இப்போதாவது – பாஜக, தன் இமேஜை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுமா ….???

…………………………………….

………………………

‘பா.ஜ.க-வில் இணைந்துவிட்டால் பயமில்லை!’ – வலைவிரிக்கும் விசாரணை அமைப்புகள்…?
……….

-என்கிற தலப்பில், விகடன் தளத்தில் வெளியாகியிருக்கும்
ஒரு கட்டுரை கீழே தரப்படுள்ளது –

விகடன் தளத்தில் வெளியாகியிருக்கும் கருத்துகள் தவறு என்று
சொல்லி விட முடியாது… பொதுவெளியிலும், பல தளங்களிலும்,

  • ” பாஜக என்ன வாஷிங் மெஷினா….? அதில் சேர்ந்தவுடன்
    அதி மோசமான ஊழல்வாதிகள் கூட, உத்தமர்களாக
    விமோசனம் பெற்று விடுவது எப்படி….? ” என்கிற கருத்து
    பலமாக உலவி வருகிறது என்பதே உண்மை.

பாஜக- இனியாவது இந்த இமேஜை மாற்றிக்கொள்ள தேவையான
முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

விகடன் தள கட்டுரை கீழே –
……………..

“ரெய்டு, மிரட்டல்களுக்கு உள்ளானவர்கள் பா.ஜ.க-வில் சேர்ந்த பின்னர் ‘புனிதர்கள்’ ஆகிவிடுகிறார்கள். அப்படிப்பட்ட ‘புனிதர்கள்’ மேல் வழக்குகள் எல்லாம் நிறுத்தப்பட்டிருக்கின்றன” என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி தரூர் பட்டியல் போட்டிருந்தார்.

இதை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு
மாநில முதல்வர்களும் இப்போது வழிமொழிந்துகொண்டிருக்கின்றனர்.

“தங்கள் கட்சியில் இணைந்தால் சி.பி.ஐ., அமலாக்கத்துறை
வழக்குகளை முடித்து வைத்துவிடுவதாக பா.ஜ.க பேரம் பேசியது.
அந்தச் சதிகாரர்கள் முன் தலைகுனிய மறுத்து, ‘நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ செய்துகொள்ளுங்கள்’ எனச் சொல்லிவிட்டேன்” என்று ஏற்கெனவே, ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா சொல்லியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா…
பா.ஜ.க-வில் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களின் ‘செல்லக்குட்டி’யாக மாறியவர்கள்மீதான வழக்குகளின் நிலை என்ன… பார்க்கலாம்!

சுவேந்து அதிகாரி –
சுவேந்து அதிகாரி, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர்

மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸில் எம்.பி., அமைச்சர் எனப் பெரிய பொறுப்புகளை வகித்து, முதல்வர் மம்தாவின் தளபதியாக வலம்வந்தவர் சுவேந்து அதிகாரி. அவர்மீது ‘நாரதா ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம்
லஞ்சக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பா.ஜ.க வைத்த கோரிக்கையால் வழக்கைக் கையிலெடுத்தது சி.பி.ஐ.

ஒருகட்டத்தில் நெருக்கடி தாங்க முடியாமல், திரிணாமுல் காங்கிரஸின் அமைச்சர் பொறுப்பு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய சுவேந்து அதிகாரி 2020-ல் அமித் ஷா முன்னிலையில்
பா.ஜ.க-வில் இணைந்தார் (அதேசமயம் ‘நாரதா வழக்கு’க்கு பயந்து
கொண்டு முகுல் ராய், சோவன் சாட்டர்ஜி, அர்ஜுன் சிங் போன்ற பல தலைவர்களும் திரிணாமுல் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வுக்குத்
தாவினர்). அதன் பிறகு நாரதா வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ்
தலைவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டபோதும்கூட சுவேந்து அதிகாரியை சி.பி.ஐ சீண்டவில்லை. பிரதிபலனாக 2021 தேர்தலில் மம்தாவையே நந்திகிராம் தொகுதியில் தோற்கடித்த சுவேந்து, தற்போது மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.

ஹிமந்த பிஸ்வா
ஹிமந்த பிஸ்வா, அஸ்ஸாம் முதல்வர்

அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் கட்சியின் அமைச்சராக நீண்டகாலம் கோலோச்சிய ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது, சாரதா சிட்ஃபண்ட்ஸ்
ஊழல் குற்றச்சாட்டின்கீழ் விசாரணையைத் தொடங்கியது சி.பி.ஐ.
அவர் அமைச்சராக இருந்தபோது குடிநீர் விநியோகத் திட்டத்தில்
முறைகேடு செய்ததாக அடுத்தடுத்து ஊழல் புகாரை வாசித்து
நெருக்கடி கொடுத்தது பா.ஜ.க.

