………………………………………………
இவை அதிமுக-வில் இருந்தபோது “அம்மா”வுக்காக மொட்டை போட்டபோது அவரால் வெளியிடப்பட்ட படங்கள் –



………………………………………………
“சார், உங்களை விசாரிக்கணும்!”
ஜூன் 13-ம் தேதி காலை அப்படி விடியுமென செந்தில் பாலாஜி எதிர்பார்த்திருக்க மாட்டார். காலை 7 மணியளவில், கிரீன்வேஸ் சாலையிலுள்ள அமைச்சரின் அதிகாரபூர்வ பங்களா, கரூரிலுள்ள
அவர் வீடு, அவர் தம்பி அசோக்கின் வீடுகளில் சோதனையைத்
தொடங்கியது அமலாக்கத்துறை. ரெய்டு தொடங்கிய சமயத்தில்
‘வாக்கிங்’ சென்றிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தகவல்
தெரிந்தவுடன் கிரீன்வேஸ் சாலை வீட்டுக்கு அவசரமாகத் திரும்பினார். அதற்குள் மீடியாக்களுக்குச் செய்தி கசிந்துவிட, அவர் வீட்டு வாசலில் செய்தியாளர்கள் கூடிவிட்டனர். “நண்பர்கள் சொன்ன பிறகுதான்
ரெய்டு குறித்தே தெரிந்தது. டாக்ஸி பிடித்து அவசரமாகத் திரும்பினேன். சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்” என அவர்களிடம் சொல்லிவிட்டு, அமைச்சர் மட்டும் வீட்டுக்குள் சென்றார்.
வீட்டுக்குள் நுழைந்தவரிடம், “சார், வேலை வாங்கித்தருவதில்
மோசடி செய்ததாக உங்கள்மீது பதிவாகியிருக்கும் வழக்கில்,
உங்களை விசாரிக்க வந்திருக்கிறோம். ப்ளீஸ் கோஆபரேட்” என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கவும், ரெய்டு தொடங்கியது.
பங்களாவிலிருந்த பணியாளர்களும், கார் ஓட்டுநர்களும் ஓர் ஓரமாக அமரவைக்கப்பட்டனர். வெளியிலிருந்து எவரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அமைச்சரின் வீட்டுக்கு முன்னால் திபுதிபுவென தி.மு.க நிர்வாகிகள் குவியத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல, வெயிலைவிட ரெய்டு வெப்பம் அந்த ஏரியாவையே அனலாகக் கொதிக்கவைத்தது.
செந்தில் பாலாஜியின் வீட்டுப் பணியாளர்கள் சிலரிடம் பேசினோம். “வீட்டுக்குள் அமைச்சர் நுழைந்தவுடன், அவரை ஓரமாக அமரவைத்து
விட்டு வீட்டை ஒரு முறை சோதனையிட்டனர். பின்னர், ஒரு பெரிய
பேப்பர் கட்டை அவர் முன்னால் எடுத்துப் போட்டார்கள் அதிகாரிகள்.
‘வழக்கு தொடர்பாக எங்களுக்கு 118 கேள்விகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாக பதிலளியுங்கள்…’ என்றனர் அதிகாரமான குரலில்.
அதற்கு, ‘என் லாயர் வரட்டும் சார். அவரை வைத்துக்கொண்டு
உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்’ என்றார் அமைச்சர்.
ஆனால், அதற்கு அதிகாரிகள் சம்மதிக்கவில்லை. ‘உள்ளே யாரையும் அனுமதிக்க முடியாது சார். உங்கள் மீதான புகார்களைப் பற்றித்தானே விசாரிக்கிறோம்… அதற்கு பதில் சொல்வதில் என்ன தயக்கம்?’
என்றவர்கள், அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும்
விசாரணையைத் தொடங்கினார்கள்.
‘போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக யார் யாரிடமெல்லாம் உத்தரவாதம் அளித்தீர்கள், உங்கள் வங்கிக்
கணக்கில் 1.34 கோடி ரூபாய் பணமும், உங்கள் மனைவி மேகலா
வங்கிக் கணக்கில் 29.55 லட்சம் ரூபாய் பணமும் வருமானத்துக்கு
அதிகமாக வந்தது எப்படி…’ எனக் கேள்விகளால் அமைச்சரைத் துளைத்தெடுத்தார்கள் அதிகாரிகள்.
