எதிர்க்கட்சிகளின் கூட்டணி … எந்த அளவு சாத்தியம் …..???

……………………………………………..

……………………………………………….

எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒன்று இன்று, பீகாரில், பாட்னா’வில்
நடைபெறவிருக்கிறது….. அது பற்றிய ஒரு அலசல் இது.
(விமரிசனம் அல்ல…!!!)

2024 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற வேண்டும்.
ஆனால், ‘தேர்தலை முன்கூட்டியே நடத்த பா.ஜ.க திட்டமிடுகிறது.
எனவே எதிர்க்கட்சிகள் மத்தியில் சீக்கிரமே ஒற்றுமை ஏற்பட
வேண்டும்’ என்று நிதிஷ்குமார் சொல்கிறார்.

இதற்காக இந்தியா முழுக்கச் சுற்றுப்பயணம் செய்து
பல தலைவர்களை அவர் சந்தித்தார். ‘எதிர்க்கட்சிகள் தங்களுக்குள்
இருக்கும் வேறுபாடுகளை மறந்து, ஒரு குறைந்தபட்ச
செயல்திட்டத்துடன் ஒன்றிணைந்து நாடாளுமன்றத் தேர்தலைச்
சந்திக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி பாட்னாவில்
இன்று கூடவிருக்கும் தலைவர்கள் தங்களுக்குள் பேச இருக்கிறார்கள்.

இதற்குமுன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இப்படி
ஒரு முயற்சி செய்து, அது நடக்காமலே போனது. அதைத் தொடர்ந்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இதேபோன்ற ஒரு
முயற்சியை எடுத்தார். அதுவும் செயல்வடிவம் பெறவில்லை.

மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு சித்தாந்த வித்தியாசங்களைத் தாண்டி சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்
மற்றும் காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.
சரத்பவார் இதை சாத்தியமாக்கினார். சிவசேனாவை உடைத்து,
இந்தக் கூட்டணி ஆட்சியை பா.ஜ.க வீழ்த்தினாலும், இந்தக் கூட்டணி இன்னமும் உடையாமல், அப்படியேதான் இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்புவரை பா.ஜ.க கூட்டணியுடன் பீகார்
முதல்வராக இருந்த நிதிஷ்குமார், அங்கிருந்து விலகிவந்து
ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியுடன்
முதல்வர் பதவியைத் தக்கவைத்தார். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின்
தேஜஸ்வி யாதவ் துணை முதல்வரானார்.

அதைத் தொடர்ந்து, மத்தியில் பா.ஜ.க அரசை வீழ்த்தும்
இலக்குடன் நிதிஷ்குமார் களமிறங்கியிருக்கிறார். ‘நிதிஷுக்கு
பிரதமர் பதவி மீது ஆசை வந்துவிட்டது’ என்று கிண்டல் செய்கிறது
பா.ஜ.க. ஆனால், நிதிஷின் ஐக்கிய ஜனதா தளக் கட்சி இதை
மறுத்திருக்கிறது.

பா.ஜ.க தொடர்ச்சியாக ஆட்சி புரியும் இந்த ஒன்பது ஆண்டுகளில் இப்படிப்பட்ட ஒரு கூட்டணி முயற்சிகூட இதுவரை சாத்தியமானதில்லை.

கார்கே மற்றும் ராகுலுடன், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ்,
அரவிந்த் கெஜ்ரிவால், சரத்பவார், மு.க.ஸ்டாலின், உத்தவ் தாக்கரே,
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் கம்யூனிஸ்ட்
தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்குபெறுகிறார்கள்.