அந்த நிலையில், 2015-ல் காங்கிரஸிலிருந்து விலகிய ஹிமந்தா
பிஸ்வாஸ், பா.ஜ.க-வில் சேர்ந்தார். ‘சாரதா சிட்ஃபண்ட்ஸ் ஊழல்
வழக்கில் பிஸ்வாஸ் பெயர் இருந்தபோதும்கூட சி.பி.ஐ ஏன் விசாரிக்கவில்லை?’ என ஊழல் வழக்கில் சிக்கிய மற்ற தலைவர்களெல்லாம் பொங்கியும் எந்தப் பயனுமில்லை. கடைசியில்,
2021 அஸ்ஸாம் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற, அஸ்ஸாம் முதலமைச்சராக்கப்பட்டார் ஹிமந்தா பிஸ்வா.

நாராயண் ராணே
நாராயண் ராணே, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர்

மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சராக இருந்த
நாராயண் ராணே மீது, அவிக்னா குழுமம் சம்பந்தப்பட்ட வழக்கில்
ரூ.300 கோடி பண மோசடி செய்ததாக அமலாக்கத்துறை குற்றம்
சாட்டி சம்மன் அனுப்பியது. அதைத் தொடர்ந்து 2017-ல் காங்கிரஸ் கட்சியிலிருந்து, விலகி `மகாராஷ்டிரா ஸ்வாபிமான்’ என்ற
கட்சியைத் தொடங்கினார். அமலாக்கத்துறையின் பிடி இறுக இறுக,
2019-ல் அந்தக் கட்சியையே கலைத்துவிட்டு பா.ஜ.க-வில்
ஐக்கியமானார். அதன் பிறகு அவர்மீதான வழக்கு விசாரணை நிறுத்திவைக்கப்பட்டது. மேலும், பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மத்திய தொழில்துறை அமைச்சர் பதவியும் நாராயண் ராணேவுக்குக் கொடுக்கப்பட்டது.

பாவனா கவாலி
பாவனா கவாலி, மகாராஷ்டிரா நாடாளுமன்ற உறுப்பினர்

சிவசேனா கட்சியில் ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக
இருந்ததோடு, அந்தக் கட்சியின் டெல்லி முகமாகவும் அறியப்பட்டவர்
பாவனா கவாலி. பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும்,
அரசுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.17 கோடி அளவுக்கு
மோசடி செய்ததாகவும் அவர்மீது வழக்கு பதிந்த அமலாக்கத்துறை, அடுத்தடுத்து சம்மன் அனுப்பியது. மேலும், 2021-ம் ஆண்டு
அவரின் உதவியாளர் சயீத் கானைக் கைதுசெய்து கிலி மூட்டியது.
அந்த நேரத்தில், சிவசேனா கட்சி பிளவுபட, பா.ஜ.க ஆதரவுபெற்ற
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்குத் தாவினார்
பாவனா கவாலி. அமலாக்கத்துறை விசாரணையும் வந்த வேகத்தில் நின்றுபோனது.

பிரதாப் சர்நாயக்
பிரதாப் சர்நாயக், சிவசேனா எம்.எல்.ஏ

மும்பை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்துடன் (MMRDA)
ரூ.175 கோடிக்கான ஒப்பந்தத்தை, ஒரு தனியார் நிறுவனத்துக்குப்
பெற்றுத் தந்து, ரூ.7 கோடி முறைகேடாகப் பணம் பெற்றதாக
சிவசேனா எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. அதேபோல, நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (NSEL) நிறுவனத்தில் ரூ.5,600 கோடி அளவுக்கு மோசடி நடந்த
வழக்கிலும் பிரதாப் சர்நாயக் மீது குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை,
அவரின் ரூ.11 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்தது. புத்திசாலித்தனமாக, பா.ஜ.க ஆதரவு பெற்ற ஷிண்டே அணி சிவசேனா
பக்கம் சாய்ந்தார் பிரதாப் சர்நாயக். அதன் பின்னர்
அமலாக்கத்துறையின் வழக்கு, கிணற்றில் போட்ட கல்லாகி விட்டது.

