………………………………….

…………………………………..
மத்திய, மாநில அரசுத் துறைகளின் செலவினங்களை ஆய்வு செய்து
அறிக்கை கொடுப்பது சி.ஏ.ஜி அமைப்பின் பிரதான பணிகளில் ஒன்று.
அந்த வகையில் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை
தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.
தமிழ்நாட்டிலுள்ள டோல்கேட்டுகளில் வி.ஐ.பி வாகனங்களுக்கு
சுங்கக் கட்டணம் விலக்கு அளித்தது தொடங்கி, விதிகளை மீறி
வாகனங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தது வரை பல கோடி ரூபாய்
முறைகேடு நடந்திருப்பதாகச் சொல்கிறது சி.ஏ.ஜி.
பொதுப்பணத்தில் அமைக்கப்பட்ட சாலைகளில் இயங்கும் டோல்கேட்டுகள்,
தனியார் பணத்தில் அமைக்கப்பட்ட சாலைகளில் இயங்கும் டோல்கேட்டுகள்
என இரண்டு வகையான டோல்கேட்டுகள் இருக்கின்றன.
செங்கல்பட்டு அருகேயிருக்கும் பரனூர் டோல்கேட் பொதுப்பணத்தில் அமைக்கப்பட்ட சாலையில் அமைந்திருக்கிறது. சென்னையிலிருந்து
மாநிலத்தின் பிற பகுதிகளுக்குச் செல்பவர்களில் பெரும்பாலானோர்
பரனூர் டோல்கேட்டைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
இந்த டோல்கேட்டில் கட்டணம் வசூலிப்பதற்கான ஒப்பந்தம் 2019-ம்
ஆண்டே முடிவடைந்துவிட்டது. அதன் பிறகும் அங்கு சுங்கக்கட்டணம்
தொடர்ந்து வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்ட சி.ஏ.ஜி அறிக்கையில், பரனூர் டோல்கேட்டில் வாகன
ஓட்டிகளிடம் விதிகளை மீறி ரூ.28 கோடி சுங்கக்கட்டணம்
வசூலிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.
மேலும், ‘2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து,
2020-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் பரனூர் டோல்கேட்
வழியாக 1.17 கோடி வாகனங்கள் சென்றிருக்கின்றன. அவற்றில்,
62.37 லட்சம் வாகனங்களை வி.ஐ.பி வாகனங்கள் எனக் கணக்கு
காண்பித்து முறைகேடு நடந்ததாகத் தெரிவிக்கிறது சி.ஏ.ஜி அறிக்கை.
( இந்தியா முழுவதிலும் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற
உறுப்பினர்கள் உள்ளிட்ட வி.ஐ.பி-க்களுக்கு டோல்கேட்டுகளில்
சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை…. ஏனிந்த விதிவிலக்கு …?)
அதை வைத்து பரனூர் டோல்கேட்டைக் கடந்து சென்ற ஒட்டுமொத்த
வாகனங்களில் சுமார் 53 சதவீத வாகனங்களை வி.ஐ.பி வாகனங்களாக
கணக்கு காட்டியிருக்கிறார்கள். இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்
முறைகேடு செய்யப்பட்டிருக்கிறது.
மதுரை தொகுதி எம்.பி- சொல்கிறார்- “பொதுப்பணத்தில் அமைக்கப்பட்ட பரனூர் சுங்கச்சாவடியில் 53 சதவிகிதம் வி.ஐ.பி-க்கள் பயணிப்பதாகக் கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. அதுவே, தனியார் பணத்தில் அமைக்கப்பட்ட
கொடை ரோடு சுங்கச்சாவடி வழியாக வெறும் ஆறு சதவிகிதமே
வி.ஐ.பி வாகனங்கள் பயணித்திருக்கின்றன. இதிலிருந்தே டோல்கேட்
மூலம் எவ்வளவு பெரிய முறைகேடு நடைபெற்றிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
நவீன ஊழலின் அடையாளமாக பரனூர் டோல்கேட்டை, இனி
அழைக்கலாம்” எனக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
பொதுமக்களிடமிருந்தும் முறைகேடாக, கோடிக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பதை சி.ஏ.ஜி சுட்டிக்காண்பித்திருக்கிறது. தாம்பரம்
முதல் திண்டிவனம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் (NH 32)
நான்குவழிச் சாலையை எட்டுவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும்
பணி கடந்த 2018-ம் ஆண்டு, ஜூலை மாதம் தொடங்கியிருக்கிறது.