இந்தக் கூட்டணியின் மையப்புள்ளியாக இருப்பதும் காங்கிரஸ்
தான்…. சிலருக்கு, முள்ளாகக் குத்துவதும் காங்கிரஸ் கட்சிதான்.
சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ரிய சமிதி, ஒடிஷா முதல்வர்
நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், மாயாவதியின் பகுஜன்
சமாஜ் கட்சி ஆகியவை ‘காங்கிரஸ் கட்சியுடன் நாங்கள்
ஒரே மேடையில் இருக்க முடியாது’ என அழைப்பைத் தவிர்த்து
விட்டன. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டியும் இந்தக் கூட்டணியில் இல்லை.
ஆனால், சந்திரபாபு நாயுடு பாஜகவுடன் கூட்டணி வைக்க
முயற்சி செய்கிறார்…. அது நடந்தால், ஜெகன்மோகன் ரெட்டி
இந்த கூட்டணியில் சேரக்கூடும்.

‘எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்’ என்று பொத்தாம்
பொதுவாக பல தலைவர்களும் பேசினாலும், அப்படிப்பட்ட
கூட்டணியில் காங்கிரஸின் இடம் என்ன என்பதில்தான் சிக்கல்
எழுகிறது.

டெல்லி மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் மத்திய அரசின்
அவசரச் சட்டத்தை எதிர்க்குமாறு, இந்தியா முழுக்கப் போய்
பல கட்சிகளின் ஆதரவைக் கேட்டுவருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். காங்கிரஸ் கதவையும் அவர் தட்டிப் பார்த்தார். அவரைச் சந்திக்க மல்லிகார்ஜுன கார்கேவும் ராகுல் காந்தியும் இதுவரை நேரம்
ஒதுக்கவில்லை. ‘இந்த விஷயத்தில் ஆம் ஆத்மி கட்சியை
ஆதரிக்கக்கூடாது’ என்று டெல்லி மற்றும் பஞ்சாப் காங்கிரஸ்
கமிட்டிகள் தேசியத் தலைமையைக் கேட்டுக்கொண்டுள்ளன.

சமீபத்தில் ராஜஸ்தான் போன கெஜ்ரிவாலுக்கு எதிராக அங்கு
காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் நடத்தினர். என்னதான் பாட்னா கூட்டத்துக்கு வந்தாலும், காங்கிரஸ் மாநிலத் தலைவர்களிடம் விரைவில் இந்த எதிர்க்கட்சிக் கூட்டணி குறித்துக்
கருத்து கேட்க இருக்கிறார் கார்கே.

இப்படிப்பட்ட சூழலில்தான் இவர்களை ஒரே மேடையில் கரம்
கோக்கவைக்க நிதிஷ்குமார் முயற்சி எடுக்கிறார்.

மேற்கு வங்காளத்தின் மம்தாவுக்கும், உ.பி-யின் அகிலேஷுக்கும்
கூட்டணி அமைவதால் எந்த பயனும் இல்லை. கொடுக்கல் வாங்கல்
இல்லாமல் எப்படி கூட்டணி சாத்தியமாகும்…?

ஆனால், கபில்சிபல், ‘‘இவர்கள் ஒன்றிணைவது சாத்தியம்தான்”
என்கிறார் ஒருகாலத்தில் காங்கிரஸில் இருந்த கபில்சிபல், இப்போது
அரசியல் சார்பற்ற அமைப்பு ஒன்றை நடத்திவருகிறார்.
‘‘ஒவ்வொருவரும் அவருக்குச் செல்வாக்கான பகுதியில் அதிக
இடங்களில் நிற்பது ஒன்றே இதற்குத் தீர்வு. உதாரணமாக,
மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கர்நாடகா, ஹரியானா, உத்தரகாண்ட், இமாசலப்பிரதேசம் போன்ற மாநிலங்களில்
காங்கிரஸுக்குச் செல்வாக்கு இருப்பதால், அங்கு மற்ற கட்சிகள் விட்டுக்கொடுக்க வேண்டும். மேற்கு வங்காளத்தில் மம்தாவுக்கும், தமிழகத்தில் ஸ்டாலினுக்கும், பீகாரில் நிதிஷ் மற்றும் தேஜஸ்விக்கும்
அதிக இடங்களை விட்டுக்கொடுத்துவிட்டு சிறிய கட்சியாகவே
காங்கிரஸ் செயல்பட வேண்டும். தெலங்கானா, ஆந்திரா, கோவா
என்று குழப்பம் ஏற்படும் இடங்களில் பேசித் தீர்த்துக்கொள்ள
வேண்டும். பா.ஜ.க-வுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்ற
எண்ணம் வந்திருப்பதே பெரிய விஷயம்தான். அது இன்னும்
இவர்களை முன்னே நகர்த்திச் செல்லும். கர்நாடகா வெற்றிக்குப்
பிறகு காங்கிரஸ்மீது மற்ற எதிர்க்கட்சிகளுக்கு ஓரளவு நம்பிக்கை
வந்திருக்கிறது” என்கிறார் அவர்.