யாமினி ஜாதவ், யஷ்வந்த் ஜாதவ்
யஷ்வந்த் ஜாதவ் – யாமினி ஜாதவ், சிவசேனா

சிவசேனா பிரமுகர் யஷ்வந்த் ஜாதவ், அவரின் மனைவியும்
எம்.எல்.ஏ-வுமான யாமினி ஜாதவ் ஆகியோர் வரி ஏய்ப்பு, அந்நியச்
செலாவணி மோசடி போன்ற புகார்களின்கீழ் வருமான வரித்துறை சோதனைக்கும், அமலாக்கத்துறை விசாரணைக்கும் ஆளானார்கள். அடுத்தடுத்து ஜாதவ் குடும்பத்துக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான 41 சொத்துகளைப் பறிமுதல் செய்தது வருமான
வரித்துறை.
அந்த நிலையில், பா.ஜ.க ஆதரவு, ஷிண்டே அணியின் சிவசேனா
கூடாரத்தில் ஜாதவ் தம்பதி அடைக்கலம் ஆக, வழக்கு விசாரணையும் வாசலோடு சென்றது.

  • பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் குட்டிக் குட்டி எதிர்க்கட்சித்
    தலைவர்களும் இதே போன்ற நடவடிக்கைக்கு ஆளாவதாகவும்,
    ஒன்று பா.ஜ.க-வில் சேர்ந்து தப்பிப்பது’ அல்லதுசிறைக்குச்
    செல்வது’ என்ற இரண்டு ஆப்ஷன்களே அவர்களுக்கு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

“குற்றவாளிகளைக் கட்சியில் சேர்க்க மாட்டோம்…
அப்படியே சேர்ந்தாலும் அவர்கள்மீதான வழக்கு விசாரணையில்
குறுக்கிட மாட்டோம்” என்று கறாரான முடிவெடுக்காவிட்டால்,
‘ஊழலுக்கு எதிரான கட்சி’ என்று பா.ஜ.க சொல்லிவருவது
முற்றிலும் பொய் என்றாகிவிடும்….!

(நன்றி – விகடன் தளம்…)

.
……………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to இப்போதாவது – பாஜக, தன் இமேஜை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுமா ….???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இந்தக் கருத்துக்களை நீங்கள் சொல்லுவதாக நான் எடுத்துக்கொண்டு, முழுமையாக ஆதரிக்கிறேன். கட்சியின் வீச்சைப் பெருக்குகிறோம் என்று இத்தகைய நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடுவது ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது. ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லி, மற்றவர்கள் மேல் விரல் நீட்டிக் குற்றம் சாட்டும்போது, மீதி விரல்கள் பாஜகவில் உள்ள இத்தகைய ஊழல்வாதிகளைக் காட்டுவதுபோல பாஜகவுக்குத் தெரியவில்லையா?

    ஆனால் இதைச் சொல்ல முரசொலி விகடனுக்கு என்ன உரிமை இருக்கிறது? இப்போதுமே, செ.பாலாஜி மேல் கடுமையாகக் குற்றம் சுமத்தில் சிறையில் போடவேண்டும் என்று சொன்னவர் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால் செ.பா. திமுகவிடம் சேர்ந்த உடன், மிகப் புனிதராக ஆகிவிட்டார். இதைப்போன்று ஏகப்பட்ட உதாரணங்கள் திமுகவில் உண்டு. தமிழகத்தில் திமுகவைச் சார்ந்தவர்கள், அவர்கள் கூட்டணியில் உள்ளவர்கள் என்ன சொன்னாலும் அரசு இயந்திரங்கள் கவலைப்படுவதில்லை. ஆனால் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்ன சொன்னாலும் உடனே அதீத நடவடிக்கை என்பதை நாம் பார்க்கிறோம். திமுக முன்னாள் அமைச்சர் மாறன், தினகரன் ஊழியர்கள் எரிக்கப்பட்டபோது எவ்வளவு கடுமையாக திமுகவை எதிர்த்தார், ‘கண்கள் பனித்தன’ என்று சொன்ன உடனேயே இறந்தவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலையைப் பற்றி பல குற்றச்சாட்டுகள் சொன்ன கம்யூனிஸ்டுகளுக்கு கோடிகள் கொடுத்து கூட்டணியில் சேர்த்துக்கொண்டபோது, திமுக புனிதமாக ஆகிவிட்டது.

    அதனால் இத்தகைய குற்றச்சாட்டுகளை பாஜக மேல் சொல்வதற்கு முன்பு, ‘மற்ற கட்சிகள் எல்லோரும் மோசமானவர்கள், நெறிமுறைகள் இல்லாதவர்கள். ஆனால் பாஜக அப்படி இல்லை என்றே நாங்கள் நம்புகிறோம். அதனால் பாஜக இவற்றைச் செய்வதை எங்களால் ஏற்க இயலவில்லை’ என்று சொல்லிவிட்டு எழுதினால் அதில் அர்த்தம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பெரிய கொலைகாரன், ஒரு யோகியிடம், நீங்கள் நடக்கும்போது அந்த எறும்பை மிதித்துவிட்டீர்களே, நீங்களும் என்னைப்போல் கொலைகாரனாகிவிட்டீர்களே என்று குறையைச் சொன்னால் சொல்லும் கருத்தைப் பார், சொல்லுகிறவனைப் பார்க்காதே என்று சொல்லமுடியுமா?

