செத்துப் போன பிறகு … யார் பொறுப்பு …???

……………………………..

……………………………..

ஆணோ, பெண்ணோ – உயிருடன் இருக்கும் வரை –
சொந்தம் கொண்டாடப்படுகின்றனர் –

கூடு விட்டு ஆவி பிரிந்த பின்
அந்த உடலின் நிலை ( status ) என்ன ஆகிறது ?

அவன், அவள் என்பது மாறி “அது” வென்று
அஃக்ரிணை ஆக்கப்படுவது முதல் சடங்கு…!

எவ்வளவு சீக்கிரம் “அதை” dispose ( அகற்றுவது )
செய்வார்கள் என்று அக்கம் பக்கத்தவரை
யோசிக்க வைப்பது அடுத்த நிலை…!!

ஒரு இறப்பினை அடுத்து நிகழும் சில சம்பவங்களை
குறித்த எனது அனுபவங்களை ஒரு இடுகையாக எழுத
வேண்டுமென்று நான் நீண்ட நாட்களாகவே
நினைத்திருந்தேன்…

நான் இங்கு எழுதுவதை, 50-55 ஆண்டுகளுக்கு முந்தைய
கள நிலவரத்தை கருத்தில் கொண்டு வாசிக்க வேண்டும்.

65-70-களில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாகக்
கொண்டு, தொடர்ந்து மேலே செல்கிறேன்…

சற்று பின்னோக்கிச் சென்று யோசியுங்கள் –
இன்றுள்ள பல தொலை தொடர்பு வசதிகள்,
சாதனங்கள், முன்னேற்றங்கள், வசதிகள் எதுவும் அன்று இல்லை.

…………….

கீழ்க்கண்ட விவரங்கள் இன்றைய
இளைஞர்களுக்காக மட்டும் ( மறந்து போன
முதியவர்களுக்காகவும் கூட……) –

செல்போன் இல்லை என்பது மட்டுமல்ல…
தரை வழி தொலைபேசியே ( land line telephones )
பெரும்பாலும் தனிப்பட்டோர் இல்லங்களில் இல்லை.

தொலைபேசியில் வெளியூரில் யாருடனாவது தொடர்பு
கொள்ள வேண்டுமானால், தபால்/தந்தி நிலையம் சென்று,
நாம் தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் பெயர்,
விலாசத்துடன் அவர் வசிக்கும் ஊரின் தபால் நிலைய
கிளையின் பெயர் – (உதாரணம் – தி.நகர் தபால் நிலையம்…)
ஆகிய விவரங்களை எழுதிக் கொடுத்து விட்டு,
முன்பணமும் கட்டி விட்டு காத்திருக்க வேண்டும்…
இந்த முறைக்கு ட்ரங்க் கால் என்று பெயர்….

இரண்டு, மூன்று, நான்கு – மணி நேர காத்திருப்புக்குப் பிறகு
கூப்பிடுவார்கள். ( இந்த தபால் நிலையம், இந்த ஊர்
மத்திய தொலை பேசி நிலையம், அந்த ஊர் மத்திய
தொலைபேசி நிலையம், அந்த குறிப்பிட்ட கிளை
தபால் நிலையம் ஆகியவற்றிற்கிடையே தொடர்பு
உறுதி செய்யப்பட்ட பிறகு…..!!!)

இதைவிட சுலபமான வழி –
தந்தி அனுப்பி விடுவது…
ஆனால் தந்தியில் ஒரு வழிச் செய்தி தான் போகும்….
தொலைபேசியில் பேசுவது போல் கலந்து ஆலோசனையோ
பதில் பெறுவதோ நடக்காது….

………………………

இனி வருவது எல்லாருக்கும் …

இந்தியாவில் ராணுவத்தின் பயன்பாட்டிற்கான ஆயுதங்களை
தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில்
இயங்கும் பல ஆயுத தொழிற்சாலைகள் இருக்கின்றன.
( இயந்திர துப்பாக்கிகள், பிஸ்டல்கள், பீரங்கி வண்டிகள்,
டாங்குகள், கையெறி குண்டுகள், டேங்குகளிலிருந்து
எறியப்படும் குண்டுகள், போர் விமானங்களிலிருந்து
போடப்படும் 1000 பவுண்டு குண்டுகள் உட்பட பலப்பல
ஆயுதங்கள்…)