மம்தாவும் இதையே வலியுறுத்துகிறார். பா.ஜ.க-வுக்கு எதிராக
ஒவ்வொரு தொகுதியிலும் பொது வேட்பாளரை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும் என்பது அவர் கருத்து. ‘‘காங்கிரஸ் தேசியக்கட்சியாக இருக்கலாம். அவர்களுக்கு இந்தியா முழுக்க கணக்கெடுத்துப்
பார்த்தால் 200 தொகுதிகளில் செல்வாக்கு இருக்கக்கூடும்.
அந்தத் தொகுதிகளில் பிற கட்சிகள் அவர்களை ஆதரிக்கும். மற்ற
இடங்களில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ, அவர்களை
காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும்” என்கிறார் அவர்.

‘‘பீகார் கூட்டத்தை அடுத்து, ஒரு குறைந்தபட்ச செயல்திட்டம்
உருவாக்கி எதிர்க்கட்சிகள் இன்னும் நெருங்கக்கூடும்” என்கிறார்
சரத்பவார். ‘‘விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, வரிகள்
என்று பல பிரச்னைகளுக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து
போராட உள்ளோம். அது எங்களுக்குள் இருக்கும்
கருத்துவேறுபாடுகளைக் காணாமல்போகச் செய்துவிடும்”
என்கிறார் அவர்.

தங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளைக் கடந்து எதிர்க்கட்சிகள் இணைந்தாலும், ‘மோடிக்கு எதிராக யாரை முன்னிறுத்துவது…?
பிரதமர் வேட்பாளர் யார்?’ என்ற கேள்வி அவர்களைக் குழப்புகிறது.

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி தன் எம்.பி பதவியிலிருந்து
தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பதை ஒரு நல்ல விஷயமாக
மற்ற தலைவர்கள் பார்க்கிறார்கள். ‘‘இதனால், ராகுலை
முன்னிறுத்த வேண்டிய சங்கடம் எழாது. கார்கேவைக்கூட
மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றாலும், யார் பிரதமர்
என்பதைத் தேர்தலுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பதே
எங்கள் நிலை” என்கிறார்கள் பல தலைவர்கள்.

கர்நாடகாவில் பா.ஜ.க தோற்றாலும், அதன் வாக்கு வங்கி துளியும் சிதையவில்லை என்ற புள்ளிவிவரம் எதிர்க்கட்சிகளிடம் இருக்கிறது.
அதனால் இந்தக் கூட்டணி விஷயத்தை கவனமாகவே அணுகுகின்றன.

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் சென்றது போல, மேற்கிலிருந்து
கிழக்காக ராகுல் காந்தி இன்னொரு பாரத் ஜோடோ யாத்திரை
செல்லக்கூடும் என்று நம்பப்படுகிறது. அந்த யாத்திரைக்குக்
கிடைக்கும் வரவேற்பும், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம்,
சத்தீஸ்கர், தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுமே, எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்ன நிலைக்கு ஆளாகும் என்பதைத் தீர்மானிக்கக்கூடும்.