    • Surya's avatar Surya சொல்கிறார்:

      “ஆனால் பாஜக அப்படி இல்லை என்றே நாங்கள் நம்புகிறோம். …” -> இவ்வளவு உதாரணங்கள் கொடுத்தும் ஏன் இப்படி சொல்லவேண்டும்

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      என் கருத்தை நான் இடுகையின் துவக்கத்திலேயே
      கூறி விட்டேன்…

      // பாஜக- இனியாவது இந்த இமேஜை மாற்றிக்கொள்ள
      தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது
      அவசியம் //

      ” இந்தக் கருத்துக்களை நீங்கள் சொல்லுவதாக
      நான் எடுத்துக்கொண்டு, ” -என்று நீங்கள் மீண்டும் சொல்வது
      தேவையற்றது.
      ——————

      விஷயத்தை நீர்த்துப் போகச்செய்ய, நீங்கள் தொடர்ந்து
      மேற்கொள்ளும் திசை திருப்பும் முயற்சிகளை –
      நான் ரசிக்கவில்லை…./ஏற்கவில்லை.

      மற்ற கட்சிகளைப்பற்றிய பேச்சு இங்கே இல்லை.
      பாஜக தன் இமேஜை மாற்றிக்கொள்வது குறித்து மட்டும் தான்.

      இடுகையின் மூலப்பொருளை மட்டும் இங்கே விவாதிப்பது
      தான் நேர்மையாக இருக்கும் என்பது என் கருத்து.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      ..

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        அப்படி, இடுகையின் மூலப்பொருளை மாத்திரம் விவாதிக்க, இது ‘கோர்ட் விசாரணை’ இல்லை கா.மை. சார். விகடன் கட்டுரையைக் குறிப்பிடாமல், இந்த contentஐத் தனியாக நீங்கள் எழுதினால், அதனை விவாதிக்கமுடியும். முரசொலி விகடன், முரசொலி இந்து, ப.சி போன்ற ஊழல் பெருச்சாளிகள் சொல்வதை எப்படி ஏற்க முடியும்? எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், என்பதற்கு இந்தப் பெருச்சாளிகளா எடுத்துக்காட்டு?

        @ சூர்யா – //இவ்வளவு உதாரணங்கள் கொடுத்தும் ஏன் இப்படி சொல்லவேண்டும்// – தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டாலே முழுமையாக நேர்மையான கட்சி என்று ஒன்று இருக்கவே வாய்ப்பில்லை. அதனால் இருப்பதில் உருப்படியானது என்றே பார்க்கவேண்டியுள்ளது. அதனால்தான், பாஜகவைப் பற்றி இத்தகைய கட்டுரைகளை முரசொலி பதிப்பகங்கள் எழுதுவதற்கு முன்பு, உள்ளதிலேயே உருப்படியான கட்சி பாஜக என்றே நாங்கள் நம்புகிறோம், நீங்களுமா? என்று கேட்டுவிட்டு எழுதுவதுதான் சரி என்பது என் எண்ணம். நான் பத்து லட்சம் கோடி கொள்ளையடித்தேன், நீயும் நேற்று ஆயிரம் ரூபாய் திருடினாயே, அதனால் நீயும் நானும் ஒண்ணுதான் என்ற வாதம் தேர்தல் அரசியலில் சரிப்பட்டுவராது. இதனைத்தான் சோ அவர்கள் தேர்தலுக்கு முன், தான் யாரை ஆதரிக்கிறேன் என்று சொல்லும்போது சொல்வார்.

  2. ஆதிரையன்'s avatar ஆதிரையன் சொல்கிறார்:

