த முரண்பாடு இப்போதாவது அவசியம் திருத்தப்பட வேண்டும். இதற்காக ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்படுவது
    வரவேற்கத்ததக்கதே.// – கண்டிப்பாக நாம் எல்லோரும் இதனை வரவேற்கணும்.

    1. ஒரு எம்.எல்.ஏ இறந்தால் (இயற்கையாக) இல்லை தகுதி நீக்கம் செய்யப்பட்டால், சட்டமன்றத்தின் காலம் பாதிக்கும் குறைவாக இருந்தால், மறு தேர்தல் நடத்துவதற்குப் பதிலாக, இரண்டாவதாக வந்த வேட்பாளரை எம்.எல்.ஏவாக பணிபுரியும்படிச் செய்யவேண்டும்.

    2. கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் அது செல்லாது. தகுதி நீக்கத்துக்கு இட்டுச் செல்லும் (ஆனால் இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. நம்ம ஊர் தேங்காய் மூடி எம்.பிக்கள்-சேடப்பட்டி போன்றவர்கள், எப்படி வாக்களிப்பது என்று கூடத் தெரியாமல் தவறாக வாக்களித்தால் அதற்கு என்ன செய்வது?)

    3. ஆட்சி செய்யும் கட்சி பிளவுபட்டால், பிளவை ஏற்படுத்தியவர்கள், தேர்தலைச் சந்தித்தாலொழிய ஆட்சி அமைக்க முடியாது

    போன்று சில உருப்படியான சட்டங்கள் வந்தால் நல்லதுதான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.