இன்றைய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், இந்த கூட்டணி விஷயத்தை
அடுத்த நிலைக்கு எப்படி கொண்டு போவது என்பதைப்பற்றி
விவாதித்து எதாவது முடிவுக்கு வரக்கூடும்.

.
…………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to எதிர்க்கட்சிகளின் கூட்டணி … எந்த அளவு சாத்தியம் …..???

  1. ஆதிரையன்'s avatar ஆதிரையன் சொல்கிறார்:

    என்னதான் பிரமாண்ட படம் எடுக்க போகிறோம் என்று கொக்கரித்து கொண்டிருந்தாலும் , ஹீரோ யார் என்று எங்களுக்கே தெரியாது என்று கூறும் இந்த பட கூட்டணி நிச்சயம் பரிதாபத்திற்குரியது ..
    பிரதமர் வேட்பாளர் யார் என்று, மீடியா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் பொழுது, இவர்களின் ஒற்றுமை காணாமலே போகும்.இந்த கூட்டணி மேடையேறும் இடத்தில சென்று அடுத்த பிரதமர் மம்தா வாழ்க என்றோ, அல்லது மம்தா முன்னிலையில் இன்னொருவரை புகழ்ந்து கோஷம் போட்டாலே, இவர்கள ஒற்றுமை பல்லிளித்து , சிதறுண்டு ஓட மாட்டார்களா என்ன …
    இப்பொழுது உள்ள உலக சூழ்நிலையில் ,போர்ப்பதற்றம், அண்டையிலிலுள்ள எதிரி நாடுகளின் சூழ்ச்சி வலைகள், பொருளாதார சுணக்கம் போன்றவற்றிக்கு எதிராக போராட, பலமான ஆளுமை நமக்கு தேவை என்பதை நாம் உணர வேண்டும்.இவர்களை போன்ற கூட்டணி, இந்தியாவின் எதிர்காலத்திற்க்கே ஆபத்தாக அல்லவா முடியும்.இவர்களில் யார் தேர்தலுக்கு பிறகு , பிரதமர் வேட்பாளராக பொறுப்பேற்பாரோ ? அவரை மற்றவர்கள் எவ்வாறு சகித்து கொள்வார்கள் .இது எப்படி நீண்ட காலம் தாக்கு பிடிக்கும் ..
    எத்தனை எத்தனை கேள்விகள், எத்தனை எத்தனை குழப்பங்கள்….
    இந்தியாவை கடவுள் தான் ,இவர்களை போன்றவர்களிடம் இருந்தும், பணம் வாங்கி ஒட்டு போடும் மக்களிடம் இருந்தும் காக்க வேண்டும் .

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இது ஓரளவு சாத்தியம்தான். குறைந்தபட்சம், பாஜகவுக்கு இதுதான் (அந்த ‘இது’ என்ற body பல கட்சிகளாலானது) மாற்று என்ற ஆப்ஷனை மக்களுக்குக் கொண்டுவரும். இதில் எந்தக் கட்சி எவ்வளவு பயன் பெறும் என்ற ஆராய்ச்சியில் இறங்காமல், பொது எதிரி என்ற கான்சப்டை முன்னிறுத்தினால் (அது கொள்கை அளவில் என்றும் இருக்கலாம்) சாத்தியம். இதற்கு ‘இவர்தான் பிரதமர்’ என்று அறிவிக்கத் தேவையிருக்கிறதா இல்லையா என்று உடனே சொல்ல இயலவில்லை.