‘நான் குற்றமற்றவன். இந்த மாநிலத்தின் அமைச்சர். எதுவாக
இருந்தாலும் நீங்கள் சம்மன் அனுப்பி முறைப்படி விசாரிக்கலாமே…
ஓர் அமைச்சரை இப்படித்தான் கையாள்வீர்களா?’ எனக் கோபமாகக் கேட்டார்.
அதற்கு அதிகாரிகள், ‘2022-ம் ஆண்டிலிருந்து பலமுறை சம்மன்
அனுப்பியும் நீங்கள் நேரில் ஆஜராகவில்லை. அதனால்தான்,
உங்கள் வீடு தேடி வந்திருக்கிறோம். இப்போது எங்கள் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்’ என்றனர் கோபமாக. இருவருக்கும் இடையேயான வார்த்தைப்போர் பல மணி நேரம் நீண்டது. இதற்கிடையேதான், வங்கி அதிகாரிகள் அமைச்சரின் வீட்டுக்கு வந்தார்கள்.
அமைச்சரின் வங்கிக் கணக்குப் பரிவர்த்தனை தொடர்பாக, வங்கி அதிகாரிகள் முன்னிலையில் அவர் விசாரிக்கப்பட்டார். ‘நீங்கள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, உங்களிடம்
பணியாற்றிய சண்முகம் என்பவர்தான் வேலை வாங்கித்தருவதாக உத்தரவாதமளித்து பணம் பெற்றிருக்கிறார்’ என அதிகாரிகள் சொன்னவுடன், ‘அதை சண்முகத்திடம் போய்க் கேளுங்கள் சார்…
என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?’ என்றார் அமைச்சர். அதற்கு,
‘உங்களுக்கும் சண்முகத்துக்கும் இருக்கும் தொடர்பு எங்களுக்குத்
தெரியும் சார். உங்கள் சம்மதம் இல்லாமல் அவர் பணத்தைப்
பெற்றிருக்க முடியாது. இந்தச் சட்டவிரோதப் பணப் பறிமாற்றத்துக்கு நீங்களும் உடந்தைதானே’ எனக் கேள்விக்கு மேல் கேள்வி
கேட்டார்கள் அதிகாரிகள். ஆனால் அமைச்சர் அசரவில்லை”
என்றனர் விரிவாக.
பாலாஜியின் வீட்டில் வங்கி அதிகாரிகள் நுழைந்த அடுத்த சில மணி நேரத்திலேயே தலைமைச் செயலகத்துக்குள்ளும் நுழைந்தது அமலாக்கத்துறை டீம்.
பாலாஜி வீட்டிலிருந்த அதிகாரிகளுக்கு ‘ஸொமேட்டோ ஆப்’
மூலமாக உணவு வரவழைக்கப்பட்டது. வாசலில் காத்திருந்த
அவரின் ஆதரவாளர்கள், நடப்பதை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மதியம் ஒரு மணிக்கு மேல் ஆவடியிலிருந்து
மத்திய பாதுகாப்புப்படையினர் துப்பாக்கியுடன் பாலாஜியின்
வீட்டுக்கு வந்த பிறகுதான், ரெய்டு தீப்பொறியானது. ‘செந்தில்
பாலாஜி கைதுசெய்யப்படப்போகிறார்’ எனப் பற்றிக்கொண்ட
தகவலால் திடீர் பரபரப்பு எழுந்தது. தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேரில் வந்து, தன்னை உள்ளே அனுமதிக்கச் சொல்லி
முட்டிப் பார்த்தும் அனுமதி கிடைக்கவில்லை. காலை 7 மணிக்குத்
தொடங்கிய சோதனை நள்ளிரவு 12 மணியைத் தாண்டி
17 மணி நேரத்துக்கும் மேல் சென்றது.
நள்ளிரவு 12:10 மணியளவில், செந்தில் பாலாஜி மீதான வழக்கின்
விசாரணை அதிகாரி கார்த்திக் தசாரி, பாலாஜியின் வீட்டுக்கு வந்தார்.
அவர் கையில் சில பேப்பர்கள் இருந்தன. பாதுகாப்புப் பணியிலிருந்த அதிவிரைவுப் படை பாதுகாவலர்களும் உஷார்படுத்தப்பட்டதால், பாலாஜியின் வீட்டில் பரபரப்பு எகிறியது.
திடீரென, ‘ஐயோ, அம்மா… வலிக்குதே…’ என வீட்டுக்குள்ளிருந்து
அலறல் குரல் கேட்டதால், வாசலில் நின்றிருந்த தி.மு.க-வினர் பதற்றமடைந்தார்கள். ‘அமைச்சரை ஏதோ செஞ்சுட்டாங்க…’ எனப் பரபரப்பானார்கள் தொண்டர்கள்.