    பிஜேபியில் சேர்ந்த பிறகு அவர்கள் மீது நடவடிக்கை இல்லை என்பது, எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு புலப்படவில்லை.நமது சட்ட துறை மிகவும் பலவீனமான அமைப்பு கொண்டது. திடீரென்று நீதிமன்றம் தலையிடும் பொழுது,விசாரணை என்று பரபரப்பு கிளம்புவார்கள். ஆனாலும் பிஜேபிதான் அவர்களை முடுக்கி விடுகிறது என்று நம்மை அனைத்து மீடியாக்களும் நம்ப வைக்கின்றன. சில நாட்கள் அல்லது அதிகபட்சமாக 2 வாரங்களில், அனைத்து பரபரபரப்புகளும் காணாமல் போகின்றன.குற்றவாளிகள் பிஜேபியில் சேர்ந்தாலும், சேராவிட்டாலும் வழக்கு மேற்கொண்டு நகருவதில்லை.
    உதாரணமாக கனிமொழி மீதான பரபரப்பு 2 வாரங்கள் நீடித்தது, பிறகு காணாமலே போய் விட்டது. அவர் ஒன்றும் பிஜேபியில் சேரவில்லையே, ஆனாலும் ஏன் வழக்கு உறங்கிக்கொண்டிருக்கிறது .ஏனெனில் நமது சட்டத்துறையின் லட்சணம் அவ்வளவுதான். அதை போன்றே, மாறன் சகோதர்களின் வழக்கு பரபரப்பு..
    எல்லா ஊழல் வழக்குகளும் 2 வார பரபரப்பிற்கு பிறகு, நீதி மன்றம் கண்டு கொள்வதில்லை.
    செந்தில் பாலாஜி வழக்கும் 2 வார பரபரப்பு விதிகளுக்கு உட்பட்டதே..இதற்க்கு மேல் நாம் செந்தில் பாலாஜியை கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.(அவர் எந்த கட்சியில் இருந்தாலும் )
    நாம் அடுத்த பரபரப்பிற்கு தாவுவதே, சிறந்தது…

    • Tamil's avatar Tamil சொல்கிறார்:

      அதனை கடந்த ஒன்பதரை ஆண்டு காலமாக மாற்ற முடியவில்லை என்று சொன்னால் பிஜேபியை எதற்கு மக்களை ஆதரிக்க வேண்டும்.

      ஊழல் குற்றச்சாட்டப்பட்டவர்களை முழுமையாக வழக்குகளை நடத்தி நீதிமன்றம் அவர்களை விடுவிக்கும் வரை கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று சொல்ல இவர்களுக்கு என்ன தயக்கம்?

      பாலில் விஷம் கலந்து விட்ட பிறகு அந்த பால் நல்ல பாலாக மாற வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமோ அவ்வளவு முட்டாள்தனம் பிஜேபி தான் இந்த நாட்டை காப்பாற்றும் என்று நினைப்பது.

      இவர்கள் ஊழல் மதமாதம் என்கின்ற இரண்டையும் இந்த நாட்டுக்கு தருகின்ற ஒரு கொடிய நச்சுப் பாம்பு.

      • ஆதிரையன்'s avatar ஆதிரையன் சொல்கிறார்:

        காமராஜரையே விரட்டி அடித்த மக்கள் , இப்பொழுது வந்து ஊழலை சகிக்க மாட்டோம் என்பது, எந்த அளவு ஏற்புடையதோ ….
        நாளை இதே காமராஜரே தேர்தலில் போட்டியிட்டால், நமது ஊழலுக்கு எதிரான பிம்பம் பல்லிளித்து விடும் ..
        இங்கு பொங்கி கொண்டிருக்கும் நாம் யாவரும், அவருக்கு ஒன்றும் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்துவிட போவதில்லை..அவர் மண்ணை தான் கவ்வுவார்..இதுதான் நமது நிலைப்பாடு …..
        இப்பொழுது இருக்கும் நிலையில், குறைவான ஊழல் செய்யும் கட்சி, குடும்பத்தின் பின்னணி இல்லாத கட்சி, தலைமையை குற்றம் சாட்ட இயலாத நிலையில் உள்ள வலுவான கட்சி எதுவோ, அதுவே சால சிறந்த கட்சி…

  3. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    பாஜக இது போல செய்வதை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும். எப்படியாவது கட்சி வளர்ந்தால் போதும் என்பது மிகத் தவறான அணுகுமுறை. அதே போல, மற்றவர்கள் ஒழுங்கா என்ற பேச்சும் சரியில்லை. இந்த ஒற்றை வாதம்தான் திராவிட கட்சிகளின் ஒரே டிபென்ஸ். அது தவறு. முதலில் பிஜேபி ஒழுங்காக இருக்கவேண்டும்.

  4. Tamil's avatar Tamil சொல்கிறார்:

    கடந்த ஒன்பதரை ஆண்டு கால ஆட்சி காலத்தில் எத்தனை ஊழல் வழக்குகள் சரியாக விசாரிக்கப்பட்டு தீர்வுகள் காணப்பட்டு இருக்கின்றன என்று பார்த்தால் மிகப்பெரிய பூஜ்ஜியம் தான் விடையாக கிடைக்கும். இதன் மூலம் பாஜக சொல்ல வருவது நாங்களும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.