இரும்புலியூரிலிருந்து வண்டலூர் வரை (2.3 கி.மீ) ஒரு கட்டமாகவும், வண்டலூரிலிருந்து கூடுவாஞ்சேரி வரை (5.3 கி.மீ) ஒரு கட்டமாகவும்
இந்தச் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்றது. 2018, 2019, 2020 ஆகிய
ஆண்டுகளில் நடைபெற்ற இந்தப் பணிகளையொட்டி, சுங்கக்கட்டணம்
75 சதவிகிதமாகக் குறைக்கப்பட வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள்
துறை ஆணையம் (NHAI) விதிமுறை வகுத்திருக்கிறது.
ஆனால், கட்டணத்தைக் குறைக்காமல், முழுமையாக
வசூலித்திருக்கிறார்கள். அந்த வகையில், பொதுமக்களிடமிருந்து
ரூ.6.54 கோடி முறைகேடாக வசூலிக்கப்பட்டிருப்பதாக சி.ஏ.ஜி
அறிக்கை தெரிவிக்கிறது.
சுங்கக்கட்டண நிர்ணயத்திலும் குறைகள் ஏற்பட்டிருப்பதாகச்
சொல்லப்படுகிறது. உதாரணமாக, நெடுஞ்சாலையில் அமைக்கப்படும்
பாலங்களும் கட்டண நிர்ணயத்தின்போது கணக்கில் கொள்ளப்படும்.
பாலாற்றின் குறுக்கே இரண்டு பாலங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. விதிமுறையின்படி 1956-ம் ஆண்டுக்குப் பிறகு கட்டப்பட்ட பாலங்களை
மட்டுமே கணக்கில்கொள்ள வேண்டும். ஆனால், பாலாற்றில், 1956-க்கு
முன்பு கட்டப்பட்ட பழைய பாலத்தையும் கணக்கிலெடுத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி 2017-2018 முதல் 2020-2021 வரை
ரூ.22.1 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதாக சி.ஏ.ஜி அறிக்கை கூறுகிறது.
” இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அதிக டோல்கேட்டுகளைக்கொண்ட
மாநிலம் என்கிறார்கள். ஒப்பந்தம் காலாவதியானதால் அப்புறப்படுத்தி
யிருக்க வேண்டிய 30-க்கும் மேற்பட்ட டோல்கேட்டுகளில் இன்றும்
கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிலும் பெரும் முறைகேடுகள் நடக்கின்றன.
ஆனால், மௌனம் சாதிக்கிறது அரசு” என்று சொல்கின்றனர் இத்தகைய டோல்கேட்டுகளை அடிக்கடி பயன்படுத்துவோர்…..
இந்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் –
யார் பதில் அளிக்கப்போகிறார்கள்….?
யார் பொறுப்பு …???
முறைகேடாக வசூல் செய்யப்பட்ட இந்த பணம் அத்தனையும்
யார் யாருக்கு போகிறது….?
இதை யார் கண்டுபிடிக்க முடியும் ….?



டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாயே எங்க போகுதுன்னு இன்னும் கண்டுபிடித்த பாடில்லை. இதுல டோல்கேட் ஊழல். எல்லாத்தையும் தனியாரிடம் விட்டாலும் ஊழல், அரசு செய்தால் நிச்சயம் ஊழல்னு இருக்கிறதைப் பார்க்கும்போது, பேசாமல் வெளிநாட்டிற்கு outsource பண்ணிவிட்டால் என்ன என்று யோசிக்கிறேன். அதிலும் தீவிரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான், கனடா, ஆஃப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகள் புகுந்துவிட்டால் அதோகதிதான்.
.
AR Rahman இசை நிகழ்ச்சி –
…………………………
.
……………………………………………………………………………………………………