அவை பெரும்பாலும், ஆள் அரவமற்ற இடங்களில் –
ஊரை விட்டு வெகு தொலைவில் தான் அமைக்கப்படும்.
அமைந்துள்ள ஊரிலிருந்து 30-40 கி.மீ. தள்ளி கூட இருக்கும்.
அவை அமைந்துள்ள இடங்கள் பற்றிய விவரங்கள்
அதிகமாக பகிர்ந்து கொள்ளப்படாது. அந்த இடங்கள்
அந்நியர்களுக்கு தடை செய்யப்பட்ட இடமாக prohibited place
அறிவிக்கப்படும்.

இத்தகைய தொழிற்சாலைகளில் பணிபுரியும்
தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் அருகிலேயே
கட்டப்பட்டு, பெரும்பாலான ஊழியர் குடும்பங்கள்
அங்கேயே தங்கும். அங்கேயே பள்ளி, அங்கேயே
சில அத்தியாவசியமான கடைகள்…கேண்டீன்,
ஒரு சிறு மருத்துவமனை…
எல்லாம் இருக்கும். Factory Estate என்று சொல்வார்கள்.

அத்தகைய ஒன்று தான் திருச்சி அருகே அமைந்திருக்கும்
ஒரு ஆயுத உற்பத்தி தொழிற்சாலை.
நான் சொல்லும் காலத்தில் திருச்சி நகரத்திலிருந்து இந்த
Estate-க்கு ஒரு நாளைக்கு 3 பஸ்கள் மட்டுமே செல்லும்…
( இப்போது, திருச்சி வளர்ந்து, விரிந்து – இந்த எஸ்டேட்டிற்கு
அருகே நெருங்கி வந்து விட்டது. )

இங்கு துவக்க காலங்களில் – ஊழியர்கள் அல்லது
அவரது குடும்பத்தில் யாராவது இறந்து போனால்-
சந்திக்க நேரிடும் இன்னல்களை விவரிப்பது கடினம்…

68-69-ல் இருக்கும்..
வடக்கேயிருந்து மாற்றலாகி வந்திருந்தார் ஒரு ஊழியர்.
நடு கல்வியாண்டு என்பதால், மனைவி, குழந்தைகளை
அங்கேயே விட்டு விட்டு, இவர் மட்டும் வந்திருந்தார்..
வட இந்தியர் என்பதாலும், தனியே இருந்ததாலும்,
உள்ளூரில் அவருக்கு நெருக்கமானவர்கள் யாருமில்லை.

வந்தவர் (45 வயதிருக்கும்) திடீரென்று மாரடைப்பில்
இறந்து விட்டார்.

வெகு தொலைவில் வட இந்தியாவில் இருந்த அவரது
குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேச வேண்டும்..
அதிர்ச்சியான தகவலை அவர்களுக்கு,
அவர்களுக்குப் புரியுமாறு, இதமாகச் சொல்ல வேண்டும்..
அவர்கள் வருகிறார்களா அல்லது வேறு என்ன செய்ய
– என்று கேட்க வேண்டும்.

எவ்வளவு விரைவாக தொடர்பு கொண்டு பேசினாலும்,
அவர்கள் திருச்சி வந்து சேர குறைந்தது 50-60 மணி
நேரம் ஆகும்.

அது வரை உடலை பாதுகாக்க வேண்டும்.
இப்போது உள்ளது போல் Freezer Box எல்லாம் கிடையாது.

அப்போது திருச்சியில் சிறிய விமான நிலையம் இருந்தாலும்,
அது இயக்கத்தில் இல்லை.
என்ன செய்வது…?

……………..

அங்கே – எனக்கு நல்லதொரு நண்பர் வட்டம் உண்டு.
குறைந்த பட்சமாக 15-20 பேர்களைச் சொல்லலாம்.
எதாவது அவசரம் என்று உடனே வரச்சொல்லி
யார் மூலமாவது தகவல் அனுப்பினால் –

10 நிமிடங்களுக்குள் சொன்ன இடத்தில் குறைந்தது
5-6 பேராவது வந்து நிற்பார்கள். எல்லாருமே எதையும்
செய்யத்தயாராக இருக்கும் துடிப்பான இளைஞர்கள்.
முப்பது வயது கூட நிரம்பாதவர்கள்…

நண்பர்கள் கூடினோம்.
எங்களிடமிருந்தே, அவரவர் கைவசம் இருந்த பணத்தை
ஒன்றாகச் சேர்த்து, உடனடியான செலவுகளுக்கு
வைத்துக் கொண்டோம்.

