தலைகுப்புற விழும் சீனப் பொருளாதாரம் ……???

……………………………………..

………………………………………

சீனப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவது நமக்கு மகிழ்ச்சியான
செய்தியா என்று கேட்டால் நிச்சயம் ஆம் என்று தான் சொல்ல
வேண்டும்….

நாம் எதாவது கெடுதலைச் செய்து அதன் காரணமாக சீனா வீழ்ச்சி
அடைந்தால், நமது மனசாட்சி கொஞ்சம் உருத்தக் கூடும் ….

ஆனால் சீனாவின் வீழ்ச்சிக்கு நாம் எந்த விதத்திலும் காரணம் அல்ல…..
சீன பொருளாதார வீழ்ச்சிக்கு முழுக்க முழுக்க சீனாவே காரணம் என்று தெரியும்போது, நம் மனசாட்சி நிச்சயமாக எந்த நெருடலையும்
சந்திக்க வேண்டியதில்லை…..

அப்படி என்ன ஆயிற்று சீன பொருளாதாரத்திற்கு …???

கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு சீனாவில்
ஜூலை மாதம் பணவீக்கம் பூஜ்ஜியத்தை நோக்கி அதல பாதாளத்தில்
வீழ்ந்துள்ளது….

இதற்கென்ன பொருள்….?
அதாவது, அங்கே விலைவாசி தாறுமாறாக கீழ்நோக்கி விழுந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் தாக்கம்,
ரஷ்யா – உக்ரைன் போர்,
இயற்கைப் பேரிடரின் விளைவுகள் உள்ளிட்ட காரணங்களால்
உலக நாடுகள் எல்லாமே பணவீக்கம் (Inflation) அதிகரிப்பால் –

-விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாமல்
திணறிக்கொண்டிருக்கும்போது, சீனாவில் மட்டும் இதற்கு
நேர் எதிராக – பணவாட்டம் (Deflation) நிலவுகிறது.

மேலோட்டமாகப் பார்த்தால் –
‘விலைவாசி குறைவது மக்களுக்கு நல்லதுதானே…?’ என்று தோணலாம்.

ஆனால், இந்தப் பணவாட்டம் என்பது மக்களுக்கும்,
அதே சமயம் அரசுக்கும் மிகுந்த பொருளாதாரப் பின்னடவைத்
தரக்கூடியது என்பதுதான் உண்மை.

இதற்கு, முதலில் பணவீக்கம், பணவாட்டம் இரண்டுக்கும்
இடையிலான வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும்.

பணவீக்கம் என்றால் என்ன…?

பணவீக்கம் என்பது தொடர்ச்சியான மற்றும் குறிப்பிடும்படியான பொது
விலைமட்ட அதிகரிப்பு ஆகும். சற்று விளக்கமாக கூறினால், பணவீக்கம்
என்பது பண்டங்கள் மற்றும் பணிகளின் பொது விலைமட்ட அதிகரிப்பு விகிதத்தையும், பணத்தின் வாங்கும் சக்தி குறைவதையும் காட்டுகிறது.

அதாவது – “குறைந்த அளவு பண்டங்களை அதிக அளவு பணம்
துரத்தும் நிலையே பணவீக்கம்” ….

பணவாட்டம் என்றால் என்ன?

விலைவாசி குறைதல்,
மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியன
பணவாட்டத்தின் முக்கிய இயல்புகள் ஆகும்.
பணவாட்டத்தின் போது விலைவாசி குறைதல் என்பது நுகர்வோருக்கு விரும்பத்தகுந்த ஒன்றாக இருந்தாலும் கூட,

  • அக்குறைவு பொருட்களின் உற்பத்தியையும், வேலைவாய்ப்பையும்
    குறைக்கும் அளவுக்கு இருக்கக் கூடாது.
  • அதாவது, பணவீக்கத்துக்கு நேர் எதிரானதுதான்
    பணவாட்டம்

இன்னும் எளிதாகச் சொல்வது என்றால், ஒருவர் சென்ற மாதம்
வீட்டுக்காக மளிகைப் பொருட்கள் வாங்க மொத்தம் ரூ.5,000 செலவு
செய்தார் என்று வைத்துக்கொள்வோம். அதே அளவிலான உணவுப்
பொருட்களுக்கு இந்த மாதம் ரூ.5,500 செலவிட்டிருந்தால்,
அதுதான் பணவீக்கம் – விலைவாசி உயர்வு.
இது, உணவுப் பொருட்களுக்கு மட்டுமின்றி
சேவைத் துறை உள்ளிட்ட எல்லாவற்றுக்குமே பொருந்தும்.

