ரூ.127.5 கோடி ….? ஆமாம் – நீலமாகத் தெரிகிறதே – அது தான் ….!!!

…………………………………….

……………………………………

‘நார்க் ஹோட்டல்’ பெயரில் நிலத்தை வாங்கிய முன்னாள் அதிமுக மந்திரி ஆர்.காமராஜின் நண்பர்கள், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். `பல கோடி ரூபாய் மதிப்பில் நிலம் வாங்க அவர்களுக்குப் பணம் எங்கேயிருந்து வந்தது..???

……………………………………..…

-இந்தக் கேள்விக்கு பதில் தேடித்தான் அலைகிறார்கள்….!!!

……………………………………..

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மீதான சொத்துக்குவிப்பு
வழக்கில், ஒரு வருடத்துக்குப் பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்டிருக்கிறது.

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான ஆர்.காமராஜ்,
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடாகச் சொத்துச் சேர்த்ததாகப் புகார்கள் எழுந்தன. அவர்மீது
அறப்போர் இயக்கமும் கடுமையான குற்றச்சாட்டுகளை
முன்வைத்திருந்தது.

தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, கடந்த ஆண்டு, ஜூலை 8-ம் தேதி
காமராஜின் மன்னார்குடி வீடு, தஞ்சாவூரிலுள்ள அவரின் சம்பந்தி
டாக்டர் மோகன் வீடு, ஒரு மெடிக்கல் சென்டர் உட்பட தமிழகம்
முழுவதும் 51 இடங்களில் அதிரடி சோதனையை நடத்தியது லஞ்ச
ஒழிப்புத்துறை. திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்
பிரிவில், அவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஜூலை 11-ம் தேதி காமராஜ் உள்ளிட்ட
ஆறு பேர்மீது திருவாரூர் தலைமைக் குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.

காமராஜ் மீதான வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்
கூறுவது –

“2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுவரை உணவுத்துறை அமைச்சராக
காமராஜ் இருந்த சமயத்தில், அவருடைய நண்பர்களான திருத்துறைப்பூண்டி சந்திரஹாசன், மன்னார்குடி கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோர்
‘நார்க் ஹோட்டல்’ என்ற தனியார் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

அந்த நிறுவனத்தின் பெயரில், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகேயுள்ள நீலகிரி தெற்குத் தோட்டத்தில், சுமார் ஒரு லட்சம் -மீண்டும்
உறுதிப்படுத்த – ஒரு லட்சம் – சதுர அடி பரப்பளவில் நிலம் வாங்கப்
பட்டிருக்கிறது. பல கோடி ரூபாய் மதிப்பிலான அந்த நிலத்தை,
ஆண்டு வாடகையாக 57,000 ரூபாய்க்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு
எடுத்திருக்கிறார் காமராஜ். அவரின் மகன்கள் பெயர்களில்தான்
இந்தக் குத்தகை எடுக்கப் பட்டிருக்கிறது.

அந்த நிலத்தில், தன் மகன்கள் இனியன், இன்பன் பெயரில், `ஸ்ரீகாமாட்சி
மெடிக்கல் சென்டர்’ என்ற நவீன பன்னோக்கு மருத்துவமனையைக் கட்டியிருக்கிறார். நூறு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அந்த
மருத்துவமனை, தற்போது செயல்பட்டு வருகிறது.

‘நார்க் ஹோட்டல்’ பெயரில் நிலத்தை வாங்கிய ஆர்.காமராஜின்
நண்பர்கள், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். `பல கோடி ரூபாய்
மதிப்பில் நிலம் வாங்க அவர்களுக்குப் பணம் எங்கேயிருந்து வந்தது… ???
அந்த நிலத்தை, குறைந்த குத்தகைக்கு காமராஜ் எப்படி எடுத்தார்…
நூறு கோடி ரூபாயில் மருத்துவமனை கட்ட காமராஜுக்குப் பணம்
எங்கேயிருந்து வந்தது….?’

இந்தக் கேள்விகளையெல்லாம் போலீசார் விசாரணையில்
முன்வைத்தபோது, காமராஜின் நண்பர்களால் எந்த பதிலும் சொல்ல
முடியவில்லை. கணக்கு வழக்குகளை அவர்களால் காட்ட முடியவில்லை.

ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை மூலமும், இதர
வகையிலும் 127 கோடியே 50 லட்சம் ரூபாயை வருமானத்துக்கு அதிகமாக
காமராஜ் சேர்த்திருப்பதை ஆதாரபூர்வமாகக் கண்டுபிடித்திருக்கிறோம்.
இதைத் தொடர்ந்து, ஆர்.காமராஜ், அவரின் மகன்கள் இனியன், இன்பன்,
அவரின் நண்பர்களான சந்திரஹாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார்
ஆகிய ஆறு பேர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறோம்”
என்கின்றனர் போலீசார்.

லஞ்ச ஒழிப்புத்துறையின் பாய்ச்சல், காமராஜுக்கு கடுமையான சிக்கலை உருவாக்கும் என்பதால், இனி அவர் ஆளுங்கட்சி எதிர்ப்பில் தீவிரம்
காட்ட மாட்டாரென்று நம்பலாம்.

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஆர்.காமராஜ் மீது தொடர்ச்சியான
குற்றச்சாட்டுகளை முன்வைத்த அறப்போர் இயக்கத்தின்
ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் சொன்னது –

“தன் வருமானத்துக்கு மீறி, காமராஜ் 127 கோடி ரூபாய் அளவிலான
சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்திருக்கிறது.


அவர் அமைச்சராக இருந்தபோது, ரேஷன் பொருள் கொள்முதலில்
2,028 கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டதாக நாங்கள்
புகாரளித்திருக்கிறோம். நாமக்கல்லைச் சேர்ந்த கிறிஸ்டி நிறுவனத்தின்
மீதும், அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநராக
இருந்த சுதாதேவி மீதும் சேர்த்தே லஞ்ச ஒழிப்புத்துறையில்
புகாரளித்தோம். இரண்டு வருடங்களாக அந்தப் புகாரில்
எஃப்.ஐ.ஆர்-கூடப் பதிவுசெய்யப்படவில்லை. காமராஜுக்கு
இவ்வளவு பணம் எங்கேயிருந்து வந்தது என்பதை விசாரித்தாலே
பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்” ….

இந்த நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன்
பின்னணி குறித்துப் பேசுகிற அ.தி.மு.க தரப்பினர், “டெல்டா
அ.தி.மு.க-வில் வைத்திலிங்கம்தான் கோலோச்சினார். அவர்
பன்னீர் அணிக்குச் சென்ற பிறகு, ஆர்.காமராஜின் கை
டெல்டாவில் ஓங்கியது. வரிசையாக ஊழியர் கூட்டங்கள், பூத் கமிட்டி
அமைக்கும் பணிகளை வேகப்படுத்தியிருக்கிறார். அ.தி.மு.க-வை
அவர் டெல்டாவில் வலுப்படுத்துவதை தி.மு.க-வால்
ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தல்
சமயத்தில் காமராஜின் செயல்பாடுகள் தி.மு.க-வுக்கு நிச்சயமாகக்
குடைச்சலைக் கொடுக்கும். அதனால்தான் அவரை முடக்குவதற்காக,
லஞ்ச ஒழிப்புத்துறை பதிந்திருந்த வழக்கை தூசு தட்டி எடுத்து, தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்கள்’’ என்றனர்.

பின் – ஆமாம் அமைச்சர் வாங்கியது தான் அதோ நீலமாகத் தெரிவது – என்றா ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பார்கள்….?

இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் சொல்வது –
… ‘‘வழக்கு பதிவுசெய்தால் குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யப்படுவதென்பது வழக்கமான நடைமுறைதான். அனைத்தும்
முறையாக, சரியாக இருக்கும் நிலையில் வருமானத்துக்கு அதிகமாகச்
சொத்துச் சேர்த்திருப்பதாகச் சொல்கின்றனர். இது ஆளுங்கட்சியின்
அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது’’
என்று சொல்லி இருக்கிறார்….

“முன்னாள்” ஆக இருந்தாலென்ன – “இந்நாள் ” ஆக இருந்தாலென்ன –
திருவிளையாடல் நாகேஷ்-சிவாஜி கேள்வி பதில்களில்
சேர்த்துக்கொள்ள வேண்டிய இன்னொரு தற்கால கேள்வி ” தவிர்க்க முடியாது என்ன..?


பதில் – “மந்திரியும், லஞ்ச ஊழலும்…” !!!

( நன்றி – அறப்போர் இயக்கம் …)

.
…………………………………………………………………………………………………….…

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ரூ.127.5 கோடி ….? ஆமாம் – நீலமாகத் தெரிகிறதே – அது தான் ….!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இதற்காகவே அதிரடி கோர்ட்டுகள் அமைக்கப்பட்டு, 4-6 மாதங்களுக்குள் மேல் முறையீடு எதுவும் இல்லாமல் தீர்ப்பு சொல்லப்பட்டு முறைகேடுகள் இருந்தால் அமெரிக்க பொருளாதாரக் குற்றங்களுக்கான சட்டங்கள் இங்கும் கொண்டுவரப்பட்டு உள்ளே குடும்பம் முழுவதும் தள்ளினால் (குற்றங்கள் செய்தவர்களின்) எவ்வளவு நன்றாக இருக்கும்?

    அது எப்படி சார் பூ வித்தவன்சாராயக் கடை வைத்தவன், புண்ணாக்கு வித்தவனெல்லாம் அரசியல் அதிகாரத்துக்கு வந்த பிறகு அவர்களது மகன்கள் குறைந்த பட்சம் நூறுகோடிக்கு மேல் சொத்து சேர்த்துவிட முடிகிறது?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.