அடுத்த சில நிமிடங்களில், அமலாக்கத்துறையின் காரில் நெஞ்சையும் தலையையும் பிடித்துக்கொண்டு, அழுது உருண்டபடி கொண்டுசெல்லப்பட்டார் செந்தில் பாலாஜி. வாசலில் நின்றிருந்த தி.மு.க-வினரெல்லாம் பரபரப்பின் உச்சத்தில் அந்த காரைப் பின்தொடர்ந்தனர்.
பாலாஜியின் வீட்டில் ரெய்டுக்குச் சென்றிருந்த அமலாக்கத்துறை
அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “விசாரணை அதிகாரி கார்த்திக்
தசாரி, செந்தில் பாலாஜியிடம் சம்மன் அளித்தார். மேல் விசாரணைக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகச் சொன்னார்.
ஆனால், சம்மனை பாலாஜி வாங்கவில்லை. நீண்ட நேரம் போராடியும் ஒத்துழைக்க மறுத்ததால், அவரைக் கைதுசெய்வதென முடிவெடுத்தோம். நள்ளிரவு 1:40 மணிக்கு, இந்தத் தகவல் அமைச்சர் பாலாஜிக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. அவர் மனைவிக்கும் குறுந்தகவல் அனுப்பப்பட்டது.
திடீரென, நெஞ்சைப் பிடித்துக்கொண்டு தரையில் விழுந்து புரண்டு
அழுதார் பாலாஜி. ‘ஐயோ, அம்மா… நெஞ்சு வலிக்குதே’ என அவர்
போட்ட சத்தத்தில், வீட்டுப் பணியாளர்களும் சேர்ந்து அழ ஆரம்பித்துவிட்டனர். திடீரென அந்த வீடே பதற்றமாகிவிட்டது.
வாசலில் நின்றிருந்த தி.மு.க-வினர் எந்த நேரமும் உள்ளே வந்துவிடும் மனநிலையில் கத்தத் தொடங்கினர். ஆம்புலன்ஸ் வந்து அமைச்சரை மருத்துவமனைக்கு ஏற்றிச் செல்லும் அளவுக்கு நேரமிருக்கவில்லை.
அவரைக் கைதுசெய்திருந்ததால், முறைப்படி அரசு மருத்துவமனையில்
தான் அனுமதிக்க வேண்டும். அதனால், எங்கள் வாகனத்திலேயே அவரை ஏற்றிக்கொண்டு ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றோம்.
மருத்துவமனையில் பாலாஜி அனுமதிக்கப்பட்டபோது, அவருடைய
ஈ.சி.ஜி., பல்ஸ் எல்லாமே நார்மலாகத்தான் இருந்தன.
அவர் உடம்பில் எந்தக் காயமும் இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அடுத்த அரை மணி நேரத்தில், அமைச்சர்கள் ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு வரவும் நிலைமை தலைகீழாகிவிட்டது” என்றனர்.
அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக அதிகாரிகள்
சொன்னாலும், அதை தி.மு.க வட்டாரங்கள் மறுக்கின்றன. “செந்தில் பாலாஜியைக் கடுமையாக உளவியல்ரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தியிருக் கிறார்கள். இரவு 8 மணியிலிருந்து நெஞ்சுவலியால் துடித்திருக்கிறார் பாலாஜி. ஆனால், அதை அதிகாரிகள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. அவரைக் கைது செய்வதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள். தவிர, ஹைதராபாத்துக்கு அவரை அழைத்துச்
சென்று, அங்கு வைத்து விசாரணை செய்யவும் திட்டமிட்டிருந்தனர்.
நள்ளிரவு 1:30 மணிக்கு மேல் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகியிருக்கிறது. அதன் பிறகுதான் மருத்துவமனைக்குக்
கொண்டு சென்றிருக்கிறார்கள். அவர் உயிருக்கு ஏதாவது
நிகழ்ந்திருந்தால் யார் பொறுப்பேற்பது?” என்றார் ஒரு சீனியர்
அமைச்சர் நம்மிடம்.
மருத்துவமனையில் பாலாஜி அனுமதிக்கப்பட்டவுடன்,
மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி, சேகர் பாபு
என அமைச்சர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். ஆறாவது மாடியிலுள்ள ஐ.சி.யூ வார்டுக்கு மாற்றப்பட்டார் பாலாஜி. அவரின்
உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், தொடர் மருத்துவக்
கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவ
வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியானது.