    தமிழகத்திலும் இத்தகைய கூட்டணி வெற்றி பெறுகிறது என்பதை நாம் பார்க்கவேண்டும். அதிமுக ஒரு அணியாக தனித்துக் களமிறங்கினாலும் திமுக எப்போதுமே எல்லாக் கட்சிகளையும் (கொள்கையளவில் ஒன்றில்லாத) இணைத்துக்கொண்டுதான் வெற்றிபெறுகிறது என்பதையும் பார்க்கவேண்டும். ஆனால் இதில், திமுக அணி வெற்றிபெற்றால் இவர்தான் முதல்வர் என்பது தெரியும். ஆனால் அகில இந்திய அளவில் ஒரு முகம் தேவைப்படுகிறது. என்னைக் கேட்டால், for whatever it is worth, ராகுலை பிரதமர் வேட்பாளர் என்றுதான் தேர்தலைச் சந்திக்கணும் (காங்கிரஸுக்கு 200 சீட்டுகளுக்குக் குறைவாக போட்டியிட வாய்ப்பு கொடுத்தாலும்). அதனால் எந்தக் கட்சிக்கும் பாதகமில்லை. கூட்டணி வெற்றி பெற்றால், கிடைக்கும் சீட்டுகளுக்கு ஏற்றபடி நல்ல கொழுத்த பதவிகளைப் பெற்றுவிடலாமே. Afterall Congress, DMK மாதிரி ‘எல்லாம் எனக்கு’ என்ற conceptல் ஆட்சி புரிவதில்லையே.

    இத்தகைய கூட்டணி ஏற்படி மிக முக்கியமான விஷயம், பொதுவெளியில் இந்தக் கூட்டணிக் கட்சிகள் இதனைப் பற்றிப் பேசுவதை முற்றிலுமாகத் தவிர்க்கவேண்டும். அதுபோல, அந்த அந்த மாநிலத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதத்தை ஒட்டிய அளவில் தொகுதிப் பங்கீடு இருக்கவேண்டும். உதாரணமாக, தமிழகத்தில், திமுகவிற்கு 28 சதம், காங்கிரஸுக்கு 5-6 சதம் வாக்குகள் உள்ளதால், திமுகவின் ஐந்திலொரு தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கலாம். எங்கெங்கு காங்கிரஸ் மற்றும் ஒரு கட்சி மாத்திரம் ஒரு மாநிலத்தில் இருக்கிறதோ, அங்கு, மத்த எந்தக் கட்சியும் (கூட்டணியில் உள்ளவை) போட்டியிடுவதில்லை என்று இருக்கவேண்டும். காங்கிரஸ்தான் இந்த ரியாலிட்டியை டைஜஸ்ட் செய்துகொள்ளவேண்டும் (மேற்கு வங்கத்தில் ஒரு சீட், பீகாரில் 2, உ.பியில் 3 என்று குறைந்தாலும்) ஆனால் down the line, கட்சி இன்னும் கரைவதையும் தவிர்ப்பது கடினம், அல்லது சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி கிடையாது என்ற நிலை எடுக்க வேண்டும்.

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கர்நாடகா தேர்தலில் யார் வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது என்று நான் சுமார் சீட்டுகள் எண்ணிக்கையுடன் எழுதியதுபோல, பாராளுமன்றத் தேர்தலிலும் இப்போதே சொல்லிவைக்கிறேன்.

    பாஜக, 260-290, காங்கிரஸ் – 100க்கும் குறைவு (80-90 இருக்கலாம்) என்பதுபோலத்தான் 2024 தேர்தல் முடிவுகள் அமையும். ராகுல், கர்நாடகா மற்றும் வயநாட்டில் போட்டிபோட்டு வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. (இதன் காரணம், சில பல segments மொத்தமாக எதிர்கட்சிகளுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால்)

    காங்கிரஸ் ராகுல்/பிரியங்காவைத் தவிர்த்து வேறு யாரையும் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தினால், எதிர்கட்சிக் கூட்டணி வெற்றிபெறும் (அதாவது மொத்தம் 220+ சீட்டுகள்) வாய்ப்பு குறைந்துவிடும்.

  4. Tamil's avatar Tamil சொல்கிறார்:

    பாஜகவின் பலம் இவர்கள்தான்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.