வடக்கேயிருந்த அவரது உறவினர்களிடம் ட்ரங்க் காலில்,
தகுந்த முறையில், அவர்கள் மொழியிலேயே பேசினேன்.
ஆறுதல் கூறி, மேலே என்ன செய்யலாமென்று கேட்டேன்.
நாங்களே தகனம் செய்து விடலாமா என்று கேட்டேன்.

அவர்கள் கதறினார்கள். என்னவாவது செய்து உடலை
நாங்கள் வரும் வரை வைத்திருங்கள். அவர் முகத்தை
நாங்கள் பார்த்த பிறகு தான், நாங்கள் தான் இறுதிச்சடங்கு
செய்ய வேண்டும் என்றார்கள்.

வேறு வழியே இல்லை –
அவர்கள் விரைவாக திருச்சி வந்துசேர செய்ய வேண்டிய
வழிகளைக் கூறி விட்டு, உடல் காக்கப்படும் – விரைவாக
வந்து சேருங்கள் என்று கூறி விட்டோம்.

ஐந்து-ஆறு மணி நேரம் ஆனாலே உடல் சிதைவு
துவங்கி விடும். துர்நாற்றம் வீசத்துவங்கி விடும்…
ஆனால், குறைந்தது 60 மணி நேரங்கள் – அன்றைய
சூழ்நிலையில், இந்த வெப்ப பூமியில் எப்படி உடலை
வைத்திருப்பது…?

மூன்று நான்கு குழுக்களாக பிரிந்து செயல்பட்டோம்.
தொழிற்சாலை நிர்வாகமும் எங்களுக்கு
முழு ஒத்துழைப்பும், ஆதரவும் கொடுத்தது.
ஆனால், இதில் முக்கியமாக தேவைப்பட்டது –
மனித முயற்சி, மனித ஆற்றல், மனித செயல்பாடு…

உடலை குடியிருப்பில் அவ்வளவு நேரம்/நாள் வைத்திருக்க
முடியாது. எனவே, அங்கே இருந்த guest house ஒன்றை
ஒட்டியிருந்த கார் ஷெட்டிற்கு கொண்டு போனோம்.
கார் ஷெட்டில் இரண்டு, மூன்று மின்-விளக்குகளை
பொருத்தினோம். இரண்டு பெடஸ்டல் விசிறிகளை
கொண்டு வந்து பொருத்தினோம்.

அப்போது இருந்த தனியார் வாகனம் – லாம்ப்ரெட்டா
அல்லது வெஸ்பா ஸ்கூட்டர் மட்டும் தான்.
அதுவும் மொத்த எஸ்டேட்டிலுமாக சேர்ந்து,
மூன்றோ நான்கோ தான் இருந்தன. அவற்றில் இரண்டை
எங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தோம்.

ஒரு குழு திருச்சி நகரம் சென்றது..
பெரிய பிளாஸ்டிக் ஷீட்களை பெற முயற்சி செய்தது.
அப்போதெல்லாம் அது வருவதில்லை…
சிறிய அளவில் சிலவற்றை சேகரித்தது.

அப்போதெல்லாம் ஐஸ் கட்டிகளுக்கும் பஞ்சம்.
80 % “பவர் கட்” காரணமாக ஐஸ் தொழிற்சாலைகள்
இயங்குவதில் சிரமம். அப்படி இப்படி அலைந்து
சில பெரிய கட்டிகள் வாங்கி வந்தது. மொத்தமாக
வாங்கி வைத்தாலும், பாதுகாக்க முடியாமல்,
வெளி சூட்டில் கரைந்து விடும்.

ஊதுவத்திகள்…. செண்ட் வகைகள்…
சேகரிக்கப்பட்டன…

அனைத்தும் கார் ஷெட்டிற்கு கொண்டு வரப்பட்டு
கீழே பிளாஸ்டிக் ஷீட்கள் பரப்பப்பட்டு,
மேலேயும் துண்டு துண்டாக இருந்த பிளாஸ்டிக் ஷீட்கள்
இணைக்கப்பட்டு, உடல் பிளாஸ்டிக்கால் போர்த்தப்பட்டது.

உடலைச் சுற்றி பக்கவாட்டிலும், உடல் மேலும்,
ஐஸ் கட்டிகள் வைக்கப்பட்டன.
ஐஸ் சீக்கிரமாக உருகி விடாமலிருக்க பெடஸ்டல்
விசிறிகள் முழு வேகத்தில் இயக்கப்பட்டன.
உருகும் ஐஸ் கட்டி நீர் தனியே வெளியே செல்ல
வழி செய்தோம். தண்ணீர் உடலில் பட்டால் –
காரியம் கெட்டு விடும்….

இதில் என்ன பெரிய விஷயம் என்றால், எங்களில்
யாருக்குமே இதில் முன் அனுபவம் கிடையாது.
சிலரிடம் ஆலோசனை பெற்று, எங்களுக்கு தோன்றியதை
எல்லாம் செய்தோம்.

இரவும் வந்தது…
எங்களில் 4 பேர் தங்கிக்கொண்டு மற்றவர்களை
போய் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு 4-5 மணி நேரம் கழித்து
வரச்சொன்னோம்.

அன்று வரை நான் ஒரு உயிரற்ற உடலை நெருக்கத்தில்
பார்த்ததில்லை. அன்று தான் முதல் முறை.
தொட்டுத் தூக்கியது, நகர்த்தியது, உடலை கையாண்டது –
பிளாஸ்டிக் ஷீட்களால் முழுவதுமாக, மேலும் கீழும்
மூடியது -அத்தனையும் செய்தேன்-செய்தோம்.
இதை எல்லாம் முதல் 7-8 மணி நேரங்களுக்குள்
செய்து விட்டோம்..

அதற்குள்ளாகவே, துர்வாடை துவங்கி விட்டது.
கட்டு கட்டாக ஊதுவத்திகள் கொளுத்தப்பட்டன.
செண்ட் வாரித் தெளிக்கப்பட்டது.

உடலை வைத்திருப்பதாக – விஷயம்
தெரியாமல் வாக்கு கொடுத்து விட்டோமோ..?
இன்னும் 50-55 மணி நேரங்களுக்கு
இதை எப்படி பாதுகாக்கப் போகிறோம்…?
( இதை எல்லாம் நான் ஏன் இவ்வளவு விவரமாகச் சொல்கிறேன்
என்பதை பிற்பாடு நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்…)

( தொடர்கிறது அடுத்த பகுதியில்…..)

.
……………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to செத்துப் போன பிறகு … யார் பொறுப்பு …???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கேள்வி கேட்டுட்டீங்க. ஆனால் பதிவு இரண்டு பகுதிகளாக வரும்னு சொல்லியிருக்கீங்க.

    இன்றைக்குள் வந்துவிடுமா?

  2. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    வராது ….. ஆனால் வரும் ..😊

    இன்றைக்கு வாய்ப்பு குறைச்சல்….
    ஆனால் – நாளைக்கு நிச்சயம் வரும் நண்பரே…!!!

  3. Karthikeyan Palanisamy's avatar Karthikeyan Palanisamy சொல்கிறார்:

    அய்யா அந்த காலத்தில் அரசு மருத்துவமனையில் பிணவறை இல்லையா… தெரியாமல் தான் கேட்கிறேன் தெளிவு படுத்தவும் 🙏🏾

  4. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Karthikeyan Palanisamy,

    பெரிய அரசு மருத்துவமனைகளில் பிணவறை வசதிகள்
    மிக சுமாரான அளவில் இருந்தன. ஆனால் அங்கேயே
    இறக்கும் நோயளிகளுக்கு மட்டும் தான் அதற்கான
    அனுமதி உண்டு. அதுவும் ஒரு நாளைக்கு மேல்
    வைத்துகொள்ள மாட்டார்கள்.

    இந்த நபர் தன் வீட்டிலேயே திடீரென்று மாரடைப்பு
    ஏற்பட்டு இறந்து விட்டார். எனவே மருத்துவமனைக்கே
    கொண்டு செல்லப்படவில்லை. தொழிற்சாலை மருத்துவர்
    அவரது இருப்பிடத்திற்கே சென்று பார்த்து இறப்பை
    உறுதி செய்து விட்டார்.

    .
    -காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.