அமைச்சர்கள் சிலர் பாலாஜியின் அறைக்குள் செல்ல முயன்றபோது, சி.ஆர்.பி.எஃப் வீரர்களால் தடுக்கப்பட்டனர். “யோவ், உள்ள இருக்குறது
எங்க அமைச்சருய்யா. அவரைப் பார்க்கக் கூடாதுன்னு சொல்றதுக்கு
நீ யாரு…” என அமைச்சர்கள் கோபத்தில் எகிற, “சார், எங்களைப் பொறுத்தவரை அவர் அக்யூஸ்ட். அவரைக் கைதுசெய்திருக் கிறோம். யாரையும் அனுமதிக்க முடியாது” எனத் தடுத்தார்கள்
அமலாக்கத்துறை அதிகாரிகள்.
அதேநேரத்தில், அதிகாலை 4 மணியிலிருந்து முதல்வரின் வீட்டில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. செந்தில் பாலாஜியின் கைதைச் சட்டவிரோதம் என வாதிடுவது தொடர்பாக ஒருபுறமும், மற்றொருபுறம் கைதைத் தடுக்க முடியாவிட்டால் அவரிடமிருக்கும் இலாகாக்களை யாருக்கு அளிப்பது என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றது.
மே 14-ம் தேதி காலை 9 மணியளவில், செந்தில் பாலாஜியின்
இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாயில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாக ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து அறிக்கை
வெளியானது. அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டுமெனப் பரிந்துரைத்தது அந்த அறிக்கை. அடுத்த ஒரு மணி நேரத்திலேயே,
செந்தில் பாலாஜிக்கு ஆறுதல் கூற நேரில் மருத்துவமனைக்கு வந்தார் முதல்வர்.
அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம். “முதல்வரைப் பார்த்தவுடன் கதறிவிட்டார் பாலாஜி. ‘நெஞ்சுவலினு ரொம்ப நேரமா கத்தியும்
யாரும் கண்டுக்கலை தலைவரே’ என அழுதுவிட்டார். அவரை ஆறுதல்படுத்திய முதல்வர், ‘கவலைப்படாதீங்க. நான் இருக்கேன்…
உங்க பின்னால கட்சி நிற்கும்’ எனத் தோளில் தட்டிக்கொடுத்து
விட்டுப் புறப்பட்டார்.
பாலாஜியின் கைதால் ஒட்டுமொத்தக் கழகமும் பதறிவிட்டது உண்மை.
இரு முறை மருத்துவமனைக்கு வந்த உதயநிதி, நெடுநேரம் அங்கேயே அமர்ந்திருந்தார். முதல்வரின் மருமகன் சபரீசனும் மருத்துவனைக்கு வந்தபோது, பலரது புருவங்களும் உயர்ந்தன.
செந்தில் பாலாஜிமீது நடத்தப்பட்ட தாக்குதல், மற்ற அமைச்சர்கள்மீது நடப்பதற்கு ரொம்ப நேரமாகிவிடாது. முதல்வர் குடும்பத்தின் மீதேகூட
ரெய்டு அஸ்திரத்தை ஏவுவார்கள். இதைத் தொடக்கத்திலேயே எதிர்த்தால்தான், மத்திய பா.ஜ.க அரசு, அடுத்த முறை கைவைக்கத்
தயங்கும். அதனால்தான், பாலாஜி கைதுசெய்யப்பட்டதைத் தீவிரமாக எதிர்க்கிறார் முதல்வர்” என்றனர்.
இதற்கிடையே செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்த சென்னை
முதன்மை மாவட்ட நீதிபதி, அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டபடி
அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
தமிழகச் சிறைத்துறையின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் பாலாஜி கொண்டுசெல்லப்பட்டதால், அவருக்குக் கைதிகள் பதிவேடு எண்ணாக ‘001440’ என்கிற நம்பர் வழங்கப்பட்டிருக்கிறது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பாலாஜிக்கு, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
“மருத்துவக் காரணங்களால், அவரை விசாரணையில் எடுப்பதற்கு அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்காது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டால், அடுத்த மூன்று மாதங்களுக்கு பாலாஜி மருத்துவக் கண்காணிப்பில்தான் இருக்க வேண்டியிருக்கும். மேலும், சட்டப்படி
அவருக்கு ஜாமீன் வாங்குவதற்கும் தீவிரமாகியிருக்கிறோம்”
என்கிறது தி.மு.க வழக்கறிஞர் வட்டாரம். அதேநேரத்தில்,
அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகியிருக்கும் வழக்கறிஞர் ரமேஷ், தி.மு.க-வின் வாதங்களை உடைப்பதில் முனைப்பு காட்டுகிறார்.