ஒருவேளை, இந்தத் தொகை ஒவ்வொரு மாதமும்,
ஒவ்வொரு வருடமும் குறைந்துகொண்டே இருந்தால்,
அதுதான் பணவாட்டத்துக்கு இட்டுச்செல்லும்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்க வேண்டுமெனில்,
அந்நாட்டில் பணவீக்கம்தான் நிலவ வேண்டும். அதைக் கட்டுக்குள்
வைப்பது சாமானிய மக்களுக்கு நன்மை பயக்கும்.

ஆனால், பணவீக்கத்துக்கு மாறாக பணவாட்டம் நிகழத் தொடங்கினால்
அது, அந்நாட்டின் பொருளாதாரத்துக்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதுதான் இப்போது சீனாவில் நடக்கிறது.

பணவாட்டம் உயர்ந்து விலைவாசி கடும் வீழ்ச்சி கண்டிருப்பது,
உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார நாடான சீனாவுக்கு
பெரும் நெருக்கடியைத் தந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றில்
இருந்து மெதுமெதுவாக மீண்டு வந்த சூழலில், சீனாவின் ஏற்றுமதியும்
இறக்குமதியும் வெகுவாக சரிந்ததுதான் இப்போதைய நிலைக்கு
அடித்தளமாக அமைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

விலைவாசி வீழ்ச்சியால் சீனா சந்திக்கும் முதல் பெரிய பிரச்சினை வேலையின்மையும் வேலை இழப்பும்தான்.

ஒருநாட்டில் ‘விலைவாசி குறைவுக்கும் வேலையின்மைக்கும்
என்ன தொடர்பு?’ என்று கேட்கலாம். இங்குதான் பணவாட்டம்
தன் வேலையைக் காட்டுகிறது.

நுகர்வோர் தங்கள் செலவினங்களை வெகுவாக குறைத்து,
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் விலைவாசி தொடர்ச்சியாக கடும்
வீழ்ச்சியை சந்திக்கும்போது, தொழில் நிறுவங்கள் நஷ்டத்தை நோக்கி
நகரத் தொடங்கும்.

இதை சமாளிக்க அவை தமது உற்பத்தியைக்
குறைக்க வேண்டி வரும்.

உற்பத்தி குறைவதன் விளைவாக வேலை இழப்பு,
ஊதியக் குறைப்புக்கு மக்கள் ஆளாவார்கள்.

இதன் சுழற்சியாக, வாங்கும் சக்தியை இழக்கும் அவர்களின் செலவினம்
மென்மேலும் குறையும். இது ஒரு சங்கிலித் தொடர் போல வர்த்தகம்
சார்ந்த எல்லா துறைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி
ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சின்னாபின்னமாக்கிவிடும்.

சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இருந்து
படிப்பை முடித்துவிட்டு வேலைச் சந்தைக்கு புதிதாக வருவோரின்
எண்ணிக்கை மட்டுமே கிட்டத்தட்ட 1 கோடியே 15 லட்சம்.
இவர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்க முடியாமல்
திணறும் நிலைக்கு சீன அரசு தள்ளப்படுகின்ற நிலைக்கு இப்போது
தள்ளப்பட்டிருக்கிறது.

சீனாவில் விலைவாசி வீழ்ச்சி கண்டது எப்படி….?

உலக அளவில் கொரோனா பெருந்தொற்று வதைத்த காலத்தில் மக்கள்
வீட்டுக்குள் முடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்பின்
சில காலம் கழிந்து தளர்வுகள் அமலுக்கு வந்ததால், மக்கள் தாங்கள்
சேமித்து வைத்த பணத்தை செலவழிக்கத் தொடங்கினர்; தங்கள்
தொழிலுக்கு அதிகம் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இது, மக்களின் தேவையைப் பெருக்கியது.

தேவை அதிகரித்ததால் உற்பத்தி கூடின.
இதனிடையே, ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக எரிபொருட்களின்
விலையும் உச்சத்தைத் தொட்டன.
இதெல்லாம் விலைவாசி உயர்வுக்கும் பணவீக்கத்துக்கும் வழிவகுத்தன.

ஆனால், இதெல்லாமே சீனாவில் தலைகீழாக நடந்திருக்கிறது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அங்கே பொருளாதாரம் சுறுசுறுப்படையவில்லை. மாறாக, படுமந்தமாகத்தான் எல்லாமே நடந்தன.

இதற்கு மிக முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது, கொரோனா
கட்டுப்பாடு என்ற பெயரில் சீன அரசு மக்களை ரொம்பவே வதக்கிய அணுகுமுறைதான் என்கின்றனர் வல்லுனர்கள்.

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த பிறகு கூட, சீன மக்கள்
செலவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. தங்கள் தேவையை மேலும்,
நாளுக்கு நாள் குறைத்தவண்ணமே இருந்தனர். மீண்டும் ஒரு பேரிடர்
வந்தால் என்ன செய்வது என்கிற பயத்தால் – தங்களிடமிருந்த சேமிப்புகளையும் பயன்படுத்தாமலே இருந்தனர்.

இதனால் ஏற்கெனவே செய்து வைத்திருந்த உற்பத்தி பொருட்கள்
மிக மலிவாக விற்கப்பட வேண்டிய நிலையும், உற்பத்தியை வெகுவாக குறைத்துக்கொள்ளும் சூழலும் உருவாகி தொடர் விலைவாசி வீழ்ச்சிக்கு
வழிவகுத்து சீனாவுக்கு தலைவலி ஆனது – பணவாட்டம்.

இதனிடையே, கொரோனா பெருந்தொற்று தாக்கம் தொடங்கி
உக்ரைன் போர் வரை பல்வேறு காரணிகளால் உலக அளவில்
பல நாடுகளில் உள்ள நிறுவனங்களும் இறக்குமதி செய்வதை
வெகுவாக குறைத்துக்கொண்டுள்ளன. ஜூலை நிலவரப்படி, சீனாவின்
ஏற்றுமதி 14.5%, இறக்குமதி 12.4% அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்த சரிவு நீடித்தால் சீனப் பொருளாதார வளர்ச்சி மென்மேலும்
பாதிக்கப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது நிலவும் விலைவாசி வீழ்ச்சி,
மற்றும் பணவாட்ட பிரச்சினைகளால் அரசின் கடன் சுமை வெகுவாக அதிகரித்துள்ளதும் சீனாவுக்குப் பெரும் தொல்லையாக அமைந்துள்ளது.
மிகக் குறிப்பாக, சீனாவில் ரியல் எஸ்டேட் துறை பாதாளத்தில்
வீழ்ந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

…………………………..

……………………

சீனாவைப் பொறுத்தவரையில், ஒட்டுமொத்த பொருளாதாரத்தில்
கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு உறுதுணையாக இருப்பது ரியல் எஸ்டேட் துறைதான். உள்ளூர் அரசுகள் பலவும் நிலம் வாங்குவது – விற்பது,
வீடு வாங்குவது – விற்பது முதலான வர்த்தகத்தை அதிகரிக்க
படாத பாடுபடுகின்றன.

ஆனால், எவ்வித சலுகைகள் அளித்தாலும் கூட வீடு வாங்க மக்கள்
முன்வருவதே இல்லை என்பதுதான் சோகம். இதனால், பல பகுதிகளிலும்
‘பேய் நகரங்கள்’ அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதாவது,
புதிதாக கட்டப்பட்ட அபார்ட்மென்ட்டுகள் விற்கப்படாமல் பல நாட்களாக காலியாகவே இருக்கும் போக்கு அதிகரித்துள்ளது. அப்படிப் பார்க்கும்போது,
கடந்த 2019-ல் ஐந்தில் ஒரு வீடு காலியாக இருந்ததாம். இந்த எண்ணிக்கை
இப்போது இன்னமும் பலமடங்கு கூடியிருக்கிறது.

எதிர்காலப் பொருளாதார நிலை மீதான நம்பிக்கை இருந்தால் மட்டுமே
மக்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய முன்வருவார்கள். இதற்கு,
ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கமளிக்கும் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியதும் சீன அரசின் பொறுப்பாகிறது….

ஆனால் சீன அரசோ, சீன மக்களிடம் எந்த விஷயத்தையும்
வெளிப்படையாகச் சொல்லாமல், ‘எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.
யாரும் கவலைப்பட வேண்டாம்’ என்று பாவ்லா
காட்டி வருகிறது.

உண்மையில், உலகில் பல நாடுகள் இதைத்தான் செய்து வருகின்றன…!!!

-விலைவாசி கட்டுக்கடங்காமல் வீழ்ச்சி கண்டு பணவாட்டம்
ஏற்பட்டால் சீனாவைப் போல் பதற்றமான பொருளாதாரத்தை
நோக்கியே எந்தவொரு நாடும் செல்லும் என்பதை சீன பொருளாதாரம்
தெளிவாக உணர்த்துகிறது….
(அடிப்படை -அல்ஜஜீரா, ஹெச்.டி., விகடன் தகவல்கள் …..)

.
……………………………………………………………………………………………………………………………….…..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.