பாலாஜி மீதான தாக்குதலை மிக சீரியஸாகவே பார்க்கிறார் முதல்வர். கோவை கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் நேரில் செல்கிறார். தேசிய
அளவில், இந்தக் கைதைப் பல்வேறு கட்சிகளும் கடுமையாகக் கண்டித்திருக்கின்றன. “பாலாஜியை அப்ரூவராக்கி, இந்த வழக்கில் தொடர்பில்லாத பல்வேறு விஷயங்களையும் அவர் வாயிலிருந்து வாங்குவதற்கு அமலாக்கத்துறை திட்டமிட்டிருந்தது. அதனாலேயே, பா.ஜ.க-வுடன் மோதிப்பார்க்கும் மனநிலைக்குப் போய்விட்டார் முதல்வர்” என்கின்றன மேலிடத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள். அதன் தொடர்ச்சியாகத்தான், தமிழகத்தில் சி.பி.ஐ தன்னிச்சையாகச்
சோதனைகள் நடத்துவதற்கு அளிக்கப்பட்டுவந்த அனுமதியை ரத்துசெய்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
‘செந்தில் பாலாஜி கைது என்பது உள்நோக்கமற்றதா…
இது மத்திய பா.ஜ.க அரசின் மிரட்டல் நடவடிக்கையா… பாலாஜி குற்றமற்றவரா… பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுமா, அவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா… அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் யார்… இதையெல்லாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது தி.மு.க..?’ எனப் பல கேள்விகள் எழுகின்றன.
இதற்கிடையே, ‘அமலாக்கத்துறை ஆட்டம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே… இனிமேல்தான் முக்கியக் காட்சிகளே இருக்கின்றன’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
( நன்றி – விகடன் தளம் …)
.
………………………………………………



விகடன் திமுக ஆதரவு நிலை எடுத்து பலப் பல வருடங்களாகின்றன. அவங்களோட திரைக்கதை வசனத்தைப் போய் நீங்க முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருக்கீங்களே.
//இது மத்திய பா.ஜ.க அரசின் மிரட்டல் நடவடிக்கையா… பாலாஜி குற்றமற்றவரா …. என்ற கேள்விகள் எழுகின்றன// – செ.பா. குற்றமற்றவர் என்று விகடனுக்குத் தோன்றுகிறது போலிருக்கு. தோன்றாதா? அப்படித் தோன்றவில்லை என்றால்தான் பத்திரிகை பிழைக்குமா?
டாஸ்மாக், 3 1/2 ஏக்கர் வீடு என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் விகடனுக்கு மறந்தும் தோன்றவில்லை போலிருக்கிறது. Only AIADMK period மாத்திரம்தான் தோன்றியிருக்கிறது. காரணம், விகடன் நடுநிலைப் பத்திரிகை ஆச்சே.
…
புதியவன்,
// அவங்களோட திரைக்கதை வசனத்தைப் போய் நீங்க முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருக்கீங்களே. //
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் –
அப்பொருளின் மெய்ப்பொருள் அறிக …!!!😊😊😊
…
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
.
//‘நான் குற்றமற்றவன். இந்த மாநிலத்தின் அமைச்சர். எதுவாக
இருந்தாலும் நீங்கள் சம்மன் அனுப்பி முறைப்படி விசாரிக்கலாமே…
ஓர் அமைச்சரை இப்படித்தான் கையாள்வீர்களா?’ எனக் கோபமாகக் கேட்டார்.
அதற்கு அதிகாரிகள், ‘2022-ம் ஆண்டிலிருந்து பலமுறை சம்மன்
அனுப்பியும் நீங்கள் நேரில் ஆஜராகவில்லை. அதனால்தான்,
உங்கள் வீடு தேடி வந்திருக்கிறோம். இப்போது எங்கள் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்’ என்றனர் கோபமாக. //
அவர் சம்பந்தன் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் நீதிமன்ற உத்தரவை பெற்று அவரை கைது செய்து அழைத்துச் செல்ல அதிகாரம் இல்லையா என்ன?
நம்மை வைத்து இவர்கள் காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள்